காப்பிய இலக்கியங்களில் அறிவியல்
இடைக்கால இலக்கியங்களான ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், பெருங்கதை, கம்பராமாயணம், பெரிய புராணம் போன்ற நூல்களில் காணப்படும் அறிவியல் சிந்தனைகளைப் பின்வருமாறு காணலாம்.
உலகத் தோற்றமும் சூரியனும்
உலகங்கள் தோன்றி மறைவதைக் கம்பரின் கம்பராமாயணம், “உலகம் யாவையும் தாமுள வாக்கலும் நிலைபெறுத்தலும் நீக்கலும்” என்று கூறுகின்றது.
தாவரங்களின் ஒளிச் சேர்க்கைக்குச் சூரிய ஒளி பெரிதும் உதவுகின்றது என்பதை உணர்ந்த இளங்கோவடிகள், “ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்“ என்று ஞாயிறைப் போற்றுகின்றார்.
நீர் எந்திரங்கள்
பழங்கால மக்கள் எந்திரங்களைக் கொண்டு தண்ணீர் இறைத்துள்ளனர். இது எந்திரக் கிணறு என்றே அழைக்கப்பட்டுள்ளது. அதே போன்று ஆழ்துளைக் கிணற்றைப் பழங்காலத்தில் அந்தக்கேணி என்று அழைத்துள்ளனர். இச்செய்தியை “அந்தக் கேணியும் எந்திரக் கிணறும்” என்ற பாடல் வரியின் மூலம் விளக்குகின்றது பெருங்கதை.
நீச்சல் குளங்களில் உள்ள பழைய நீரை வெளியேற்றிப் புதிய நீரை நிரப்புவதற்கு அக்காலத்தில் எந்திரங்கள் பயன்பட்டிருந்தமையை, “நிறைக்குறின் நிறைத்துப் போக்குறின் போக்கும் பொறிப்படை அமைந்த பொங்கு இளவந்திகை” என்று பெருங்கதையும், “எந்திர வாவியில் இளைஞரும் மகளிரும் அத்தமில் ஆடிய” என்று மணிமேகலையும் கூறுகின்றன.
இதனால் நீச்சல் குளத்திற்கு எந்திரக் கிணறு, எந்திர வாவி, இலவந்திகை எனப் பல பெயர்கள் இருந்தமையைக் காண முடிகின்றது.
செயற்கை நீருற்று இருந்தமையை, “பாத சக்கரம் ஆறு எதிர் நீர் தர” என்று பெருங்கதை கூறுகின்றது.
விமானங்கள்
சீவக சிந்தாமணியில் சச்சந்தன் தன் மனைவி விசயையைத் தப்புவிக்க மயிற்பொறி ஒன்று செய்து அதில் ஏற்றி அனுப்பி வைத்தான் என்பதை, “ஏழுநாள் இடைச் செய்வது ஓர் மாமயில் செய்தனன் அன்றே” என்று கூறுகின்றது.
சிலப்பதிகாரத்தில், வானவூர்திப் பயன்பாடு குறித்து, ”கோவலன் தன்னொடு வானவூர்தி ஏறினன் மாதோ” என்று கூறப்பட்டுள்ளது.
சீதையை இராவணன் புட்பக விமானத்தில் கடத்திச் சென்றபோது அவ்விமானம் குறிப்பிட்ட தூரம் வரை தரையில் ஓடி, பின் விண்ணுக்குச் சென்றதை, “மண்ணின் மேல் அவன் தேர் சென்ற சுவடி எலாம் ஆய்த்து விண்ணின் ஓங்கியது” என்று கம்பராமாயணம் கூறுகின்றது.
மருத்துவம்
உடலில் பழுதுபட்ட ஓர் உறுப்பை எடுத்துவிட்டு வேறொரு உறுப்பைப் பொருத்துதல் இன்றைய மருத்துவ உலகின் சாதனை. இதைப் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில், “ஆடுமழைத் தடக்கை அறுத்து முறைசெய்த பொற்கை நறுந்தார்ப் புனைதேர்ப் பாண்டியன்” என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
உறுப்பு மாற்று சிகிச்சையைக் கண்ணப்ப நாயனார் புராணம் விரித்துரைக்கின்றது. அதே போன்ற ஒரு கருத்தை, “மற்றவர் புகழ்ந்து வார்த்த மருந்தினார் ஆற்றி இருந்த காளத்தி” என்று பெரிய புராணம் காட்டுகின்றது. இவை நேரடியான கண் மாற்று சிகிச்கை இல்லை என்றாலும், அத்தகைய சிந்தனை நம் முன்னோர்களுக்கு இருந்தமையைக் கண்டு வியப்பு ஏற்படுகின்றது.
சுரங்கப்பாதைகள்
அக்காலத்தில் அரண்மனையில் இருந்து தப்பிக்க, யாருக்கும் தெரியாத வகையில் சுருங்கைகள் (சுரங்கப் பாதைகள்) அமைக்கப்பட்டிருந்தன. இதனை, “கரப்பறை வீதியும் கள்ளப் பூமியும்” என்று பெருங்கதை கூறுகின்றது. பழங்காலத்தில் சுரங்கப் பாதைகளைக் காப்பறை வீதி, பொய்ந்நிலம் என்ற பெயர்களில் வழங்கியுள்ளனர்.
நேரம் அறியும் கருவி
சூரிய ஒளியின் மூலமும்,
நீரின் மூலமும் நேரம் அறிய பல முறைகள் கையாளப்பட்டுள்ளன.
ஒரு கோல் நீளமுள்ள குச்சி அல்லது சிறு கம்பு ஒன்றினைத் தரையில் செங்குத்தாக நட்டு, அந்தத் தண்டின் சூரியனின் நிழல் விழும் அளவினைக் கொண்டு பொழுது அறிந்துள்ளனர்.
இதே போன்று நீரைக் கொண்டு நாழிகை வட்டில், நாழிகைத் தூம்பு என்னும் இரண்டு விதமான நாழிகை அறியும் முறை அக்காலத்தில் இருந்துள்ளன. “குறுநீர்க் கன்னலின் யாமம் கொள்வர்” என்று மணிமேகலையும், “புனல் உற்றருகு செப்பின் காலமறி உற்றுணர்தல்” என்று கம்பராமாயணமும் நாழிகை வட்டில் குறித்த செய்திகளைத் தருகின்றன. “நாழிகைத்தூம்பு நறுமலர்ப் பந்தும்” என்று பெருங்கதை நாழிகைத் தூம்பு குறித்த செய்தியைக் கூறுகின்றது.
கடிகாரம் என்னும் கருவியும் அக்காலத்தில் இருந்தது என்பதை, “கடிகை யாரைம் கழுத்தின் மின்ன” என்று பெருங்கதையும், ”கடிகை வாளாரம் மின்ன” என்று சீவக சிந்தாமணியும் கூறுகின்றன. இத்தொடர்கள் அக்காலத்தில்
மக்கள் கடிகாரம் அணிந்திருந்ததைத் தெரிவிக்கின்றது. விண்மீன்கள் இயக்கத்தினை ஆய்வதற்காகவே
அக்காலத்தில் தனியாக பொறிமண்டலம் அமைந்திருந்ததைப் பெருங்கதை எடுத்துரைக்கின்றது.
முடிவுரை
காப்பியங்களின் கருதுகோள்
அறிவியல் அன்று. ஆனால் அவற்றினிடையே தென்படுகின்ற அறிவியல் உண்மைகளைக் கண்டறிவது முக்கியம்.
இதன் மூலம் நம் முன்னோரின் அறிவியல் அறிவை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக