முகமதியர் ஆட்சி
தமிழக வரலாற்றில் தெளிவற்ற
ஆட்சிக் காலங்களாக அமைந்தவை களப்பிரர் காலமும் முகமதியர் காலமுமே ஆகும். முகமதியர்
வடக்கில் இருந்த நாடுகளான தேவகிரி, துவார சமுத்திரம் ஆகிய ஆட்சிப் பகுதிகளை வென்று
தக்காணத்திற்கு வந்தனர். டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டனர். தமிழகத்தில் பிற்காலச் சோழர்களின் ஆட்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது வட இந்தியாவில் முகலாயர்களின் ஆட்சியும் ஆதிக்கமும் ஏற்பட்டன. பின்னர் பிற்காலப் பாண்டியர்களின் ஆட்சியில் தமிழகத்தின் மேல் படையெடுத்தனர்.
அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக்காபூர் மேற்கொண்ட போர், தமிழகத்தில் முகமதியர்
குடியேற்றத்திற்கும் ஆட்சி மாற்றத்திற்கும் தொடக்கமாக அமைந்தது.
மாலிக்காபூர்
மாறவர்மன் குலசேகரன் ஆட்சியில், அவர் புதல்வர்களான சுந்தரபாண்டியனும், வீர பாண்டியனும் அரியணைக்காகத் தங்களுக்குள் சண்டையிட்டனர்.
சுந்தரபாண்டியன் அரியணையை வீர பாண்டியனுக்கு வழங்கினார். இதனால் இருவருக்குமிடையே பூசல்
ஏற்பட்டது. இந்நிலையில் தெற்கு நோக்கிப் படையெடுத்து வந்த மாலிக்காபூரை உதவிக்கு அழைத்தான்
சுந்தர பாண்டியன்.
வீர பாண்டியப் படைகளைத் தாக்கி முன்னேறிய மாலிக்காபூர் படைகள் உய்யக்கொண்டான்
திருமலையை முகாமாகக் கொண்டு கண்ணனூர், திருவரங்கம், மதுரை முதலிய இடங்களைக் கொடுரமாகத்
தாக்கியது. இதனால் மதுரையை விட்டு வெளியேறினான் சுந்தரபாண்டியன். மாலிக்காபூர் இராமேஸ்வரம்
வரை படை நடத்தி வென்று அங்கு மசூதி ஒன்றை நிறுவினான். பெரும் செல்வத்தோடு டெல்லி புறப்பட்ட
மாலிக்காபூர், படையின் சிறு பகுதியை மதுரையிலே விட்டுச் சென்றான். வேணாட்டடிகள், இரவிவர்ம
குலசேகரன் இருவரின் துணையுடன் விக்கிரம பாண்டியன் மாலிக்காபூரை எதிர்த்துப் போரிட்டு விரட்டினான்.
மாலிக்காபூருக்குப் பின்…
மாலிக்காபூர் கொல்லப்பட்டதற்குப் பின்னர் கில்ஜி சுல்தான்களின் ஆட்சி மறைந்து துக்ளக்
சுல்தான்களின் ஆட்சி தொடங்கியது.
முகமதுபின் துக்ளக்
சுல்தான் கியாசுதீன் தன் மகனான முகமதுபின் துக்ளக்கை தென்னகம் நோக்கி படையெடுக்க
அனுப்பினான். இப்படை முதலில் தோற்றது. பின்னர் பிரதாப ருத்திரதேவனை வென்று, மலபாரில்
நுழைந்து தமிழகத்தை வெற்றி கண்டது. பாராக்கிரம பாண்டியன் கைது செய்யப்பட்டான். முகமது
பின் துக்ளக் டில்லி சுல்தான் ஆனான். மதுரையில் அரச பிரதிநிதியை அமர்த்தினான். இவனது
ஆட்சியின் கீழ் தென்னகம் 23ஆவது மாநிலமாக அமைந்தது.
இவனுக்குப் பிறகு சலாவுதீன் அசன் 1333 முதல் 1378 வரை மதுரையை ஒரு சுதந்திர சுல்தானியப்
பகுதியாக அமைத்து ஆட்சி செய்தான். இதற்கிடையில் பல போர்கள் ஏற்பட்டன. மதுரை சுல்தான்கள்
பலர் இறந்து போயினர். இறுதியில், மதுரையில் சுல்தான்களின் ஆட்சி முடிவுக்கு வந்துது.
சமூக நிலை
இவர்கள் உருவச்சிலை வழிபாட்டை எதிர்த்தனர்.
மாலிக்காபூரின் படையெடுப்பால் சீரங்கம், மதுரை போன்ற ஆலயங்கள் தாக்குதலுக்கு
உள்ளாயின. தமிழகத்துப் பேரரசுகள் சிற்றரசுகளாக மாறின. முகமதியர்களின் சமயச்சார்பு அரசியலால்
மக்கள் பல ஊர்களில் கூட்டம் கூட்டமாக இசுலாம் மதத்தைத் தழுவினர். இசுலாமியச் சமயமும்,
சாராசானிக் கட்டடக் கலையும் ஆட்சியாளர்களின் ஆதரவைப் பெற்றன.
சாராசானிக் கட்டடக்கலை
முகமதிய சாராசானிக் கட்டடக்கலை, ஐரோப்பிய கட்டடக்கலையும் இந்திய பாரம்பரிய கட்டடக்
கலையும் சேர்ந்து உருவாக்ப்பட்டது ஆகும். குவி மாடங்களால் கட்டப்படும் இக்கட்டடக்கலை,
தமிழ் இலக்கியங்கள் கூறும் எழுநிலை மாடங்களைப் போல பருவச் சூழலுக்கு ஏற்றபடி அமைக்கப்பட்டவையாகும்.
உயர்ந்த கோபுர அமைப்பு, பூ வேலைப்பாடுகள் அமைந்த கட்டட முனைகள், விதானங்கள் எனப் பலவும்
சாராசானிக் கட்டடக்கலையில் அமைந்துள்ளன. இதற்கு எடுத்துக்கட்டு சென்னையில் அமைந்துள்ள
சேப்பாக்கம் அரண்மனை ஆகும். தமிழ்நாட்டில் கட்டப்பட்ட முதல் சாராசானிக் கட்டடம் இதுவே
ஆகும்.
சென்னை உயர்நீதி மன்றம், எழும்பூர் தொடர்வண்டி நிலையம், சென்னைப் பல்கலைக்கழக செனட்
இல்லக் கட்டடம், விக்டோரியா பப்ளிக் ஹால், மதுரையின் நாயக்கர் மகால் ஆகியவை இதற்குச்
சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும். தமிழகத்தில்
ஆங்கிலேயர்கள் பல கோட்டைகளை அழித்திருந்தாலும், இச்சாராசானிக் கட்டங்கள் மட்டும் அழியாமல்
மீண்டதற்கு இதன் சிறப்பே காரணமாகும்.
இலக்கியங்கள்
சீறாப்புராணம், படைப்போர் இலக்கியங்கள், நொண்டி நாடகங்கள், குணங்குடி மஸ்தான் சாகிபு
பாடல்கள் முதலியன இக்கால கட்டத்தில் தோன்றிய இலக்கிய வகைகள் ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக