வெள்ளி, 22 செப்டம்பர், 2023

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க - மாணிக்கவாசகர்

மாணிக்கவாசகர் - திருவாசகம்

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க

வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க

விளக்கம்

திருவைந்தெழுத்து மந்திரம் வாழ்க; திருவைந்தெழுத்தின் வடிவாக விளங்கும் இறைவனது திருவடி வாழ்க; இமைக்கும் நேரமுங் கூட என் மனத்தினின்றும் நீங்காதவனது திருவடி வாழ்க; திருப்பெருந்துறையில் எழுந்தருளி என்னையாட்கொண்ட குருமூர்த்தியினது திருவடி வாழ்க; ஆகம வடிவாகி நின்று இனிமையைத் தருபவனாகிய இறைவனது திருவடி வாழ்க; ஒன்றாயும் பலவாயும் உள்ள இறைவனது திருவடி வாழ்க.

மன ஓட்டத்தைத் தொலைத்து என்னை அடிமை கொண்ட முழுமுதற் கடவுளது திருவடி வெல்க; பிறவித் தளையை அறுக்கிற இறைவனது வீரக்கழலணிந்த திருவடிகள் வெல்க; தன்னை வணங்காத அயலார்க்கு எட்டாதவனாயிருப்பவனது தாமரை மலர் போலும் திருவடிகள் வெல்க; கை குவித்து வணங்குவோர்க்கு மனம் மகிழ்ந்து அருளுகின்ற இறைவன் திருவடிகள் வெல்க; கைகளைத் தலைமேல் உயர்த்தி வணங்குவோரை வாழ்வில் உயரச் செய்கின்ற சிறப்புடையவனது திருவடி வெல்க என்று இறைவனின் திருவடிகளை வாழ்த்துகின்றார் மாணிக்கவாசகர்.

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக