நற்றிணை
1
பாடியவர்
- தெரியவில்லை
திணை - பாலை
துறை - உடன்போக்கும் தோழி கையடுத்தது.
துறை விளக்கம்
தலைவியின் விருப்பப்படி அவளைத் தலைவனிடம் கைபிடித்துக் கொடுத்த தோழி,
அவனிடம், ‘உன் சொல்லை நம்பி உன்னுடன் வரும் இவளை முதுமை எய்திய பிறகும் கைவிடாது பாதுகாப்பாயாக’ என்று சொல்லி இரவில் வழியனுப்பியது. (உடன்போக்கு: மணந்து கொள்வதற்காக
யாருமறியாமல் தலைவன் தலைவியை அழைத்துச் சென்று விடல்: கையடுத்தல்: கைபிடித்துக் கொடுத்தல்)
பாடல்
அண்ணாந்து
ஏந்திய வன முலை தளரினும்,
பொன் நேர்
மேனி மணியின் தாழ்ந்த
நல் நெடுங்
கூந்தல் நரையொடு முடிப்பினும்,
நீத்தல்
ஓம்புமதி- பூக் கேழ் ஊர!
இன் கடுங்
கள்ளின் இழை அணி நெடுந் தேர்க்
கொற்றச்
சோழர் கொங்கர்ப் பணீஇயர்,
வெண் கோட்டு
யானைப் போஒர் கிழவோன்
பழையன்
வேல் வாய்த்தன்ன நின்
பிழையா
நல் மொழி தேறிய இவட்கே.
விளக்கம்
தோழி தலைவனை நோக்கிச் சொல்கிறாள். “தலைவனே! இனிய கள்ளையும் அணிமணிகள்
பூண்ட பெரிய தேர்களையும் உடைய சோழ மன்னர்கள் கொங்கரை வென்று அடக்குவதற்காக ஒரு மாவீரனைப்
பணியமர்த்தினர். அவன் யானைகள் நிறைந்த பேஎர் எனும் ஊரின் தலைவனான பழையன் என்பவன் ஆவான்.
குறி தப்பாத வேற்படையே அவனது தனிச்சிறப்பு ஆகும்.
அந்த வேல்போல என்றும் தவறாதது உன் வாக்குறுதி எனத் தலைவி உன்னை நம்பி ஏற்றுக்
கொண்டிருக்கிறாள். இப்போது நான் உன்னிடம் ஒப்படைக்கும் இத்தலைவியின் அண்ணாந்து உயர்ந்த
மார்புகள் தளர்ந்தாலும், நீண்ட அழகிய கூந்தல் நரைத்தாலும் இவளைப் பிரியாமல் பாதுகாப்பாயாக
!” என்று கூறுகின்றாள்.
2
பாடியவர்
- போதனார்
திணை - பாலை
துறை - 1. மனைமருட்சி 2. மகள்நிலை உரைத்தது
துறை விளக்கம்
1. உடன்போக்கு மேற்கொண்ட மகளை
எண்ணி நற்றாய் வருந்தி உரைத்தது.
2. மணம் நிகழ்ந்தபின் தலைவியின்
இல்லச் சிறப்பினைக் கண்டு வந்து விவரித்த செவிலித்தாயிடம் நற்றாய் உரைத்தது.
பாடல்
பிரசம்
கலந்த வெண் சுவைத் தீம்பால்
விரி கதிர்ப்
பொற்கலத்து ஒரு கை ஏந்தி,
புடைப்பின்
சுற்றும் பூந் தலைச் சிறு கோல்,
'உண்'
என்று ஓக்குபு பிழைப்ப, தெண் நீர்
முத்து
அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,
அரி நரைக்
கூந்தற் செம் முது செவிலியர்
பரி மெலிந்து
ஒழிய, பந்தர் ஓடி,
ஏவல் மறுக்கும்
சிறு விளையாட்டி
அறிவும்
ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்கொல்?
கொண்ட
கொழுநன் குடி வறன் உற்றென,
கொடுத்த
தந்தை கொழுஞ் சோறு உள்ளாள்,
ஒழுகு
நீர் நுணங்கு அறல் போல,
பொழுது
மறுத்து உண்ணும் சிறு மதுகையளே!
விளக்கம்
“பொற்கலத்தில் தேன் கலந்த வெண்மையான சுவை பொருந்திய பாலை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட
சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டி ‘இதைக் குடி’ என்று
அவளுடைய செவிலித் தாயார்கள் கூறவும், அதனை
மறுத்து, முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்க, பாய்ந்து அவள் ஓட,
நடை தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு
முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள். இவ்வாறு
பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும்
அறிந்தாள்? திருமணம் புரிந்த கணவனின் குடும்பத்தில்
வறுமை ஏற்பட்டதால், அவளுடைய தந்தை கொடுத்த செல்வமிக்க உணவை மறுத்து, நீர் இருக்கும்
பொழுது நனைந்து பின் நீர் இல்லாத பொழுது உலரும் நுண்ணிய மணல் போல, ஒரு பொழுதின்றி ஒரு
பொழுது உண்ணும் வலிமையுடையவள் ஆக இருக்கின்றாள்” இப்பொழுது என்று வியக்கின்றாள் தாய்.
3
பாடியவர் - ஔவையார்
திணை - குறிஞ்சி
துறை - பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, தலைமகளை முகம் புக்கது
துறை விளக்கம்
தலைவன் பொருளீட்டும் பொருட்டுத் தலைவியைப் பிரியவேண்டிய சூழல் ஏற்படப்போகிறது
என்று தோழியிடம் கூறுகின்றான். அச்செய்தியைத் தலைவி தாங்கமாட்டாள் என்பதை அறிந்த தோழி,
தலைவனை வெறுப்பதுபோல் கூறி, தலைவி முகம் கொடுத்தவுடன் வினையே ஆடவர்க்கு உயிர் என்பதை
எடுத்துரைக்கின்றாள்.
பாடல்
பெரு நகை
கேளாய், தோழி! காதலர்
ஒரு நாள்
கழியினும் உயிர் வேறுபடூஉம்
பொம்மல்
ஓதி! நம் இவண் ஒழியச்
செல்ப
என்ப, தாமே; சென்று,
தம் வினை
முற்றி வரூஉம் வரை, நம் மனை
வாழ்தும்
என்ப, நாமே, அதன்தலை-
கேழ் கிளர்
உத்தி அரவுத் தலை பனிப்ப,
படு மழை
உருமின் உரற்று குரல்
நடு நாள்
யாமத்தும் தமியம் கேட்டே.
விளக்கம்
“தோழி! இதைக் கேள். தலைவன் ஒருநாள் உன்னைப் பிரிந்து சென்றாலும் உன்
உயிர் உன்னை விட்டுப் பிரிந்ததுபோலத் துன்பப்படுவாய். அப்படி இருக்கையில் உன்னை இங்கே
தனியே விட்டுவிட்டு அவர் மட்டும் பொருளீட்டச் செல்ல இருக்கிறார். அவர் பொருளீட்டிக்கொண்டு
திரும்பும் வரையில், படமெடுத்து ஆடும் பாம்பு நடுங்கும்படியாக, நள்ளிரவில் முழங்கும்
இடி ஒலியைக் கேட்டுக்கொண்டே உயிர் வாழ வேண்டுமாம். இது என்ன கொடுமை” என்று தோழி தலைவியிடம்
கூறுகிறாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக