உரைநடையின் தோற்றம் வளர்ச்சி
ஒரு
மொழியில் முதன் முதலாகச் செய்யுள் தோன்றும் போது, அது பேச்சு வழக்கிலுள்ள மொழி நடையினையும்,
ஓசைப் பண்பினையும் தழுவியே தோன்றும். இது தமிழ் மொழிக்கு மட்டுமல்ல, உலகில் உள்ள எல்லா
மொழிகளுக்கும் பொருந்தும். தமிழில் உள்ள ஓசை வகைகளுள் அகவலே முந்தியது என்பர். இந்த
அகவலும், செப்பலும் மக்கள் பேச்சு வழக்கில் காணப்படுபவை. இந்த ஓசைகளில் எழுதப்பட்ட
இலக்கியங்கள் உரைநடை போன்ற அமைப்புகளிலேயே அமைந்திருந்தன. அதனால்தான் செய்யுளைத் தொடர்ந்து
உரைநடை எழுந்தது என்பர் அறிஞர். உரைநடை தோன்றிய காலத்தில் செய்யுளுக்கும், உரைநடைக்கும்
பெரிதும் வேறுபாடுகள் இருந்திருக்க வாய்ப்பில்லை. செய்யுளைப் போலவே உரைநடையும் ‘செப்பமாக’ச் செய்யப்பட்ட ஒன்று. அதனால்தான் உரையினையும் தொல்காப்பியர் செய்யுள்
வகையுள் ஒன்றாகவே கூறினார். தொடக்கக் கால உரைநடையின் தன்மை செய்யுளிலிருந்து பெரிதும்
மாறுபடாத நிலையிலேயே இருந்தது.
தமிழ் பிராமிக் கல்வெட்டு
உரைநடை
தமிழ்
பிராமிக் கல்வெட்டுகள் தொல்காப்பியர் காலத்துக்கு முற்பட்டன. இவை பெரும்பாலும் சங்க
காலத்தைச் சார்ந்தவை என்பர் கல்வெட்டு அறிஞர்கள். இத்தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுகள்
தொன்மைக் கால உரைநடையைப் பற்றி அறிவதற்குச் சான்றாக உள்ளன.
தொன்மைக் கால உரைநடை
தொன்மைக் காலத்தில் குறிப்பாகத் தொல்காப்பியத்திற்கு
முந்திய காலத்திலும், தொல்காப்பிய காலத்திலும், சங்க காலத்திலும் வழங்கப்பட்ட உரைநடையைப்
பற்றிப் பார்ப்போம்.
தொல்காப்பியத்துக்கு
முந்திய உரைநடை
மூலபாடம்,
உரைப்பாடம் என்ற பாகுபாடு தொன்மையானது; இரண்டாயிரம் ஆண்டுக்கும் முற்பட்டது. செய்யுள்களுக்கு
விளக்கமாக எழுதப்பட்ட உரைகளே உரைநடை வளர்ச்சிக்கு உதவின. தொல்காப்பிய நூற்பாக்களில்
என்ப, என்மனார், என்மனார் புலவர், நூல் நவில்புலவர் முதலிய சொற்களும் தொடர்களும் எங்கும் பரந்து கிடக்கின்றன.
ஆகவே தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே உரைநூல்களும், உரைநடையும் இருந்ததைத் தொல்காப்பிய
நூற்பாக்கள் வழி அறிய முடிகின்றது.
தொல்காப்பியக் கால
உரைநடை
தொல்காப்பியர்
எழுதிய உரை பற்றிய செய்திகளே, நமக்கு அக்கால உரைநடை குறித்து அறிவதற்கு உதவுகின்றன.
தொல்காப்பியர், காண்டிகை என்றும், உரை என்றும் இருவகை உரை அமைப்புகளைக் காட்டுகின்றார்.
இவ்விரு வகை உரை முறைகளும் அவர் காலத்து நிலவிய உரைகூறும் மரபு என்று கருதலாம். தொல்காப்பியர்
செய்யுளை ஏழாக வகுத்துக் கூறுகிறார். அவற்றுள் ஒன்று, செய்யுட்பகுதியாகிய பாட்டு. மற்றவை
அடிவரையறையில்லாச் செய்யுள் பகுதிகள் ஆறு. அந்த ஆறனுள் ஒன்றாக உரைநடை வகையைக் கூறி,
அதனை நான்காகக் கூறுவார்.
பண்டைக் கால உரைநடை
சங்க
இலக்கியச் செய்யுள்களில் கீழ்க்காணப்பெறும் துறை, திணை விளக்கங்கள் ஆகிய பாடலின் குறிப்புகள்
உரைநடையில் அமைந்துள்ளன. அவற்றுள் சில பின்வருமாறு,
நற்றிணையில்,
பொருள் வயிற்பிரிந்த
தலைவன் பருவம் உணர்ந்த
நெஞ்சிற்கு உரைத்தது (நற்றிணை - 157)
சங்க கால உரைநடை,
செய்யுள் நடை போல் செறிவுடையதாகவும், அருஞ்சொற்கள் நிறைந்ததாகவும் உள்ளது.
சிலப்பதிகார உரைநடை
தமிழின்
முதல் காப்பியம் இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரம். இதன் பதிகத்திலேயே, வாழ்த்து
வரந்தரு காதையொடு இவ்வா றைந்தும் உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள் என்ற குறிப்பு
வருகிறது. ‘உரை பெறு கட்டுரை’, ‘உரைப்பாட்டுமடை’ என்னும் பெயர்களோடு இக்காப்பியத்தில் இடைஇடையே உரைநடை இடம் பெற்றுள்ளது.
தமிழ் உரைநடையின் ஆரம்ப வடிவத்தை நாம் சிலப்பதிகாரத்திலே காணலாம். இக்காப்பியத்தில்
உரைநடை இரண்டு காரணங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம்.
உரைநடை வளர்ச்சி
அச்சு
இயந்திரங்களின் வரவால் தமிழில் முதலில் மலர்ச்சி பெற்றது உரைநடையே. பல வகையான கட்டுரை
நூல்கள், சிறுகதை, நாவல், மொழி பெயர்ப்புகள், திறனாய்வு, உரையாசிரியர்கள் எனப் பல பிரிவுகளுள்
உரைநடை வளர்ந்தது. 1904-ஆம் ஆண்டில் வெளியிடப்பெற்ற தமிழ் உரைநடையின் வரலாறு என்ற
(History of Tamil Prose) ஆங்கில நூல் வி.எஸ்.செங்கல்வராய பிள்ளை என்பவரால் எழுதப்பட்டது.
இனி, தமிழ் உரைநடை வளர்த்த சான்றோர்களைக் காண்போம்.
உரைநடை முன்னோடிகள்
ராபர்ட்-டி.நொபிலி,
அருளானந்த அடிகள், வீரமா முனிவர், கால்டுவெல், போப்ஐயர் என்பவர்களால் வளர்க்கப்பட்ட
தமிழ் உரை நடையானது 19ஆம் நூற்றாண்டு முதல் விரைந்து சிறந்தது. ஆங்கிலேயர் ஆட்சி நாட்டில்
நிலைபெற்ற பின் நாடெங்கும் அச்சகங்கள் தோன்றின. கிறித்துவ மிஷனரிகளும் இந்துக்களும்
போட்டிபோட்டுக் கொண்டு நூல்களை வெளியிட்டனர். சென்னைக் கல்விச் சங்கமும் சென்னைப் புத்தகக்
கழகமும் பாட நூல்களையும் மொழிபெயர்ப்புகளையும் வெளியிட்டதால் உரைநடை நல்ல நிலையை அடைந்தது.
ஆறுமுக நாவலர்
கற்ற
பண்டிதர்க்கு ஒரு நடை, கல்லாத பாமரர் கேட்டு ரசிக்க ஒரு நடை, சமயக் கருத்துக்களைக்
கூற ஒரு நடை என மூவகை நடை வீரமாமுனிவர் காலத்திலேயே வழங்கினாலும் இருபதாம் நூற்றாண்டின்
உரைநடை வேந்தராக ஒளிர்பவர் ஆறுமுக நாவலர். இலக்கணப் பிழைகள் அற்ற எளிய, இனிய, தெளிந்த
நடையைத் தோற்றுவித்ததால் இவரைதமிழ்க் காவலர் என்றும் தற்காலத் தமிழ் உரைநடையின் தந்தைஎன்றும்
கூறுவர். இலங்கையைச் சார்ந்த ஆறுமுக நாவலர் உரைநடையை வளர்த்தாலும், தமிழகத்தில் உரைநடைக்கு
உயிர் ஊட்டியவர் பாரதியார். என்றாலும் கவிதைத் துறை போல உரைநடையில் அவரால் புகழ்பெற
இயலவில்லை. காலத்தின் போக்கிற்கு ஏற்ப, இவரும் வடமொழிச் சொற்களைக் கலந்து எழுதத் தயங்கவில்லை.
அச்சு
இயந்திர அறிமுகம் தமிழ் உரைநடை வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தது. அச்சடித்த உரைநடை
நூல்கள் பல வருவதற்குப் பல அறிஞர்கள் காரணமாகத் திகழ்ந்தார்கள். அத்தகைய முன்னோடிகளாகிய
தமிழறிஞர்களைப் பற்றி முதலில் பார்ப்போம்.
வ.உ.சிதம்பரம்பிள்ளை
வ.உ.சிதம்பரம் பிள்ளை தேச விடுதலைப் போராட்டத்தில்
முன்னணியில் நின்றவர்களும் இலக்கிய வளர்ச்சிக்குப் பணிபுரிந்திருக்கிறார்கள் பத்திரிகையாசிரியராகத்
திகழ்ந்த வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள், மெய்யறிவு, மெய்யறம் என்ற நீதி நூல்களைத் திருக்குறள்
கருத்துக்களை ஒட்டி விளக்கி எழுதியுள்ளார். மக்களுக்காகத் தொண்டு செய்ய ஆர்வமும், மேடைப்பேச்சுப்
பயிற்சியும் இருந்தபடியால் வ. உ. சி யின் நடையில் நெகிழ்ச்சி காணப்படுகிறது என்கிறார்
மு.வரதராசனார்.
மறைமலையடிகள்
மறைமலையடிகளால் இயற்றப்
பெற்ற பல்வகை உரைநடை நூல்கள் பின்வருமாறு.
1) அறிவியல் நூல்கள் - மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை (2 பாகம்), பொருந்தும் உணவும் பொருந்தா உணவும், யோகநித்திரை அல்லது அறிதுயில், மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி.
2) நாவல் -
குமுதவல்லி நாகநாட்டரசி,
கோகிலாம்பாள் கடிதங்கள்.
திரு.வி.க
தமிழாசிரியராக இருந்து பின் பத்திரிகை ஆசிரியராகி, தொழிலாளர் தலைவராகவும் விளங்கிய திரு.வி. கல்யாண சுந்தரனாரின் உரைநடை எளியது; இனியது. இவரது பத்திரிகைத் தமிழை, தேசபக்தன், நவசக்திஎன்ற பத்திரிகைகள் மூலம் அறியலாம். மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், முருகன் அல்லது அழகு, பெண்ணின் பெருமை,தமிழ்ச்சோலை என்ற நூல்களை எழுதியுள்ளார்.
செல்வக்கேசவராய முதலியார்
திருவள்ளுவர், கம்பநாடர், தமிழ்,தமிழ் வியாசங்கள், வியாசமஞ்சரி, கண்ணகிகதை, அவிநவக்கதைகள், பஞ்சலட்சணம் முதலிய நூல்களைப் பழமொழி கலந்த நடையில் எழுதித் தமிழுக்கு அழகும் மெருகும் தந்தார்.
பேராசிரியர் பூரணலிங்கம்பிள்ளை
தமிழ்க் கட்டுரைகள்,மருத்துவன் மகள், கதையும் கற்பனையும் என்ற நூல்களை எழுதியுள்ளார்.
பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார்
உரைநடைக் கோவை என்ற தனது நூலில் பழைய இலக்கியத்தில் உள்ள சொற்களைப் பயன்படுத்தி எழுதியுள்ளார். நீண்ட வாக்கியங்களை உடையது இவர் நடை.
சோமசுந்தர பாரதியார்
தசரதன் குறையும் கைகேயி நிறையும், சேரர் தாயமுறை என்ற இரண்டு நூல்களை எழுதியுள்ளார்.
பேராசிரியர். ரா.பி.சேதுப்பிள்ளை
அழகான நடையில் 25க்கும் மேற்பட்ட உரைநடை நூல்களை எழுதியவர் . ஊரும்பேரும், வேலும் வில்லும், செந்தமிழும் கொடுந்தமிழும், தமிழின்பம், வீரமாநகர் என்பன அவரியற்றிய சில நூல்கள்.
உ.வே.சாமிநாத அய்யர்.
தமிழ்த்
தாத்தா என்றழைக்கப்படும் உ.வே. சாமிநாத அய்யர் மணிமேகலை கதைச் சுருக்கம், புத்த தர்மம்,
உதயணன் கதைச்சுருக்கம் போன்ற பல உரைநடை நூல்களை எழுதியுள்ளார்.
பேராசிரியர். எஸ்.வையாபுரிப்
பிள்ளை
வையாபுரிப் பிள்ளை தமிழ்ச்சுடர் மணிகள், சொற்கலை
விருந்து, காவிய காலம், இலக்கியச் சிந்தனைகள், இலக்கிய உதயம்முதலிய உரைநடை நூல்களை
எழுதியுள்ளார்.
முடிவுரை
இவ்வாறாக
பல்வேறு அறிஞர்களின் முயற்சியால் செய்யுள் வடிவம் மாற்றம் பெற்று உரைநடை என்னும் புத்திலக்கியம்
உருப்பெற்றது. அதனால் எண்ணிலடங்கா உரைநடை நூல்கள் தோற்றம் பெற்று தமிழிலக்கியத்தை உயிர்ப்புடன்
வைத்திருக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக