ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

புறம் - இழையணி பொலிந்த, அளிதோ தானே, ஈ என இரத்தல்

 

புறநானூறு

1

பாடியவர்: அவ்வையார்.             

பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.

திணை : தும்பை.                         

துறை: தானை மறம்.

பாடல்

இழை யணிப் பொலிந்த ஏந்துகோட் டல்குல்,

மடவரல், உண்கண், வாள்நதல், விறலி!

பொருநரும் உளரோ, நும் அகன்றலை நாட்டு? என,

வினவல் ஆனாப் பொருபடை வேந்தே!

எறிகோல் அஞ்சா அரவின் அன்ன

சிறுவன் மள்ளரும் உளரே; அதாஅன்று

பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை

வளி பொரு தெண்கண் கேட்பின்,

அது போர்! என்னும் என்னையும் உளனே!     

விளக்கம்

“மணிகள் கோத்த அணிகள் விளங்கும் இடையும், மை தீட்டிய கண்களும் ஒளிபொருந்திய நெற்றியும் கொண்ட நாட்டியம் ஆடும் பெண்ணே! உங்கள் நாட்டில் போரிடும் வீரர்களும் உளரோ? என்று என்னைக் கேட்ட  அரசனே!  அடிக்கும் குச்சிக்கு அஞ்சாத பாம்பு போல வெகுண்டு எழுகின்ற இளமையும் வலிமையும் கொண்ட சிறிய, பெரிய மறவர்கள் எங்கள் நாட்டில் உள்ளனர். அது மட்டுமல்லாமல் மன்றத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் போர் முரசில் காற்று மோதுவதால் உண்டாகும் சிறிய ஒலியைக் கேட்டால் அதனைப் போர் எனக் கருதி வீறு கொண்டெழும் என் தலைவனாகிய அதியமானும் இருக்கிறான். ஆதலால் அவனுடன் போர் செய்யும் எண்ணத்தைக் கைவிடுவாயாக” என்று பதிலுரைக்கின்றார் ஔவையார்.



2

பாடியவர்: கபிலர்.               

பாடப்பட்டோன்: வேள் பாரி.

திணை: நொச்சி.         

துறை: மகண் மறுத்தல்.

பாடல்

அளிதோ தானே, பாரியது பறம்பே!

நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும்,

உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே

ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே;

இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழம்ஊழ்க் கும்மே; 

மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு லீழ்க்கும்மே;

நான்கே, அணிநிற ஒரி பாய்தலின், மீது அழிந்து,

திணி நெடுங் குன்றம் தேன்சொரி யும்மே.

வான் கண் அற்று, அதன் மலையே; வானத்து

மீன் கண் அற்று, அதன் சுனையே; ஆங்கு,      

மரந்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும்,

புலந்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும்,

தாளின் கொள்ளலிர்; வாளின் தாரலன்;

யான்அறி குவென், அது கொள்ளும் ஆறே;

சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி,       

விரையொலி கூந்தல் நும் விறலியர் பின் வர,

ஆடினிர் பாடினிர் செலினே,

நாடும் குன்றும் ஒருங்குஈ யும்மே.  

விளக்கம்

சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பாரியின் மகளிரை மணக்க விரும்பினர். தன் மகளிரை மூவேந்தரில் எவருக்கும் மணம் செய்விக்கப் பாரி மறுத்தான். ஆகவே, மூவேந்தரும் ஒருவர் ஒருவராகப் பாரியோடு போரிட்டுத் தோல்வியுற்றனர். அது கண்ட கபிலர், ‘மூவேந்தர்களே! நீங்கள் மூவரும் ஒன்று கூடி பறம்பு நாட்டை முற்றுகையிட்டாலும், பாரியை வெல்வது கடினம். பறம்பு நாடு வளமானது. அந்நாட்டில் உழவர் உழாமலேயே பல உணவுப் பொருட்கள் விளைகின்றன.  ஒன்று, மூங்கில் நெல். இரண்டு, பலாப்பழம். மூன்று, வள்ளிக்கிழங்கு. நான்கு, குரங்கு பாயும்போது உடைந்து ஒழுகும் தேன்கூடுகள்.

வானளவு பரந்த இடத்தைக் கொண்டது அவன் பறம்பு மலை. வானத்து மீன்களை ஒத்த சுனைகள் அம்மலையில் உண்டு. இப்படிப்பட்ட அவன் மலையில் ஒவ்வொரு மரத்திலும் உங்கள் போர் யானைகளைக் கட்டிவைத்தாலும், எண்ணற்ற தேரை நிறுத்தி வைத்தாலும், உங்கள் போர் முயற்சியால் அதனைப் பெற முடியாது. வாள் வீசிப் போரிட்டாலும் அவனை வெற்றி கொள்ள முடியாது. அவனது பறம்பு நாட்டை நீங்கள் பெறுவதற்கு வேறு வழி ஒன்று உண்டு. அதனை நான் அறிவேன். யாழ் மீட்டிக்கொண்டு பாணனாகச் செல்லுங்கள். உம்மோடு விறலியரையும் கூட்டிக்கொண்டு ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் செல்லுங்கள். அதற்குப் பரிசாக நாட்டையும் குன்றையும் அவன் பரிசாக வழங்குவான். பெற்றுக்கொள்ளலாம்” என்று கூறுகின்றார்.

பறம்பு மலை

பறம்பு மலையின் சுனை


3

பாடியவர்: கழைதின் யானையார். 

பாடப்பட்டோன்: வல் வில் ஓரி.

திணை:பாடாண்.

 துறை: பரிசில்.

பாடல்

ஈஎன இரத்தல் இழிந்தன்று; அதன்எதிர்,

ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;

கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதன்எதிர்,

கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று;

தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்     

உண்ணார் ஆகுப, நீர்வேட் டோரே;

ஆவும் மாவும் சென்றுஉணக், கலங்கிச்,

சேறோடு பட்ட சிறுமைத்து ஆயினும்,

உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்;

புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை  

உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனாற்

புலவேன் வாழியர், ஓரி; விசும்பின்

கருவி வானம் போல

வரையாது சுரக்கும் வள்ளியோய்! நின்னே.     

விளக்கம்

ஒருவரிடம் சென்று ‘எனக்குக் கொடுஎன்று கேட்பது இழிவானது, அதற்குப் பதிலாகக் கொடுக்கமாட்டேன்என்று சொல்வது அதனைக் காட்டிலும் இழிவானது; இதனைப் பெற்றுக்கொள்என்று ஒருவருக்குக் கொடுப்பது உயர்வானது, அதற்குப் பதிலாக வேண்டாம்என்று மறுப்பது அதனைக் காட்டிலும் உயர்வானது;

தாகம் எடுத்தாலும் கடலின் நீரை யாரும் உண்ணமாட்டார். பசுக்களும், மற்ற விலங்குகளும் சென்று குடித்ததினால் கலங்கிப்போய் சகதியுடன் கிடக்கும் சிறிதளவு நீரேயானாலும் அந்த இடத்தைத் தேடிச் சென்று பருகுவர்.

அதுபோல புலவர்கள் தமக்குப் பரிசில் கிடைக்காவிட்டால், தீய சகுனங்களையும், தாம் புறப்பட்ட நேரத்தையும் பழிப்பாரேயன்றி, பரிசில் கொடுக்காதவரைப் பழிக்கமாட்டார், அதனால் ஓரியே! மழை போல அளவின்றி கொடுக்கும் கொடையாளனாகிய உன் மீது நான் வெறுப்பு  கொள்ள மாட்டேன். நீ நீடுழி வாழ்வாயாக” என்று புலவர் பாடுகின்றார்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக