ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

குறுந்தொகை - கழனிமாஅத்து, யாரும் இல்லை தானே, காலையும் பகலும்

 

குறுந்தொகை

1

பாடியவர் - ஆலங்குடி வங்கனார்

திணை - மருதம்

துறை        

கிழத்தி தன்னைப் புறனுரைத்தாள் எனக் கேட்ட காதற் பரத்தை  அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.

துறை விளக்கம்

ஒரு தலைவன் தன் மனைவியைவிட்டுச் சிலகாலம் ஒரு பரத்தையோடு தொடர்புகொண்டு, அவள் வீட்டில் தங்கியிருந்தான். அங்கிருந்தபொழுது அவள் விருப்பப்படி நடந்துகொண்டான். பிறகு, தன் வீட்டிற்குத் திரும்பிச் சென்று தன் மனைவியோடு வாழ ஆரம்பித்தான். தலைவி (தலைவனின் மனைவி) தன்னை இழித்துப் பேசியதை அறிந்த பரத்தை, “இங்கிருந்த பொழுது என் மனம்போல் நடந்து கொண்டான். இப்பொழுது தன் மனைவிக்கு அடங்கி வாழ்கிறான்என்று தன் கருத்தைத் தலைவியின் அருகில் உள்ளவர்கள் கேட்குமாறு பரத்தை கூறுகிறாள்.

பாடல்

கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்

பழன வாளை கதூஉ மூரன்

எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்

கையும் காலும் தூக்கத் தூக்கும்

ஆடிப் பாவை போல       

மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே.

விளக்கம்    

வயல் அருகில் உள்ள மா மரத்திலிருந்துபழுத்துத் தானாக விழுகின்ற இனிய பழங்களைக் கவ்வி உண்ணும் வாளை மீன்கள் வாழும் ஊரை உடைய தலைவன்என் வீட்டிலிருந்த பொழுது என்னை வயப்படுத்துவதற்காக என்னைப் பெருமைப்படுத்தும் மொழிகளைப் பேசினான்இப்பொழுதுதன்னுடைய வீட்டில்முன்னால் நிற்பவர்கள் கையையும் காலையும் தூக்குவதால் தானும் தன் காலையும் கையையும் தூக்கும் கண்ணாடியில் தோன்றும் உருவத்தைப்போல்தன் புதல்வனின் தாய் (மனைவிவிரும்பியவற்றைத் தலைவன் செய்கிறான்” என்று பழித்துரைக்கின்றாள் பரத்தை. தலைவி என்று குறிப்பிடாமல் புதல்வன் தாய் என்று குறிப்புப பரத்தையின் கோபத்தைக் காட்டுகின்றது.

 

2

பாடியவர் - கபிலர்

திணை – குறிஞ்சி

துறை - வரைவு நீட்டித்த விடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

துறை விளக்கம்

தலைவன் தன்னை மணந்து கொள்வதற்குக் காலம் தாழ்த்துகின்றான் என்பதை உணர்ந்த தலைவி, தன் வருத்தத்தைத் தோழியிடம் கூறியதாக அமைந்துள்ளது இப்பாடல். (வரைவு – திருமணம்)

பாடல்

யாரும் இல்லைத் தானே கள்வன்

தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ

தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால

ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்

குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே. 

விளக்கம்    

“தலைவன் பிறர் அறியாதவாறு என்னைக் காண வந்தபோது, களவில் என்னை மணந்தான். என்னோடு கூடியிருந்தான். அப்போது அங்கே யாரும் இல்லை. என் நலன் நுகர்ந்த கள்வனாகிய தலைவன் மட்டுமே இருந்தான். அவன் என்னிடம் செய்து கொடுத்த உறுதிமொழியிலிருந்து தவறினான் என்றால் நான் என்ன செய்வேன்? நான் அவனோடு கூடியிருந்த நாளில், அங்கே ஓடிக்கொண்டிருந்த நீரில் ஆரல் மீனின் வருகையைப் பார்த்துக் கொண்டு, சிறிய பசுங்கால்களையுடைய குருகும் இருந்தது” என்று உரைக்கின்றாள் தலைவி.



3

பாடியவர் – அள்ளூர் நன்முல்லையார்

திணை – குறிஞ்சி

துறை- பின்னின்றான் கூறியது

துறை விளக்கம்

தலைவியின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்த தலைவனிடம், அவள் இனிமேல் உன்னைக் காண வரமாட்டாள் என்று தோழி கூற, தலைவன் தன் காதல் உண்மையானது என்று இரக்கத்துடன் கூறி நின்றான். (பின்னின்றான் – இரக்கத்துடன் நின்றான்)

பாடல்

காலையும் பகலும் கையறு மாலையும்

ஊர்துஞ் சியாமமும் விடியலு மென்றிப்

பொழுதிடை தெரியிற் பொய்யே காமம்

மாவென மடலோடு மறுகில் தோன்றித்

தெற்றெனத் தூற்றலும் பழியே   

வாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே. 

விளக்கம்

காலைப்பொழுதுபகல்மாலைப் பொழுது ஊரில் உள்ளவர்கள் உறங்குகின்ற நள்ளிரவு, விடியற்காலம் ஆகிய நேரங்களில் அவ்வப்பொழுது மட்டும்  காதல் தோன்றுமாயின்அத்தகைய காதல் உண்மையானது அன்று. ஆனால், என்னுடைய காதல் உண்மையானதுதலைவி  என்னை  ஏற்றுக்கொள்ளாவிட்டால் நான் மடலேறுவேன் பனை மடலால் செய்த குதிரையின் உருவத்தின்மேல் ஊர்ந்து நான் தெருவில் வந்தால் (மடலேறினால்), அது தலைவி எனக்கு அளித்த துயரத்தைப் பலர் அறியச் செய்ததாகும்அதனால் பழி வரும்அவளைப் பிரிந்து உயிர் வாழ்ந்தால் ஊர் மக்கள் எங்கள் பிரிவைப் பற்றிக் குறை கூறுவார்கள்அதனாலும் எங்களுக்குப் பழி வரும்என்று தலைவன் தன் காதல் நிலையைத் தோழிக்கு விளக்குகின்றான்.







 

 



 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக