கும்பகருணன் வதைப்படலம்
சுருக்கம்
இராவணன் தூதர்களுக்கு
இட்ட கட்டளை
1.“கும்பகருணனைப் போருக்கு அனுப்புவதே சிறந்த செயல் என்று கூறிய இராவணன், தன் தூதர்களிடம், “நீங்கள் ஓடிச் சென்று கும்பகருணனை இங்கே அழைத்து வாருங்கள்” என்று கட்டளையிட்டான்.
உடனே தூதர் நால்வர், குன்றைக் காட்டிலும் உயர்ந்த
தோளை உடைய கும்பகருணனின் அரண்மனைக்குள் நுழைந்தனர்.
இரு கையாலும், இரும்புத் தண்டாலும் எழுப்பினர்
2.தூதர்கள்
நால்வரும் அரண்மனையின் வாயிலை அடைந்து, “அரசனே நீ விழித்துக்
கொள்” என்று கூறி கையில் உள்ள இரும்புத் தண்டினால் அவனுடைய தலையிலும்
காதிலும் தாக்கினர். கும்பகருணன் எழுந்திருக்கவில்லை.
அதனால் கோபம் கொண்ட தூதர்கள் சினம் கொண்டு பின்வரும் சொற்களால் அவனை
எழுப்ப முயற்சித்தனர்.
தூதர்கள் கூற்றும் இராவணன் செயலும்
3.‘உறங்கிக்
கொண்டிருக்கும் கும்பகருணனே! உங்களுடைய பொய்யான வாழ்வு எல்லாம் இன்று தாழ்வடையத்
தொடங்கி விட்டது. அதைக் காண எழுந்திரு. ஆயுதத்தைக் தாங்கியவாறு,
காற்றாடி போல திரிகின்ற கால தூதர்களின் கையிலே உறங்கு! உறங்கு! இனிப் படுத்து உறங்கு!” என மீண்டும் அசைத்து அசைத்து அவனை எழுப்பினர். அப்போதும்
அவன் எழுந்திருக்கவில்லை.
கும்பகருணனைத் துயிலெழுப்பல்
4.கும்பகருணன் எழுந்திராமை கண்டு பணியாளர்கள் இராவணனிடம் சென்று “மணம் வீசும் மலர்மாலை அணிந்தவனே! கும்பகருணனைக் கடுந்தூக்கத்தில் இருந்து எழுப்ப முடியவில்லை” என்று முறையிட்டனர். அப்போது இராவணன் “யானை, குதிரை, யாளி ஆகியவற்றில்
ஒவ்வொன்றையும் ஆயிரக் கணக்கில் செலுத்தி அவனை மிதிக்கச் செய்து எழுப்புங்கள்”
என்று கூறி அவ்விலங்குகளை அவர்களுடன் அனுப்பினான்.
5.இராணவன்
கூறியபடி விலங்குகளை அவன் மீது ஏவினர். பலன் இல்லாமல் போகவே,
ஆயிரம் இராக்கதர்கள் உறங்குகின்ற கும்பகருணனின் அருகே சென்று,
அவனுடைய இரண்டு கன்னங்களிலும் நீண்ட உலக்கைகளைக் கொண்டு தாக்கினர்.
அப்போது, கும்பகருணன் இறந்தவன் உயிர் பெற்று எழுந்ததைப்
போல, தான் தூங்கும் இடத்தை விட்டுப் புரண்டு எழுந்தான்.
6.அவன் எழுந்தபோது
மூவகையான உலகங்கள் அதிர்ந்தன. யானைகள் தங்கள் திசைகளிலிருந்து நிலை பெயர்ந்தன.
சூரியன் அச்சம் கொண்டது. பிரமன், திருமால், சிவபெருமான் என யாவரும் நடுக்கமடைந்தனர்.
இவ்வாறு அனைத்தும் அஞ்சுகின்ற வண்ணம் கும்பகருணன் என்னும் வீரன் எழுந்தான்.
இராவணன் கும்பகருணன் சந்திப்பு
7.இராவணன்
அனுப்பிய பணியாளர்கள், “உன் அண்ணன் உன்னை அழைத்து வரக் கூறினான்” என்று கூறியவுடன், மலை போன்ற தோற்றம் பெற்றவனான கும்பகருணன்
நகரம் முழுவதும் “பொம்” என ஆரவாரம் உண்டாகும்படிப்
புறப்பட்டுச் சென்று இராவணனின் அரண்மனையை அடைந்தான்.
8.உயர்ந்த
மதில்களையும், பல கோபுரங்களையும் உடைய, கடலால்
சூழப்பட்ட இலங்கைக்கு மன்னனாக விளங்கும் இராவணனை, நிற்கும் ஒரு
மலை நிலத்தில் படுத்ததுபோல, பூமியில் விழுந்து வணங்கினான் கும்பகருணன்.
உணவு அளித்துப் போர்க்கோலம் செய்தல்
9.தன்னை
வணங்கிய தன் தம்பியை, நிலை பெற்ற மலை ஒன்று மிக நீண்ட கால்களுடன் நடந்து
வந்து மற்றொரு மலையைத் தழுவிக் கொண்டது போல, தன் தோளினால், இறுகத்
தழுவிக் கொண்டான்.
10.இராவணன்
கும்பகருணனைத் தன்னுடன் அமர வைத்து, இரத்தத்துடன் மதுவையும், மாமிசத்தையும் புசிக்கக் கொடுத்தான்.
வெண்பட்டாடையை உடுத்தச் செய்தான். பல நவமணிகளை அணிவித்தான்.
கும்பகருணன் - இராவணன் உரையாடல்
11.மின்னலைப் போன்ற புருவமும், வானத்தை நெருங்கிய தோளும் இடப் புறம் துடிக்கப் பெற்றவனாக நின்ற கும்பகருணன், “போருக்கு ஆயத்தமாகின்ற இச்செயல் எல்லாம் ஏன்? என்ன காரணம்?” என்று இராவணனிடம் கேட்டான்.
12.“மனிதர்
இருவர் பெரிய குரங்குப் படையை உடையவராய் நமது நகர்ப்புறத்தைச் சூழ்ந்து கொண்டனர்.
இதுவரை நடந்த போரில் அவர்களே வெற்றியும் பெற்றனர். நீ சென்று அவர்களின் உயிரைப் பறிப்பாயாக” என்றான் இராவணன்.
கும்பகருணனின் அறிவுரை
13.அதைக்
கேட்ட கும்பகருணன் மிகுந்த அதிர்ச்சி கொண்டவனாய், ‘கொடிய போர் தொடங்கி விட்டதா? சீதையின் சிறைத்துன்பம்
இன்னும் தீரவில்லையா? உனது உயர்ந்த புகழ் அழிந்து விட்டதா?
அரக்கர் அழியும் காலம் வந்து விட்டதா?
14.“போர்
நெருங்கி விட்டதா? அப்போர் சீதையின் காரணமாக ஏற்பட்டதா?
கற்பினையே செல்வமாகக் கொண்ட சீதையை நீ இன்னும் விட்டு விடவில்லையா?
இச்செயல் உன் விதியின் வலிமையால் நடப்பதே.
15.உனது அறம்
தவறிய செயல் மூலம் இந்திரனுக்கு அவனது அரசாட்சியினையும் வெற்றியினையும் கொடுத்து விட்டாய். அதே சமயம் உன்னுடைய பெரிய சுற்றத்தையும் கெடுத்து விட்டாய். உனக்கும் நீயே அழிவு தேடிக் கொண்டாய். உன் தீச்செயலின்
விளைவிலிருந்து வேறு வழியில் நீ விடுதலை பெற முடியாது.
16.இராமனின்
சொல், செயல், மனம் மூன்றுமே
அறத்திற்கு உகந்தது. அவரைப் பகைத்துக் கொண்டு பாவச் செயலும் பொய்யும் நிறைந்த நாம்
பிழைக்க முடியுமா? அவ்வாறிருக்க, அவரைப்
பகைத்துக் கொள்ள முடியுமா? அவர்களுடைய அறத்துக்கு ஒரு குறை உண்டோகுமோ?
உண்டாகாது?
17.காற்றைப்
போல கடந்து வரும் வல்லமை பெற்ற குரங்கு அவர்களுக்குத் துணையாக உள்ளது. வாலியின்
மார்பைக் கிழித்துச் செல்லும் வல்லமை பெற்ற அம்புகள் அவர்களிடம்
உள்ளன. அவற்றை ஏற்று இறந்து போக நாமும் இருக்கின்றோம் இனி என்ன குறை?” என்று வருந்தினான்.
18.“நான்
உனக்கு அறிவிக்க வேண்டியது உன்று உள்ளது. தலைவனே! அதனை நீ உணர்ந்து ஏற்றுக் கொண்டால் நல்லது. ஏற்கவில்லையெனின்,
உன்னை இறந்தவனாகவே எண்ணிக் கொள்.
19.சீதையை விடுதலை செய்து விட்டு, இராமனுடைய திருவடிகளிலே விழுந்து வணங்கி, உன் தம்பி வீடணனோடு நட்பு கொண்டு வாழ்வதே நீ உயிர் பிழைப்பதற்குரிய வழியாகும்.
20.அதை விடுத்து வரிசை வரிசையாக நம் படைகளை அனுப்பிவிட்டு அவை அழிவதைக் கண்டு, நீ இங்கிருந்து வருந்துவது நல்லது அன்று. நம் வலிமை முழுவதையும் ஒரு சேர பகைவர் மீது செலுத்துவதே சிறந்த போர்த்தோழில்” என்று இராவணன் மனதில் பதியுமாறு கூறினான் கும்பகருணன்.
இராவணன் சினந்து உரைத்தல்
21.இதைக் கேட்ட
இராவணன் மிகுந்த சினம் கொண்டு “இனி நடக்கப் போவதைத் தெரிந்து
கொள்ளவதற்காக உன்னை அழைக்கவில்லை. போய் அற்பச் செயல் செய்யும்
அந்த மனிதர்களைக் கொன்று விட்டு வா. எனக்கு அறிவுரை கூற நீ சிறந்த
அறிவு பெற்ற என் அமைச்சன் அல்ல. நீ போரிட அஞ்சுகின்றாய்.
உன் வீரம் வீணாகிவிட்டது.
22.போர் செய்வதற்குரிய
உரிமையை உன் சொற்களால் நீ இழந்து விட்டாய். நிறைந்த மாமிசத்தோடு
கள்ளையும் குடித்தாய். இனி நீ என்ன செய்ய வேண்டும். உறங்க வேண்டும் அதனால் கண்களை மூடிக்கொண்டு இரவும் பகலும் போய்த் தூங்கு”
என்று கும்பகருணனின் மனம் வருந்தும்படியாக இராவணன் உரைத்தான்.
23.மேலும், ‘அற்ப மனிதர் இருவரை வணங்கி, அந்தக் குரங்கைக்
கும்பிட்டு உயிர் பிழைத்து வாழும் மானமில்லாத வாழ்க்கை உனக்கும் உன் தம்பிக்குமே பொருந்தும். மானமில்லாத செயலை ஒருபோதும் நான் செய்ய
மாட்டேன். நீ எழுந்து செல்’ என்று கூறினான் இராவணன்.
24.“வீரர்களே
என்னுடைய தேரையும் போர்க்கருவிகளையும் கொண்டு வந்து தாருங்கள். நான் போருக்குச்
செல்லும் செய்தியை அனைவருக்கும் சொல்லுங்கள். இராமனும் இலக்குவணனும் என்னுடன்
கடும்போர் புரியட்டும்’ என்று சினந்துரைத்து, தானே போருக்குச்
செல்லத் தயாரானான்.
கும்பகருணன் போருக்கு எழுதல்
25.அவ்வாறு
இராவணன் போருக்குப் புறப்பட்டதைக் கண்டு, அவன் பாதங்களை வணங்கி,
மனம் நொந்தவனாய் “என் சொற்களை நீ பொறுத்துக் கொள்” என்று கூறி, போருக்குச் செல்வதற்காகத் தனது நீண்ட
சூலத்தை வலப்பக்கத்தில் ஏந்தியவனாய், “இன்னும் நான் சொல்ல வேண்டியது
ஒன்று உள்ளது” என்று தொடர்ந்தான் கும்பகருணன்.
26.“போரில்
வெற்றி பெற்று உன்னிடம் திரும்பி வருவேன் என்று சொல்ல மாட்டேன். விதி என் பின்னே நிற்கிறது. அது என் கழுத்தைப் பிடித்துத்
தள்ளுகிறது. போரில் நான்
இறந்து போவேன். அவ்வாறு இறந்து விட்டால் நீ சீதையை விடுதலை செய்வது
நல்லது.
27.இதுவரை
நான் செய்த தவறுகளைப் பொறுத்துக் கொள். இனி உன் முகத்தில் விழிக்கும் தகுதி
எனக்கில்லை. நான் விடை பெற்றுக் கொள்கிறேன்’ என்று கூறிவிட்டுத் தன் நீண்ட சூலாயுதத்தை ஏந்திக் கொண்டு போருக்குச் சென்றான்.
கும்பகருணனைப் பற்றி இராமன் வீடணனிடம் வினவல்
28.மேரு மலையை ஒத்த
பொன் தேரில் தோன்றிய கும்பகருணனை இராமன் கண்டான்.
29.“இவனுடைய
ஒரு தோளில் இருந்து மறுதோளைப் பார்க்க வேண்டும் என்றால், பல நாள்
கழிந்து விடும். பூமியின் நடுவில் கால்களுடன் மேரு மலை வந்து
நிற்பது போல் நிற்கிறான். போரை விரும்பி வந்தவன்போல் இல்லை.
யார் இவன்?” என்று வினவினான் இராமன்.
வீடணன் கும்பகருணனைப் பற்றி எடுத்துரைத்தல்
30.இராமன் அவ்வாறு
கேட்டதும், வீடணன், அவனுடைய திருவடிகளை வணங்கி,
“ஐயனே இவன் இலங்கை அரசன் இராவணனின் தம்பி. எனக்கு
அண்ணன். கரிய நிறம் பெற்று, கூரிய சூலத்தை
ஏந்தி, வீரக்கழல் அணிந்து நிற்கும் இவன்
கும்பகருணன்” என்று அறிமுகம் செய்தான்.
31.“சக்கராயுதத்தை
உடையவனே! இவன் என் அண்ணன் இராவணனின் வீரத்திற்கு ஒப்பானவன்.
ஓர் ஊழிக்காலம் வரையிலும் தூங்கும் இயல்புடையவன்.
32.மிக்க உடல்
வலிமை பெற்றவன். மிகச் சிறந்த மன உறுதி உடையவன். தான் செய்த உயர்ந்த தவத்தினால் மிகச் சிறந்த வரங்களைப் பெற்றவன்.
33.இவன் இந்த நாள் வரையில் தூங்கிக் கொண்டிருந்ததால் இந்த உலகம் உயிர் தாங்கிப் பிழைத்தது.
34.பிறன் மனைவியை
விரும்புவது தருமம் அன்று. இச்செயலால் நமக்கு இழப்பு உண்டாகும் என்று இராவணனுக்கு
இருமுறைக்கு மேல் எடுத்துக் கூறியவன்.
35.சீதையை விடுதலை
செய்ய மறுத்தத் தன் அண்ணனை வாய்ச் சொற்களால் கண்டித்து தன்னால் முடிந்தவரை
அவனுக்கு நல்லுரை கூறியவன். அவற்றை இராவணன் ஏற்காததால் மனம் வெறுப்படைந்து
“நாம் இறப்பது உண்மை” என்று உறுதியாக கூறிவிட்டு
இதோ இப்போது உன் எதிரே வந்து நிற்கின்றான்” என்று உரைத்தான்.
36.“பிறர்
மனைவியைச் சிறையிடுவது நமக்கு நன்மை தரும் செயல் அன்று” என்று இராவணனுக்கு எடுத்துக்
கூறினான். அதற்குப் பயனில்லாமல் போகவே, இப்போது எமனுக்கு எதிரே வந்து சேர்ந்து விட்டான்” என்று
கூறி வீடணன் இராமனை வணங்கினான்.
கும்பகருணனை உடன் சேர்த்துக் கொள்ளல் நலம் எனல்
37.வீடணன் கூறியதைக்
கேட்ட சுக்ரீவன், இன்று இக் கும்பகருணனைக் கொல்வதால் நமக்கு ஒரு பயனும்
ஏற்படப் போவதில்லை. இவனைக் கொல்லாமல் நம்முடன் சேர்த்துக் கொண்டால்
வீடணனின் துன்பம் தீரும். இதுவே நல்லது என்று நினைக்கின்றேன்
என்று இராமனிடம் கூறினான். இராமனும், நீ
கூறிய சொற்கள் நீதியுடையதே” என்று ஏற்றுக் கொண்டான்.
கும்பகருணனை அழைத்து வர வீடணன் செல்லுதல்
38.கும்பகருணனிடம்
செல்லத் தகுந்தவர் யார்? என இராமன் கேட்டான். வீடணன்,
“ நானே சென்று என் அறிவின் ஆற்றலால், அவன் மனதைத்
தெளிவு செய்து நம்மோடு சேருவானேயானால் அவனை இங்குக் கொண்டு வந்து சேர்க்கிறேன்”
என்று கூறினான். இராமனும் “ நல்லது நீயே அவனிடம் செல்க” என்று கூறி விடையளித்தான்.
கும்பகருணன் வீடணனிடம் 'நீ வந்தது
தகுதி அன்று' எனல்
39.வீடணன் குரங்குப்
படையாகிய கடலைக் கடந்து தன் பெரிய அரக்கர் படையை அடைந்தான். உடனே பணியாளர்கள் கும்பகருணனிடம், ”ஐயனே! வீடணன் உன்னைக் காண வந்துள்ளான்” என்று கூறினர். அதைக் கேட்டு எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தான்
கும்பகருணன். வீடணன் வீரக்கழல் புனைந்த கும்பகருணனின் திருவடிகளைத்
தன் தலையால் வணங்கினான்.
40.தன்னை வணங்கிய
வீடணனைத் தன் மார்போடு இறுகத் தழுவினான் கும்பகருணன். “நீதியும் தருமமும் கொண்ட இயல்பினை, நல்ல அறிவினை அரிய
பல தவங்கள் செய்து பிரமன் மூலம் அடைந்தாய். அந்தப் பிரமனின் சொல்லால்
அழிவில்லாத ஆயுளைப் பெற்றாய். அதன் பின்பும் உன் சாதியின் இழிந்த
குணம் இன்னும் உன்னை விடவில்லையா?
41.என்னைக்
கொல்வதற்காக இராமன் வில்லோடு காத்திருக்கிறான். அவன் தம்பி இலக்குவணனும் தயாராக நிற்கிறான். வானரக் கூட்டங்கள்
அவர்களுக்குத் துணையாக நிற்கின்றன. அதற்கேற்ப எமனும் ஆயத்தமாக
இருக்கிறான். இந்தச் சூழ்நிலையில் உனது வலிமையைச் சிதைத்துக் கொள்வதற்காகவா தோல்வி கண்ட என்னிடம் வந்தாய்.
42.அரக்கர்களாகிய
நாங்கள் இராமன் செலுத்தும் அம்புகளால் அழிந்து விடுவோம். நீ இராமனுக்கு அடைக்கலமாகி உயிர் பிழைத்தால்தான் இறக்கும் எங்களுக்கு எள்ளுடன்
கூடிய நீரைக் கொடுத்து நீர்க்கடன் நிறைவேற்ற முடியும். இல்லயெனில்
வேறு யார் இருக்கிறார் காட்டுக.
43.இலங்கை நகருக்கு
நீ மீண்டும் வர வேண்டியது இப்போது அன்று. அரக்கர் அனைவரும் இறந்தபிறகு
இலங்கைக்குள் புகுந்து அழியாத செல்வத்தை அனுபவிக்க நீ வரவேண்டும்.
ஆதலால், இப்போது விரைவாகச்
செல்வாயாக” என்று கூறினான். அதைக் கேட்ட
வீடணன் “வீரனே! நான் உன்னிடம் ஒன்று கூற வேண்டிய செயல் உண்டு”
என்றான். “அதை உரைப்பாயாக” என்றான் கும்பகருணன்.
இராமனைச் சரண் புகுமாறு கும்பகருணனுக்கு வீடணன் உரைத்தல்
44.“என் அன்புக்கினியவனே!
இராமனிடம் நீ வந்து சேர்ந்தால் உனக்கும் அருள் புரிவான். உனக்குப் பாதுகாப்பு அளிப்பான். பிறவி என்னும் பிணிக்கு மருந்தாக அமைவான். இன்பமும் துன்பமும்
மாறி மாறி வரும் மண்ணுலக வாழ்க்கையை நீக்கி வீடுபேறு இன்பத்தைத் தருவான்.
45.எனக்கு இராமன்
கொடுத்த செல்வம் கொழிக்கும் இலங்கையையும், அதன் ஆட்சி முதலிய அனைத்தையும்
நான் உனக்குக் கொடுப்பேன். உன் ஆணைக்குப் பணிந்து நடப்பேன்.
உனக்கு இதைக் காட்டிலும் நன்மை தருவது வேறு ஒன்று இல்லை. உன் தம்பியாகிய என் மனத்தின் துன்பத்தை நீக்கி நாம் பிறந்த குலத்தை விளங்கச்
செய்வாயாக.
46.தருமத்தையே
இலட்சியமாகக் கொண்டவர்கள், ஒருவர் தீய செயலைச் செய்வாராயின், அதுவும் நம் சகோதரனாக இருந்தாலும் விட்டுவிட மாட்டார்கள். நீ அந்த நீதிகளை அறிவாய். உனக்கு நான் எடுத்துச் சொல்ல
ஒன்றும் இல்லை. தூய செயல்களைச் செய்பவர்களுக்குப் பழி வராது.
47.ஒருவன் தான்
இறப்பதற்குக் காரணமான பாவச் செயலைச் செய்ய, அப்பாவத்தில் பங்கு
பெறாதோர் அவனோடு சேர்ந்து அழிந்து போவது சிறந்ததா? தாழ்ந்ததா?
நீயேஎண்ணிக் கொள். எதையும் ஆராய்ந்து செய்யும்
ஆற்றல் உடையவன் நீ, தன்னைப் பெற்ற தாய் தீய செயலைச் செய்ததால்
பரசுராமன், தாய் என்றும் பாராமல் அவளைக் கொன்றான்.
48.உடலில் உண்டான
ஒரு கட்டியை, அதன் விஷ நீர் உடலில் பரவாத வண்ணம், அதிலுள்ள அசுத்த இரத்தத்தை வெளியேற்றி காரம் பொருத்திச் சுட்டுப் புண்ணை ஆற்றும்
மருந்தினால், தான் அடைந்த துன்பத்தை நீக்கிக் கொள்வர்.
மணம் மிகுந்த கோட்டத்தை கடலிலே வீணாகுமாறு விடுவது அறிவுடையோர் செயல்
அன்று.
49.முனிவர்களும்
உன்னிடம் கருணை காட்டுவார்கள். மூன்று உலகங்களிலும் இனிப் பகைவராக எழுந்து வருபவர்
எவரும் இருக்கமாட்டார்கள். உனக்கு இறப்பு ஏற்படும் என்று துன்பமடைய
வேண்டாம். தேவர்கள் யாவரும் நம் நண்பர்களே. ஆதலால் ஐயனே! இனிக்கின்ற பழங்கள் தோன்றும் காலத்தில்
வெறும் மலர்களைப் பறிப்பதற்கு நினைக்கலாமோ? கூடாது.
50.இராமன் தன்
இயல்பான கருணையால், என் மீது கொண்ட அன்பால் உன்னிடம் கொண்ட அருளினால் என்னை
இவ்வாறு வேண்டிக் கொள்ளுமாறு என்னை அனுப்பினார். ஆகையால்,
அறநெறியைப் புறக்கணிக்காது இராவணனை நீங்கி இராமனைக் காண வருவாயாக”
என்று கும்பருணனின் திருவடிகளை
வணங்கினான் வீடணன்.
கும்பகருணனின் மறுப்புரை
51.வண்டுகள்
மொய்க்கும் மலர் மாலையும், ஒளி வீசும் மகுடம் மண்ணில் படுமாறு தன் பாதங்களைக்
கையால் பற்றிக் கொண்டு புலம்புகின்ற தம் தம்பி வீடணனைத் தூக்கி தன் மார்போடு அணைத்துக்
கொண்டு கண்களில் குருதி நீர் வழியப் பேசத் தொடங்கினான் கும்பகருணன்.
52.“நீண்ட
காலம் என்னை அருமையாக வளர்த்து இன்று போர்க்கோலம் செய்து போர்க்களத்திற்கு அனுப்பிய
இராவணனுக்காக உயிரை விடாமல் நிலையற்ற வாழ்க்கையை விரும்பி இராமனிடம் சேரமாட்டேன்.
என் துன்பத்தை நீ நீக்க விரும்பினால் அந்த இராமனை விரைந்து சென்று அடைவாயாக.
53.பிரமனின்
குற்றமற்ற வரத்தினால் நீ அழிவில்லாத தருமத்தை மேற்கொண்டாய். அதனால் உலகம் உள்ளவரை வாழ்வாய். நீ எல்லா உலகத்திற்கும்
தலைவன். எனவே, இராமனை அடையும் செயல் உனக்கு
ஏற்றதே! இங்கே இழிவான மரணத்தை அடைவது எனக்குப் புகழையே தரும்.
54.ஆலாசனை அற்ற
தலைவன் ஒரு தீய செயல் செய்ய நினைத்தால் அச்செயல் செய்யாமல் தடுத்து திருத்துவது நல்லது. முடியவில்லையென்றால் அவனுடைய பகைவரை அடைந்து பெறக்கூடியபயன் உண்டா?
இல்லை. ஒருவன் இட்ட சோற்றை உண்டவர்க்கு உரிய செயல்,
போர்த்தொழிலுக்கு உரியவராகப் போரிட்டு,
அன்னமிட்டவர்க்கு முன் இறத்தலேயோகும்.
55.மூன்று உலகங்களை
ஒரு சேர ஆட்சி செய்த இராவணன், இராமன் சுட்டெரிக்கும் அம்புகளைச் செலுத்தும்போது உடன்
பிறந்த தம்பி இல்லாமல் பகைவர் பார்க்குமாறு அனாதையாக மண்மீது மாண்டு கிடப்பதற்கு உரியவனோ?
56.ஐயனே! எமனது வலிமையையே அடக்கியவனாகிய நான் இலங்கையின் செல்வத்தை நிலையானது என்று
எண்ணி, என் அண்ணனின் உயிரைப் போக்கிய பகைவனை வாழ்த்திக் கொண்டு
புண்பட்ட நெஞ்சோடு அப்பகைவனைக் கைகூப்பி உயிர் வாழ உடன்பட மாட்டேன்.
57.அனுமனையும், வாலியின் மகனான அங்கதனையும், சுக்ரீவனையும், இராம இலக்குவணனையும், நீலனையும், சாம்பவானையும், குரங்குச் சேனைகளையும் வென்று உலகத்தைச்
சுற்றி வருகின்ற சூரியனைப் போன்று திரிவேன். இதை நீ காண்பாய்.
58.போர்க்களத்தில்
இராமனும் இலக்குமணனும் வந்து என் எதிரே நிற்கட்டும். இவ்விருவரைத் தவிர வேறு யார் என் எதிரே நிற்கும் வல்லமையோடு உள்ளனர்.
அவர்களை எல்லாம் அழித்து விடுவேன்” என்று கூறினான்
கும்பகருணன்.
59.“என்றும்
வாழ்பவனே! உரிய காலத்தில் ஆக வேண்டியது ஆகியே தீரும்.
அழிய வேண்டியது அதற்குரிய காலத்தில் சிதறிப் போகும். அவ்வாறு அழிய வேண்டியதை அருகே இருந்து பாதுகாத்தாலும், அழிந்து போவது உறுதி. இதை உணர்ந்தவர் உன்னைக் காட்டிலும்
யார் உள்ளனர்? வருத்தம் கொள்ளாமல் இங்கிருந்து செல்க.
எம்மை நினைத்து இரங்க வேண்டாம்” என்றான்.
வீடணன் விடை பெறுதல்
60.இவ்வாறு
கூறிய கும்பகருணன் வீடணனை மீண்டும் மார்புற அணைத்து, விட்டு விட்டு அழுது ஏக்கம் கொண்டு, நீர் நிறைந்த விழிகளால்
நீண்ட நேரம் பார்த்து, உடன்பிறப்பு என்னும் தொடர்பு இன்றோடு போயிற்று
அன்றோ? என்று கூறி அவனைத் தழுவுவதை விட்டான். வீடணன் கும்பருணனுடைய பாதங்களில் விழுந்தான்.
61.விழுந்த வீடணன் வணங்கினான். கண்களும் முகமும் மனமும் வாயும்
உலரப் பெற்றான். உடல் ஒடுங்கப் பெற்றான். “மேலும் பேசி வாதாடுவதால் விளையக்கூடிய பயன் ஒன்றும் இல்லை. அதனால் இங்கிருந்து திரும்பிச் செல்வதே நல்லது” என்று
உணர்ந்து நற்குணங்கள் நிறைந்த கும்பகருணனுடைய சேனைகள் கைகூப்பித் தன்னை வணங்க இராமனிடம்
சென்றான்.
வீடணன் செல்ல, கும்பகருணன் கண்ணீர் உகுத்து நிற்றல்
62.வஞ்சக இயல்பு
பொருந்திய வாழ்க்கையை உடைய எங்களைக் கைவிட்டு, தான் பிறந்த அரக்க
மரபின் தன்மையையும் விட்டு விட்ட வீடணன், குழந்தைத் தன்மையைத்
துறந்து பெரியோரின் சிறந்த அறிவைப் பெற்றான் என்று நினைத்து துன்புறும் மனத்தோடு கும்பகருணன்
தன் கண்களில் நீர் முழுவதும் வற்றி இரத்தம் நீராகப் பெருகுமாறு நின்றான்.
முற்றும்