ஐரோப்பியர் கால இலக்கிய வளர்ச்சி
நம் இந்திய மண்ணுக்கு
வந்த ஐரோப்பியர்களை இரு வகைப்படுத்தலாம். வணிக நோக்கில் வந்த கிழக்கிந்திய கம்பெனியார்கள்.
இன்னொருவர் மதத்துறவிகளான மிஷனரிகள். வணிக
நோக்குடன் வந்தவர்களால் பல துன்பங்கள் விளைந்தன. மதத்துறவிகளால் பல நன்மைகள் நடந்தன.
குறிப்பாக, அவர்கள் தமிழ் மொழிக்கும், தமிழ் உரைநடைக்கும் செய்த தொண்டு அளவில்லாதது.
சமயம் பரப்பும் நோக்குடன் வந்த ஐரோப்பியர் தழிழைப் படித்து, அதன் இனிமையில் மயங்கினர்.
தமிழில் ஆய்வு முறைகளையும், எழுத்துச் சீர்த்திருத்தத்தையும் செய்து பண்டைய உரை வடிவ
முறைகளை மாற்றி அனைவரும் படிக்கும் வகையில் எளிமைப்படுத்தினர். அவர்கள் கொண்டு வந்த
அச்சு இயந்திரங்களால் மொழிப்புரட்சி ஏற்பட்டது.
தமிழ் ஆர்வம் கொண்ட ஐரோப்பியர்கள்
தமிழ் ஆர்வம் கொண்ட ஐரோப்பியர்களுள்,
இராபர்ட் – டி –நோபிலி என்னும் தத்துவ போதகர், பெஸ்கி எனப்படும் வீரமாமுனிவர், சீகன்பால்கு
ஐயர், கால்டுவெல், ஜி.யு.போப் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். இவர்களின் இலக்கியப்பணி
தமிழ்க் கிறித்துவ இலக்கியங்களிலும், தமிழ் இலக்கண இலக்கிய மொழி ஆராய்ச்சிகளிலும் எண்ணற்ற
புதுமைகளை உருவாக்கியது.
இலக்கியங்கள்
தத்துவக் கண்ணாடி, இயேசுநாதர் சரித்திரம், ஞானதீபிகை, பிரபஞ்ச விநோத வித்தியாசம், சதுரகராதி, தொன்னூல் விளக்கம், கொடுந்தமிழ் இலக்கணம், தேம்பாவணி, கித்தேரியம்மாள் அம்மானை, வேதவிளக்கம், வேதியர் ஒழுக்கம், பரமார்த்தகுரு கதை, தமிழ்மொழி இலக்கணம், அகராதிப் பணிகள் எனப் பலவும் அவர்களின் தமிழ்க்கொடைகளாகும். கால்டுவெல்லின் திராவிட மொழி ஒப்பிலக்கணம் என்னும் நூல் தமிழ் மொழிக்குக் கிடைத்த சிறப்பான மகுடம் ஆகும். இவர்களின் வருகையால் ஏராளமான சிற்றிலக்கிய வகைகள் தோன்றின. தமிழ் உரைநடை வளர்ச்சியும், தமிழ்க்கல்வி மற்றும் ஆங்கிலக் கல்வியும் வளர்ச்சி கண்டன. அவர்கள் கொண்டு வந்த கல்வி முறைகளும் இலக்கிய நுட்பங்களும் கொடுத்த பயன்களும் தேச மொழி வளர்ச்சிக்கு இன்றிமையாதனவாக அமைந்துள்ளன.