புதன், 12 அக்டோபர், 2022

உரைநடையின் தோற்றம் வளர்ச்சி

 

உரைநடையின் தோற்றம் வளர்ச்சி

ஒரு மொழியில் முதன் முதலாகச் செய்யுள் தோன்றும் போது, அது பேச்சு வழக்கிலுள்ள மொழி நடையினையும், ஓசைப் பண்பினையும் தழுவியே தோன்றும். இது தமிழ் மொழிக்கு மட்டுமல்ல, உலகில் உள்ள எல்லா மொழிகளுக்கும் பொருந்தும். தமிழில் உள்ள ஓசை வகைகளுள் அகவலே முந்தியது என்பர். இந்த அகவலும், செப்பலும் மக்கள் பேச்சு வழக்கில் காணப்படுபவை. இந்த ஓசைகளில் எழுதப்பட்ட இலக்கியங்கள் உரைநடை போன்ற அமைப்புகளிலேயே அமைந்திருந்தன. அதனால்தான் செய்யுளைத் தொடர்ந்து உரைநடை எழுந்தது என்பர் அறிஞர். உரைநடை தோன்றிய காலத்தில் செய்யுளுக்கும், உரைநடைக்கும் பெரிதும் வேறுபாடுகள் இருந்திருக்க வாய்ப்பில்லை. செய்யுளைப் போலவே உரைநடையும் ‘செப்பமாகச் செய்யப்பட்ட ஒன்று. அதனால்தான் உரையினையும் தொல்காப்பியர் செய்யுள் வகையுள் ஒன்றாகவே கூறினார். தொடக்கக் கால உரைநடையின் தன்மை செய்யுளிலிருந்து பெரிதும் மாறுபடாத நிலையிலேயே இருந்தது.

தமிழ் பிராமிக் கல்வெட்டு உரைநடை

தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் தொல்காப்பியர் காலத்துக்கு முற்பட்டன. இவை பெரும்பாலும் சங்க காலத்தைச் சார்ந்தவை என்பர் கல்வெட்டு அறிஞர்கள். இத்தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுகள் தொன்மைக் கால உரைநடையைப் பற்றி அறிவதற்குச் சான்றாக உள்ளன.

 தொன்மைக் கால உரைநடை

        தொன்மைக் காலத்தில் குறிப்பாகத் தொல்காப்பியத்திற்கு முந்திய காலத்திலும், தொல்காப்பிய காலத்திலும், சங்க காலத்திலும் வழங்கப்பட்ட உரைநடையைப் பற்றிப் பார்ப்போம்.

தொல்காப்பியத்துக்கு முந்திய உரைநடை

மூலபாடம், உரைப்பாடம் என்ற பாகுபாடு தொன்மையானது; இரண்டாயிரம் ஆண்டுக்கும் முற்பட்டது. செய்யுள்களுக்கு விளக்கமாக எழுதப்பட்ட உரைகளே உரைநடை வளர்ச்சிக்கு உதவின. தொல்காப்பிய நூற்பாக்களில் என்ப, என்மனார், என்மனார் புலவர், நூல் நவில்புலவர்  முதலிய சொற்களும் தொடர்களும் எங்கும் பரந்து கிடக்கின்றன. ஆகவே தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே உரைநூல்களும், உரைநடையும் இருந்ததைத் தொல்காப்பிய நூற்பாக்கள் வழி அறிய முடிகின்றது.

தொல்காப்பியக் கால உரைநடை

தொல்காப்பியர் எழுதிய உரை பற்றிய செய்திகளே, நமக்கு அக்கால உரைநடை குறித்து அறிவதற்கு உதவுகின்றன. தொல்காப்பியர், காண்டிகை என்றும், உரை என்றும் இருவகை உரை அமைப்புகளைக் காட்டுகின்றார். இவ்விரு வகை உரை முறைகளும் அவர் காலத்து நிலவிய உரைகூறும் மரபு என்று கருதலாம். தொல்காப்பியர் செய்யுளை ஏழாக வகுத்துக் கூறுகிறார். அவற்றுள் ஒன்று, செய்யுட்பகுதியாகிய பாட்டு. மற்றவை அடிவரையறையில்லாச் செய்யுள் பகுதிகள் ஆறு. அந்த ஆறனுள் ஒன்றாக உரைநடை வகையைக் கூறி, அதனை நான்காகக் கூறுவார்.

பண்டைக் கால உரைநடை

சங்க இலக்கியச் செய்யுள்களில் கீழ்க்காணப்பெறும் துறை, திணை விளக்கங்கள் ஆகிய பாடலின் குறிப்புகள் உரைநடையில் அமைந்துள்ளன. அவற்றுள் சில பின்வருமாறு,

நற்றிணையில்,

        பொருள் வயிற்பிரிந்த தலைவன் பருவம் உணர்ந்த

        நெஞ்சிற்கு உரைத்தது             (நற்றிணை - 157)

சங்க கால உரைநடை, செய்யுள் நடை போல் செறிவுடையதாகவும், அருஞ்சொற்கள் நிறைந்ததாகவும் உள்ளது.

சிலப்பதிகார உரைநடை

தமிழின் முதல் காப்பியம் இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரம். இதன் பதிகத்திலேயே, வாழ்த்து வரந்தரு காதையொடு இவ்வா றைந்தும் உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள் என்ற குறிப்பு வருகிறது. ‘உரை பெறு கட்டுரை, ‘உரைப்பாட்டுமடைஎன்னும் பெயர்களோடு இக்காப்பியத்தில் இடைஇடையே உரைநடை இடம் பெற்றுள்ளது. தமிழ் உரைநடையின் ஆரம்ப வடிவத்தை நாம் சிலப்பதிகாரத்திலே காணலாம். இக்காப்பியத்தில் உரைநடை இரண்டு காரணங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம்.

உரைநடை வளர்ச்சி

அச்சு இயந்திரங்களின் வரவால் தமிழில் முதலில் மலர்ச்சி பெற்றது உரைநடையே. பல வகையான கட்டுரை நூல்கள், சிறுகதை, நாவல், மொழி பெயர்ப்புகள், திறனாய்வு, உரையாசிரியர்கள் எனப் பல பிரிவுகளுள் உரைநடை வளர்ந்தது. 1904-ஆம் ஆண்டில் வெளியிடப்பெற்ற தமிழ் உரைநடையின் வரலாறு என்ற (History of Tamil Prose) ஆங்கில நூல் வி.எஸ்.செங்கல்வராய பிள்ளை என்பவரால் எழுதப்பட்டது. இனி, தமிழ் உரைநடை வளர்த்த சான்றோர்களைக் காண்போம்.

உரைநடை முன்னோடிகள்

ராபர்ட்-டி.நொபிலி, அருளானந்த அடிகள், வீரமா முனிவர், கால்டுவெல், போப்ஐயர் என்பவர்களால் வளர்க்கப்பட்ட தமிழ் உரை நடையானது 19ஆம் நூற்றாண்டு முதல் விரைந்து சிறந்தது. ஆங்கிலேயர் ஆட்சி நாட்டில் நிலைபெற்ற பின் நாடெங்கும் அச்சகங்கள் தோன்றின. கிறித்துவ மிஷனரிகளும் இந்துக்களும் போட்டிபோட்டுக் கொண்டு நூல்களை வெளியிட்டனர். சென்னைக் கல்விச் சங்கமும் சென்னைப் புத்தகக் கழகமும் பாட நூல்களையும் மொழிபெயர்ப்புகளையும் வெளியிட்டதால் உரைநடை நல்ல நிலையை அடைந்தது.

ஆறுமுக நாவலர்

கற்ற பண்டிதர்க்கு ஒரு நடை, கல்லாத பாமரர் கேட்டு ரசிக்க ஒரு நடை, சமயக் கருத்துக்களைக் கூற ஒரு நடை என மூவகை நடை வீரமாமுனிவர் காலத்திலேயே வழங்கினாலும் இருபதாம் நூற்றாண்டின் உரைநடை வேந்தராக ஒளிர்பவர் ஆறுமுக நாவலர். இலக்கணப் பிழைகள் அற்ற எளிய, இனிய, தெளிந்த நடையைத் தோற்றுவித்ததால் இவரைதமிழ்க் காவலர் என்றும் தற்காலத் தமிழ் உரைநடையின் தந்தைஎன்றும் கூறுவர். இலங்கையைச் சார்ந்த ஆறுமுக நாவலர் உரைநடையை வளர்த்தாலும், தமிழகத்தில் உரைநடைக்கு உயிர் ஊட்டியவர் பாரதியார். என்றாலும் கவிதைத் துறை போல உரைநடையில் அவரால் புகழ்பெற இயலவில்லை. காலத்தின் போக்கிற்கு ஏற்ப, இவரும் வடமொழிச் சொற்களைக் கலந்து எழுதத் தயங்கவில்லை.

அச்சு இயந்திர அறிமுகம் தமிழ் உரைநடை வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தது. அச்சடித்த உரைநடை நூல்கள் பல வருவதற்குப் பல அறிஞர்கள் காரணமாகத் திகழ்ந்தார்கள். அத்தகைய முன்னோடிகளாகிய தமிழறிஞர்களைப் பற்றி முதலில் பார்ப்போம்.

 வ.உ.சிதம்பரம்பிள்ளை

      வ.உ.சிதம்பரம் பிள்ளை தேச விடுதலைப் போராட்டத்தில் முன்னணியில் நின்றவர்களும் இலக்கிய வளர்ச்சிக்குப் பணிபுரிந்திருக்கிறார்கள் பத்திரிகையாசிரியராகத் திகழ்ந்த வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள், மெய்யறிவு, மெய்யறம் என்ற நீதி நூல்களைத் திருக்குறள் கருத்துக்களை ஒட்டி விளக்கி எழுதியுள்ளார். மக்களுக்காகத் தொண்டு செய்ய ஆர்வமும், மேடைப்பேச்சுப் பயிற்சியும் இருந்தபடியால் வ. உ. சி யின் நடையில் நெகிழ்ச்சி காணப்படுகிறது என்கிறார் மு.வரதராசனார்.

மறைமலையடிகள்

மறைமலையடிகளால் இயற்றப் பெற்ற பல்வகை உரைநடை நூல்கள் பின்வருமாறு.

1) அறிவியல் நூல்கள் - மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை (2 பாகம்), பொருந்தும் உணவும் பொருந்தா உணவும், யோகநித்திரை அல்லது அறிதுயில், மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி.

2) நாவல் - 

குமுதவல்லி நாகநாட்டரசி, கோகிலாம்பாள் கடிதங்கள்.

திரு.வி.க

       தமிழாசிரியராக இருந்து பின் பத்திரிகை ஆசிரியராகி, தொழிலாளர் தலைவராகவும் விளங்கிய திரு.வி. கல்யாண சுந்தரனாரின் உரைநடை எளியது; இனியது. இவரது பத்திரிகைத் தமிழை, தேசபக்தன், நவசக்திஎன்ற பத்திரிகைகள் மூலம் அறியலாம். மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், முருகன் அல்லது அழகு, பெண்ணின் பெருமை,தமிழ்ச்சோலை என்ற நூல்களை எழுதியுள்ளார்.

செல்வக்கேசவராய முதலியார் 

    திருவள்ளுவர், கம்பநாடர், தமிழ்,தமிழ் வியாசங்கள், வியாசமஞ்சரி, கண்ணகிகதை, அவிநவக்கதைகள், பஞ்சலட்சணம் முதலிய நூல்களைப் பழமொழி கலந்த நடையில் எழுதித் தமிழுக்கு அழகும் மெருகும் தந்தார்.

பேராசிரியர் பூரணலிங்கம்பிள்ளை 

    தமிழ்க் கட்டுரைகள்,மருத்துவன் மகள், கதையும் கற்பனையும் என்ற நூல்களை எழுதியுள்ளார்.

பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார் 

    உரைநடைக் கோவை என்ற தனது நூலில் பழைய இலக்கியத்தில் உள்ள சொற்களைப் பயன்படுத்தி எழுதியுள்ளார். நீண்ட வாக்கியங்களை உடையது இவர் நடை.

சோமசுந்தர பாரதியார் 

    தசரதன் குறையும் கைகேயி நிறையும், சேரர் தாயமுறை என்ற இரண்டு நூல்களை எழுதியுள்ளார்.

பேராசிரியர். ரா.பி.சேதுப்பிள்ளை 

    அழகான நடையில் 25க்கும் மேற்பட்ட உரைநடை நூல்களை எழுதியவர் .  ஊரும்பேரும்,  வேலும் வில்லும், செந்தமிழும் கொடுந்தமிழும், தமிழின்பம், வீரமாநகர் என்பன அவரியற்றிய சில நூல்கள்.

உ.வே.சாமிநாத அய்யர்.

     தமிழ்த் தாத்தா என்றழைக்கப்படும் உ.வே. சாமிநாத அய்யர் மணிமேகலை கதைச் சுருக்கம், புத்த தர்மம், உதயணன் கதைச்சுருக்கம் போன்ற பல உரைநடை நூல்களை எழுதியுள்ளார்.

பேராசிரியர். எஸ்.வையாபுரிப் பிள்ளை

       வையாபுரிப் பிள்ளை தமிழ்ச்சுடர் மணிகள், சொற்கலை விருந்து, காவிய காலம், இலக்கியச் சிந்தனைகள், இலக்கிய உதயம்முதலிய உரைநடை நூல்களை எழுதியுள்ளார்.

முடிவுரை

இவ்வாறாக பல்வேறு அறிஞர்களின் முயற்சியால் செய்யுள் வடிவம் மாற்றம் பெற்று உரைநடை என்னும் புத்திலக்கியம் உருப்பெற்றது. அதனால் எண்ணிலடங்கா உரைநடை நூல்கள் தோற்றம் பெற்று தமிழிலக்கியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.       

சிறுகதை தோற்றமும் வளர்ச்சியும்

சிறுகதை தோற்றமும் வளர்ச்சியும்

முன்னுரை

       காலம் காலமாகக் கதை சொல்வதும், கதை கேட்பதும் அனைத்து மக்களிடையேயும் வாய்மொழி மரபாக இருந்து வந்திருக்கிறது. நாகரிகம் தோன்றுவதற்கு முன்பே, மக்கள் இனக் குழுக்களாக இயங்கி வந்தபோது, ஓய்வு நேரங்களில் சக மனிதர்களிடம் தொடர்பு கொள்வதற்கும், குடும்ப உறவினர்களுடன் பொழுதைக் கழிக்கவும் கதை கூறும் மரபைக் கையாண்டு வந்துள்ளனர்.

தமிழர்கள் காலந்தோறும், இராமாயணம், மகாபாரதம், புராணக் கதைகள், கிராமியக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், மரியாதைராமன் கதைகள், தெனாலிராமன் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள் என பல்வேறு கதைகளைக் கேட்டு வருகின்றனர். கதைகளின் வழியாக ஒழுக்கநெறிகள் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன. அதன் படிநிலை வளர்ச்சியை இக்கட்டுரையில் காண்போம்.

தொல்காப்பியர் கூறும் கதை மரபு

கதை சொல்லும் மரபு தொன்றுதொட்டு இருந்து வந்த வழக்கம் என்பதைத் தொல்காப்பியர்,

                            ‘பொருள் மரபில்லாப் பொய்ம்மொழி யானும்

                               பொருளோடு புணர்ந்த நகைமொழியானும்’ 

என்று உரைப்பார்.

சிறுகதைக்கான இலக்கணம்

  • அரைமணிமுதல் இரண்டு மணிநேரத்துக்குள் படித்து முடிக்கக்கூடியது சிறுகதை என்பர் எட்கார் ஆலன்போ. 
  • சுருங்கச் சொல்லுதலும், சுருக்கெனச் சொல்லுதலும் இதன் உத்திகளாகும். அதனால் நீண்ட வருணனைகளுக்கு இங்கு இடமில்லை.
  • குதிரைப் பந்தயம் போலத் தொடக்கமும் முடிவும் சுவைமிக்கனவாக இருத்தல்வேண்டும் என்பர் செட்ஜ்விக். 
  • புதினம் புளியமரம் என்றால், சிறுகதை தென்னைமரம் என்பார் இராசாசி.

சிறுகதை தோன்றிய சூழல்

19ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து, தமிழ் இலக்கியத்தின் பரப்பிலும் வடிவத்திலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. அச்சுப்பொறியின் பயன்பாட்டினாலும், ஆங்கில மொழியின் செல்வாக்கினாலும் தமிழ்ச் சிறுகதை வழக்கில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டது.  வாய்மொழியாக வழங்கி வந்த கதைகள் பல நூல் வடிவில் அச்சுப் பெற்று வெளியிடப்பட்டன.  இவ்வகையில் முதன்முதலில் அச்சில் வந்தது வீரமாமுனிவரின் ‘பரமார்த்த குருவின் கதை’. அதைத் தொடர்ந்து ஈசாப்பின் நீதிக்கதைகள், திராவிட பூர்வகாலக்கதைகள், தெனாலிராமன் கதைகள் போன்றவைத் தமிழில் அச்சாயின.  இதனால் தமிழ்நாட்டில் கதை கேட்பது மட்டுமல்ல படிக்கும் வழக்கமும் அதிகமானது.

தமிழ்ச் சிறுகதையின் முன்னோடிகள்

  • வ. வே. சு. ஐயரின் குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதையை முதன்முதலில் அறிமுகப்படுத்தியது விவேக போதினி என்னும் இதழ் ஆகும். இவரே தமிழ்ச் சிறுகதையின் தந்தை என அழைக்கப்பட்டார். ‘குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை, மங்கையர்க்கரசியின் காதல் போன்ற கதைகளில் நிகழ்வு ஒருமை, கால ஒருமை, பாத்திர ஒருமை, உணர்வு ஒருமை என்ற சிறுகதைக்குரிய இலக்கணம் அனைத்தும் ஒருங்கே அமைந்திருப்பதைக் காணலாம். 
  • செல்வகேசவராய முதலியாரின் அபிநவக் கதைகள் என்ற தொகுப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. 
  • ஆரம்ப காலச் சிறுகதை ஆசிரியர்களுள் மாதவைய்யா குறிப்பிடத்தக்கவர்.  இவரது ‘குசிகர் குட்டிக்கதைகள்ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியானது. இவர் பிராமணச் சமூகத்தில் காணப்பட்ட குழந்தைத் திருமணம், விதவைகள் பட்ட துயர், வரதட்சனைக் கொடுமை முதலிய சீர்கேடுகளைப் பற்றித் தமது கதைகளின் மூலம் மிக வன்மையாகக் கண்டித்தவர்.
  • மகாகவி சுப்பிரமணிய பாரதியார் வங்காள எழுத்தாளர் இரவீந்திரநாத் தாகூரின் 11 சிறுகதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டார். 
  • கல்கி அவர்கள் சிறுகதைத் துறையில் கால்வைத்து, புதினங்களால் புகழடைந்து கல்கி இதழைத் தொடங்கினார். இவரது கதைகளில்  கணையாழியின் கனவு, திருடன் மகன் திருடன், வீணை பவானி ஆகிய கதைகள் குறிப்பித்தக்கன.
  • சொ.விருத்தாச்சலம் என்று அழைக்கப்பட்ட புதுமைப்பித்தன் அவர்கள் சிறுகதை மன்னன் என அழைக்கப்பட்டார். கேலியும்,கிண்டலும் கலந்த சமூகச் சாடல் இவரைத் தமிழுலகிற்கு அடையாளம் காட்டியது.சிறுகதைச் செல்வர் என்றும், தமிழ்நாட்டின் மாப்பசான் எனப் போற்றப்பட்டார். இவரது கதைகளில் கயிற்றரவு, சாபவிமோசனம், பொன்னகரம் ஆகியன காலத்தை வென்ற கதைகளாகும்.
  • மௌனி என்ற புனைப் பெயரில் எழுதிய மணி அவர்களைப் புதுமைப்பித்தன் சிறுகதை உலகின் திருமூலர் என்று அழைப்பார்

 இதழ்களால் வளர்ந்த சிறுகதை

தமிழ்ச் சிறுகதையின் மலர்ச்சிக்கு களம் அமைத்தது மணிக்கொடி சிற்றிதழாகும். இது டி. எஸ். சொக்கலிங்கம், ஸ்டாலின் சீனிவாசன் ஆகியோரால் நடத்தப்பட்டது. பின்னர் இதை முழுக்கமுழுக்க சிறுகதை இதழாக பி. எஸ். ராமையா வெளியிட்டார். இதில் புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, மௌனி போன்றவர்கள் சிறந்த சிறுகதைகளை எழுதினார்கள். இவர்கள் மணிக்கொடி தலைமுறை என்று சொல்லப்படுகிறார்கள். தமிழின் சிறந்த சிறுகதைகளை எழுதியவர்கள் என்று க.நா.சுப்ரமணியம்,சி. சு. செல்லப்பா, லா.ச.ராமாமிருதம், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, கு அழகிரிசாமி,  தி. ஜானகிராமன், கி. ராஜநாராயணன், மு.வ, அகிலன் போன்றவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள்.

சிறுகதை வளர்ச்சியில் பிற காரணிகள்

இதழ்கள் பல்வேறு வகையான சிறுகதைப் போட்டிகளை உருவாக்கி சிறுகதை எழுத்தாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தின. அதைப் போலவே சிறுகதை தொகுப்பு முயற்சிகளாலும் அமைப்புகளின் பரிசுத் திட்டங்களாலும் சிறுகதை சிறப்பாக வளர்ச்சியடைந்து வந்துள்ளது.

அயல்நாடுகளில் சிறுகதை வளர்ச்சி

தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி என்பது தமிழக எல்லையோடு நின்றுவிடவில்லை. தமிழ் பேசும் பிற நாடுகளிலும் அதன் வளர்ச்சியைக் காண இயலும். தமிழர்கள் அதிகம் வாழும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்களும் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்கு வளம் சேர்த்துள்ளனர்.

 தொழில்நுட்பத்தில் சிறுகதை

   இதழ்களால் வளர்ந்த சிறுகதை இணையத்தாலும் வளர்ச்சியினைப் பெற்றது. சிறுகதைக்கெனவே பல இணையதளங்களும் வலைப்பூக்களும் உயிர்ப்பெறுகின்றன. மேலும் அலைபேசியிலும் வாட்பேட், பிரதிலிபி போன்ற செயலிகளும் சிறுகதைகளைப் பதிப்பித்து சிறுகதை தேயாது வளம் பெறும் பங்கினைச் செவ்வனே செய்கின்றன.

முடிவுரை

காலத்துக்கு ஏற்ப வளர்ந்து வந்த தமிழ்ச்சிறுகதை இன்றைய அவரசகாலத்துக்கு ஏற்ப ஒருபக்கக் கதை, அரைப்பக்கக் கதை, கால்பக்கக் கதை, மைக்ரோக் கதை என தன் வடிவத்தை மாற்றிக்கொண்டுள்ளது. உலக சிறுகதைகளுக்கு  இணையாக தமிழ்ச்சிறுகதை இலக்கி்யத்தை வளர்தெடுத்த எழுத்தாளர்களைத் தமிழுலகம் என்றும் மறக்காது.




தமிழ் நாடக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்

 

தமிழ் நாடக இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும்

முன்னுரை

கலைகளின் அரசி என அழைக்கப்படுவது நாடகமாகும்.தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது.  இவற்றுள் நாடகம் தொன்மையும், தனிச்சிறப்பும் வாய்ந்ததாகும். இயலும், இசையும் கலந்து கதையைத் தழுவி நடித்துக்காட்டப்படுவது நாடகமாகும். எட்டு வகையான உணர்ச்சிகளை ஒருவர் தம் மெய்ப்பாடு தோன்ற நடிப்பது நாடகத்தின் தனிச்சிறப்பாகும். தெருக்கூத்துகளாக இருந்து, மேடைநாடகங்களாக மாறி, இலக்கிய நாடகங்களாக மலர்ச்சி பெற்ற தமிழ்நாடகத்தின் தோற்றம் வளர்ச்சி குறித்து இக்கட்டுரை மதிப்பீடு செய்கிறது.

தமிழ்நாடகத்தின் தொன்மை

     தொல்காப்பியர் ”நாடக வழக்கினும்என்று நாடகத்தைக் குறிப்பிடுகிறார்.    சிலப்பதிகாரம் நாடகக்கூறுகளுடன் நாடகக் காப்பியமாகவே திகழ்கிறது. கூத்தாட் டவைக்குல்லாத் தற்றே என்ற குறள் வழி நாடக அரங்கம் இருந்த செய்தியினை அறியலாம். அகத்தியம், கூத்தநூல், மதிவாணர் நாடகத் தமிழ் போன்ற  நாடக நூல்கள் பழந்தமிழர் வழக்கில் இருந்தன என்பதனைச் சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் அவர்கள் குறிப்பிட்டுச் செல்கிறார். குறவைக் கூத்து, துணங்கைக் கூத்து, ஆடிப்பாவை போன்ற கூத்து வகைகளை சங்ககாலத்தில் காணமுடிகிறது.

இருவகை நாடகங்கள்

வேத்தியல், பொதுவியல் என நாடகங்களை அக்காலத்தில் இருவகையாகப் பகுத்திருந்தனர். வேத்தியல் என்பது வேந்தனுக்காக நடித்துக் காட்டப்படுவதாகும், பொதுவியல் என்பது மக்களுக்காக நடித்துக் காட்டப்படுவதாகும்.

பல்லவர் கால நாடகங்கள்

சமண, புத்த சமயங்கள் கலைகளுக்கு எதிராக செயல்பட்டதால் இருண்ட காலத்தில் நாடகத்தமிழ் ஒளியிழந்தது. நாயன்மார்களும், ஆழ்வார்களும் இசைக் கலைக்கு உயிரூட்டினர். எனினும் நாடகத்துக்கு பெரிய செல்வாக்கு ஏற்படவில்லை. எனினும் இக்காலத்தில் மகேந்திர வர்ம பல்லவனின் “மத்தவிலாச பிரகசனம்என்ற நாடக நூல் புகழ் பெற்றிருந்தது. இன்னிசைக் கூத்து, வரலாற்றுக் கூத்து என இருவகை நாடக மரபுகளும் இக்காலத்தில் இருந்தன.

சோழர் கால நாடகங்கள்

சோழர் காலத்தில் இராஜராஜனின் வெற்றிச் சிறப்பைப் பாராட்டும்  “இராஜராஜவிஜயம்  நிகழ்த்தப்பட்டது. இதில் நடித்தவர்களுக்கு “ராசராச நாடகப்பிரியன் என்று பட்டம் வழங்கினர் என்பதைக் கல்வெட்டுகள் வழி அறியமுடிகிறது.

 தமிழ் நாடகத்தின் எழுச்சி

இசுலாமியர் படையெடுப்புக்குப் பிறகு கலைகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டது. 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் நாடகங்கள் மீண்டும் புத்துயிர் பெற்று வளர ஆரம்பித்தன. குற்றாலக்குறவஞ்சி, முக்கூடற்பள்ளு, இராமநாடகக் கீர்த்தனை, நந்தனார் சரிதக் கீர்த்தனை ஆகிய நாடகங்கள் மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்றன.

      காசி விசுவநாதமுதலியார் அவர்களின் டம்பாச்சாரி நாடகம் தான் முதன் முதலில் மேடையில் நடிக்கப்பட்ட சமூக நாடகமாகும்.

தமிழ் நாடக முன்னோடிகள்        

பம்மல் சம்பந்தம் முதலியார், சங்கரதாசு சுவாமிகள், பரிதிமாற் கலைஞர் ஆகிய மூவரையும் தமிழ்நாடக மூவர் என்று அழைப்பது வழக்கம்.

1.பம்மல் சம்பந்தம் – இவர் எழுதிய மொத்த நாடகங்கள் 93 ஆகும். இவரே தமிழ்நாடகத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். மேலும் இவரைத் தமிழ் சேக்சுபியர் என்றும் அழைப்பர். இவர்தம் நாடகங்கள் இன்பியல், துன்பியல், கேளிக்கை, அங்கதம், நையாண்டி, புராணிகம், வரலாறு, மொழிபெயர்ப்பு எனப் பலதரப்பட்டவையாகும். இவர் சுகுண விலாச சபை என்ற நாடகக் குழுவினை நடத்தி வந்தார். இக்குழுவினரால் நடத்தப்படும் நாடகத்தில் கற்றவர்களையும் அறிஞர்களையும் நடிக்கச் செய்தார். நாடகக் கலைக்குத் தம் 81 ஆவது வயது வரை பெரும்பணி ஆற்றினார். கண் பார்வை மங்கிய நிலையிலும் தாம் சொல்லியே பிறரை எழுத வைத்தார். பத்ம பூஷண் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். ஷேக்ஸ்பியரின் ஹேம்லெட், ஆஸ் யூ லைக் இட் உள்ளிட்ட நாடகங்களை அமலாதித்யன், நீ விரும்பியபடியே என்ற பெயர்களில் தமிழ் நாடகங்களாக மொழிபெயர்த்தார். சதி சுலோச்சனா, யயாதி, சந்திர ஹரி, தாசிப் பெண், சபாபதி போன்ற இவரது நாடகங்களில் சில திரைப்படமாகவும் வெளிவந்துள்ளன.

 

2.பரிதிமாற் கலைஞர் – நாடகம் படித்தல், நடித்தல், இலக்கணம் வகுத்தல் என மூன்று பெரும் பணிகளை ஆற்றினார். நாடகவியல் என்ற தமிழ்நாடக இலக்கண நூலை இயற்றினார். இவர் படைத்த நாடகங்களுள் ரூபாவதி, கலாவதி, மானவிஜயம், சூர்ப்பனகை ஆகியன குறிப்பிடத்தக்கனவாகும்.

 

3.சங்கரதாசு சுவாமிகள்-  முறைப்படுத்தப்பட்ட தமிழ்நாடகவரலாறு இவரிலிருந்தே தொடங்குகிறது. இருபதாம் நூற்றாண்டு நாடகத்துறையை நசிவடையாமல்க் காத்ததால் இவரைத் தமிழ்நாடகத் தலைமையாசிரியர் எனப் போற்றுவர்.  ஆரம்ப காலத்தில் எமன், இராவணன் போன்ற எதிர்மறைக் கதாபாத்திரங்களில் நடித்து பின்னர் நாடக ஆசிரியரானார். இவர் சமரச சன்மார்க்க சபை என்ற நாடகக் குழுவினை நடத்தி வந்தார். இக்குழு சிறுவர்களை மட்டுமே நடிகர்களாகக் கொண்டு நடத்தப்பெற்ற முதல் பாலர் நாடக சபையாகும். அதன் பிறகு தத்துவ மீனலோசனி வித்துவ பால சஎ என் நாடகக்குழுவினை உருவாக்கி அதன் ஆசிரியராகத் தனது இறுதிநாள் வரை இருந்தார். அபிமன்யு சுந்தரி, இலங்காதிலகம், கோவலன், நல்லதங்காள், பிரகலாதன்  உள்ளிட்ட 40 நாடகங்கள் இவர் படைத்தவையாகும்.

நாடகங்களின் வகை

தமிழ்நாடகங்களை அதன் கருப்பொருளைக் கொண்டு புராண நாடகம், இலக்கிய நாடகம்,  துப்பறியும் நாடகம், வரலாற்றுநாடகம், நகைச்சுவை நாடகம், மொழிபெயர்ப்பு நாடகம், தழுவல் நாடகம், என வகைப்படுத்தாலாம். சான்றாக புராண நாடகங்கள், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிறைய தோன்றின. பிரகலாதன், ஐயப்பன், தசாவதாரம், சிறுதொண்டர் ஆகிய நாடகங்கள் அவற்றுள் குறிப்பித்தக்கனவாகும். இலக்கிய நாடகங்களைப் படித்துமுடித்தவுடன் ஒரு நாடகம் பார்த்த நிறைவு கிடைக்கும். அவ்வகையில், சுந்தரம்பிள்ளையின் – மனோன்மணீயம், பாரதிதாசனின் – பிசிராந்தையார், மறைமலையடிகளின்- அம்பிகாபதிஅமாராவதி, அ.ச.ஞானசம்பந்தனின் தெள்ளாறு எறிந்த நந்தி முதலிய நாடகங்கள் இலக்கி்ய நாடகங்களுள் குறிப்பித்தக்கனவாகும்.

தற்கால நாடகங்கள்

       காலங்கள் மாற நாடக வளர்ச்சியும் மாற்றத்தினைக் கண்டது. விடுதலைப் போராட்டித்தில் எழுச்சியூட்டும் நாடகங்கள் தம் பங்கினைச் சிறப்பாகவே செய்தன.காந்தி குல்லாய், சர்க்கா, மூவர்ணம் போன்ற நாடகங்கள் அக்காலத்தில் விடுதலை உணர்வினைத் தூண்டின. தொழில்நுட்ப வளர்ச்சி திரையிலக்கியத்திற்குத் துணை புரிந்தனவே அன்றி நாடகத் துறை நலிவடைய காரணமாயின. என்றாலும் ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.வி.சேகர், கிரேஸி மோகன் போன்ர் நகைச்சுவை நாடகங்களை நடத்தி வருகின்றனர். மதுவந்தி அருண் அவர்கள் தியேட்டர் ஆஃப் மகம் என்ற அமைப்பின் மூலம் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் வெளிநாட்டிலும் நாடகம் நடத்தி வருவதும் குறிப்பிடத்தகுந்ததாகும்.

  முடிவுரை

இன்றைய சூழலில் கல்விச் சாலைகளில் ஓரங்கநாடகம், நாட்டிய நாடகங்கள் நடித்துக் காட்டப்படுகின்றன, வார, மாத இதழ்களிலும், வானொலி தொலைக்காட்சிகளிலும் நாடகங்கள் நடித்துக்காட்டப்படுகின்றன. இன்று அதிகமான தொழில்நுட்பங்களோடு நிறைய படங்கள் வருகின்றன. இவற்றுக்கெல்லாம் முன்னோடியாக அமைந்த மேற்கண்ட நாடகங்களையும் அக்கலையை வளர்த்த சான்றோர்களையும் தமிழுலகம் என்றும் மறவாது.