வியாழன், 16 ஜூலை, 2020

பெரிய புராணம் - நூற் குறிப்பு, ஆசிரியர் குறிப்பு

பெரிய புராணம்

          இந்நூல் சைவ சமயத்தைச் சார்ந்த சிவனடியார்களின் பெருமையையும், அவர்களின் வரலாற்றையும் விரித்துரைக்கின்றது. இந்நூலை இயற்றியவர் சேக்கிழார். சுந்தரர் எழுதிய திருத்தொண்டர் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை மூலநூல்களாகக் கொண்டும், பல தலங்களுக்குச் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் சேக்கிழார் இந்நூலை இயற்றியுள்ளார்.  இந்நூல் இரண்டு காண்டங்களையும், 13 சருக்கங்களையும், 4253 பாடல்களையும் கொண்டுள்ளது. சைவத்திருமுறையில் பன்னிரண்டாம் திருமுறையாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நூலுக்கு ஆசிரியர் இட்ட பெயர் திருத்தொண்டர் புராணம் என்பதாகும். 63 நாயன்மார்களின் வரலாற்றையும், 9 தொகையடியார்களின் வரலாற்றையும் கூறுகின்றது.

சேக்கிழார்

இவர் தொண்டை மண்டலத்தில் புலியூர்க் கோட்டத்துக் குன்றத்தூரில் வேளாளர் மரபில் சேக்கிழார் குடியில் தோன்றியவர். இவரது இயற்பெயர் அருண்மொழித் தேவர். சோழ நாட்டை ஆண்ட அநபாயச் சோழன் உத்தமச் சோழப் பல்லவன் என்ற பட்டம் கொடுத்து இவரைத் தன் முதல் அமைச்சராக்கிக் கொண்டான். இம்மன்னன் சீவக சிந்தாமணி காப்பியத்தின் மேல் விருப்பம் கொண்டு, சமணத்தின்பால் ஈடுபாடு கொண்டிருந்ததால், மன்னனின் மனத்தைச் சைவத்தின் மீது திருப்பவே சேக்கிழார் திருத்தொண்டர் புராணம் பாடினார் என்பர். இத்திருத்தொண்டர் புராணமே நாளடைவில் பெரிய புராணம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இவரது காலம் கி.பி.12 ஆம் நூற்றாண்டு.


1 கருத்து: