செவ்வாய், 14 அக்டோபர், 2025

TANSCHE - ஐரோப்பியர் கால இலக்கிய வளர்ச்சி

 

ஐரோப்பியர் கால இலக்கிய வளர்ச்சி

நம் இந்திய மண்ணுக்கு வந்த ஐரோப்பியர்களை இரு வகைப்படுத்தலாம். வணிக நோக்கில் வந்த கிழக்கிந்திய கம்பெனியார்கள்.  இன்னொருவர் மதத்துறவிகளான மிஷனரிகள். வணிக நோக்குடன் வந்தவர்களால் பல துன்பங்கள் விளைந்தன. மதத்துறவிகளால் பல நன்மைகள் நடந்தன. குறிப்பாக, அவர்கள் தமிழ் மொழிக்கும், தமிழ் உரைநடைக்கும் செய்த தொண்டு அளவில்லாதது. சமயம் பரப்பும் நோக்குடன் வந்த ஐரோப்பியர் தழிழைப் படித்து, அதன் இனிமையில் மயங்கினர். தமிழில் ஆய்வு முறைகளையும், எழுத்துச் சீர்த்திருத்தத்தையும் செய்து பண்டைய உரை வடிவ முறைகளை மாற்றி அனைவரும் படிக்கும் வகையில் எளிமைப்படுத்தினர். அவர்கள் கொண்டு வந்த அச்சு இயந்திரங்களால் மொழிப்புரட்சி ஏற்பட்டது.

தமிழ் ஆர்வம் கொண்ட ஐரோப்பியர்கள்

தமிழ் ஆர்வம் கொண்ட ஐரோப்பியர்களுள், இராபர்ட் – டி –நோபிலி என்னும் தத்துவ போதகர், பெஸ்கி எனப்படும் வீரமாமுனிவர், சீகன்பால்கு ஐயர், கால்டுவெல், ஜி.யு.போப் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். இவர்களின் இலக்கியப்பணி தமிழ்க் கிறித்துவ இலக்கியங்களிலும், தமிழ் இலக்கண இலக்கிய மொழி ஆராய்ச்சிகளிலும் எண்ணற்ற புதுமைகளை உருவாக்கியது.

இலக்கியங்கள்

தத்துவக் கண்ணாடி, இயேசுநாதர் சரித்திரம், ஞானதீபிகை, பிரபஞ்ச விநோத வித்தியாசம், சதுரகராதி, தொன்னூல் விளக்கம், கொடுந்தமிழ் இலக்கணம், தேம்பாவணி, கித்தேரியம்மாள் அம்மானை, வேதவிளக்கம், வேதியர் ஒழுக்கம், பரமார்த்தகுரு கதை, தமிழ்மொழி இலக்கணம், அகராதிப் பணிகள் எனப் பலவும் அவர்களின் தமிழ்க்கொடைகளாகும். கால்டுவெல்லின் திராவிட மொழி ஒப்பிலக்கணம் என்னும் நூல் தமிழ் மொழிக்குக் கிடைத்த சிறப்பான மகுடம் ஆகும். இவர்களின் வருகையால் ஏராளமான சிற்றிலக்கிய வகைகள் தோன்றின. தமிழ் உரைநடை வளர்ச்சியும், தமிழ்க்கல்வி மற்றும் ஆங்கிலக் கல்வியும்  வளர்ச்சி கண்டன. அவர்கள் கொண்டு வந்த கல்வி முறைகளும் இலக்கிய நுட்பங்களும் கொடுத்த பயன்களும் தேச மொழி வளர்ச்சிக்கு இன்றிமையாதனவாக அமைந்துள்ளன.

TANSCHE - விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாடு

 

விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாடு

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயரின் ஆட்சியானது இமயம் முதல் குமரி வரை விரிவடைந்தது. டெல்லி, அயோத்தி, மைசூர், ஐதராபாத், கர்நாடகம், சூரத், தஞ்சை ஆகிய பகுதிகள் யாவும் ஆங்கிலேயரின் உடைமைகளாயின. தஞ்சை சரபோஜி மன்னன், வெல்லெஸ்லி பிரபுவிடம் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டு 1799இல் தான் வாழ்ந்து வந்த கோட்டை ஒன்றைத் தவிர தன் தேசம் முழுவதையும் ஆங்கிலேயரிடம் ஒப்படைத்து விட்டான்.

வேலூர்க் கலகம்

ஆங்கிலேயச் சேனாதிபதி இராணுவச் சிப்பாய்களின் நடைமுறையில் சில ஒழுக்க விதிகளைப் பிறப்பித்ததன் விளைவாக வேலூர்க் கோட்டையில் புதிய நடைமுறைகளை எதிர்த்துக் கலகம் தோன்றியது. திப்புவின் மக்கள் இக்கிளர்ச்சியைத் தூண்டி விட்டனர். அதனால் கிளர்ந்து எழுந்த சிப்பாய்கள் நூறு ஆங்கிலேயர்களைக் கொன்றனர். இது வரலாற்றில் வேலூர்க் கலகம் என்றும், வடக்கில் சுதந்திரப் போராட்டத்தின் தொடக்கமாகவும் கருதப்பட்டது.

காங்கிரஸ் பேரவை

கி.பி 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியர்களுக்கு இந்திய அரசாட்சியிலும், அரசாங்க அலுவல்களிலும் பதவிகள் கொடுக்கப்ட வேண்டும் என்று அறிஞர் சிலர் ஒரு கிளர்ச்சியை உருவாக்கி, இந்திய தேசியப் பேரியக்கம் ஒன்றை ஏற்படுத்தினர். இதுவே காங்கிரஸ் பேராயம் என்னும் பெயரில் அழைக்கப்பட்டது. இவ்வியக்கத்தில் பாலகங்காதர திலகர் போன்ற இந்தியத் தலைவர்கள் சிறந்து விளங்கினர். இவ்வியக்கத்தின் முயற்சியால் படித்த இந்தியர்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகளாகவும், பலதுறை உயர் அலுவலர்களாகவும் நியமனம் பெற்றனர். 1914இல் இருந்து காந்தியடிகள் இவ்வியக்கத்தில் செல்வாக்கு பெற்றதால், அதன் பின் சுதந்திரப் போராட்டம் அகிம்சைவழி அறப்போராட்டமாக மாறியது.

சுதந்திரப் போராட்ட வீரர்கள்

தமிழ்நாட்டு விடுதலைப்போரில் அழகு முத்துக்கோன், பூலித்தேவன், கட்டபொம்மன், மருது பாண்டியர்கள், தீரன் சின்னமலை ஆகியோர் முன்னோடிகளாகக் கருதப்படுகின்றனர். வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய பாரதியார், சுப்பிரமணிய சிவா, வாஞ்சிநாதன், தியாகி விஸ்வநாததாஸ், திருப்பூர் குமரன், இராஜாஜி, சத்தியமூர்த்தி, காமராசர், தந்தை பெரியார் ஆகியோர் சுதந்திரப் போராட்ட வீரர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

கப்பலோட்டிய தமிழன்

சுதேசி இயக்கத்தை வலுப்படுத்த, சுதேசி கப்பல் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி தூத்துக்குடிக்கும், கொழும்புவுக்கும் இடையே கப்பல் விட்டு கப்பலோட்டிய தமிழன் என்று புகழப்பட்டவர் வ.உசி. திலகரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு 36 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு செக்கிழுத்த செம்மல் என்னும் பெயர் பெற்றார்.

பாரதியார்

பாரதியார் தம் உணர்வூட்டும் கவிதைகளால் மக்களின் மனதில் விடுதலை வேட்கையை உண்டாக்கினார். இவரது கவிதைகளையும் இவர் நடத்திய இதழ்களையும் ஆங்கில அரசு தடை செய்து அவரை கைது செய்ய முனைப்புக் காட்டியது.

 தமிழகத்தில் காங்கிரஸ் அமைப்பு ஏற்படுத்திய தாக்கம் இராஜாஜி, பெரியார், சத்தியமூர்த்தி, காமராஜர் ஆகியோரால் பேரியக்கமாக வளர்ந்து நின்றது. பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தனிமனித விடுதலையையும், பகுத்தறிவுச் சிந்தனையையும் தந்தது. இவர்களோடு வ.வே.சு.ஐயர், திரு.வி.க, பா.ஜீவானந்தம், கே.பி.சுந்தராம்பாள், முத்துலட்சுமி ரெட்டி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், மதுரை வைத்தியநாத ஐயர் போன்ற பலரும் இந்திய விடுதலைக்காகப் பாடுபட்டனர்.

TANSCHE - முகமதியர் ஆட்சி

 

முகமதியர் ஆட்சி

தமிழக வரலாற்றில் தெளிவற்ற ஆட்சிக் காலங்களாக அமைந்தவை களப்பிரர் காலமும் முகமதியர் காலமுமே ஆகும். முகமதியர் வடக்கில் இருந்த நாடுகளான தேவகிரி, துவார சமுத்திரம் ஆகிய ஆட்சிப் பகுதிகளை வென்று தக்காணத்திற்கு வந்தனர். டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டனர். தமிழகத்தில் பிற்காலச் சோழர்களின் ஆட்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது வட இந்தியாவில் முகலாயர்களின் ஆட்சியும் ஆதிக்கமும் ஏற்பட்டன. பின்னர் பிற்காலப் பாண்டியர்களின் ஆட்சியில் தமிழகத்தின் மேல் படையெடுத்தனர். அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக்காபூர் மேற்கொண்ட போர், தமிழகத்தில் முகமதியர் குடியேற்றத்திற்கும் ஆட்சி மாற்றத்திற்கும் தொடக்கமாக அமைந்தது.

மாலிக்காபூர்

மாறவர்மன் குலசேகரன் ஆட்சியில், அவர் புதல்வர்களான சுந்தரபாண்டியனும், வீர பாண்டியனும் அரியணைக்காகத் தங்களுக்குள் சண்டையிட்டனர். சுந்தரபாண்டியன் அரியணையை வீர பாண்டியனுக்கு வழங்கினார். இதனால் இருவருக்குமிடையே பூசல் ஏற்பட்டது. இந்நிலையில் தெற்கு நோக்கிப் படையெடுத்து வந்த மாலிக்காபூரை உதவிக்கு அழைத்தான் சுந்தர பாண்டியன்.

வீர பாண்டியப் படைகளைத் தாக்கி முன்னேறிய மாலிக்காபூர் படைகள் உய்யக்கொண்டான் திருமலையை முகாமாகக் கொண்டு கண்ணனூர், திருவரங்கம், மதுரை முதலிய இடங்களைக் கொடுரமாகத் தாக்கியது. இதனால் மதுரையை விட்டு வெளியேறினான் சுந்தரபாண்டியன். மாலிக்காபூர் இராமேஸ்வரம் வரை படை நடத்தி வென்று அங்கு மசூதி ஒன்றை நிறுவினான். பெரும் செல்வத்தோடு டெல்லி புறப்பட்ட மாலிக்காபூர், படையின் சிறு பகுதியை மதுரையிலே விட்டுச் சென்றான். வேணாட்டடிகள், இரவிவர்ம குலசேகரன் இருவரின் துணையுடன் விக்கிரம பாண்டியன் மாலிக்காபூரை எதிர்த்துப் போரிட்டு விரட்டினான். மாலிக்காபூருக்குப் பின்…

மாலிக்காபூர் கொல்லப்பட்டதற்குப் பின்னர் கில்ஜி சுல்தான்களின் ஆட்சி மறைந்து துக்ளக் சுல்தான்களின் ஆட்சி தொடங்கியது.

முகமதுபின் துக்ளக்

சுல்தான் கியாசுதீன் தன் மகனான முகமதுபின் துக்ளக்கை தென்னகம் நோக்கி படையெடுக்க அனுப்பினான். இப்படை முதலில் தோற்றது. பின்னர் பிரதாப ருத்திரதேவனை வென்று, மலபாரில் நுழைந்து தமிழகத்தை வெற்றி கண்டது. பாராக்கிரம பாண்டியன் கைது செய்யப்பட்டான். முகமது பின் துக்ளக் டில்லி சுல்தான் ஆனான். மதுரையில் அரச பிரதிநிதியை அமர்த்தினான். இவனது ஆட்சியின் கீழ் தென்னகம் 23ஆவது மாநிலமாக அமைந்தது.

இவனுக்குப் பிறகு சலாவுதீன் அசன் 1333 முதல் 1378 வரை மதுரையை ஒரு சுதந்திர சுல்தானியப் பகுதியாக அமைத்து ஆட்சி செய்தான். இதற்கிடையில் பல போர்கள் ஏற்பட்டன. மதுரை சுல்தான்கள் பலர் இறந்து போயினர். இறுதியில், மதுரையில் சுல்தான்களின் ஆட்சி முடிவுக்கு வந்துது.

சமூக நிலை

இவர்கள் உருவச்சிலை வழிபாட்டை எதிர்த்தனர்.  மாலிக்காபூரின் படையெடுப்பால் சீரங்கம், மதுரை போன்ற ஆலயங்கள் தாக்குதலுக்கு உள்ளாயின. தமிழகத்துப் பேரரசுகள் சிற்றரசுகளாக மாறின. முகமதியர்களின் சமயச்சார்பு அரசியலால் மக்கள் பல ஊர்களில் கூட்டம் கூட்டமாக இசுலாம் மதத்தைத் தழுவினர். இசுலாமியச் சமயமும், சாராசானிக் கட்டடக் கலையும் ஆட்சியாளர்களின் ஆதரவைப் பெற்றன.

சாராசானிக் கட்டடக்கலை

முகமதிய சாராசானிக் கட்டடக்கலை, ஐரோப்பிய கட்டடக்கலையும் இந்திய பாரம்பரிய கட்டடக் கலையும் சேர்ந்து உருவாக்ப்பட்டது ஆகும். குவி மாடங்களால் கட்டப்படும் இக்கட்டடக்கலை, தமிழ் இலக்கியங்கள் கூறும் எழுநிலை மாடங்களைப் போல பருவச் சூழலுக்கு ஏற்றபடி அமைக்கப்பட்டவையாகும். உயர்ந்த கோபுர அமைப்பு, பூ வேலைப்பாடுகள் அமைந்த கட்டட முனைகள், விதானங்கள் எனப் பலவும் சாராசானிக் கட்டடக்கலையில் அமைந்துள்ளன. இதற்கு எடுத்துக்கட்டு சென்னையில் அமைந்துள்ள சேப்பாக்கம் அரண்மனை ஆகும். தமிழ்நாட்டில் கட்டப்பட்ட முதல் சாராசானிக் கட்டடம் இதுவே ஆகும்.

சென்னை உயர்நீதி மன்றம், எழும்பூர் தொடர்வண்டி நிலையம், சென்னைப் பல்கலைக்கழக செனட் இல்லக் கட்டடம், விக்டோரியா பப்ளிக் ஹால், மதுரையின் நாயக்கர் மகால் ஆகியவை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும்.  தமிழகத்தில் ஆங்கிலேயர்கள் பல கோட்டைகளை அழித்திருந்தாலும், இச்சாராசானிக் கட்டங்கள் மட்டும் அழியாமல் மீண்டதற்கு இதன் சிறப்பே காரணமாகும்.

இலக்கியங்கள்

சீறாப்புராணம், படைப்போர் இலக்கியங்கள், நொண்டி நாடகங்கள், குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள் முதலியன இக்கால கட்டத்தில் தோன்றிய இலக்கிய வகைகள் ஆகும்.

செவ்வாய், 7 அக்டோபர், 2025

TANSCHE - மராட்டியர்

 

மராட்டியர்

விசயநகர ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பின் மராட்டியர் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தனர். தக்காணத்தில் விசயநகரம் வீழ்ச்சி அடைந்ததை அடுத்து இசுலாமியர் அதன் சுற்றுப் பகுதிகளைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சாசி

பீசப்பூர் சுல்தானின் தளபதியான சாசி (சிவாசியின் தந்தை) கர்நாடகம், தஞ்சை, செஞ்சி, தேவனாம்பட்டினம், பறங்கிப்பேட்டை முதலியவற்றைக் கைப்பற்றினான். கைப்பற்றிய இடங்களுக்கு ஆளுநராக அவனே அமர்த்தப்பட்டான். சுல்தான்களின் ஆதிக்கத்தை உதறித் தள்ளினான். மராட்டிய மொழியை ஆட்சி மொழியாக்கினான். சாசியின் மூத்த புதல்வன் சிவாசி இசுலாமிய அரசுகளுக்கு எதிராக மராட்டியத்தில் மராட்டிய அரசை நிறுவினார். சாசியின் இரண்டாம் மனைவி துர்காபாயையும், அவள் வழி வந்த வெங்காசியையும் புறக்கணித்தார். 1664இல் குதிரை விபத்தில் உயிர் இழந்தார்.

சிவாசி

மராட்டியர் ஆட்சியை விரிவுபடுத்த பிற பகுதிகளின் மேல் படையெடுத்தான் சிவாசி. ஸ்ரீசைலம், திருப்பதி வழியே காஞ்சி, செஞ்சி, வேலூர் முதலிய இடங்களைக் கைப்பற்றினான். பறங்கிப்பேட்டை, திருவதிகை, தேவனாம்பட்டினம், புவனகிரி ஆகியவற்றைக் கைப்பற்றிக் கொள்ளிட ஆற்றின் திருமாலப்பாடியில் முகாமிட்டான்.

வெங்காசி

சாசிக்குப் பிறகு வெங்காசி கர்நாடகப் பகுதியின் ஆளுநராகப் பொறுப்பு ஏற்றான். பீசப்பூர் சுல்தான் மறைந்த பின்னர் வெங்காசி தஞ்சை மீது படையெடுத்து செங்கமலதாசை அகற்றிவிட்டு தஞ்சையில் மராட்டியர் ஆட்சியைத் துவக்கினான். சிவாசியுடன் ஏற்பட்ட பேச்சு வார்த்தையில் வெங்காசி தஞ்சையைத் தர மறுக்க அவனை கைது செய்ய முயன்றார். வெங்காசி தப்பி ஓடினான்.  பின்னர் சிவாசி செஞ்சியைத் தலைமை இடமாகக் கொண்டு தென்பகுதிகளை நிர்வகிக்கும் பொறுப்பை சாந்தாசியிடம் கொடுத்துவிட்டு வடக்கிற்குத் திரும்பினார். வெங்காசி சாந்தாசியுடன் உடன்படிக்கை மேற்கொண்டு தஞ்சையை மீண்டும் ஆண்டான். இவனுடைய ஆட்சிக் காலத்தில் பெரும் வெள்ளமும், கடல் அரிப்பும் மக்களை வாட்டியது. அதிக வரி வசூலால் மக்கள் அவதிப்பட்டனர். வெங்காசியின் மறைவுக்குப்பின் அவனது மகன் சாசி ஆட்சிக்கு வந்தான்.

சாசி

இவனது ஆட்சிக்காலத்தில் அரசியல் நிலை சிக்கல் நிறைந்து காணப்பட்டது. மதுரையின் சில பகுதிகளை சேதுபதி மற்றும் மைசூர் உடையாருடன் இணைந்து கைப்பற்றினான். முகலாயத் தளபதி தஞ்சையைக் கைப்பற்ற வர, சாசி பெருந்தொகை கொடுத்துத் தப்பினான். சேதுபதிக்கு உதவி செய்து  புதுக்கோட்டையைப் பெற்றான். திருக்காட்டுப் பள்ளியையும், அறந்தாங்கியையும் கைப்பற்றினான். மருத்துவமனைகள், சிவில் நீதிமன்றங்களை ஏற்படுத்தினான்.

சரபோஜி

சாசிக்கு வாரிசு இல்லாததால் அவனது தம்பி சரபோசி ஆட்சிக்கு வந்தான். முதலாம் சரபோசி, சிவகங்கையின் தோற்றத்துக்கும், இராமநாதபுரம் ஐந்தாகப் பிரிவதற்கும் காரணமாக இருந்தார். புலவர்களைப் போற்றுவதிலும், கோயிற்பணி செய்வதிலும் ஈடுபட்டார்.

துக்காசி

முதலாம் சரபோசிக்கு வாரிசு இல்லாததால் அவன் தம்பி துக்காசி ஆட்சிக்கு வந்தான். கர்நாடக நவாபின் முன்னேற்றத்தால் தஞ்சை அவருக்குத் திறை செலுத்தியது. இராமநாதபுரத்திலும் புதுக்கோட்டையிலும் இருந்த அரசியல் நிலைகளைப் பயன்படுத்தித் தொல்லைகளைக் கொடுத்தான். இவனுக்குப் பின் தஞ்சை சிலகாலம் முடங்கியது. பிரதாபசிங் ஆட்சிக்கு வந்தபோது நிலைமை சீரானது.

பிரதாப சிங்

அரசியல் நுட்பமும் மக்களின் ஆதரவும் பெற்று தஞ்சையை ஆட்சி புரிந்தான். கர்நாடக நவாப் தஞ்சையைக் கைப்பற்றிப் பிரதாப சிங்குக்கு ஓய்வூதியம் கொடுத்து ஓய்வு பெறச் செய்தான். இதை அறிந்த மராட்டிய மன்னன் சாகு, தன் படையினை அனுப்பி கர்நாடகத்தில் நவாப் ஆட்சியைத் தடுமாறச் செய்தான். பிரதாப சிங் மீண்டும் தஞ்சை அரசன் ஆனான். ஆங்கிலேயர்களுடன் நட்பு கொண்டு தன் நாட்டைக் காப்பாற்றிக் கொண்டான்.

துல்சாசி

இவன் ஆட்சிக் காலத்தில் ஐதர்அலி படையெடுப்பு நடைபெற்றதால், அவர்களுக்கு நான்கு இலட்ச ரூபாயும், நான்கு யானைகளையும் கொடுத்து நாட்டைக் காப்பாற்றிக் கொண்டான். ஆங்கிலேயரின் துணையுடன் தஞ்சையைக் கைப்பற்றினான். அதற்காக, ஆங்கில அரசுக்கு 277 கிராமங்களைப் பரிசாக அளித்தான். இவனது ஆட்சிக் காலத்தில் மக்கள் பஞ்சம் மற்றும் பட்டினியுடன் வாழ்ந்தனர்.

அமர்சிங்

துல்சாசிக்குப பிறகு அவனது மகன் இரண்டாம் சரபோசி சிறுவனாக இருந்தமையால் அமர்சிங் ஆளுநராகப் பதவிக்கு வந்தான். இதனால் ஆங்கில அரசு வரியை மேலும் உயர்த்தியது. மக்கள் வரிச்சுமையால் ஊரைக் காலி செய்துவிட்டுச் சென்றனர். ஆங்கில அரசு வரியைக் குறைத்தது. பிறகு தானே ஆள விரும்பி தஞ்சை அரசன் ஆனான்.

இரண்டாம் சரபோசி

தஞ்சையின் அரசனாக இரண்டாம் சரபோசி ஆட்சிப் பொறுப்பு ஏற்றான். தஞ்சைக் கோட்டையையும் வல்லத்தையும் தான் வைத்துக் கொண்டு தஞ்சை நாட்டின் ஆட்சியை ஆங்கில அரசிடம் ஒப்படைத்தான். தஞ்சை சென்னையுடன் இணைக்கப்பட்டது. இவர்களின் குடும்பத்திற்கு ஓய்வு ஊதியம் வழங்கியது ஆங்கில அரசு.

மராட்டியர் ஆட்சி முறை

வருவாய் அதிகாரிகள் திவான் என்ற பெயரில் அழைக்கப்பட்டனர். பவன பண்டிதர் வாயிலாக விவசாயிகளிடம் இருந்து வரிவசூல் முறையும் நீர்பாசனம் பெறும் வசதியும் இருந்தது. தாபிர் பண்டிதர் உருவாக்கிய அமணி துறை வரித்திட்டம் இவர்கள் ஆட்சியில் அதிகாரிகள், விவசாயிகளைச் சூறையாட வழிவகை செய்தது.

கலை இலக்கியப் பணிகள்

சரபோசி மன்னன், சரசுவதி மகாலினை உருவாக்கி 2200க்கும் மேற்பட்ட சுவடிகள், மருத்துவம், காப்பியம், இலக்கியம், இசை, கட்டடக்கலை, வானியல் தொடர்பான சுவடிகளைத் திரட்டி அடுக்கினார். 1805இல் ஒரு அச்சுக் கூடத்தைச் சரபோசி நிறுவினார். தேவநாகரி எழுத்துகளில் அச்சிடும் தொழில் அதில் நடைபெற்றது.

சாசி மன்னன் காலத்தில் 46 புலவர்கள் வாழ்ந்தனர். இராமபத்திர தீட்சிதர், பாஸ்கர தீட்சிதர் என்ற பெரும் புலவர்கள் வாழ்ந்து வந்தனர். அலூரி குப்பண்ணா என்ற தெலுங்குப் புலவரைத் துல்சாசி ஆந்திர காளிதாசர் என்று அழைத்தார். தமிழ்ப்புலவர்கள் தல புராணங்களும், பக்திப் பாடல்களுக்கு உரைநூல்களும் படைத்தனர். தாயுமானவர், வைத்தியநாத தேசிகர், சுவாமிநாத தேசிகர், சீர்காழி அருணாசலக் கவிராயர் முதலியோர் தஞ்சையில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள் ஆவர்.

 

சனி, 4 அக்டோபர், 2025

TANSCHE - சமூக மறுமலர்ச்சி

 

சமூக மறுமலர்ச்சி

ஒரு சமுதாயம் நீண்ட காலம் பல காரணங்களால் பொலிவு இழந்து நிற்கும் போது, தலைவர்கள் பலரின் முயற்சியால் அச்சமூகம் சீர்ப்படுத்தப்பட்டு உயர்வதை சமூக மறுமலர்ச்சி எனலாம்.

பண்டைத் தமிழ்ச் சமூகத்தில், நால்வகை வருணப் பாகுபாடோ, சாதியப்பாகுபாடோ இல்லாமல் தொழில் பாகுபாடு மட்டுமே இருந்தது. கல்வி அனைவருக்குமானது. அரசன் முதல் ஆண்டி வரை அனைவரும் கல்வி கற்றனர். பெண்களும் ஆண்களுக்கு நிகராப் பல உரிமைகளைப் பெற்றிருந்தனர். ஆண்களுக்கு நிகரான பெண் புலவர்களைத் தமிழ்ச்சமூகம் கொண்டிருந்தது. அரசனுக்குச் சமமாக அரசியும் அரியணையில் அமரும் உரிமைப் பெற்றிருந்தாள். குடும்பத்தை ஆட்சி செய்யும் பொறுப்பு பெண்களிடமே இருந்தது. சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்ற விழுமியம் நடைமுறையில் இருந்தது.

இத்தகைய தமிழ்ச் சமூக விழுமியங்கள் யாவும், பல்லவர்களின் ஆட்சிக் காலத்தில் எற்பட்ட பிறப்பின் அடிப்படையில் உண்டான ஏற்றத்தாழ்வுகள், மக்களிடையே மிகுந்த மூடநம்பிக்கைகள், தமிழர் மீது நடந்த பண்பாட்டுப் படையெடுப்புகள், அயலார் பண்பாட்டையும், மாற்றார் மொழியையம் உயர்வாகக் கருதம் மனப்போக்கு ஆகியவற்றால் வீழ்ச்சி அடைந்தது.

மறுமலர்ச்சிக்கான வித்துகள்

ஆங்கியேர் வருகை, ஐரோப்பியர் மூலம் தமிழகத்திற்கு வந்த சமூக, சமயச் சீர்த்திருத்தங்கள், ஆங்கிலம் கற்ற திராவிட இனத்தவரின் வலிமை ஆகியவை சமூக மறுமலர்ச்சிக்கு வித்திட்டன. சித்தர்கள், வள்ளலார், பாரதியார், பாரதிதாசன் போன்றோரின் பாடல்கள், தந்தை பெரியார், அயோத்திசாதசப் பண்டிதர், திரு.விக ஆகியோரின் எழுத்து பிரச்சாரம் ஆகியவை சமூகத்தில் சீர்த்திருத்தத்தை உண்டாக்கின.

அண்ணா, கலைஞர், நெடுஞ்செழியன் போன்றோர், தங்கள் எழுத்து பேச்சு, நாடகம், திரைப்படம் எனப் பல கருவிகளையும் கைக்கொண்டு சமூகச் சீர்த்திருத்தத்தில் முனைப்புக் காட்டினர். அறிஞர் அண்ணாவின் தொண்டரான எம்.ஜி.ஆர் அவர்கள் திரைப்படத்துறையில் ஆதிக்கம் செலுத்தி சீர்த்திருத்தக் கருத்துகளை மக்களிடையே பரப்பினார். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார், ஜீவா போன்றோர் பொதுவுடைமைக் கொள்கைளை வலியுறுத்தினர். 19, 20ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் தோன்றிய சமூக சீர்த்திருத்த இயக்கங்கள், பகுத்தறிவு இயக்கங்கள், சுயமரியாதை இயக்கங்கள் போன்றவை சமூக மறுமலர்ச்சியைப் பல வகையிலும் தூண்டின. இக்காலத்தில் இதழ்கள், வானொலி, ஒலி பெருக்கி, ஒலி ஒளி நாடாக்கள், திரைப்படம் போன்ற அறிவியல் கருவிகள் பெருகின. இதனால் மக்களிடையே சமூக மறுலர்ச்சி தோன்றத் தொடங்கியது.

சமூக மறுமலர்ச்சியின் வடிவங்கள்

இல்லறம்

பருவம் அடைந்த ஆணும் பெண்ணும் காதலால் இணைவதே இல்லறத்தில் இன்பம் பயக்கும் என்பது தமிழர் கண்ட நெறி.

குழந்தைத் திருமண எதிர்ப்பு

உயர் சாதியினர் குழந்தைத் திருமணம் சாத்திரப்படி அமைந்ததால் மதிப்புடையதாகவும், பெருமைக்குரியதாகவும் எண்ணினர். அதனால் 3 வயது பெண் குழந்தைக்கும் 12 வயது ஆண் குழந்தைக்கும் திருமணம் நடைபெற்றது. அதனைத் தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தவர்களும், கம்யூனிச இயக்கத்தவர்களும் கடுமையாக எதிர்த்தனர். பெரியார், திரு.வி.க, அறிஞர் அண்ணா போன்றோர் அவர்களுள் சிலராவர். இறுதியில் சட்டங்கள் மூலம் குழந்தைத் திருமணம் ஒழிக்கப்பட்டது.

குடும்பநலத்திட்ட ஆதரவு

நாட்டின் பல்வேறு வளர்ச்சிகளுக்கு மக்கள் தொகைப் பெருக்கம் சிக்கலாக இருந்தமையால், குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை அரசு கொண்டு வந்தது. “நாம் இருவர் நமக்கு இருவர்“, “ஒரு குடும்பம் ஒரு குழந்தை“ போன்ற விளம்பரத் தொடர்கள் செல்வாக்குப் பெற்றன. குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தால் பெண்களின் உடல்நலம் காக்கப்பட்டு, குடும்பப் பொருளாதாரம் மேன்மையடைந்தது. கல்வி வளர்ச்சி ஏற்பட்டது. தமிழ்நாட்டில் பகுத்தறிவுவாதிகளின் பிரச்சாரத்தால் இத்திட்டம் பெரும் வெற்றி கண்டது.

குலக்கல்வித் திட்டத்திற்கு எதிர்ப்பு

சாதி என்பது தொழிலோடு தொடர்பு உடையதாக இருந்தது. இந்தச் சாதியினர் இந்தத் தொழிலைத் தான் செய்ய வேண்டும் என்ற விதி இருந்தது. தென்னிந்திய நல உரிமைக் கட்சி (நீதிக்கட்சி) 1920இல் ஆட்சிக்கு வந்ததும் இட ஓதுக்கீடு, பொதுக் கல்வி முறை, அனைவருக்கும் அரசு வேலை போன்றவற்றை நடைமுறைப்படுத்தியது. இதனால் சாதிக்கும் தொழில் வர்க்கத்துக்குமான தொடர்பு அறுபடத் தொடங்கியது. பலர் இதை எதிர்த்தனர்.

1953இல் இராஜாஜி அவர்கள், மதராஸ் மகாணத்தின் அனைத்துத் தொடக்கப் பள்ளிக்கூடங்களுக்கும் புதிய கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன்படி ஒரு குழந்தை பாதி நாள் பள்ளியில் கல்வி கற்க வேண்டும். பின் பாதி நாளில் தந்தையின் பாரம்பரிய தொழிலைக் கற்க வேண்டும். இதனால் கோயிலில் பணி செய்வோரின் குழந்தை கோயிலிலும், விவசாயக் கூலிகளின் குழந்தை வயலிலும், வெட்டியானின் மகன் சுடுகாட்டிலும் தொழில் கற்கச் செல்ல வேண்டி வந்தது. திராவிடக் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இதனைக் குலக்கல்வித் திட்டம் என்று கூறி எதிர்த்தன.

மணக்கொடை எதிர்ப்பு (வரதட்சணை)

மணமகனுக்குக் கொடுக்கப்படும் செல்வம் மணக்கொடை ஆகும். செல்வந்தரான பெற்றோர்கள் பணம் கொடுத்து மணமகனைத் தேடினர். உயர்சாதியினரிடம் இருந்த இந்த வழக்கம் மெல்ல மெல்ல மற்றவரிடும் பரவியது. வரதட்சணை கட்டாயமானது. இதனால் சமூகத்தில் பல பெண்களுக்குத் திருமணம் கேள்விக்குறியானது. இதனால் சீர்த்திருத்தவாதிகள் மணக்கொடையை வன்மையாக எதிர்த்தனர். வரதட்சணை தடுப்புச் சட்டம் 1961இல் கொண்டு வரப்பட்டது.

கலப்புத் திருமணம், சாதி திருமணத்திற்கு ஆதரவு

சாதிய அடிப்படையில் திருமணங்கள் நடைபெற்றன. வேற்று சாதியில் திருமணம் செய்வதைப் பெரும்பாலோனோர் ஏற்கவில்லை. இதனால் காதலர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. சீர்த்திருத்தவாதிகள் கலப்புத் திருமணத்திற்கும், சாதி மறுப்புத் திரமணத்திற்கும் ஆதரவு தெரிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இத்திருமணங்கள் சாதி ஒழிப்புக்குத் துணை நிற்பதாக அவர்கள் கருதினர். இதனால் அரசு சட்டம் இயற்றி, இவ்வகைத் திருமணங்களுக்குச் சட்ட ஏற்பு அளித்தது.

சீர்த்திருத்தத் திருமணம் (சுயமரியாதைத் திருமணம்)

தமிழ்நாட்டில் திராவிடச் சிந்தனைகள் மேலோங்கியபோது சடங்கு சம்பிராதயங்களுக்கு எதிர்ப்புகள் கிளம்பின. சடங்குகள் இல்லாமல் ஐயர் இல்லாமல் தம் குடும்பத்தார் நண்பர்கள் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்டு இல்லறத்தில் ஈடுபட்டனர். இத் திருமணங்களுக்குச் சட்ட ஏற்பு கிடைக்கவில்லை. 1967இல் தி.மு.க. கட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் இத்திருமணத்திற்குச் சட்ட ஏற்பை அளித்தது.  இச்சட்டம் தமிழகத்திற்கு மட்டுமே என்றானது.

பெண்களுக்குச் சொத்துரிமை

நீண்ட காலமாகப் பெற்றோரின் சொத்தில் பெண்களுக்கு எந்த உரிமையும் இல்லாமல் இருந்தது. பெண்ணுக்கு அசையா சொத்தில் (வீடு, நிலம்) உரிமை இல்லை. அசையும் சொத்துகளில் (நகை, ஆடு, மாடு, பொருள்) திருமணமாகிச் செல்லும்போது கொடுப்பதைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற நிலையே இருந்தது. 1929இல் செங்கல்பட்டில் நடந்த சுயமரியாதை இயக்க மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் பரம்பரைச் சொத்தில் பெண்களுக்குச் சம பங்கு வேண்டும் என்ற முயற்சியில் தீர்மானம் கொண்டு வந்தார். இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 1950 இல் பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்று அம்பேத்கர் கொண்டு வந்த முயற்சி நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. 1954இல் இந்து வாரிசுரிமைச் சட்டம் கணவன் இறந்தால் அவரின் மனைவிக்கு மகன்களுடன் பங்கு உண்டு. எனினும் பரம்பரைச் சொத்தில் மனைவிக்குப் பங்கு இல்லை என்றது. 1989 மார்ச் மாதம் 25ஆம்நாள் தி.மு.க. ஆட்சியின்போது பரம்பரைச் சொத்தில் பெண்களுக்குச் சம பங்கு உண்டு என்று சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. 2005இல்தான் நடுவண் அரசு பெண்களுக்குச் சொத்துரிமை உண்டு என்று சட்டம் இயற்றியது.

தேவதாசி முறை ஒழிப்பு

கோவிலின் திருப்பணிகளுக்காகவும், சேவைக்காகவும் சிறுவயதில் பெண்கள் நேர்ந்து விடப்பட்டனர். இவ்வாறு நேர்ந்து விடும் முறைக்கு தேவதாசி முறை என்று பெயர். இவர்கள் இறைவனுக்கு அடிமை என்ற பொருளில் தேவதாசிகள் எனப்பட்டனர். நாயக்கர் காலத்தில் நூற்றுக் கணக்கில் தேவதாசிகள் இருந்தனர். பிற்காலத்தில் பெரிய மனிதர்கள் என்ற போர்வையில் இருந்த சிலரால் இவர்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல துன்பங்கள் ஏற்பட்டன. இதனை நன்கு அறிந்த சீர்த்திருத்தவாதிகள் வன்மையாக எதிர்த்தனர். வழக்கம்போல் பழமைவாதிகள் ஆதரித்தனர்.

1930இல் முத்துலெட்சுமி ரெட்டி என்பவர் பெரியாரின் துணையால் சட்டமன்றத்தில் இது குறித்த சட்ட முன் வரைவைக் கொண்டு வந்தார். ஆனால் நிறைவேற்ற முடியவில்லை. பின் பெரியார், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் ஆகியோரின் தீவிர பிரச்சாரத்தால் தேவதாசி முறைக்கு பலரிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பியது. இதனால் 1942இல் மதராஸ் தேவதாசி ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டம் தேவதாசிகளுக்குத் திருமண உரிமையைத் தந்தது. பெண்களைக் கோயில்களுக்கு நேர்ந்து விடுவதைக் குற்றம் ஆக்கியது.

பெண்கள் நலத்திட்டங்கள்

தீண்டாமை ஒழிப்பு, கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் பெண்களுக்கு எனத் தனி இட ஒதுக்கீடு, ஊராட்சி மன்றங்களின் பெண்களுக்கு முப்பது சதவீதம் இட ஒதுக்கீடு, பெண்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரம், சாதியின் பெயரால் இழிவுப்படுத்தக்கூடாது போன்ற பலவும் சமூகத்தை மறுமலர்ச்சி அடையச் செய்தனர்.

இவ்வாறு தமிழ்நாட்டில் சீர்த்திருத்த இயக்கங்களாலும், சீர்த்திருத்தத் தலைவர்களும் சமூக மறுமலர்ச்சி ஏற்பட்டு தமிழ்ச் சமூகம் தலைநிமிர்ந்து நிற்கிறது.

TANSCHE - ஐரோப்பியர் கால வரலாறு

 

ஐரோப்பியர் கால வரலாறு

தமிழக வரலாற்றில் தமிழரின் புகழ் கடல் கடந்து பேசப்படுவதற்கும், உலக நாடுகள் அனைத்தும் தென்னிந்தியாவுடன் வணிக உறவு கொள்ள விரும்புவதற்கும், தமிழகத்தின் நானில அமைப்பும் அதில் விளையும் நறுமணப் பொருட்களுமே முக்கிய காரணங்கள் ஆகும். தங்கள் உணவுப் பொருட்களைப் பதப்படுத்த தேவையான மிளகு, இலவங்கம், ஏலம் முதலான பொருட்களைப் பெறுவதற்குப் பொன்னைக் கொடுத்து தமிழகத்தோடு வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். பிற்காலத்தில் ஐரோப்பியர்கள் தமிழத்தோடு வாணிகத்தில் ஈடுபட்டிருந்தாலும் தங்கள் கிறித்துவ சமயத்தைப் பரப்பும் நோக்கத்தோடு இந்திய நாட்டில் தங்களுக்கான குடியேற்றங்களை நிறுவினர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் போர்ச்சுக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், டேனிஸ்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் ஆகியோர் ஆவர்.

போர்ச்சுக்கீசியர்கள்

இந்தியாவிற்குக் கடல்வழியைக் கண்டறியப் புறப்பட்டு இறுதியாக கோழிக்கோட்டிற்கு வந்தடைந்தார் வாஸ்கோடகாமா. அவரின் வழியாக வந்த போர்ச்சுக்கீசியர் விசயநகர அரசர்களின் நட்பைப் பெற்றனர். சாமூதிரியுடன் போரிட்டு கொச்சியைக் கைப்பற்றினர். சோழமண்டலக் கடற்கரையில் நாகப்பட்டினத்தையும், சாந்தோமையும் தளங்களாகப் பெற்றனர். கோவாவைத் தங்கள் இருக்கையாகக் கொண்டு தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் ஒரு வணிகப் பேரரசினை உருவாக்கினர். அரபிக்கடலிலும், இந்துமாக்கடலிலும் இணையற்ற ஆதிக்கத்தைப் பெற்றனர். போர்ச்சுக்கீசிய மன்னன் கத்தோலிக்க சமயத்திற்குக் காவலனாக விளங்கினான். அதனால் கோட்டாறு, புன்னக்காயல், மதுரை, செஞ்சி, வேலூர், கோல்கொண்டா முதலிய இடங்களில் கிறித்துவ சமயம் பரவியது. சமயப்பணியிலும், வாணிபத்திலும் கடல் ஆதிக்கத்திலும் சிறந்து விளங்கிய இவர்கள் 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் டச்சுக்காரர்களின் போட்டியால் வீழ்ந்தனர்.

டச்சுக்காரர்கள்

போர்ச்சுக்கீசியர்களை வீழ்த்திய டச்சுக்காரர்கள் தாங்கள் கைப்பற்றிய பல ஊர்களில் வலிமையான கோட்டைகளைக் கட்டிக் கொண்டனர். டச்சு பாதிரியாரான ஆபிரகாம் ரோசர் புலிக்காட்டில் தங்கித் தம் மதப் பணிகளைச் செய்தார். இங்கிலாந்து அரசியின் கிழக்கிந்தியக் கம்பெனியின் வணிக உடன்படிக்கைகள் இந்தியாவில் காலனித்துவத்திற்கு அடிகோலின. அதனால் டச்சுக்காரர்களின் செல்வாக்கு உயர்ந்தது. வணிகத் தொழிலிலும், கப்பல் ஓட்டுவதிலும், பொருளாதாரத்திலும், அறிவு நுட்பத்திலும் டச்சுக்காரர்கள் ஏனைய ஐரோப்பியரைவிட உயர்ந்து நின்றனர். வணிகத்தைத் தொடர்ந்து நடத்த ஹாலந்தில் ஐக்கியக் கம்பெனி ஒன்று நிறுவினர். தங்கள் நோக்கத்தை அவர்கள் தெளிவாக அறிந்தபடியால் எண்ணற்ற பயன்களைக் கண்டனர். கிழக்கிந்திய வாணிகம் அவர்களை ஐரோப்பிய மக்களுள் செல்வம் நிரம்பியவர்களாக்கியது.

டேனிஸ்காரர்கள்

இங்கிலாந்தின் குடிமக்கள் அனைவரும் இந்தியாவுடன் வணிகம் செய்யும் உரிமை உடையவர்கள் என்று இங்கிலாந்தின் பாராளுமன்றம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. அவ்வுரிமையின் அடிப்படையில் தரங்கம்பாடியில் டேனிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி வணிகர்கள், கோட்டை ஒன்றைக் கட்டிக்கொண்டு தம் வாணிகத்தைத் தொடங்கினர். இந்தியப் பொருட்களைக் கொள்முதல் செய்து அவற்றை மலேயத்தீவுகளில் விற்றனர். ஆனால் அந்த வணிகத்தில் அவர்கள் லாபம் காணவில்லை. எனவே, டேனியர்கள் தரங்கம்பாடியையும், சோராம்பூரையும் ஆங்கிலேயரின் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு ரூ.12,50,000க்கு விற்று விட்டனர்.

பிரெஞ்சுக்காரர்கள்

பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி 1664இல் தோற்றுவிக்கப்பட்டது. இவர்கள் டச்சுக்காரர்கள், டேனிஸ்காரர்களுடன் அரசியலில் இறங்கினர். புதுச்சேரி பிரெஞ்சு அரசாங்கத்திடம் இருந்தது. இந்த அரசாங்கம் போர்களில் கவனம் செலுத்தி, கம்பெனியைப் புறக்கணித்தது. சிவாஜியின் தாக்குதல் புதுச்சேரிக்கு பல இன்னல்களை விளைவித்தது. புதுச்சேரியின் வாணிப முக்கியத்துவத்தை உணர்ந்த மார்ட்டினின் விடாமுயற்சியால் புதுச்சேரியில் ம்பெனியின் வாணிபம் பாதுகாக்கப்பட்டது. இந்திய அரசியல் நிலைமையைக் கண்ட மார்ட்டின் இந்தியாவில் ஒரு சிறந்த எதிர்காலம் உண்டு என்பதை உணர்ந்து, வாணிபத்தளங்கள், துறைமுகங்கள் அமைப்பதற்குப் பிரெஞ்சு அரசுக்குக் கடிதம் எழுதினார். மார்ட்டினின் மறைவுக்குப்பிறகு நாடு பிடிக்கும் நோக்கத்தில் மசூலிப்பட்டினம், கள்ளிக்கோட்டை, மாஹி, யேனாம், காரைக்கால் ஆகிய இடங்களைப் பெற்றது. பின்னர் ஆங்கிலேயர்களுடனான மோதலில் பிரெஞ்சுக்காரர்கள் சிக்கினர்.

ஆங்கிலேயர்கள்

இங்கிலாந்தில் இருந்து வந்த ஆங்கிலேயர்கள் மற்றவர்களுடன் போரிட்டு தமிழகத்தில் வாணிபத்தைத் தொடர்ந்தனர். இங்கிலாந்தில் போடப்பட்ட வணிகத் தீர்மானம், பல மேனாட்டவர்களின் வணிகக் கம்பெனிகளுக்கு வழிவகுத்தாலும் கிழக்கிந்தியக் கம்பெனி அதனை ஒரே கம்பனி ஆக்கியது. அதனால் ஆங்கிலேயர்கள் பலமுடையவர்களானர்.

இந்திய மண்ணில் தன் நிலையான வாழ்வுக்கு உறுதியான அடிப்படைகளை அமைத்துக் கொண்டு அதன்வழி முகலாயப் பேரரசரிடம் இருந்து பல உரிமைகளையும் வணிகச் செல்வாக்கையும் கேட்டுப் பெற்றனர். கல்கத்தா, ஹைதராபாத், சூரத், சென்னை எனப் பல இடங்களில் கம்பெனிகளையும், ராணுவத் தளங்களையும் அமைத்துக் கொண்டனர். தம் தற்காப்பு கருதி ஏராளமான போர்க்கருவிகளையும், படைகளையும் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்து கொண்டனர். நாடு பிடிக்கும் போட்டியில் பிரெஞ்சுக்கார்கள் சூரத், மசூலிப்பட்டினம் போன்ற துறைமுகங்களை ஆங்கிலேயர்களிடம் இழந்தனர். ஆங்கிலேயரின் கைவசம் இருந்த சென்னையும், பிரெஞ்சுக்கார்ர்களிடம் இருந்த புதுச்சேரியும் இருபெரும் வணிகத் துறைமுகப்பட்டினங்களாக விளங்கின.

இந்திய நாட்டு மன்னரிடம் தரைப்படையோ கப்பற்படையோ கிடையாது. எனவே ஆங்கிலேயரும், பிரெஞ்சுக்காரரும் உள்நாட்டு மன்னர்ளைப் பயன்படுத்திக் கொண்டு அரசியலைத் தன் வசமாக்க முயன்றனர். கர்நாடகப் போர்களும், மைசூர்ப் போர்களும் கர்நாடகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அதுவரை ஏற்பட்ட எந்த ஆட்சி மாற்றங்களிலும் தலையிடாத ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் அமைதி காத்தனர்.

பின்பு ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்கார்ர்களுக்கும் போர் நடைபெற்றது. இருவரும் தங்கள் ஆட்சி பகுதிகள் சிலவற்றை இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பிரெஞ்சுக்காரர்கள் சென்னையைக் கைப்பற்றினர். ஆனால், டூப்ளேயின் சென்னை முற்றுகையானது பதினெட்டு மாத கால நீட்டிப்பு பெரும் சூறையாடலுடன் முடிந்தது. ஆங்கிலேயருக்குப் புதிதாகக் கப்பற் படையும், தரைப்படையும் வரவே சென்னை மீண்டும் ஆங்கிலேயர் வசமானது. பின்பு நடந்த மைசூர் போர்களினால் ஐதர் அலியின் எழுச்சியும், பாளையக்கார்களின் வீழ்ச்சியும் நடந்தது. திப்புசுல்தானின் வீழ்ச்சிக்குப் பிறகு கர்நாடகம் முழுவதும் ஆங்கிலேயரின் வசம் சென்றது. பாளையக்கார்கள் ஜமீன்களாக ஒடுக்கப்பட்டு, கிராமங்கள் வரை தங்களின் ஆட்சிப்பரப்பை விரிவாக்கினர் ஆங்கிலேயர்கள்.

பாளையக்காரர்கள்

விஜயநகரப் பேரரசின் படை மானிய முறையில் அமைந்த நாயக்கர் நிர்வா முறையைத் தழுவி அமைந்த பாளையப்பட்டு எனும் புதிய முறையே பாளையக்காரர்கள் முறையாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் இவை நீக்கப்பட்டு பாளையங்கள் ஜமீன்கள் ஆக்கப்பட்டன.

பாளையங்கள்

அம்மையாநாயக்கனூர், அம்பாத்துறை உடையார், உத்தமம், ஊத்துமலை, ட்டயபுரம், நடுவன் குறிச்சி, நாகலாபுரம், கந்தர்வக்கோட்டை, காத்தூர், சிவகிரி, நத்தம், பாப்பாநாடு, பாலையவனம், பாஞ்சாலங்குறிச்சி, போடிநாயக்கனூர் ஆகியன குறிப்பிடத்தக்க பாளையங்களாக இருந்தன. மதுரை நாய்ககர்களின் கீழ் 72 பாளையங்கள் இருந்தன. இது போன்றே செஞ்சி மற்றும் தஞ்சை நாயக்கர்களின் கீழ் பல பாளையங்கள் இருந்தன.

பாளையக்கார்கள்

பூலித்தேவன், அழகு முத்துக்கோன், கட்டபொம்மன், மருது பாண்டியர், முத்து வடுகநாதர், வேலுநாச்சியார், தீரன் சின்னமலை, வலங்கைப் புலித்தேவன் ஆகியோர் தமிழ்நாட்டுப் பாளையக்காரர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இதில் பலரும் நாயக்கர்களுக்குத் திறை செலுத்தும் கடமை பெற்றனர். தங்கள் பாளையங்ளில் விளையும் பொருட்களில் மூன்றில் ஒரு பங்கு நாயக்கர்களுக்கும், மீத ஒரு பங்கில் தங்கள் நிர்வாகத்தைச் செய்து கொள்ளும் உரிமை பெற்றிருந்தனர். மக்கள் மேல் எண்ணற்ற வரிகளை இட்டு கோட்டை கொத்தளங்களைக் கட்டிக் கொண்டனர்.

ஆங்கிலேயரை எதிர்த்த பாளையக்காரர்கள்

கர்நாடகத்தின் ஆட்சி நவாபுகளுக்குக் கையமாறியதில் ஆதாயமடைந்த ஆங்கிலேயர்கள் பாளையங்ளின் வரி வசூலிக்கும் உரிமையைப் பெற்றனர். பழைய வரிமுறைகளை நீக்கி, புதிய வரிகளைத் திணித்தனர். பாளையக்காரர்கள் அதனை எதிர்த்தனர். இதனால் இருவருக்குமிடையே போரும் முற்றுகையும் நிகழ்ந்தன. பூலித்தேவன், கட்டபொம்மன் மருதுபாண்டியர், அழகு முத்துக்கோன், தீரன் சின்னமலை, வேலுநாச்சியார் ஆகியோர் ஆங்கிலேயரை நேரடியாக எதிர்த்து சுதந்திரப் போராட்த்திற்கு வழி வகுத்தனர்.

வேலு நாச்சியாரின் பெண்கள் படையில் குயிலி என்ற பெண் தன்னையே தீப்பிழம்பாக்கிக் கொண்டு ஆங்கிலேயரின் படைத் தளவாடங்களை அழித்தாள். அரியாங்குப்பத்தில் உடையாள் என்ற ஆடு மேய்க்கும் சிறுமி வேலுநாச்சியார் சென்ற பாதையை ஆங்கிலேயர்களுக்குக் காட்ட மறுத்தால் வெட்டுப்பட்டு மாண்டாள். இருவரும் வரலாற்றில் இடம் பெற்றுள்ளனர்.