செவ்வாய், 19 அக்டோபர், 2021

முத்தொள்ளாயிரம்

 

முத்தொள்ளாயிரம்

முத்தொள்ளாயிரம் (மூன்று + தொள்ளாயிரம்)  என்பது  தமிழ் இலக்கியத்தில் தொகைநூல் வகையைச் சேர்ந்த நூலாகும். இந்நூலின் பாடல்களைப் பாடிய புலவர் யாரென்பது தெரியவில்லை. முத்தொள்ளாயிரம் சேரசோழபாண்டிய மன்னர்கள் மீது பாடப்பட்ட பாடல்கள் அடங்கிய நூல். ஒவ்வொரு மன்னரைப் பற்றியும் தொள்ளாயிரம் பாடல்கள் வீதம் 2,700 பாடல்கள் அடங்கிய தொகுப்பு எனக் கருதப்படுகின்றது. இந்நூல் முழுமையும் கிடைக்கவில்லை. ஆனாலும், முத்தொள்ளாயிரம் தொகுப்பில் மூவேந்தர்களைப் பற்றியும் ஒவ்வொருவருக்கும் முன்னூறு பாடல்களாக மொத்தம் தொள்ளாயிரம் பாடல்களே இருந்தன என பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள் 1943 ஆம் ஆண்டில் வசந்தம் என்ற இதழில் எழுதியுள்ளார். பல்லாண்டுகளுக்கு முன்னர் புறத்திரட்டு  என்னும் நூலின் ஆசிரியர் அந்நூலில் நூற்றொன்பது பாக்களை மட்டும் தம் தொகை நூலில் திரட்டி வைத்துள்ளார். அவை கடவுள் வாழ்த்தாக ஒன்றும், சேரனைப் பற்றி இருபத்திரண்டும், சோழனைப் பற்றி இருபத்தொன்பதும், பாண்டியனைப் பற்றி ஐம்பத்தாறும் சிதைந்த நிலையில் ஒன்றுமாகக் காணப்படுகின்றன. இவை அனைத்தும் வெண்பாக்களாகும். இவையே முத்தொள்ளாயிரம் என்ற நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. மூவேந்தர்களின் நாடு, அரண், படைச் சிறப்பு, போர்த்திறம், வீரம், ஈகை முதலான அரிய செய்திகள் இந்நூலில் இடம்பெறுகின்றன. மூவேந்தரையும் வாழ்த்தும் மரபு  சிலப்பதிகாரத்தில்  காணப்படுகிறது.  இந்த நூல் இந்த மரபினைப் பின்பற்றியுள்ளது.

இந்நூலில் இருந்து மூவேந்தர்களைப் பற்றி ஒன்பது பாடல்கள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.


பாண்டியன்

புகழ்

பார்படுப செம்பொன் பதிபடுப முத்தமிழ்நூல்

நீர்படுப வெண்சங்கும் நித்திலமும் சாரல்

மலைபடுப யானை வயமாறன் கூர்வேல்

தலைபடுப தார்வேந்தர் மார்பு

விளக்கம்

பாண்டியனின் நிலத்தில் செம்பொன் விளைகின்றது. ஊர்தோறும் முத்தமிழ் பாடப்படுகின்றது. கடல்நீரில் முத்துக்களும் வெண்சங்குகளும் நிறைந்திருக்கின்றன. மலைச்சாரல் முழுவதும் யானைக்கூட்டங்கள் பெருகியிருக்கின்றன. அத்தகு வளமுடைய நாட்டை எதிர்த்து வரும் பகை மன்னர்களின் மார்புகளைப் பாண்டியனுடைய வேல் பிளந்து விடும்.

திறை

நேமிநிமிர்தோள் நிலவுதார்த் தென்னவன்

காமர் நெடுங்குடைக் காவலன் ஆணையால்

ஏம்மணிப்பூண் இமையார் திருந்தடி

பூமி மிதியாப் பொருள்

விளக்கம்

ஆணைச் சக்கரம் கொண்டு ஒரே வெண்கொற்றக் குடையால் இந்நிலவுலகம் முழுவதையும் ஆள்பவன் பாண்டியன். கண் இமைக்கும் இயல்பில்லாத தேவர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக மணிப்பூண் அணிந்து இருப்பர். அவர்கள் பாண்டியனுடைய ஆணைக்கு அடிபணிய நேரிடுமோ என்று பூமியில் கால் வைக்க அஞ்சுகின்றனர். தேவர்களே அஞ்சுகின்ற ஆளுமை கொண்ட பாண்டியனுக்குச் சிற்றரசர்கள் திறை செலுத்தாவிடில் அவர்களுடைய வாழ்வு அழிந்து விடும்.

கைக்கிளை

கார்நறு நீலம் கடியகத்து வைகலும்

நீர்நிலை நின்ற தவம்கொலோ கூர்நுனைவேல்

வண்டிருக்க நக்கதார் யாமான் வழுதியால்

கொண்டிருக்கப் பெற்ற குணம்

விளக்கம்

குவளை மலர் நாள்தோறும் குளத்தில் நின்று தவம் செய்தது. அந்தத் தவத்தின் பயனால் பாண்டியனின் மார்பில் மாலையாகும் பேறு பெற்றது. கூர்மையான வேல் போன்ற வாயைக் கொண்டிருக்கும் வண்டுகள் அம்மாலையை மொய்த்துக் கொண்டிருக்கின்றன. நாமும் அதுபோல் தவம் செய்திருப்பின் பாண்டியனின் மார்பை அடைந்திருக்கலாமோ என்று பாண்டியன் மீது ஒருதலையாகக் காதல் கொண்ட பெண் புலம்புகின்றாள்.

சோழன்

யானைமறம்

கொடிமதில் பாய்ந்து இற்ற கோடும் அரசர்

முடிஇடறித் தேய்ந்த நகமும் பிடி முன்பு

பொல்லாமை நாணிப் புறங்கடை நின்றதே

கல்லார்தோள் கிள்ளி களிறு

விளக்கம்

கல், மலை போன்ற தோற்றம் கொண்டவன் சோழன். அவனுடைய ஆண் யானை பகைவரின் கோட்டையைப் பாய்ந்து இடித்ததால் அதன் தந்தங்களின் நுனி முறிந்து போயிற்று. பகை மன்னர்களின் தலைமுடியை (கீரிடம்) இடறியதால் அதன் கால் நகங்கள் தேய்ந்து போயின. அழகிழந்த தன் தோற்றத்தைத் தன் பெண் யானைக்குக் காட்டுவதற்கு நாணம் கொண்டு புறங்கடையிலேயே நின்று விட்டது. இப்படிப்பட்ட வீரம் பொருந்திய யானைகளைத் தன் படை பலமாகக் கொண்டவன் சோழன்.

களம்

முடித்தலை வெள்ளோட்டு மூளைநெய்யாகத்

தடித்த குடல்திரியா மாட்டி எடுத்து எடுத்துப்

பேஎய் விளக்கு அயரும் பெற்றித்தே செம்பியன்

சேஎய் பொருத களம்

விளக்கம்

போரில் உயிரிழந்த பகை வீரர்களின் மண்டையோட்டினை அகலாகவும், சிதறி விழுந்த மூளைகளை நெய்யாகவும், பகை மன்னர்களின் குடலைத் திரியாகவும் அமைத்துப் பேய்கள் விளக்கு ஏற்றி வைத்துப் பிணங்களைத் தின்னுகின்றன. இவ்வாறு காட்சியளிக்கின்றது சோழன் போர் செய்த களம்.

கொடை

அந்தணர் ஆவொடு பொன் பெற்றார் நாவலர்

மந்தரம்போல் மாண்ட களிறு ஊர்ந்தார் எந்தை

இலங்குவுல் கிள்ளி இரேவதி நாள் என்னோ

சிலம்பிதன் கூடிழந்த வாறு

விளக்கம்

ரேவதி சந்திரனோடு கூடியிருக்கும் நல்ல நாளில் சோழனுக்குப் பிறந்தநாள் வருகின்றது. அவனை வாழ்த்தப் பரிசிலர்கள் வருகின்றனர். அந்தணர்கள் சோழனிடமிருந்து ஆவையும், பொன்னையும் பரிசாகப் பெற்றார்கள். நாவன்மை மிக்க புலவர்கள் மந்தரம் போன்ற யானைகைளைப் பரிசாகப் பெற்றனர். மனிதர்கள் அனைவரும் பரிசு பெற்று மகிழ்ந்திருந்த அந்த நாள், மன்னனின் அரண்மனையில் வாழும் சிலந்தி பூச்சிகளுக்கு மட்டும் துன்ப நாளாக அமைந்து விட்டது. மன்னனின் பிறந்தநாளுக்காக அரண்மனைகள் தூய்மைப்படுத்தப்பட்டதால் தன் கூடுகளை இழந்த நிலையை எண்ணி வருத்தம் கொண்டன.

சேரன்

புகழ்

வானிற்கு வையகம் வென்றது வானத்து

மீனிற்கு அனையார் மறமன்னர் வானத்து

மீன்சேர் மதியனையான் விண்உயர் கொல்லியர்

கோன்சேரன் கோதை என்பான்

விளக்கம்

சேர மன்னன் ஆள்கின்ற நிலப்பகுதி வானளவை ஒத்தது. அவனுக்குக் கீழ் அடங்கியிருக்கும் சிற்றரசர்கள் வானத்தில் உள்ள விண்மீன்களின் எண்ணிக்கையை ஒத்தவர்கள். அவர்களை ஆளுகின்ற சேர மன்னன் வானத்தில் உள்ள சந்திரனைப் போன்றவன். அவன் வானளவுக்கு உயர்ந்து நிற்கும் கொல்லி மலைக்குத் தலைவன்.

நாடு

அள்ளல் பழனத்து அரக்கு ஆம்பல் வாய்அவிழ

வெள்ளம் தீப்பட்டது எனவெரீஇப் புள்ளினம்தம்

கைச்சிறகால் பார்ப்பு ஒடுக்கும் கவ்வையுடைத்தரோ

நச்சிலைவேல் கோக்கோதை நாடு

விளக்கம்

சேற்று நிலத்தில் ஆம்பல் மலர்கள் மலர்ந்தன. அவை சிகப்பு நிறத்தில் மலர்வதைக் கண்ட பறவையினங்கள் நீர் தீப்பிடித்து விட்டது என்று அஞ்சித் தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளால் அணைத்துக் கொண்டன. இப்படிப்பட்ட நாட்டிற்குத் தலைவனாக இருக்கின்றான் சேரன்.

கைக்கிளை

ஏற்று ஊர்தியானும் இகல்வெம்போர் வானவனும்

ஆற்றலும் ஆள்வினையம் ஒத்து ஒன்றின் ஒவ்வாரே

கூற்றக் கணிச்சியோன் கண்மூன்று இரண்டேயாம்

ஆற்றல்சால் வானவன் கண்.

விளக்கம்

காளை மாட்டை ஊர்தியாகக் கொண்டவன் சிவன். போர் வண்மை கொண்ட வானவன் சேரன். இருவரும் ஆற்றலாலும், ஆள்கின்ற திறத்தாலும் ஒத்துக் காணப்படுகின்றனர். என்றாலும் ஒன்றில் மட்டும் வேறுபடுகின்றனர். அவ்வேற்றுமை யாதெனில், சேரனுக்குக் கண் இரண்டு. சிவனுக்குக் கண் மூன்று. 

அருஞ்சொற்பொருள்

நேமி நிமிர்தோள் நிலவு தார் - பூமிமையத் தாங்கும் தோள்களில் விளங்குகின்ற வெற்றி மாலை, ஏம்ம் – பொன், அமையார் – தேவர், நீலம் – குவளை, வாமான் – தாவுகின்ற குதிரை, வண்டிருக்க நக்கதார் – வண்டுகள் வந்து இருப்பதனாலேயே மலர்ந்ந மலர்களால் கட்டிய மாலை, கல் – மலை, தடித்த – திரண்ட, செம்பியன் – சோழன், வென்றது – ஒத்தது, அள்ளல் – சேறு, பழனம் – நீர்ப்பொய்கை, அரக்காம்பல் – செவ்வாம்பல், ஏற்றூர்தியான் – காளை ஊர்தியுடைய சிவபெருமான், வானவன் – சேரன், கூற்றக் கணிச்சியோன் – காலனைப் போலக் கொலை செய்யும் மழுப்புடைய சிவபெருமான்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக