ஞாயிறு, 25 ஜனவரி, 2026

காப்பிய இலக்கியங்களில் அறிவியல்

 

காப்பிய இலக்கியங்களில் அறிவியல்

இடைக்கால இலக்கியங்களான ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், பெருங்கதை, கம்பராமாயணம், பெரிய புராணம் போன்ற நூல்களில் காணப்படும் அறிவியல் சிந்தனைகளைப் பின்வருமாறு காணலாம்.

உலகத் தோற்றமும் சூரியனும்

உலகங்கள் தோன்றி மறைவதைக் கம்பரின் கம்பராமாயணம், “உலகம் யாவையும் தாமுள வாக்கலும் நிலைபெறுத்தலும் நீக்கலும்என்று கூறுகின்றது.

தாவரங்களின் ஒளிச் சேர்க்கைக்குச் சூரிய ஒளி பெரிதும் உதவுகின்றது என்பதை உணர்ந்த இளங்கோவடிகள், ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் என்று ஞாயிறைப் போற்றுகின்றார்.  

நீர் எந்திரங்கள்

பழங்கால மக்கள் எந்திரங்களைக் கொண்டு தண்ணீர் இறைத்துள்ளனர். இது எந்திரக் கிணறு என்றே அழைக்கப்பட்டுள்ளது. அதே போன்று ஆழ்துளைக் கிணற்றைப் பழங்காலத்தில் அந்தக்கேணி என்று அழைத்துள்ளனர். இச்செய்தியை அந்தக் கேணியும் எந்திரக் கிணறும்என்ற பாடல் வரியின் மூலம் விளக்குகின்றது பெருங்கதை.

நீச்சல் குளங்களில் உள்ள பழைய நீரை வெளியேற்றிப் புதிய நீரை நிரப்புவதற்கு அக்காலத்தில் எந்திரங்கள் பயன்பட்டிருந்தமையை, நிறைக்குறின் நிறைத்துப் போக்குறின் போக்கும் பொறிப்படை அமைந்த பொங்கு இளவந்திகைஎன்று பெருங்கதையும், எந்திர வாவியில் இளைஞரும் மகளிரும் அத்தமில் ஆடிய என்று மணிமேகலையும் கூறுகின்றன.

இதனால் நீச்சல் குளத்திற்கு எந்திரக் கிணறு, எந்திர வாவி, இலவந்திகை எனப் பல பெயர்கள் இருந்தமையைக் காண முடிகின்றது.

செயற்கை நீருற்று இருந்தமையை, பாத சக்கரம் ஆறு எதிர் நீர் தரஎன்று பெருங்கதை கூறுகின்றது.

விமானங்கள்

சீவக சிந்தாமணியில் சச்சந்தன் தன் மனைவி விசயையைத் தப்புவிக்க மயிற்பொறி ஒன்று செய்து அதில் ஏற்றி அனுப்பி வைத்தான் என்பதை, ஏழுநாள் இடைச் செய்வது ஓர் மாமயில் செய்தனன் அன்றேஎன்று கூறுகின்றது.

சிலப்பதிகாரத்தில், வானவூர்திப் பயன்பாடு குறித்து, கோவலன் தன்னொடு வானவூர்தி ஏறினன் மாதோஎன்று கூறப்பட்டுள்ளது.

சீதையை இராவணன் புட்பக விமானத்தில் கடத்திச் சென்றபோது அவ்விமானம் குறிப்பிட்ட தூரம் வரை தரையில் ஓடி, பின் விண்ணுக்குச் சென்றதை, மண்ணின் மேல் அவன் தேர் சென்ற சுவடி எலாம் ஆய்த்து விண்ணின் ஓங்கிதுஎன்று கம்பராமாயணம் கூறுகின்றது.

மருத்துவம்

உடலில் பழுதுபட்ட ஓர் உறுப்பை எடுத்துவிட்டு வேறொரு உறுப்பைப் பொருத்துதல் இன்றைய மருத்துவ உலகின் சாதனை. இதைப் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில், ஆடுமழைத் தடக்கை அறுத்து முறைசெய்த பொற்கை நறுந்தார்ப் புனைதேர்ப் பாண்டியன்என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

உறுப்பு மாற்று சிகிச்சையைக் கண்ணப்ப நாயனார் புராணம் விரித்துரைக்கின்றது. அதே போன்ற ஒரு கருத்தை, மற்றவர் புகழ்ந்து வார்த்த மருந்தினார் ஆற்றி இருந்த காளத்தி என்று பெரிய புராணம் காட்டுகின்றது. இவை நேரடியான கண் மாற்று சிகிச்கை இல்லை என்றாலும், அத்தகைய சிந்தனை நம் முன்னோர்களுக்கு இருந்தமையைக் கண்டு வியப்பு ஏற்படுகின்றது.

சுரங்கப்பாதைகள்

அக்காலத்தில் அரண்மனையில் இருந்து தப்பிக்க, யாருக்கும் தெரியாத வகையில் சுருங்கைகள் (சுரங்கப் பாதைகள்) அமைக்கப்பட்டிருந்தன. இதனை, கரப்பறை வீதியும் கள்ளப் பூமியும்என்று பெருங்கதை கூறுகின்றது. பழங்காலத்தில் சுரங்கப் பாதைகளைக் காப்பறை வீதி, பொய்ந்நிலம் என்ற பெயர்களில் வழங்கியுள்ளனர்.

நேரம் அறியும் கருவி

சூரிய ஒளியின் மூலமும், நீரின் மூலமும் நேரம் அறிய பல முறைகள் கையாளப்பட்டுள்ளன.

ஒரு கோல் நீமுள்ள குச்சி அல்லது சிறு கம்பு ஒன்றினைத் தரையில் செங்குத்தாக நட்டு, அந்தத் தண்டின் சூரியனின் நிழல் விழும் அளவினைக் கொண்டு பொழுது அறிந்துள்ளனர்.

இதே போன்று நீரைக் கொண்டு நாழிகை வட்டில், நாழிகைத் தூம்பு என்னும் இரண்டு விதமான நாழிகை அறியும் முறை அக்காலத்தில் இருந்துள்ளன. குறுநீர்க் கன்னலின் யாமம் கொள்வர்என்று மணிமேகலையும், புனல் உற்றருகு செப்பின் காலமறி உற்றுணர்தல்என்று கம்பராமாயணமும் நாழிகை வட்டில் குறித்த செய்திகளைத் தருகின்றன. நாழிகைத்தூம்பு நறுமலர்ப் பந்தும்என்று பெருங்கதை நாழிகைத் தூம்பு குறித்த செய்தியைக் கூறுகின்றது.

கடிகாரம் என்னும் கருவியும் அக்காலத்தில் இருந்தது என்பதை, “கடிகை யாரைம் கழுத்தின் மின்ன என்று பெருங்கதையும், கடிகை வாளாரம் மின்ன என்று சீவக சிந்தாமணியும் கூறுகின்றன. இத்தொடர்கள் அக்காலத்தில் மக்கள் கடிகாரம் அணிந்திருந்ததைத் தெரிவிக்கின்றது. விண்மீன்கள் இயக்கத்தினை ஆய்வதற்காகவே அக்காலத்தில் தனியாக பொறிமண்டலம் அமைந்திருந்ததைப் பெருங்கதை எடுத்துரைக்கின்றது.

முடிவுரை

காப்பியங்களின் கருதுகோள் அறிவியல் அன்று. ஆனால் அவற்றினிடையே தென்படுகின்ற அறிவியல் உண்மைகளைக் கண்டறிவது முக்கியம். இதன் மூலம் நம் முன்னோரின் அறிவியல் அறிவை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

 

 

 

 

 

புதன், 21 ஜனவரி, 2026

உரை நூல்களில் அறிவியல்

 

உரை நூல்களில் அறிவியல்

தமிழின் தொன்மையான இலக்கண நூலான தொல்காப்பியத்திற்கும், ஏனைய இலக்கண நூல்களுக்கும் இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், சிவஞான முனிவர், பிள்ளைப்பெருமாள் ஐய்யங்கார் உள்ளிட்ட பல உரையாசிரியர்கள் உரை எழுதி உள்ளனர். நூலாசிரியர் அறிவியல் தன்மையுடன் கூறியுள்ள செய்திகள் சிலவற்றுக்குப் பிற்காலத்தில் உரை எழுதிய உரையாசிரியர்கள் தங்கள் கல்வி மற்றும் அனுபவத்தால் பெற்றப்பட்ட அறிவியல் செய்திகளை விரித்துத் தந்துள்ளனர். அவற்றுள் சிலவற்றைப் பின்வருமாறு காணலாம்.

பிறப்பியல்

தொல்காப்பியர் பிறப்பியலில் “உந்தி முதலா முந்து வளி” என்று கூறியுள்ள நூற்பாவுக்கு, உடற்கூற்றியலார் போல உரை எழுதியுள்ளார் நச்சினார்க்கினியர். தொப்புள் பகுதியில் காற்று உந்தப்படுவதால் எழுத்துப் பிறக்கின்றது என்று கூறப்படுகின்றது. அந்தக் காற்று நெஞ்சிலும், தலையிலும், கழுத்திலும் தங்கி, வாய் உறுப்புகள் வழியாக இயங்கி, வெவ்வேறு எழுத்தொலிகளாகப் பிறக்கின்றன என்பது மொழியியலாரின் கருத்து.

நிலமும் பொழுதும்

நன்னூல் என்ற இலக்கண நூலுக்கு உரை எழுதிய மாதவச் சிவஞான முனிவர், நிலமும் பொழுதும் எல்லாச் செயல்களுக்கும் முதன்மையானவை என்று தனது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கூற்று இயற்பியல் அறிவின் அடிப்படையைக் குறிப்பிடுவதாக உள்ளது.

மரபியல்

தொல்காப்பியர் மரபியலில் உயிர்களின் அறிவு நிலையை விளக்கியுள்ளார். அதற்கு உரையாசிரியர்கள் அறிவின் அடிப்படையில் ஓரறிவு உயிர், ஈரறிவு உயிர் எனத் தொடங்கி ஆறறிவு மக்கள் வரை காரண காரியத்துடன் விரித்துக் கூறியுள்ளனர்.

அண்டம்

பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் அண்டங்களைப் பற்றி விரிவான செய்திகளைக் கூறியுள்ளார். சூரியன்களும், அவற்றின் குடும்பங்களைச் சேர்ந்த கோள்களும் அண்டங்களின் வெட்ட வெளியில் சுற்றிக் கொண்டுள்ளன. இவை ஏதோ ஒரு கணக்குப்படி ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளாமல் சுற்றுகின்றன. இப்பேரண்டச் சரங்களை “ஞாலத் திகிரி” என்று வழங்குகின்றார் பிள்ளைப் பெருமாள் அய்யங்கார். (திகிரி - சக்கரம், உருளை)

கடல்நீர் கதிரவன் வெப்பத்தால் ஆவியாக மாறுகிறது. நீராவி முகிலாக உருவமடைகின்றது. இந்த மேகம் சூல் கொண்டு கறுத்து மழையாகப் பொழிகின்றது. இந்த நீர் ஆறாகப் பாய்ந்து கடலோடு சங்கமம் ஆகின்றது. மீண்டும் சக்கரம் சுழல்கின்றது. இவ்வாறு வட்டவளையமாகச் சுற்றும் இயக்கத்தை “முதுநீர்த்திரள்” என்று வழங்குகின்றார் அய்யங்கார். இவ்வாறான முதுநீர்ச் சக்கரத்தைப் போலவே பருவச் சக்கரமும் தொடர்ந்து சுழல்கின்றது.

ஞாலத்திகிரி, முதுநீர்த் திகிரி முதலியவற்றைச் சுற்றச் செய்யும் மூலத் திகிரி எது என்றால் காலம் என்ற கண்ணுக்குத் தெரியாத கூறுபாடு அடையாத திகிரி என பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் கூறுகின்றார்.

நீளம், அகலம், உயரம் என்ற மூன்று அளவைகளை நாம் அறிவோம். இவற்றாடு உலந்து பிரிக்க முடியாத நான்காவது அளவை ஒன்று உண்டு. அதுவே காலம் என்ற அளவை என்பதை, அறிவியல் முறையில் நிலைநாட்டின பெருமை ஐன்ஸ்டைன் என்ற அறிஞருக்கு உண்டு. அறிவியலறிஞர்கள் இன்னும் புதுப்புது அளவைகளைக் கண்டு பிடிக்கலாம். அவற்றிற்கும் இடங்கொடுக்க வேண்டும் என்று கருதியதாலோ என்னவோ, 600 ஆண்டுகட்கு முன் வாழ்ந்த கவிஞர் அய்யங்கார், “நடாத்தும் அந்தக் காலத் திகிரி முதலான யாவும்” எனக் குறித்துச் சென்றுள்ளார்.

 

சிற்றிலக்கியங்களில் அறிவியல்

 

சிற்றிலக்கியங்களில் அறிவியல்

நாயக்கர் காலத்தில் தோன்றிய சிற்றிலக்கியங்கள் பல. அவற்றுள் பிள்ளைத் தமிழ், அந்தாதி, தூது, கலம்பகம், பரணி, குறவஞ்சி, பள்ளு, கோவை உள்ளிட்ட சிற்றிலக்கியங்கள் சிறப்புப் பெறுகின்றன. இவ்வகை இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள அறிவியல் செய்திகளைப் பின்வருமாறு காணலாம்.

இயற்பியல்

தமிழர்களின் இயற்பியல் அறிவினை அமுதாம்பிகைப் பிள்ளைத்தமிழ் வெளிப்படுத்துகின்றது. அமுதாம்பிகை ஆடும் ஊசலின் கயிறு நீளமாக இருந்ததால் மெதுவாக ஆடுகின்றது. ஆனால், அவள் காதில் அணிந்திருக்கும் குண்டலம் குறைவான நீளத்தில் தொங்குவதால் விரைவாக ஆடுகிறது என்பதை,  

மகரக்குழைகளும் ஊசலாட

பங்கய மடமாதர் நோக்கி இருவேம்ஆட்டஅவ்வூசலில்

பாய்ந்திலது இவ்வூசல் என  (அமுதாம்பிகைப் பிள்ளைத்தமிழ்)

என்ற பாடல் வாயிலாக சிவஞான முனிவர் பதிவு செய்துள்ளார். “ஊசலின் நீளம் குறைவாக இருந்தால் விரைவாக ஆடும். ஊசலின் நீளம் அதிகமாக இருந்தால் மெதுவாக ஆடும் என்பது விஞ்ஞானி கலிலியோ அவர்கள் கண்டறிந்த உண்மை. இவ்வாறு ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்ட உண்மைகளைத் தமிழர்கள் தங்கள் அனுபவத்தால் கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளமை வியப்பிற்குரியது.

இதே போன்று மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழில், “வளர்சிமய இமயப் பொருப்பில் விளையாடும் இனமென் பிடியே” என்ற பாடலில், இமயமலை வளர்கின்றது என்ற கருத்தை முன் வைக்கின்றார் குமரகுருபரர். இன்று http:wikipedia.org/w! என்ற இணைய தளத்தில் இமயமலை ஆண்டிற்கு 5 மீட்டர் உயர்கிறது என்றும், இந்தியத் தகடு ஆசியத் தகட்டுக்குள் நுழைவதால் இப்பகுதியில் அடிக்கடி நில நடுக்கம் ஏற்படுகின்றது என்றும் கூறுகின்றது. இக்கால அறிவியல் முன்னேற்றத்தின்படி இதுபோன்ற செய்திகளை அறிவது எளிதென்றாலும், இவ்வகையான எவ்விதச் சிந்தனைகளும் தோன்றாத நிலையில் குமரகுருபரர் இமயமலை வளர்வதைப் பாடியுள்ளது பெருமை தரக்கூடிய செய்தியாகும்.

மழைப்பொழிவு

கடல்நீரை முகந்து சென்று மேகமானது மழை பொழியும் என்னும் அறிவியல் சிந்தனையை,”ஏரி நீர் செழிக்க வாரி நீர் கொழிக்கும் மாரி நீர் வளர்தென்” என்று குற்றாலக் குறவஞ்சி பாடுகின்றது.

மருத்துவம்

போரில் புண்பட்ட வீரர்களுக்கு அப்புண்களை நெருப்பால் சுட்டுக் குணமாக்கும் மருத்துவம் தரப்பட்டுள்ளது. இதற்கு வேது கொடுத்தல் என்று பெயர். இதனைக் குலசேகர ஆழ்வார், “வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால் மாளாத காதல்” எனச் சுட்டுகின்றார்.

உடலில் தீப்பட்டு எரிந்து போனால் எரிச்சல் நீங்க வாழை இலையில் கிடத்துதல் மரபு. இதனை, திருக்குற்றாலக் குறவஞ்சி, “அணைத்து வாழைக் குருத்தில் கிடத்துவார்” என்று பதிவு செய்கின்றது.

சித்த மருத்துவத்தின் அடிப்படை மூலிகைகளாகும். சித்தர்கள் இவற்றை மலைகளில் இயற்கையாகப் பெற்றதோடு அவற்றை தாங்களே விளைவித்தும் பெற்றுள்ளனர் என்பதை, “ககன சித்தர் வந்து வந்து காயசித்தி விளைப்பர்” என்று குற்றாலக்குறவஞ்சி காட்டுகின்றது.

இதுபோன்ற சித்தர்கள் வாழ்ந்து, அண்டம், பிண்டம், உடல், உள்ளம், அவற்றைத் தாக்கும் நோய்கள், அதற்கான மருத்துவம் என ஏராளமான செய்திகளைத் தந்திருப்பதும் சிற்றிலக்கியங்கள் தோன்றிப் பெருகியிருந்த இக்காலக்கட்டத்தில்தான் என்பதும் சிந்திக்கத்தக்கது.