வியாழன், 16 ஜூலை, 2020

கம்பராமாயணம் - நூல் குறிப்பு, ஆசிரியர் குறிப்பு

கம்பராமாயணம்

கம்பராமாயணத்தைத் தமிழில் இயற்றிய பெரும் புலவர்  கம்பர். அவரது கவிச்சிறப்பு தமிழிலக்கிய வரலாற்றில் தலை சிறந்ததாகப் போற்றப்படுகிறது. “கல்வியிற் பெரியன் கம்பன்எனவும், “கம்பன் வீட்டுச் கட்டுத்தறியும் கவிபாடும்எனவும் வரும் பழம் தொடர்கள் கம்பரின் சிறப்பை வெளிப்படுத்தும். வடமொழியில் வால்மீகி முனிவர் இயற்றிய இராமாயணத்தைத் தமிழில் இராமகாதையாகப் படைத்தார் கம்பர். தமிழ் வழக்கிற்கும், பண்பாட்டிற்கும் ஏற்ப வால்மீகி இராமாயணக் கதைப் பகுதிகளுள் பலவற்றை மாற்றியும், சிலவற்றை விரித்தும், சில செய்திகளை அடியோடு விடுத்தும் கம்பர் தம் காப்பியத்தை அமைத்துள்ளார்;. இக்காப்பியம் கம்பநாடகம், கம்ப சித்திரம் என்ற வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன.

நூலமைப்பு

இந்நூலில், பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம்  ஆகிய ஆறு காண்டங்களும், 113 படலங்களும், 10,500க்கும் மேற்பட்ட பாடல்களும் இடம்பெற்றுள்ளன.

கம்பர்

கம்பர் சோழநாட்டில் திருவழுந்தூரில் பிறந்தவர். தந்தையார் பெயர் ஆதித்தன். உவச்சர் குலத்தில் பிறந்த இவர் காளி கோயிலில் பூஜை செய்து வந்த மரபைச் சேர்ந்தவர். காளியின் அருளால் கவி பாடும் ஆற்றல் பெற்றவர். இவருக்கு அம்பிகாபதி என்ற மகனும் காவேரி என்ற மகளும் இருந்ததாகக் கூறப்படுகிறது. அம்பிகாபதி, சோழ மன்னன் மகள் அமராவதியைக் காதலித்த குற்றித்திற்காகக் கொலை செய்யப்பட்டான். கல்வியில் சிறந்து விளங்கிய இவன் அம்பிகாபதிக் கோவை என்ற நூலை எழுதியுள்ளான். மகனின் மறைவுக்குப் பிறகு நாட்டரசன் கோட்டையில் தங்கி அங்கேயே உயிர் துறந்தார் கம்பர். அங்கு அவருக்குச் சமாதி எழுப்பப்பட்டுள்ளது. இவரது காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டு எனவும் கி.பி.12ஆம் நூற்றாண்டு எனவும் கூறப்படுகின்றது. இவரை ஆதரித்தவர் திருவெண்ணெய் நல்லூரில் வாழ்ந்த சடையப்ப வள்ளல் ஆவார். தம்மை ஆதரித்த வள்ளலைக் கம்பர் தம் காப்பியத்தில் பத்து இடங்களில் பாடியுள்ளார்.

கம்பரின் பிற நூல்கள்

இராமகாதையைத் தவிர ஏர் ஏழுபது, திருக்கை வழக்கம், சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.

 


2 கருத்துகள்: