திங்கள், 29 ஜனவரி, 2024

சத்தி முத்திப் புலவர் - நாராய் நாராய்

 

சத்தி முத்திப் புலவர்

நாராய் நாராய்

 பாடல்

நாராய்! நாராய்! செங்கால் நாராய்

பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன

பவளக் கூர்வாய் செங்கால் நாராய் !

நீயுநின் மனைவியும் தென்றிசை குமரியாடி

வடதிசைக் கேகுவீ ராயின்

எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி

நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி

பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு

எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்

ஆடை யின்றி வாடையின் மெலிந்து

கையது கொண்டு மெய்யது பொத்திக்

காலது கொண்டு மேலது தழீஇப்

பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்

ஏழை யாளனைக் கண்டனம் எனுமே.

விளக்கம்

சத்திமுத்தம் என்ற ஊரில் வாழ்ந்து வரும் புலவர் தம் வறுமையைப் போக்க பாண்டி நாட்டை அடையும்போது பெருமழையில் மாட்டிக் கொண்டார். உடம்பை மூடி போர்வையின்றிக் குளிரால் வாடினார். தம் விதியை நொந்து, தம் மனைவி பிள்ளைகளை எண்ணி வருந்தினார். அப்போது வானில் செல்லும் நாரையைப் பார்த்துத் தம் நிலையைப் பாடலாகப் பாடினார்.

“நாரையே! நாரையே! சிவந்த கால்களையுடைய நாரையே! பனங்கிழங்கைப் பிளந்தது போல பவளம் போன்று செந்நிறமுள்ள கூர்மையான வாயையும், சிவந்த காலையும் உடைய நாரையே! நீயும் உன் மனைவியும் தெற்குத் திசையில் உள்ள கன்னியாகுமரிக் கடலில் முழுகி, அங்கிருந்து வடக்குத் திசை நோக்கிச் சென்றால், எம் ஊராகிய சத்திமுத்தத்தில் உள்ள நீர்நிலையிலே இறங்கி, மழையினால் நனைதற்குரிய சுவரோடு கூடிய கூரை வீட்டில், கனைகுரல் பல்லி நற்சகுனமாக ஒலிப்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற என் மனைவியைப் பார்த்து, என் நிலையைக் கூறுவாயாக! எம் நாட்டின் அரசனாகிய மாறன் என்றும் வழுதி என்றும் பெயரையுடைய பாண்டிய அரசனது மதுரையில் போர்த்துக் கொள்ள ஆடையில்லாமல் குளிர் காற்றினால் ஒடுங்கி கைகள் இரண்டினாலும் உடம்பை மூடிக் கொண்டும், கால்களைக் குந்த வைத்துக் கொண்டு தழுவிக் கொண்டும், பெட்டிக்குள் அடங்கியிருக்கும் பாம்பு போல பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்ற வறுமையுடைய உனது கணவனைப் பார்த்தோம் என்று சொல்லுங்கள்” என்று பாடுகின்றார் புலவர்.

அந்தகக்கவி வீரராகவ முதலியார் - இம்பர்வான் எல்லை

 

அந்தகக்கவி வீரராகவ முதலியார்

இராமன் பரிசளித்த யானையைப் புகழ்தல்

இம்பர்வான் எல்லை இராமனையே பாடி

என்கொணர்ந்தாய் பாணாநீ என்றாள் பாணி

வம்பதாம் களபமென்றேன், பூசுமென்றாள்

மாதங்கம் என்றேன், யாம் வாழ்ந்தேம் என்றாள்

பம்புசீர் வேழம் என்றேன், தின்னு மென்றாள்

பகடென்றேன், உழுமென்றாள் பழனந் தன்னை

கம்பமா என்றேன், நல்களியாம் என்றாள்

கைம்மா என்றேன் சும்மா கலங்கினாளே

விளக்கம்

பாடினி என்னும் பாடல் பாடும் பெண், அரசர் வீடுகளில் பாடும் பாணனைப் பார்த்து, “இவ்வுலகத்திலும் மேல் உலகத்திலும் புகழ் பெற்ற இராமன் என்ற வள்ளலைப் பாடி என்ன பரிசில் கொண்டு வந்தாய்?” என்று வினவினாள். அதற்குப் பாணன் பதில் கூறத் தொடங்கினான்.

  • பாணன் களபம் (மும்மதம் கொண்ட யானைக் கன்று) என்று கூற, அவர் மனைவி அதனை சந்தனம் என்று எண்ணி, உடலில் பூசிக் கொள்ளுங்கள் என்றாள். 
  • மாதங்கம் (சிறப்பினைத் தரும் பொன்) என்று கூற, மிகுதியான பொன் என்று புரிந்து கொண்டு, நாம் எல்லோரும் புகழும் சிறந்த வாழ்க்கையினை அடைந்தோம் என்றாள். 
  • மிக்க புகழுடைய வேழம் என்று கூற, அவள் அதை கரும்பு என்று எண்ணி சாப்பிடுங்கள் என்றாள். 
  • பகடு என்று கூற, அவள் அதை மாடு என்று நினைத்து வயலை உழும் என்றாள். 
  • இறுதியில் கம்பமா என்றுரைக்க, அவள் கம்பு தானியத்தின் மாவு என்று எண்ணி நல்ல களியாகச் செய்யலாம் என்றாள். 
  • புலவர் பொறுமையிழந்து தான் கொண்டு வந்தது கைம்மா என்று கூற, கொண்டு வந்த பரிசில் யானை என்பதை உணர்ந்து, நம் வயிற்றுக்கு உணவில்லாத நிலையில் யானைக்கு எவ்வாறு உணவிடுவது என்று வீணாகக் கலங்கினாள்.
  • இப்பாடலில் யானைக்கு வழங்கப்படுகின்ற பல்வேறு பெயர்களைப் பற்றி அறிய முடிகின்றது.

ஔவையார் - வான் குருவியின் கூடு

 

ஔவையார் – தனிப்பாடல்

வான் குருவியின் கூடு வல்லரக்குத் தொல்கறையான்

தேன்சிலம்பி யாவருக்கும் செய்யரிதால் – யாம் பெரிதும்

வல்லோமே என்று வலிமை சொல் வேண்டாங்காண்

எல்லார்க்கும் ஒவ்வான்று எளிது.

விளக்கம்

ஔவையார் கம்பரைப் பழித்துப் பாடல் பாடினார். அதைக் கேட்ட சோழ மன்னன் வருத்தமடைந்து, “கம்பனைப் போல பெரிய காவியம் செய்து சிறப்புற்றவர் வேறு யார் இருக்கின்றனர்” என்று கேட்டார். அதற்கு ஔவையார், “சோழனே! தூக்கணாங்குருவியின் கூடு குளவிகள் கட்டுகின்ற அரக்குக்கூடு, கரையானின் புற்று, தேனீக்களின் கூடு, சிலந்தியின் வலை இவற்றைப்போல எவராவது செய்ய முடியுமா? யாராலும் செய்ய முடியாது. அதனால் அவர்களை மட்டும் தொழில்நுட்பத்தில் தலைசிறந்தவர்கள் என்று பாராட்டலாமா? அஃதன்றி வேறு எதுவும் அந்தச் சிற்றினங்களுக்குத் தெரியாது. அது போலவேதான் கவிதையும். ஒவ்வொரு புலவர்க்கும் ஒவ்வொன்று எளிதாக இருக்கும். அந்தந்த வல்லமையினை அறிந்துதான் பாராட்டுதல் வேண்டும். அதுதான் சிறப்பு” என்று கூறினார்.