சனி, 31 ஆகஸ்ட், 2024

பழைய கற்காலம்

 

பழைய கற்காலம்

இது மனித வாழ்வின் தொடக்க நிலையைக் குறிக்கிறது. இயற்கையாகக் கிடைத்த பதப்படுத்தாத கற்கருவிகளை வேட்டையாடுவதற்குப் பயன்படுத்திய முதல் மனிதர்களின் காலத்தைக் குறிக்கிறது.  கற்கருவிகளைப் பயன்படுத்திய பிறகே மனிதன் விலங்கில் இருந்து வேறுபட்டான். மலைத்தொடரில் வேட்டையாடி வாழ்ந்து வந்த தமிழர்களே முதல் மாந்தர்கள் ஆவர். அவர்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் இப்போதைய தமிழகத்தின் மேற்கு மலைத் தொடர்ச்சியிலும், கிழக்கு மலைத் தொடர்ச்சியிலும், வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டைக்கு அருகில் உள்ள கொற்றலையாற்றுச் சமவெளியிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் பூண்டி, குடியம் ஆகிய இடங்களிலும், நெய்வேலி, வடமதுரை, சென்னையில் உள்ள பல்லாவரம் மலை போன்ற தமிழகத்தின் பல இடங்களிலும் கிடைத்துள்ளன .

கற்கால மக்கள் பயன்படுத்திய கருவிகள்

      கோடரிகள்

      வெட்டுக் கத்திகள்

      சுரண்டிகள்

      கூர்முனைக் கருவிகள்

      மரம் இழைக்கும் உளி

இக்கருவிகளை நிலத்தைத் தோண்டவும், மரம் வெட்டவும் விலங்குகளைக் கொல்லவும் அதன் இறைச்சிகளைக் கிழிக்கவும்,  தோல் உரிக்கவும், மரப்பட்டைகளைச் சீவவும் பயன்படுத்தினர்.


 கருவிகள் கிடைத்த இடங்கள்

1916ஆம் ஆண்டு இராபர்ட் புரூசுட் என்பவர் பர்கூர் மலைப்பகுதியில் சில கற்கருவிகளைக் கண்டெடுத்தார். 1863இல் பல்லாவரத்திற்கு அருகில் இருந்த செம்மண் மேட்டில் பழைய கற்காலக் கருவிகளைக் கண்டெடுத்தார்.  இதைப்போன்று பூண்டி, வடமதுரை, குடியம், பரிக்குளம், புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய இடங்களில் கைக்கோடரிகள், கிழிப்பான், சில்லுக் கருவிகள், வேட்டிகள், சுரண்டிகள் முதலிய கற்கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

வாழ்க்கை முறை

          தமிழகத்தில் மிகத் தொன்மையான காலத்தில் இவர்கள் மரப்பொந்துகளில், பாறைக் குகைகளில் பதுங்கி வாழ்ந்தனர். வேட்டையாடவும், பதுங்கி வாழவும் இவர்களுக்கு மலை துணையாக இருந்தது. ஆறுகளும், பாறைச்சுனைகளும் நீர்வளமளித்தன.

நெருப்புப் பயன்பாடு

பழைய கற்காலத் தமிழர்கள் தொடக்கத்தில் நெருப்பின் பயன்பாட்டை அறியவில்லை.  வெயில் காலத்தில் மூங்கில்கள் உராய்ந்து நெருப்புப் பற்றிக் கொண்டது. அதைக்கண்டு அச்சம் கொண்டனர்.  பின்னர் கற்களை உரசுவதன் மூலம் நெருப்பை உருவாக்கக் கற்றுக் கொண்டனர்.  குளிரில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ளவும், விலங்குகளிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்கும், இறைச்சியை வதக்கி உண்பதற்கும் நெருப்பைப் பயன்படுத்தினர்.

 



தொழில்கள்

உணவு உண்டால் மட்டுமே உயிர் வாழ முடியும் என்பதால், வேட்டையாடுதல் அவர்களின் முதன்மைத் தொழிலாக  அமைந்தது. காய்கனி பறித்தல், கிழங்கெடுத்தல், தேனெடுத்தல் ஆகியவையும் கற்கால மனிதர்களின் தொழில்களாக இருந்தன.

உணவுகள்

எலிகள், மான், பன்றி, ஆடு போன்ற விலங்குகளை வேட்டையாடி உண்டனர்.கிழங்குகளும் காய்கனிகளும் இவர்களுக்கு உணவாயின.

பொழுதுபோக்கு

தொல்லியல் துறை பல்வேறு இடங்களில்  நடத்திய ஆய்வுகளில், எண்ணற்ற பாறை ஓவியங்களும், குகை ஓவியங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனால் ஓவியம் தீட்டுவது இவர்களின் பொழுதுபோக்காக இருந்தமையை அறிய முடிகின்றது.  ஆடு, மாடு, மான், பன்றி, உடும்பு, பாம்பு, மயில், கோழி, கொக்கு, அன்னம் முதலிய விலங்கினங்கள்,பறவையினங்களின் உருவங்களே அதிக அளவில் ஓவியங்களாகத் தீட்டினர். கூர்மையான கருவிகளைப் பயன்படுத்தி கல், எலும்பு, கொம்பு முதலியவற்றில் குழி உருவாக்கி அதில் விலங்குகளின் இரத்தம், கொழுப்பு, மண் வகைகளை நிரப்பி வண்ணங்களை உருவாக்கி உள்ளனர்.  வெள்ளை, கருப்பு, மஞ்சள்,  சிவப்பு வண்ணங்களைப் பயன்படுத்தியுள்ளனர். கைவிரல்கள், விலங்கின் முடிகள் ஆகியவற்றைக் கொண்டு வண்ணம் தீட்டியுள்ளனர். களிமண்ணைப் பயன்படுத்தி வினோத பொருட்களை உருவாக்கினர்.

ஆடைகளும் அணிகலன்களும்

தொடக்கத்தில் ஆடையின்றி வாழ்ந்த மக்கள், வெப்பம் குளிர் முதலிய  இயற்கையில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள முற்பட்டனர். ஆகவே, இலை, தழை, மரப்பட்டை, நார் ஆகிவற்றைக் கொண்டு தங்கள் உடலை மறைத்துக் கொண்டனர். றுந்தழைகள், மலர்கள்,  பறவைகளின் இறகுகள் ஆகியவற்றை அணிகலன்களாகப் பயன்படுத்தினர்.

தொடர்பு மொழி

தொல் தமிழர்கள் தங்கள் கருத்துகளை அடுத்தவர்களுக்குத் தெரிவிக்க முதலில் கைகளால் சில சைகைகளைக் காட்டினர். வாயால் சில ஓசைகளை எழுப்பினர். அதன் படிநிலையாக மொழி தோன்றியது. 

நம்பிக்கை

இறைவன் குறித்தோ சமயம் குறித்தோ அவர்கள் அறிந்திருக்கவில்லை. அச்சம் வியப்பு காரணமாக நெருப்பு, கதிரவன், நிலவு, நாகம் போன்றவற்றைத் தெய்வங்களாக வணங்கினர். இறந்தவர்களின் உடல்கள் இயற்கையாக அழியும் வகையில் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் இரையாக விட்டுவிட்டனர்.

சிறிய கற்காலம்

வேட்டையாடுதல் தொடர்ந்தமையால் விலங்குகளின் எண்ணிக்கைக் குறைந்தது. உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டதால் மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறினர். பல இடங்களில் பரவி வாழ்ந்தனர். சிலர் கடற்கரைகளில் தங்கள் வாழ்விடத்தை அமைத்துக் கொண்டனர். சிறிய கற்கருவிகளுடன் நீர்நிலைகளின் அருகில் உணவு சேமிப்பவர்களாகவும், மீன் பிடிப்பவர்களாகவும், ஆடு, மாடுகளை வேட்டையாடக் கூடியவர்களாகவும், அவற்றைப் பழக்கி வளர்க்கக் கூடியவர்களாகவும் வாழ்ந்தனர். இக்காலம் தொல்பழங்காலத்தின் இரண்டாவது கட்டம் ஆகும்.

இவர்களுடைய வாழ்விடங்கள் கடல் மட்ட நீர் ஏற்றம் பாதிப்பில்லாத இடங்களாகவும், வருடம் முழுவதும் தாவரம் நிரம்பிச் செழுமை கொழிக்கும் இடங்களாகவும், தானியங்களைத் தாமாக உற்பத்தி செய்யும் இடங்களாகவும் இருந்தன. சிறிய கற்கருவிகளைக் குச்சிகளிலும், எலும்புகளிலும் பொருத்திப் பயன்படுத்தினர். காட்டுத் தானியங்களை அறுவடை செய்யக் கற்களால் பல அருவாய்களைப் பயன்படுத்தினர்.

இத்தகைய மக்கள் தமிழகத்தில் குமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம், மதுரை மாவட்டம் செங்கற்பட்டு மாவட்டம் ஆகிய இடங்களில் வாழ்ந்துள்ளனர். பிற்காலத்தில் பொருளாதார உற்பத்திக்கு அடித்தளமிட விலங்குகளைப் பழக்கியும், தானியங்களை அறுவடை செய்தும், மீன்பிடித்தும் தங்கள் வாழ்க்கையை உயர்த்திக் கொண்டனர். ஆயினும் முன்னோர் வகுத்த வேட்டையைக் கைவிடவில்லை.


 

பின்குறிப்பு

இக்கருத்துகள் யாவும் தமிழக வரலாறும் பண்பாடும் – வே.திசெல்லம், தமிழக வரலாறும் பண்பாடும் – டாக்டர் கே.கே.பிள்ளை, தமிழர் வரலாறு – தமிழகப் பெண்கள் செயற்களம் ஆகிய நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை. மாணவர்களின் நலன் கருதி அந்நூல்களில் உள்ள கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க மாணவர்களின் நலன் கருதியே இத்தளம் செயல்படுகின்றது.

ஆகவே, மாணவர்கள் தவிர்த்து இத்தளத்தைக் காண்பவர்கள் படிக்கவும், புரிந்து கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர, இத்தளத்தில் உள்ள செய்திகளை அப்படியே எடுத்து நூலாக்கம் செய்வதோ, கைடு நூலாக்கம் செய்வதோ, வலையொளியில் பதிவு செய்வதோ கூடாது என்று தாழ்மையுடன் வேண்டுகின்றேன். புரிதலுக்கு நன்றி.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக