நாற்காலிக்காரர்
- ந.முத்துசாமி
ஆசிரியர் குறிப்பு
ந.முத்துசாமி அவர்கள் தஞ்சை மாவட்டத்தில்
பிறந்தவர். நடேசன் முத்துசாமி என்ற பெயரில் சிறுகதைகள் படைத்தவர். 'யார் துணை' என்பது
இவருடைய முதல் சிறுகதை. 'காலம் காலமாக' என்பது இவருடைய முதல் நாடகம். 1977ஆம் ஆண்டு
கூத்துப் பட்டறையை நிறுவினார். இவருடைய 'அப்பாவும் பிள்ளையும்', 'சுவரொட்டிகள்', 'படுகளம்', 'கட்டியக்காரன்', 'நாற்காலிக்காரர்' ஆகிய நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை. நீர்மை என்னும்
சிறுகதைத் தொகுப்பையும், பூட்டிய வண்டி என்னும் கட்டுரைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.
சங்கீத நாடக அகாதெமியின் விருது, தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை விருது, இந்திய
அரசின் பத்மஸ்ரீ விருது ஆகியவை இவர் பெற்ற சிறப்புகள் ஆகும்.
நாற்காலிக்காரர்
நாற்காலிக்காரர் என்னும்
நாடகம் அரசியலை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இந்நாடககத்தில் நாற்காலிக்காரர்,
வேடிக்கைப் பார்ப்பவன், சீட்டுக் கட்டுக் குழுவினர் ஒன்பது பேர், கோலி குண்டு குழுவினர்
ஒன்பது பேர் ஆகியோர் கதை மாந்தர்களாக அமைகின்றனர்.
நாற்காலிக்காரர் - கதைக்கரு
பொது மக்களால் அரசியல் எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றது என்பதே
இந்நாடகத்தின் கதைக்கருவாகும்.
இந்நாடகத்தில் நாற்காலிக்காரர்
பொதுமக்களாகவும், வேடிக்கைப் பார்ப்பவர் ஊடகமாகவும், சீட்டுக் கட்டுக் குழுவினர் மற்றும்
கோலி குண்டு குழுவினர் இருவேறு அரசியல் கட்சிகளாகவும் குறிக்கப்படுகின்றனர்.
கதைச் சுருக்கம்
அரங்கில் நாற்காலியில் ஒருவர் அமர்ந்திருக்கின்றார். அரங்கின்
இடது புறத்தில் சீட்டுக்கட்டுக் குழுவினர் ஒன்பது பேரும், வலது புறத்தில் கோலிக்குண்டு
குழுவினர் ஒன்பது பேரும் இருக்கின்றனர். அவர்கள் விளையாடுவதை ஒருவர் வேடிக்கைப் பார்த்துக்
கொண்டிருக்கின்றார்.
நாற்காலிக்காரரும் வேடிக்கைப் பார்ப்பவரும்
வேடிக்கைப் பார்ப்பவர்
கோலி குண்டு குழுவினரிடம் “இந்த விளையாட்டு நல்ல விளையாட்டு. இந்தச் சீட்டுக் கட்டு
நம் பரம்பரையே இல்லை” என்று கூற, நாற்காலிக்காரர் அவரிடம், “நீ காட்டும் ஆர்வத்தில்
அவர்கள் வேட்டி விலகுவது கூட தெரியாமல் ஆடுகின்றனர். அமைதியாக இருந்து விளையாட்டைப்
பார். ஆர்வம் காட்டாதே” என்று கூறுகின்றார். அதைக் கேட்ட வேடிக்கைப் பார்ப்பவர், “உன்னால்
அமைதியாக இருக்க முடிகின்றதா. ஊருக்கு அறிவுரை சொல்வதை நிறுத்து” என்று வாதிடுகின்றார்.
கோஷம் போட வலியுறுத்தல்
அதே வேளையில் சீட்டுக்
கட்டுக் குழுவினரிடம் “சீட்டு மூளைக்கு வேலை கொடுக்கும். இதில் தோற்பவன் முட்டாள்.
வெற்றி பெறுபவன் அறிவாளி” என்று தூண்டி விடுகின்றார். அதைக் கேட்ட சீட்டுக் கட்டுக்
குழுவினரில் ஒருவன், வேடிக்கைப் பார்ப்பவனைப் பார்த்து “போயா போயா” என்று கூறு, கோலிக்
குண்டு குழுவினரும் “போயா போயா” என்று கேலி பேசுகின்றனர். உடனே வேடிக்கைப் பார்ப்பவர்
“போயா போயா என்று கூறுவதெல்லாம் ஒரு விளையாட்டா?” என்று கூற, சீட்டுக் கட்டுக் குழுவில்
ஒருவன் ‘பேசாமல் வாழ்க ஒழிக என்று கோஷம் போடலாம்’ என்று ஆலோசனை வழங்குகிறான். உடனே
அது தொடர்பாக விவாதங்கள் எழுந்தன.
கோஷம் வேறு காரியம் வேறு
வேடிக்கைப்பார்ப்பவன்
“உங்களுடைய விவாதத்தில் யாரும் கவனிக்காதபோது தவறு நடந்துவிட்டது” என்று கூற, இரண்டு
குழுவினரும் ஒருவருக்கொருவர் அடுத்தவரைச் சுட்டிக் காட்டினர். உடனே வேடிக்கைப் பார்ப்பவன்
“அடுத்தவரைக் கைகாட்டும் உங்கள் ஆட்காட்டி விரல்களை எல்லாம் இணைத்தால் குறுக்கும் நெடுக்குமாகப்
பல கோடுகள் உருவாகும். அனைவரும் தவறு செய்துள்ளீர்கள். கோஷம் வேறு காரியம் வேறு” என்று
கூற, கோஷம் காரியம் இரண்டுமே செய்யலாமா என்று விவாதித்து இறுதியில், கோஷமே போடலாம்
என்று முடிவாகின்றது. ஆனால், “வாழ்க ஒழிக” என எதைக் கூறுவது என்று கூட்டத்தில் ஒருவன்
கேள்வி எழுப்பினான்.
கவிதை எழுதுவதிலும் விவாதம்
வேடிக்கைப் பார்ப்பவர்,
“சீட்டுக்கட்டு குழுவினர் கோலிகுண்டு குழுவினரை ஒழிக என்றும், கோலிகுண்டு குழுவினர்
சீட்டுக் கட்டுக் குழுவினரை ஒழிக என்றும் கோஷம் போடலாம். இருவரும் தங்களைத் தாங்களே
வாழ்க என்று கூறிக் கொள்ளலாம் என்றும், வாழ்க ஒழிக கவிதை போல இல்லை” என்று அவர்களை
மேலும் தூண்டி விடுகின்றார். கவிதை எழுதுவதிலும் இரு குழுவினருக்கும் சண்டை ஏற்படுகின்றது.
இருவரையும் அமைதிப் படுத்துகின்றார் வேடிக்கைப் பார்ப்பவர்.
வெற்றியைத் தீர்மானிக்கும் தண்ணீர்
கூஜா
அந்நேரத்தில் தாகம்
ஏற்பட்டு சிலர் தண்ணீர் தண்ணீர் என்று கோஷம் போடத் தொடங்கினர். “கோஷம் போட வேண்டிய
இடத்தில் காரியம் செய்கின்றீர்கள். காரியம் செய்ய வேண்டிய இடத்தில் கோஷம் போடுகின்றீர்கள்,
தண்ணீர் வேண்டுமென்றால் நாம் தான் போய் எடுத்துக் கொண்டு வரவேண்டும்” என்று வேடிக்கைப்
பார்ப்பவர் கூற, ஒவ்வொரு குழுவில் இருந்தும் ஒருவர் சென்று தண்ணீர் கூஜாவைக் கொண்டு
வந்தனர். வேடிக்கைப் பாரப்பவன், “ஆளுக்கொரு கூழாங்கல்லை எடுத்து கூஜாவில் போடுவோம்.
யாருடைய கூஜா முதலில் தண்ணீரால் நிரம்புகின்றதோ அவரே வெற்றியாளர்” என்று கூற, அனைவரும்
ஏற்கின்றனர். நாற்காலியில் அமர்ந்திருப்பவரிடமும் ஒரு கல் தரப்படுகின்றது.
பிரச்சாரம் தொடங்குகின்றது
இரு குழுவினரும் தத்தம்
கூஜாவில் பால் உள்ளது, இளநீர் உள்ளது, தேன் உள்ளது, பதநீர் உள்ளது என்று கூறி பிரச்சாரம்
செய்ய முற்படுகின்றனர். “திக்கெட்டும் சென்று வெற்றி வாகை சூடுங்கள்” என்று வேடிக்கைப்
பார்ப்பவர் அவர்களை வெவ்வேறு திசைக்கு அனுப்பி வைக்கின்றார்.
நாற்காலிக்காரரின் தீர்ப்பினால்
உண்டான அவலம்
இறுதியில் இரண்டு கூஜாக்களும்
சமமமாக இருப்பதைக் கண்ட வேடிக்கைப் பார்ப்பவர், நாற்காலிக்காரரிடம் சென்று, “உன்னிடம்
உள்ள ஒரு கல்லை யாருக்காவது போட்டு வெற்றி தோல்வியை தீர்மானிக்க வேண்டும்” என்று கூற,
நாற்காலிக்காரர் அச்சம் கொண்டு மறுக்கின்றார். நாற்காலிக்காரருக்கு எந்த ஆபத்தும் வராது
என்று இரண்டு குழுவினரும் வாக்குறுதி கொடுக்குமாறு வேடிக்கைப் பார்ப்பவர் கூறுகின்றார்.
அவர்களும் வாக்குறுதி அளிக்கின்றனர். அந்த வாக்குறுதியை நம்பி, “சீட்டுக் கட்டு நம்
மரபில் இல்லை. கோலிதான் நம் பாரம்பரிய விளையாட்டு” என்று கூறி கோலி குண்டு குழுவினரின்
கூஜாவில் கல்லைப் போடுகின்றார். வெற்றி பெற்ற கோலி குண்டு குழுவினர் சீட்டுக் கட்டு
குழுவினரைக் கேலி செய்து பாடத் தொடங்கினர். வேடிக்கைப் பார்ப்பவன் சீட்டுக் கட்டு குழுவினரிடம்
“அடுத்த முறை வெற்றி பெறலாம்” என்று சமாதானம் கூற, அவர்கள் கோபம் கொள்கின்றனர். அவர்களின்
கோபத்தைக் கண்டு ஓடி ஒளிந்து கொள்கின்றார் வேடிக்கைப் பார்ப்பவர்.
சீட்டுக் கட்டுக் குழுவினரின் கோபம் நாற்காலிக்காரர்
மேல் திரும்புகிறது. “சீட்டுக் கட்டு நம் மரபில் உண்டு என்றும், மனைவியை வைத்து ஆடுவது
மரபு” என்றும் கூறி அவரை அடித்தனர். “காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்” என்ற நாற்காலிக்காரரின்
அறைகூவலுடன் நாடகம் முடிவடைகின்றது.
கருத்து
பொதுமக்களை மையப்படுத்தியே
அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன. அரசியல் கட்சிகளின் விவாதங்களுக்கும், சண்டைகளுக்கும்
ஊடகமே காரணியாக அமைகின்றது. அவர்களுக்குள் சிக்கல்கள் பெரிதாகும்போது ஊடகம் காணாமல்
போய்விட, பொதுமக்கள் மாட்டிக் கொள்கின்றனர் என்ற கருத்தை மையப்படுத்தி இந்நாடகம் அமைகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக