வெள்ளி, 22 செப்டம்பர், 2023

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் - திருப்பாவை

ஆண்டாள் - திருப்பாவை

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;

நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!

சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,

கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்

நாரா யணனே, நமக்கே பறைதருவான்,

பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.

விளக்கம்

முழுநிலவு ஒளிவீசும் நல்ல நாளான இன்று, மார்கழி மாதம் பிறந்து விட்டது. சிறந்த அழகிய ஆபரணங்களை அணிந்தவர்களே, வளம் நிறைந்த ஆயர்பாடியின் செல்வச் சிறுமியர்களே, எழுந்திருங்கள். நாம் அனைவரும் இன்று அதிகாலையில் நீராடச் செல்வோம். கூர்மையான வேலாயுதத்தைக் கையில் கொண்டு போர்த்தொழிலில் வல்லவனான நந்தகோபனாரின் திருமகன். அழகிய கண்களை உடைய யசோதையின் சிங்கக்குட்டி போன்ற மகன். மேகங்களைப் போல கரிய மேனியும், சிவந்த கண்களையும் கொண்டவன். சூரியனைப் போன்றும், சந்திரனைப் போன்றும் ஒளி நிறைந்த முகத்தினை உடையவன். மேற்கூறிய தன்மைகளைக் கொண்ட நாராயணனே நமக்குப் பரம்பொருள். அவன் கட்டாயம் நமக்கு நோன்பின் பலனை அருளுவான்.

 


நன்றி 
https://www.inidhu.com


நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம் - திருநாவுக்கரசர் தேவாரம்

 

திருநாவுக்கரசர் தேவாரம்

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்

          நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்

ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்

          இன்பமே எந்நாளுந் துன்ப மில்லை

தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான

          சங்கரனற் சங்கவெண் குழையோர் காதிற்

கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்

          கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகி னோமே.  

விளக்கம்

          மலர் போன்ற சிவபெருமானின் திருவடிகளை அடைக்கலமாக அடைந்தமையால், நாம் யாருக்கும் அடிமையாவதில்லை. மரணத்தைத் தருகின்ற இயமனுக்கு அஞ்சுவதில்லை. நரகத்தில் புகுந்து துன்பமடைவதில்லை. பொய்யும் புரட்டும் இனி நம்மை அணுகுவதில்லை. என்றும் ஆனந்தமாக இருப்போம். நோய் என்பதையே அறியாது இருப்போம். வேறு யாரையும் பணிந்து நிற்க மாட்டோம். எந்நாளும் நமக்கு இன்பமே ஏற்படும். துன்பம் என்பதை நாம் அறிய மாட்டோம். யாருக்கும் அடிமையாகாதவனும், வெண்குழையைக் காதில் அணிந்த அரசனாகிய ஆதி சங்கரனுக்கு மட்டுமே நாம் அடிமையாக இருப்போம் என்று திருநாவுக்கரசர் பாடுகின்றார்.

 

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க - மாணிக்கவாசகர்

மாணிக்கவாசகர் - திருவாசகம்

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க

வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க

விளக்கம்

திருவைந்தெழுத்து மந்திரம் வாழ்க; திருவைந்தெழுத்தின் வடிவாக விளங்கும் இறைவனது திருவடி வாழ்க; இமைக்கும் நேரமுங் கூட என் மனத்தினின்றும் நீங்காதவனது திருவடி வாழ்க; திருப்பெருந்துறையில் எழுந்தருளி என்னையாட்கொண்ட குருமூர்த்தியினது திருவடி வாழ்க; ஆகம வடிவாகி நின்று இனிமையைத் தருபவனாகிய இறைவனது திருவடி வாழ்க; ஒன்றாயும் பலவாயும் உள்ள இறைவனது திருவடி வாழ்க.

மன ஓட்டத்தைத் தொலைத்து என்னை அடிமை கொண்ட முழுமுதற் கடவுளது திருவடி வெல்க; பிறவித் தளையை அறுக்கிற இறைவனது வீரக்கழலணிந்த திருவடிகள் வெல்க; தன்னை வணங்காத அயலார்க்கு எட்டாதவனாயிருப்பவனது தாமரை மலர் போலும் திருவடிகள் வெல்க; கை குவித்து வணங்குவோர்க்கு மனம் மகிழ்ந்து அருளுகின்ற இறைவன் திருவடிகள் வெல்க; கைகளைத் தலைமேல் உயர்த்தி வணங்குவோரை வாழ்வில் உயரச் செய்கின்ற சிறப்புடையவனது திருவடி வெல்க என்று இறைவனின் திருவடிகளை வாழ்த்துகின்றார் மாணிக்கவாசகர்.