செந்தமிழ் நாடு
செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே-எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே-ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே
வேதம் நிறைந்த தமிழ்நாடு
– உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு
– நல்ல
காதல் புரியும் அரம்பையர்
போல் இளம்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு
காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ்
கண்டதோர் வையை பொருனைநதி-என
மேவி யாறு பலவோடத்-திரு
மேனி செழித்த தமிழ்நாடு
முத்தமிழ் மாமுனி நீள்வரையே
– நின்று
மொய்ம்புறக் காக்கும்
தமிழ்நாடு – செல்வம்
எத்தணை யுண்டு புவிமீதே
– அவை
யாவும் படைத்த தமிழ்நாடு
நீலத் திரைக்கட லோரத்திலே-நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை-வட
மாலவன் குன்றம் இவற்றிடையே-புகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு.
கல்வி சிறந்த தமிழ்நாடு-புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு-நல்ல
பல்வித மாயின சாத்திரத்தின்-மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு
வள்ளுவன் தன்னை உலகினுக்கே
தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு
– நெஞ்சை
அள்ளும் சிலப்பதிகாரமென்றோர்
மணி
ஆரம் படைத்த தமிழ்நாடு
சிங்களம் புட்பகம் சாவகம்
ஆதிய
தீவு பலவினுஞ் சென்றேறி
– அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும்
நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு
விண்ணை இடிக்கும் தலை
இமயம் – எனும்
வெள்பை இடிக்கும் திறனுடையார்
– சமர்
பண்ணிக் கலிங்கத்து இருள்
கெடுத்தார் தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு
சீன மிசிரம் யவனரகம் –
இன்னும்
தேசம் பலவும் புகழ் வீசிக்
– கலை
ஞானம் படைத்தொழில் வாணிபமும்
மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு
பாடல் விளக்கம்
- இப்பாடலில் பாரதியார் தமிழ்நாட்டின் சிறப்புகளை எடுத்துரைக்கின்றார்.
- செந்தமிழ் நாடு என்ற சொல் செவிக்கு இனிமை
தருகிறது. அது என் முன்னோர்களின் நாடு என்று கூறுவதில்
உள்ளம் பெருமிதம் கொள்கின்றது.
- காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வையை, பொருநைநதி எனப் பல ஆறுகள் ஓடி வளம் செழித்த நாடு.
- இறைவனைப் போற்றிக் பரவும் வேதங்கள் பல நிறைந்து, தமிழர்களின் அடையாளமாகத் திகழும் காதலையும் வீரத்தையும் போற்றிய நாடு. தேவலோக மங்கையர் போன்று அழகில் சிறந்த பெண்கள் நிறைந்த நாடு.
- முத்தமிழ்த் தந்த அகத்திய முனிவர் வாழ்ந்த பொதிய மலையை அரணாகப் பெற்று, உலகத்தின் செல்வங்கள் அனைத்தும் நிரம்பிய சிறப்புடையது.
- தெற்கே கடலால் சூழப்பட்ட கன்னியாகுமரியையும், வடக்கே திருமால் கோயில் கொண்டுள்ள வேங்கடமலையையும் கொண்ட பெரிய நிலப்பரப்புடையது.
- கல்வியால் சிறந்த நாடு. காலத்தால் அழியாத கம்பனின் கம்ராமாயணத்தால் புகழ் பெற்ற நாடு. கணிதம், வான சாத்திரங்கள், வேத சாத்திரங்கள் உள்ளிட்ட பல கலைகளை உலகுக்குக் கொண்டு சேர்த்த நாடு.
- வள்ளுவனின் திருக்குறளால் புகழ் பெற்றது. மக்களுக்கு அறமுரைத்த சிலப்பதிகாரத்தைப் பெற்ற நாடு.
- இலங்கை, சாவகம், புட்பகம் முதலான தீவுகளில் தங்கள் புலிக்கொடியையும், மீன் கொடியையும் நாட்டி, உலகைத் தங்கள் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஆட்சி புரிந்த பாண்டியர்களும், சோழர்களும் வாழ்ந்த நாடு.
- வானத்தை முட்டும் அளவு உயர்ந்து நிற்கின்ற இமயமலையின் சிகரங்களை இடித்துத் தூளாக்கும் ஆற்றல் உடையவர் தமிழ் மன்னர். அத்தகு சிறப்புடைய வீரம் பொருந்திய மன்னர்கள் பலரும் வாழ்ந்த புகழுடையது தமிழ்நாடு.
- சீனம், எகிப்து, கிரேக்க நாடு எனப் பல நாடுகளில் வாணிகம் செய்து சிறப்புற்ற நாடு. கலை, படைத்தொழில், வாணிகம் என அனைத்து நிலைகளிலும் புகழ் பெற்ற நாடு.