சனி, 4 அக்டோபர், 2025

TANSCHE - ஐரோப்பியர் கால வரலாறு

 

ஐரோப்பியர் கால வரலாறு

தமிழக வரலாற்றில் தமிழரின் புகழ் கடல் கடந்து பேசப்படுவதற்கும், உலக நாடுகள் அனைத்தும் தென்னிந்தியாவுடன் வணிக உறவு கொள்ள விரும்புவதற்கும், தமிழகத்தின் நானில அமைப்பும் அதில் விளையும் நறுமணப் பொருட்களுமே முக்கிய காரணங்கள் ஆகும். தங்கள் உணவுப் பொருட்களைப் பதப்படுத்த தேவையான மிளகு, இலவங்கம், ஏலம் முதலான பொருட்களைப் பெறுவதற்குப் பொன்னைக் கொடுத்து தமிழகத்தோடு வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். பிற்காலத்தில் ஐரோப்பியர்கள் தமிழத்தோடு வாணிகத்தில் ஈடுபட்டிருந்தாலும் தங்கள் கிறித்துவ சமயத்தைப் பரப்பும் நோக்கத்தோடு இந்திய நாட்டில் தங்களுக்கான குடியேற்றங்களை நிறுவினர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் போர்ச்சுக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், டேனிஸ்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் ஆகியோர் ஆவர்.

போர்ச்சுக்கீசியர்கள்

இந்தியாவிற்குக் கடல்வழியைக் கண்டறியப் புறப்பட்டு இறுதியாக கோழிக்கோட்டிற்கு வந்தடைந்தார் வாஸ்கோடகாமா. அவரின் வழியாக வந்த போர்ச்சுக்கீசியர் விசயநகர அரசர்களின் நட்பைப் பெற்றனர். சாமூதிரியுடன் போரிட்டு கொச்சியைக் கைப்பற்றினர். சோழமண்டலக் கடற்கரையில் நாகப்பட்டினத்தையும், சாந்தோமையும் தளங்களாகப் பெற்றனர். கோவாவைத் தங்கள் இருக்கையாகக் கொண்டு தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் ஒரு வணிகப் பேரரசினை உருவாக்கினர். அரபிக்கடலிலும், இந்துமாக்கடலிலும் இணையற்ற ஆதிக்கத்தைப் பெற்றனர். போர்ச்சுக்கீசிய மன்னன் கத்தோலிக்க சமயத்திற்குக் காவலனாக விளங்கினான். அதனால் கோட்டாறு, புன்னக்காயல், மதுரை, செஞ்சி, வேலூர், கோல்கொண்டா முதலிய இடங்களில் கிறித்துவ சமயம் பரவியது. சமயப்பணியிலும், வாணிபத்திலும் கடல் ஆதிக்கத்திலும் சிறந்து விளங்கிய இவர்கள் 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் டச்சுக்காரர்களின் போட்டியால் வீழ்ந்தனர்.

டச்சுக்காரர்கள்

போர்ச்சுக்கீசியர்களை வீழ்த்திய டச்சுக்காரர்கள் தாங்கள் கைப்பற்றிய பல ஊர்களில் வலிமையான கோட்டைகளைக் கட்டிக் கொண்டனர். டச்சு பாதிரியாரான ஆபிரகாம் ரோசர் புலிக்காட்டில் தங்கித் தம் மதப் பணிகளைச் செய்தார். இங்கிலாந்து அரசியின் கிழக்கிந்தியக் கம்பெனியின் வணிக உடன்படிக்கைகள் இந்தியாவில் காலனித்துவத்திற்கு அடிகோலின. அதனால் டச்சுக்காரர்களின் செல்வாக்கு உயர்ந்தது. வணிகத் தொழிலிலும், கப்பல் ஓட்டுவதிலும், பொருளாதாரத்திலும், அறிவு நுட்பத்திலும் டச்சுக்காரர்கள் ஏனைய ஐரோப்பியரைவிட உயர்ந்து நின்றனர். வணிகத்தைத் தொடர்ந்து நடத்த ஹாலந்தில் ஐக்கியக் கம்பெனி ஒன்று நிறுவினர். தங்கள் நோக்கத்தை அவர்கள் தெளிவாக அறிந்தபடியால் எண்ணற்ற பயன்களைக் கண்டனர். கிழக்கிந்திய வாணிகம் அவர்களை ஐரோப்பிய மக்களுள் செல்வம் நிரம்பியவர்களாக்கியது.

டேனிஸ்காரர்கள்

இங்கிலாந்தின் குடிமக்கள் அனைவரும் இந்தியாவுடன் வணிகம் செய்யும் உரிமை உடையவர்கள் என்று இங்கிலாந்தின் பாராளுமன்றம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. அவ்வுரிமையின் அடிப்படையில் தரங்கம்பாடியில் டேனிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி வணிகர்கள், கோட்டை ஒன்றைக் கட்டிக்கொண்டு தம் வாணிகத்தைத் தொடங்கினர். இந்தியப் பொருட்களைக் கொள்முதல் செய்து அவற்றை மலேயத்தீவுகளில் விற்றனர். ஆனால் அந்த வணிகத்தில் அவர்கள் லாபம் காணவில்லை. எனவே, டேனியர்கள் தரங்கம்பாடியையும், சோராம்பூரையும் ஆங்கிலேயரின் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு ரூ.12,50,000க்கு விற்று விட்டனர்.

பிரெஞ்சுக்காரர்கள்

பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி 1664இல் தோற்றுவிக்கப்பட்டது. இவர்கள் டச்சுக்காரர்கள், டேனிஸ்காரர்களுடன் அரசியலில் இறங்கினர். புதுச்சேரி பிரெஞ்சு அரசாங்கத்திடம் இருந்தது. இந்த அரசாங்கம் போர்களில் கவனம் செலுத்தி, கம்பெனியைப் புறக்கணித்தது. சிவாஜியின் தாக்குதல் புதுச்சேரிக்கு பல இன்னல்களை விளைவித்தது. புதுச்சேரியின் வாணிப முக்கியத்துவத்தை உணர்ந்த மார்ட்டினின் விடாமுயற்சியால் புதுச்சேரியில் ம்பெனியின் வாணிபம் பாதுகாக்கப்பட்டது. இந்திய அரசியல் நிலைமையைக் கண்ட மார்ட்டின் இந்தியாவில் ஒரு சிறந்த எதிர்காலம் உண்டு என்பதை உணர்ந்து, வாணிபத்தளங்கள், துறைமுகங்கள் அமைப்பதற்குப் பிரெஞ்சு அரசுக்குக் கடிதம் எழுதினார். மார்ட்டினின் மறைவுக்குப்பிறகு நாடு பிடிக்கும் நோக்கத்தில் மசூலிப்பட்டினம், கள்ளிக்கோட்டை, மாஹி, யேனாம், காரைக்கால் ஆகிய இடங்களைப் பெற்றது. பின்னர் ஆங்கிலேயர்களுடனான மோதலில் பிரெஞ்சுக்காரர்கள் சிக்கினர்.

ஆங்கிலேயர்கள்

இங்கிலாந்தில் இருந்து வந்த ஆங்கிலேயர்கள் மற்றவர்களுடன் போரிட்டு தமிழகத்தில் வாணிபத்தைத் தொடர்ந்தனர். இங்கிலாந்தில் போடப்பட்ட வணிகத் தீர்மானம், பல மேனாட்டவர்களின் வணிகக் கம்பெனிகளுக்கு வழிவகுத்தாலும் கிழக்கிந்தியக் கம்பெனி அதனை ஒரே கம்பனி ஆக்கியது. அதனால் ஆங்கிலேயர்கள் பலமுடையவர்களானர்.

இந்திய மண்ணில் தன் நிலையான வாழ்வுக்கு உறுதியான அடிப்படைகளை அமைத்துக் கொண்டு அதன்வழி முகலாயப் பேரரசரிடம் இருந்து பல உரிமைகளையும் வணிகச் செல்வாக்கையும் கேட்டுப் பெற்றனர். கல்கத்தா, ஹைதராபாத், சூரத், சென்னை எனப் பல இடங்களில் கம்பெனிகளையும், ராணுவத் தளங்களையும் அமைத்துக் கொண்டனர். தம் தற்காப்பு கருதி ஏராளமான போர்க்கருவிகளையும், படைகளையும் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்து கொண்டனர். நாடு பிடிக்கும் போட்டியில் பிரெஞ்சுக்கார்கள் சூரத், மசூலிப்பட்டினம் போன்ற துறைமுகங்களை ஆங்கிலேயர்களிடம் இழந்தனர். ஆங்கிலேயரின் கைவசம் இருந்த சென்னையும், பிரெஞ்சுக்கார்ர்களிடம் இருந்த புதுச்சேரியும் இருபெரும் வணிகத் துறைமுகப்பட்டினங்களாக விளங்கின.

இந்திய நாட்டு மன்னரிடம் தரைப்படையோ கப்பற்படையோ கிடையாது. எனவே ஆங்கிலேயரும், பிரெஞ்சுக்காரரும் உள்நாட்டு மன்னர்ளைப் பயன்படுத்திக் கொண்டு அரசியலைத் தன் வசமாக்க முயன்றனர். கர்நாடகப் போர்களும், மைசூர்ப் போர்களும் கர்நாடகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அதுவரை ஏற்பட்ட எந்த ஆட்சி மாற்றங்களிலும் தலையிடாத ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் அமைதி காத்தனர்.

பின்பு ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்கார்ர்களுக்கும் போர் நடைபெற்றது. இருவரும் தங்கள் ஆட்சி பகுதிகள் சிலவற்றை இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பிரெஞ்சுக்காரர்கள் சென்னையைக் கைப்பற்றினர். ஆனால், டூப்ளேயின் சென்னை முற்றுகையானது பதினெட்டு மாத கால நீட்டிப்பு பெரும் சூறையாடலுடன் முடிந்தது. ஆங்கிலேயருக்குப் புதிதாகக் கப்பற் படையும், தரைப்படையும் வரவே சென்னை மீண்டும் ஆங்கிலேயர் வசமானது. பின்பு நடந்த மைசூர் போர்களினால் ஐதர் அலியின் எழுச்சியும், பாளையக்கார்களின் வீழ்ச்சியும் நடந்தது. திப்புசுல்தானின் வீழ்ச்சிக்குப் பிறகு கர்நாடகம் முழுவதும் ஆங்கிலேயரின் வசம் சென்றது. பாளையக்கார்கள் ஜமீன்களாக ஒடுக்கப்பட்டு, கிராமங்கள் வரை தங்களின் ஆட்சிப்பரப்பை விரிவாக்கினர் ஆங்கிலேயர்கள்.

பாளையக்காரர்கள்

விஜயநகரப் பேரரசின் படை மானிய முறையில் அமைந்த நாயக்கர் நிர்வா முறையைத் தழுவி அமைந்த பாளையப்பட்டு எனும் புதிய முறையே பாளையக்காரர்கள் முறையாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் இவை நீக்கப்பட்டு பாளையங்கள் ஜமீன்கள் ஆக்கப்பட்டன.

பாளையங்கள்

அம்மையாநாயக்கனூர், அம்பாத்துறை உடையார், உத்தமம், ஊத்துமலை, ட்டயபுரம், நடுவன் குறிச்சி, நாகலாபுரம், கந்தர்வக்கோட்டை, காத்தூர், சிவகிரி, நத்தம், பாப்பாநாடு, பாலையவனம், பாஞ்சாலங்குறிச்சி, போடிநாயக்கனூர் ஆகியன குறிப்பிடத்தக்க பாளையங்களாக இருந்தன. மதுரை நாய்ககர்களின் கீழ் 72 பாளையங்கள் இருந்தன. இது போன்றே செஞ்சி மற்றும் தஞ்சை நாயக்கர்களின் கீழ் பல பாளையங்கள் இருந்தன.

பாளையக்கார்கள்

பூலித்தேவன், அழகு முத்துக்கோன், கட்டபொம்மன், மருது பாண்டியர், முத்து வடுகநாதர், வேலுநாச்சியார், தீரன் சின்னமலை, வலங்கைப் புலித்தேவன் ஆகியோர் தமிழ்நாட்டுப் பாளையக்காரர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இதில் பலரும் நாயக்கர்களுக்குத் திறை செலுத்தும் கடமை பெற்றனர். தங்கள் பாளையங்ளில் விளையும் பொருட்களில் மூன்றில் ஒரு பங்கு நாயக்கர்களுக்கும், மீத ஒரு பங்கில் தங்கள் நிர்வாகத்தைச் செய்து கொள்ளும் உரிமை பெற்றிருந்தனர். மக்கள் மேல் எண்ணற்ற வரிகளை இட்டு கோட்டை கொத்தளங்களைக் கட்டிக் கொண்டனர்.

ஆங்கிலேயரை எதிர்த்த பாளையக்காரர்கள்

கர்நாடகத்தின் ஆட்சி நவாபுகளுக்குக் கையமாறியதில் ஆதாயமடைந்த ஆங்கிலேயர்கள் பாளையங்ளின் வரி வசூலிக்கும் உரிமையைப் பெற்றனர். பழைய வரிமுறைகளை நீக்கி, புதிய வரிகளைத் திணித்தனர். பாளையக்காரர்கள் அதனை எதிர்த்தனர். இதனால் இருவருக்குமிடையே போரும் முற்றுகையும் நிகழ்ந்தன. பூலித்தேவன், கட்டபொம்மன் மருதுபாண்டியர், அழகு முத்துக்கோன், தீரன் சின்னமலை, வேலுநாச்சியார் ஆகியோர் ஆங்கிலேயரை நேரடியாக எதிர்த்து சுதந்திரப் போராட்த்திற்கு வழி வகுத்தனர்.

வேலு நாச்சியாரின் பெண்கள் படையில் குயிலி என்ற பெண் தன்னையே தீப்பிழம்பாக்கிக் கொண்டு ஆங்கிலேயரின் படைத் தளவாடங்களை அழித்தாள். அரியாங்குப்பத்தில் உடையாள் என்ற ஆடு மேய்க்கும் சிறுமி வேலுநாச்சியார் சென்ற பாதையை ஆங்கிலேயர்களுக்குக் காட்ட மறுத்தால் வெட்டுப்பட்டு மாண்டாள். இருவரும் வரலாற்றில் இடம் பெற்றுள்ளனர். 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக