ஞாயிறு, 7 மார்ச், 2021

முச்சங்க வரலாறு

 

 முச்சங்க வரலாறு

பாண்டிய மன்னர்கள் புலவர்களைக் கூட்டி வைத்துத் தமிழாய்ந்து, செய்யுட்கள் இயற்றிய அவையைச் சங்கம் என்று கூறினர். மதுரையில் சங்கம் போன்ற அமைப்பு ஒன்று இருந்ததைத் தமிழ் இலக்கியங்கள் பல்வேறு பெயர்களில் சுட்டுகின்றன. பத்துப்பாட்டில் ஒன்றான சிறுபாணாற்றுப்படை,

தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின்

மகிழ்நனை மறுகின் மதுரை (66-67)

என்று கூறுகிறது. மதுரைக் காஞ்சி எனும் இலக்கியம்,

தொல்லாணை நல்லாசிரியர்

புணர்கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின்

நிலந்தரு திருவின் நெடியோன் (761-763)

என்று கூறுவதைக் காணும்போது நிலந்தரு திருவின் நெடியோன் என்ற பாண்டியன் அவையில் புலவர்கள் ஒருங்கிணைந்து செய்யுள் இயற்றினர் எனப் புலனாகிறது.

    காப்பிய இலக்கியமாகிய சிலப்பதிகாரம் “தென்தமிழ் நன்நாட்டுத் தீதுதீர் மதுரைஎன்றும், மணிமேகலை “தென்தமிழ் மதுரைச் செழுங்கலைப் பாவாய்என்றும் கூறுகிறது. கி.பி. 600 வாக்கில் வாழ்ந்த திருநாவுக்கரசர் சிவபெருமானைச் சங்கத்தோடு இணைத்து போற்றிப் பாடுகிறார். தருமி என்னும் ஏழைப் புலவனுக்குக் ‘கொங்குதேர் வாழ்க்கைஎன்ற குறுந்தொகைப் பாடலை எழுதிக் கொடுத்தார் என்பதை,

நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி

நற்கனகக்கிழி தருமிக்கு அருளினோன்காண் (6.76.3)

என்று கூறுகின்றார். 

திருநாவுக்கரசருக்குப் பின் வந்த பல்வேறு இலக்கிய ஆசிரியர்களும் சங்கம் என்ற சொல்லையே பயன்படுத்துகின்றனர். சின்னமனூர்ச் செப்பேடு, சங்கத்தில் இலக்கியம் இயற்றும் பணியோடு, மொழிபெயர்ப்புப் பணியும் நடைபெற்றதாக ஒரு செய்தியைக் கூறுகிறது.

மாபாரதம் தமிழ்ப்படுத்தும்

மதுராபுரிச் சங்கம் வைத்தும்

என்று கூறுவதால் மகாபாரதத்தைத் தமிழில் மொழிபெயர்த்த பணியும் சங்கத்தில் நடந்ததை நாம் அறிகிறோம்.

    பிளினி, தாலமி போன்ற மேலைநாட்டு அறிஞர்களும் சங்கம் பற்றி உரைக்கின்றனர். இலங்கை வரலாற்று நூல்களான மகாவம்சம், இராஜாவளி, இராஜரத்னாகிரி போன்ற நூல்களும் சங்கம் இருந்தமைக்குச் சான்று பகர்கின்றன. அத்தகு சிறப்பு வாய்ந்த சங்கங்களின் வரலாற்றைப் பின்வருமாறு காணலாம்

முதற் சங்கம்

கடல் கொண்ட தென்மதுரையில் பாண்டிய மன்னர்களால் நிறுவப் பெற்ற சங்கம் முதற்சங்கமாகும். இச்சங்கத்தை நிறுவிய மன்னன் காய்சின வழுதி என்பவனாவான். காய்சின வழுதி முதலாகக் கடுங்கோன் என்ற பாண்டிய மன்னன் ஈறாக 89அரசர்கள் 4440 ஆண்டுகள் இச்சங்கத்தை நடத்தியதாக இறையனார்களவியல் உரை கூறுகிறது.

    இச்சங்கத்தில் அகத்தியர், திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள், குன்றெறிந்த முருகவேள், முரஞ்சியூர் முடிநாகராயர், நிதியின் கிழவன் போன்ற புலவர்கள் இருந்து தமிழ் ஆராய்ந்தனர். 4449 புலவர்கள் தமிழ் ஆராய்ந்து செய்யுள் பாடினர். அவர்களால் பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை போன்ற நூல்கள் பாடப்பட்டன.

இடைச்சங்கம்

தென்மதுரையைக் கடல் கொண்ட பிறகு கபாடபுரத்தில் தொடங்கப் பெற்ற இடைச்சங்கம் 3700 ஆண்டுக் காலம் நடைபெற்றது. வெண்தேர்ச் செழியன் என்ற பாண்டிய மன்னனால் தொடங்கப் பெற்ற இச்சங்கம் முடத்திருமாறன் முடிய 59 மன்னர்களால் நடத்தப் பெற்றது. இச்சங்கத்தில் அகத்தியர், தொல்காப்பியர், இருந்தையூர் கருங்கோழியார் வெள்ளூர்க் காப்பியனார் போன்ற3700 புலவர்கள் பாடினர். இவர்களால் பாடப்பெற்றவை கலி, குருகு, வெண்டாளி, வியாழ மாலை அகவல் போன்ற நூல்களாகும்.

கடைச் சங்கம்

கபாடபுரமும் கடலால் அழிந்த பிறகு தற்போது உள்ள மதுரையில் கடைச் சங்கம் எனப்படுகின்ற மூன்றாம் சங்கம் தொடங்கப் பெற்றது. இரண்டாம் சங்கத்தை நடத்தி, கபாடபுரம் அழியும் போது அங்கிருந்து பிழைத்து வந்த முடத்திருமாறனால் இது, தொடங்கப் பெற்றது. இச்சங்கம் முடத்திருமாறன் முதலாக உக்கிரப்பெருவழுதி ஈறாக 49 அரசர்களால் நடத்தப் பெற்றது. 1850 ஆண்டுகள் இச்சங்கம் நடைபெற்றது. இச்சங்கத்தில் சிறுமேதாவியார், சேந்தம்பூதனார், அறிவுடையரனார், பெருங்குன்றூர்க்கிழார், இளந்திருமாறன், மதுரை ஆசிரியர் நல்லந்துவனார், மருதன் இளநாகனார், நக்கீரனார் என 449 புலவர்கள் பாடினர். இதில் எழுதப்பட்ட நூல்கள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை, பரிபாடல் போன்றவை ஆகும்.

முச்சங்கங்கள் பற்றிய மேற்கண்ட செய்திகளை இறையனார் களவியல் உரை என்ற நூல்தான் கூறுகின்றது. இந்நூல் கூறும் செய்திகள் முழுமையான நம்பிக்கைக்குரியனவா என்பது ஆராய்ச்சிக்குரியதாகும். இருப்பினும் சங்கம் என்ற ஓர் அமைப்பு, பாண்டியர்களால் நடத்தப் பெற்றமை குறித்துச் சங்க இலக்கியங்களிலும், பிற்கால இலக்கியங்களிலும் நிறையச் சான்றுகள் கிடைக்கின்றன. முச்சங்கங்களும் இருந்த கால அளவு, பாடிய புலவர்களின் எண்ணிக்கை, சங்கம் நடத்திய அரசர்கள் பற்றி இறையனார் களவியல் உரை கூறும் செய்திகள் முழுமையும் உண்மையாக இருக்க வாய்ப்பு இல்லை. கி.மு.500 முதல் கி.பி.200 முடிய உள்ள காலமே சங்கம் நடைபெற்ற காலமாக இருக்க முடியும் என்பது ஆய்வாளர்களின் கூற்றாகும்.

 

 நன்றி

https://mcasthamil.blogspot.com/2016/03/blog-post_46.html

 

அகநானூறு - முலைமுகம் செய்தன, இரும்பிழி மகாஅர், அறன் கடைப்படாஅ

 

அகநானூறு

பாடல் எண் – 1

பாடியவர்     - கயமனார்

திணை        - பாலை

துறை       

மகட்போக்கிய செவிலித்தாய் சுரத்திடைப்பின் சென்று நவ்விப் பிணாக் கண்டு சொல்லியது.

துறை விளக்கம்

தலைவி தலைவனுடன் உடன்போக்கு சென்றுவிட்டாள். செவிலித்தாய் அவளைத் தேடிப் பாலை நிலத்தின்வழியே பின்தொடர்ந்து சென்றாள். இடைவழியில், பெண்மான் ஒன்றைக் கண்டதும், தன் ஆற்றாமையை அதனிடம் கூறி புலம்புகிறாள்.

பாடல்

'முலை முகம்செய்தன; முள் எயிறு இலங்கின;

தலை முடிசான்ற; தண் தழை உடையை;

அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல்;

மூப்புடை முது பதி தாக்குஅணங்கு உடைய;

காப்பும் பூண்டிசின்; கடையும் போகலை; 5

பேதை அல்லை மேதைஅம் குறுமகள்!

பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை, புறத்து' என,

ஒண் சுடர் நல் இல் அருங் கடி நீவி,

தன் சிதைவு அறிதல் அஞ்சி இன் சிலை

ஏறுடை இனத்த, நாறு உயிர் நவ்வி!      10

வலை காண் பிணையின் போகி, ஈங்கு ஓர்

தொலைவு இல் வெள் வேல் விடலையொடு, என் மகள்

இச் சுரம் படர்தந்தோளே. ஆயிடை,

அத்தக் கள்வர் ஆ தொழு அறுத்தென,

பிற்படு பூசலின் வழிவழி ஓடி,      15

மெய்த் தலைப்படுதல்செல்லேன்; இத் தலை,

நின்னொடு வினவல் கேளாய்! பொன்னொடு

புலிப் பல் கோத்த புலம்பு மணித் தாலி,

ஒலிக் குழைச் செயலை உடை மாண் அல்குல்,

ஆய் சுளைப் பலவின் மேய் கலை உதிர்த்த       20

துய்த் தலை வெண் காழ் பெறூஉம்

கல் கெழு சிறுகுடிக் கானவன் மகளே.   

விளக்கம்

‘முலைகள்  நிறைந்த வளர்ச்சியுற்றன. கூரிய பற்கள் மின்னுகின்றன. தலையில் கூந்தலும் நன்கு வளர்ந்துள்ளது. குளிர்ந்த தழையாடையையும் உடுத்தியுள்ளாய்.  விளையாட்டுத் தோழியருடன் எவ்விடத்தும் செல்லாதிருப்பாய், மிகப் பழமை வாய்ந்த இந்த மூதூர் வருத்தும் தெய்வங்களை உடையது. எனவே, நீ காவலுக்கு உட்பட்டிருக்கவேண்டும், வீட்டின் வெளி வாசல் வரைக்கும் போகக்கூடாது. சிறுமி அல்ல நீ, அறிவுள்ள சிறுமகளே!, இளம்பெண் பருவத்தில் வெளியில் சென்றாயேஎன்று நான் கூற,  நல்ல இல்லத்தின் அரிய கட்டுக்காவலையும் மீறி, தன் மனமாற்றத்தை வீட்டார் அறிந்துவிடுவர் என்று அஞ்சி, வலையைக் கண்ட பெண்மானைப் போலத் தப்பி ஓடி, தோல்வியையே அறியாத வேலை உடைய இளங்காளையொடு என் மகள் இந்த வழியே சென்றுவிட்டாள்;  வழிப்பறிக் கள்வர்கள் பசுக்களைத் தொழுவை உடைத்துக் கொண்டு செல்ல, அவர்களின் பின்னே துரத்திச்செல்வோர் ஆரவாரிப்பது போல, அங்குமிங்கும் ஓடி, அவளைத் தேடிச் செல்கின்றேன். இவ்விடத்தில் உன்னைக் கண்டதால் கேட்கின்றேன். பொன் சரட்டில் புலிப்பல் கோத்த ஒற்றைத் தாலியையும், செழித்த அசோகத் தளிரால் ஆன தழையுடை அணிந்த கீழிடுப்பையும் உடைய சிறுகுடியைச் சேர்ந்த கானவன் மகளாகிய என் மகளை நீ கண்டாயா?” என்று மானிடம் கேட்கின்றாள் செவிலித்தாய்.

பாடல் – 2

பாடியவர்     - பரணர்

திணை        - குறிஞ்சி

துறை         

1.    தலைமகன் சிறைப் புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவனாய்த் தலைமகள் சொன்னது.

2.    தலைவன் சிறைப்புறத்தானாக அவன் செவியுறுமாறு தோழி தலைவிக்குக் கூறியதும் ஆம்.

துறை விளக்கம்

தலைவன் தன்னைக் காண வருவதற்குப் பல தடைகள் உண்டு என்பதை அவன் சிறைப்புறமாக இருக்கும்போது தலைவி தன் தோழியிடம் கூறி அறிவுறுத்துகின்றாள்.

பாடல்

இரும் பிழி மகாஅர் இவ் அழுங்கல் மூதூர்

விழவு இன்றுஆயினும் துஞ்சாது ஆகும்;

மல்லல் ஆவண மறுகு உடன் மடியின்,

வல் உரைக் கடுஞ் சொல் அன்னை துஞ்சாள்;

பிணி கோள் அருஞ் சிறை அன்னை துஞ்சின்,   5

துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்;

இலங்குவேல் இளையர் துஞ்சின், வை எயிற்று

வலம் சுரித் தோகை ஞாளி மகிழும்;

அர வாய் ஞமலி மகிழாது மடியின்,

பகல் உரு உறழ நிலவுக் கான்று விசும்பின்      10

அகல்வாய் மண்டிலம் நின்று விரியும்மே;

திங்கள் கல் சேர்பு கனை இருள் மடியின்,

இல் எலி வல்சி வல் வாய்க் கூகை

கழுது வழங்கு யாமத்து அழிதகக் குழறும்;

வளைக்கண் சேவல் வாளாது மடியின்,   15

மனைச் செறி கோழி மாண் குரல் இயம்பும்;

எல்லாம் மடிந்தகாலை, ஒரு நாள்

நில்லா நெஞ்சத்து அவர் வாரலரே; அதனால்,

அரி பெய் புட்டில் ஆர்ப்பப் பரி சிறந்து,

ஆதி போகிய பாய்பரி நன் மா     20

நொச்சி வேலித் தித்தன் உறந்தைக்

கல் முதிர் புறங்காட்டு அன்ன

பல் முட்டின்றால் தோழி! நம் களவே.    

 பாடல் விளக்கம்

“நிறையக் கள்ளினைக் குடிக்கும் சிறுவர்கள் ஆடும் இந்த ஆரவாரமுடைய பழமையான ஊர் திருவிழாக்காலம் இல்லையென்றாலும் உறங்காமல் இருக்கும்; வளமுடைய கடைத்தெருவும் மற்ற தெருக்களும் உறங்கி ஒலியடங்கிப் போனாலும் பெருத்த   ஒலியுடன் கூடிய கொடிய சொற்களைப் பேசும் அன்னை தூங்கமாட்டாள்; நாம் வெளியே செல்லாமல் நம்மைக் கட்டிவைத்திருக்கிற சிறையைப் போன்ற அந்த அன்னை தூங்கினாலும், துயிலாத கண்களையுடைய காவலர்கள் விரைவாகச் சுற்றிக்கொண்டிருப்பர்; ஒளிர்கின்ற வேலினையுடைய அந்தக் காவலர் துயின்றாலும், கூர்மையான பற்களையும் வலமாகச் சுருண்டிருக்கும் வாலினையும் உடைய நாய் குரைக்கும்; ஒலிமிக்க வாயினையுடைய நாய் குரைக்காமல் தூங்கிப்போனாலும் பகற்பொழுதின் வெளிச்சம் போல ஒளியினை உமிழ்ந்து வானத்தில் அகலம் பொருந்திய மதியம் நின்று ஒளிவீசும்; அந்த மதியமானது மேற்குமலையினை அடைந்து மிகுந்த இருள் படிந்தால் வீட்டு எலிகளை உணவாகக் கொண்ட வலிமையான வாயினைக் கொண்ட கூகை பேய்கள் திரியும் நள்ளிரவில் நம் உள்ளம் திடுக்கிட்டு அஞ்சி அழியும்படி குழறும்; பொந்தில் வாழும் அக் கூகைச் சேவல் ஒலியெழுப்பாமல் உறங்கிப்போனாலும், வீட்டில் அடங்கிக்கிடக்கும் கோழிச்சேவல் தனக்கே உரித்தான குரலை எழுப்பிக் கூவும்;

இவை எல்லாம் இல்லாமற்போன பொழுது ஒருநாள் அவரை எண்ணி நிலையில்லாமல் தவிக்கும் நெஞ்சத்தில் இருக்கும் அவர் வராமற்போய்விடுவார்; அதனால், பரல்கள் இடப்பட்ட சதங்கைகள் ஒலிக்க நல்ல நடையால் பாய்ந்து செல்லும் ஓட்டத்தினையுடைய நல்ல குதிரைகளையும் மதில் அரணாகிய காவலையுமுடைய தித்தன் என்னும் சோழமன்னனுடைய உறையூரைச் சூழ்ந்துள்ள கற்கள் நிறைந்த காவற்புறங்காடு போன்ற பல்வேறு தடைகளைக் கொண்டது நம் களவுக்காதல்” என்று தன் தோழியிடம் கூறுகின்றாள் தலைவி.


பாடல் எண் – 3

பாடியவர்     - பெருங்கடுங்கோ

திணை        - பாலை

துறை          - தலைமகன் பிரிவின் கண் வேறுபட்ட தலைமகள் சொல்லியது

துறை விளக்கம்

பொருள் ஈட்டும் பொருட்டுத் தலைவியைப் பிரிகின்றான் தலைவன். பிரிவினைத் தாங்காத தலைவி தன் தோழியிடம் தன் துயரை விளக்குகின்றாள்.

பாடல்

அறன்கடைப் படாஅ வாழ்க்கையும், என்றும்

பிறன்கடைச் செலாஅச் செல்வமும், இரண்டும்

பொருளின் ஆகும், புனையிழை!' என்று, நம்

இருள் ஏர் ஐம்பால் நீவியோரே

நோய் நாம் உழக்குவம்ஆயினும், தாம் தம்        5

செய் வினை முடிக்க; தோழி! பல்வயின்

பய நிரை சேர்ந்த பாழ் நாட்டு ஆங்கண்

நெடு விளிக் கோவலர் கூவல் தோண்டிய

கொடு வாய்ப் பத்தல் வார்ந்து உகு சிறு குழி,

நீர் காய் வருத்தமொடு சேர்விடம் பெறாது       10

பெருங் களிறு மிதித்த அடியகத்து, இரும் புலி

ஒதுங்குவன கழிந்த செதும்பல் ஈர் வழி,

செயிர் தீர் நாவின் வயிரியர் பின்றை

மண் ஆர் முழவின் கண்ணகத்து அசைத்த

விரல் ஊன்று வடுவின் தோன்றும் 15

மரல் வாடு மருங்கின் மலை இறந்தோரே.       

பாடல் விளக்கம்

  • எக்காலத்தும் தவறான வழியில் செல்லாத வாழ்க்கை
  • பிறர் வீட்டு வாசலில் சென்று நின்று வேண்டாத சிறப்பு
இவ்விரண்டும் பொருளால் கிடைக்கும் என்று நமது இருளை ஒத்த கூந்தலைத் தடவியவாறு நம் தலைவர் கூறினார்.  

அவர் சென்றிருக்கும் இடம் சற்று கொடுமையானது. பாற்பசுக்கள் நிறைந்த பாழ்பட்ட நாட்டின் பலவிடங்களிலும், அப்பசுக்கள் நீர் உண்ணும் பொருட்டு நீண்ட சீழ்க்கை ஒலி எழுப்பும் கோவலர், தாம் தோண்டிய கிணற்றினின்றும் வளைந்த வாயினையுடைய பத்தலால் இறைத்த நீர், ஒழுகிச் சென்று சிறுகுழியில் நிரம்பியது. கதிரவன் காய்ந்தமையால் அந்நீரும் வற்றிக் குழியும் காய்ந்தது.   

நீருண்ண வந்த பெரிய யானை நீ்ர இல்லாது சிறிது ஈரத்துடன் காணப்பட்ட குழியைக் கண்டு வருத்தமுற்றுத் தன் நீர் வேட்கையைத் தணித்துக்கொள்வதற்கு வேறுஇடம் காணப்பெறாது அக்குழியினை மிதித்துக் கடந்து சென்றது. பின் அங்கு சென்ற பெரிய புலி, யானையின் அடிச்சுவட்டில் கால்வைத்து நடந்து சென்றது. 

யானையின் கால் தடம்



புலியின் கால் தடம்


யானையின் அடிச்சுவட்டில் பதிந்த புலியின் கால்சுவடானது கூத்தர்களின் மத்தளத்தில் விரல் பதிந்த  வடுப்போலக் காணப்படும்.

மத்தளத்தின் விரல் சுவடுகள்

 அத்தகைய கானகத்தே மரலும் வாடுகின்ற இடங்களையுடைய மலையைக் கடந்து நம் காதலர் சென்றுள்ளார்.அவரது பிரிவால் நாம் நோயுற்று வருந்துவோமாயினும், அவர் தமது பொருளீட்டும் வினையியை முடித்தபின் வருவாராக. தாம் வருந்துவதால் தலைவனின் பொருளீட்டும் முயற்சி தடைபடுமோ என்று கருதிய தலைவி தாம் நோயுற்றாலும் தலைவன் செய்வினை முடிக்கவேண்டும் என்று வாழ்த்தினாள்.

 

சனி, 6 மார்ச், 2021

கலித்தொகை - மரையா மரல், கயமலர் உண்கண்ணாய், சுடர்த்தொடீஇ கேளாய்

 

கலித்தொகை

முதல் பாடல்

பாடியவர் - பெருங்கடுங்கோ

திணை   - பாலை

துறை         

தலைவன் செலவுக் குறிப்பு அறிந்து, “நீர் செல்லும் கடுஞ்சுரத்துத் துன்பத்திற்குத் துணையாக எம்மையும் உடன் கொண்டு சென்மின்” எனத் தலைவி கூறியது.

துறை விளக்கம்

தலைவன் பொருள் ஈட்டுவதற்காகத் தலைவியை விட்டுப் பிரிய எண்ணுகின்றான். அதை அறிந்த தலைவி, நீ செல்லும் பாலை நிலம் கடுமையானது என்றாலும் என்னையும் உன்னுடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்று வற்புறுத்துகின்றாள்.

பாடல்

மரையா மரல் கவர, மாரி வறப்ப-

வரை ஓங்கு அருஞ் சுரத்து ஆர் இடைச் செல்வோர்,

சுரை அம்பு, மூழ்கச் சுருங்கிப், புரையோர் தம்,

உள் நீர் வறப்பப் புலர் வாடு நாவிற்குத்-

தண்ணீர் பெறாஅத் தடுமாற்று அருந் துயரம்   

கண்ணீர் நனைக்கும் கடுமைய, காடு என்றால்,

என், நீர் அறியாதீர் போல இவை கூறல்?

நின் நீர அல்ல, நெடுந் தகாய்! எம்மையும்,

அன்பு அறச் சூழாதே, ஆற்றிடை நும்மொடு

துன்பம் துணையாக நாடின், அது அல்லது      

இன்பமும் உண்டோ , எமக்கு?

பாடல் விளக்கம்


ஆறலைக் கள்வர்

பாலை நிலக்கொடுமை

தலைவன் பொருள் ஈட்டும் பொருட்டுத் தலைவியைப் பிரிய முயல்கின்றான். அதைக் கேட்ட தலைவி, தலைவனைப் பிரிய மறுக்கின்றாள். அவளுக்குப் பாலை நிலத்தின் கொடுமையை எடுத்துரைக்கின்றான் தலைவன். அதற்குத் தலைவி, “பாலை நிலத்து ஆரலைக் கள்வர்கள் பொருளீட்டி வருவோரை வழிமறித்து பொருளை வழிப்பறி செய்வர். பொருளை அளிக்க மறுப்பவர் மீது அம்புமழை பொழிவர். யாருடைய அம்பு எய்தபின், குருதி மிகுந்த வேகத்துடன் பீறிட்டு அடிக்கின்றது என்று பார்த்து கும்மாளமிடுவர். மிகுதியான குருதி வெளியேறியதால் வறட்சி ஏற்பட்டு, நீர் கேட்டுக் கீழே விழும் அவர்களைப் பார்த்துக் கள்வர்கள் மகிழ்வர். அத்துன்பத்தால் வருகின்ற தங்கள் கண்ணீரை நாவால் நக்கி, சிறிது நேரம் உயிர் வாழும் நிலையில் இருப்பர்.  இப்படிப்பட்ட கொடுமையுடையது பாலைநிலத்தின் காட்டு வழி என்று கூறுகின்றாய். அத்தகைய பாலை நிலத்தில், உம்முடன் துன்பகாலத்தில் துணையாக நான் கூட இருப்பதை விரும்பினால், அதைத் தவிர இன்பமான செய்தி வேறு இல்லை எனக்கு. ஆகவே என்னையும் உம்முடன் அழைத்துச் செல்ல வேண்டும்” என்று வற்புறுத்துகின்றாள் தலைவி.

 

இரண்டாம் பாடல்

பாடியவர்     - கபிலர்

திணை        - குறிஞ்சி

துறை

நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும் செய்வினை மறைப்பினும் செலவினும் பயில்வினும் புணர்ச்சி எதிர்ப்பாடு உள்ளுறுத்து வரூஉம் உணர்ச்சி ஏழினும் உணர்ந்த பின்றை” தன்னை அவள் மறையாமை காரணமாக மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது பல்வேறு கவர்பொருள் நாட்டத்தான் தலைமகட்குத் தோழி கூறியது.

துறை விளக்கம்

வாசனை, உருவ அழகு, நடத்தை, உணவு, செய்கின்ற செயல், போகின்ற இடம், நடந்து கொள்ளும் முறை, ஏதோ ஒரு உணர்வால் ஆளப்பட்டுள்ள தன்மை ஆகியவற்றின் மூலம் தலைவி காதல் வயப்பட்டுள்ளாள் என்பதை அறிந்த தோழி, பல நிலைகளில் அவளுடைய காதலை அவளே வெளிப்படுத்தும்படியாக முயற்சி செய்கின்றாள். அதன் ஒரு வழியாகத் தான் காதல் வயப்பட்ட நிகழ்வைக் கூறி அவள் மனதில் உள்ளவற்றை அறிய முயல்கின்றாள்.

பாடல்

கய மலர் உண்கண்ணாய்! காணாய் ஒருவன்

வய மான் அடித் தேர்வான் போல, தொடை மாண்ட

கண்ணியன் வில்லன், வரும்; என்னை நோக்குபு,

முன்னத்தின் காட்டுதல் அல்லது, தான் உற்ற

நோய் உரைக்கல்லான் பெயரும்மன், பல் நாளும்;     

பாயல் பெறேஎன், படர் கூர்ந்து, அவன்வயின்

சேயேன்மன் யானும் துயர் உழப்பேன்; ஆயிடைக்

கண் நின்று கூறுதல் ஆற்றான், அவனாயின்;

பெண் அன்று, உரைத்தல், நமக்காயின்; 'இன்னதூஉம்

காணான் கழிதலும் உண்டு' என்று, ஒரு நாள், என்     

தோள் நெகிழ்பு உற்ற துயரால் துணிதந்து, ஓர்

நாண் இன்மை செய்தேன் நறுநுதால்! ஏனல்

இனக் கிளி யாம் கடிந்து ஓம்பும் புனத்து அயல்,

ஊசல் ஊர்ந்து ஆட, ஒரு ஞான்று வந்தானை,

'ஐய! சிறிது என்னை ஊக்கி' எனக் கூற, 

'தையால்! நன்று! என்று அவன் ஊக்க, கை நெகிழ்பு

பொய்யாக வீழ்ந்தேன், அவன் மார்பின்; வாயாச் செத்து,

ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான்; மேல்

மெய் அறியாதேன் போல் கிடந்தேன்மன்; ஆயிடை

மெய் அறிந்து ஏற்று எழுவேனாயின், மற்று ஒய்யென,

'ஒண்குழாய்! செல்க' எனக் கூறி விடும் பண்பின்

அங்கண் உடையன் அவன்

பாடல் விளக்கம்

குளத்திலுள்ள நீல மலரைப் போன்ற மைதீட்டிய கண்களையுடையவளே! இதைக் கேள்! ஓர் இளைஞன் புலியின் காலடித் தடங்களை ஆராய்வான் போல, நன்றாக இறுக்கிக் கட்டிய தலைமாலையினை அணிந்து, ஒரு வில்லுடன் வருவான், என்னை நோக்கி முகக்குறிப்பால் ஏதோ கேட்பதை அன்றி, தான் கொண்டுள்ள காதலை என்னிடம் சொல்லாமல் சென்றுவிடுவான், இவ்வாறு பலநாளும் நடந்தது, அவனை எண்ணி உறக்கம் கொள்ளாமல் இருந்தேன். அதனால் துன்பமடைந்து, அவனோடு எவ்விதத் தொடர்பும் இல்லாத நானும் துயரத்தில் உழன்றேன். என் முகத்தைப் பார்த்து ஒரு மொழியும் கூறுவதற்கு துணியவில்லை அவன். பெண்ணாகப் பிறந்துவிட்ட நாம், தானாக அவனிடம் போய் பேசுவது பெண்மைக்கு இழுக்கு. இதனால் எனது காதலை அறியாமல் போய் விடுவானோ என்று எண்ணி, ஒரு நாள், என் தோள்கள் மெலிந்து நான் உற்ற வருத்தத்தால், துணிவுடன், நாணம் இல்லாத செயல் ஒன்றை நான் செய்தேன்.

நறுமண நெற்றியையுடைய என் தோழியே!  கிளிகளை விரட்டி நாம் காக்கும் தினைப் புனத்திற்கு அருகில் உள்ள ஊஞ்சலில் நான் ஆடிக் கொண்டிருந்தேன்.  அப்பொழுது அங்கு வந்த அவனை நோக்கி, “ஐயா! என் ஊஞ்சலைக் கொஞ்சம் ஆட்டி விடுஎன்று நான் கூற, “பெண்ணே! நல்லது!” என்று அவன் ஊஞ்சலை ஆட்ட, கை நழுவியது போல் நான் நடித்து அவன் மார்பில் பொய்யாக விழுந்தேன்.  அது உண்மை என்று எண்ணி, அவன் என்னை வாரி எடுத்து அணைத்துக் கொண்டான்.  அங்கு நான் அறியாதவள் போல் கிடந்தேன்.  நான் என்னுடைய மயக்கம் தீர்த்தாற்போல் எழுவேன் ஆயின், விரைந்து ‘ஒளியுடைய அணிகலன்களை அணிந்தவளே!  எழுந்து செல்என்று கூறும் பண்புடையவன் அவன்” என்று தோழி தலைவியிடம் கூறினாள்.

 

 மூன்றாவது பாடல்

பாடியவர்     - கபிலர்

திணை        - குறிஞ்சி

துறை        

“புகாஅக்காலைப் புக்கு எதிர்ப்பட்டுழி பகாவிருந்தின் பகுதிக்கண்” தலைவி தோழிக்குக் கூறியது.

துறை விளக்கம்

தலைவன் தலைவியைக் காண வேண்டும் என ஆசையுற்றான். அதனால் தான் புகுதற்குத் தகுதியில்லாத பகற்பொழுதில் தலைவன், உணவு நேரத்தில் தலைவியின் வீட்டுக்குள் புகுதல். அவ்வாறு புகுந்தவனைத் தலைவி காட்டிக்கொடுக்காமல் தாயின்முன் சமாளித்து ஏற்றுக்கொள்ளல்.

புகாஅக்காலை : உணவு உண்ணும் நேரம். பகல் சாப்பிடும் நேரம் பார்த்து ஒரு வீட்டிற்குள் புகுதல்.  

பகாஅ விருந்து - ஆனால் தலைவன் விலக்கப்படாத விருந்தாக தலைவி (காதலி) ஏற்றுக் கொள்கிறாள்.  

பாடல்

சுடர்த்தொடீஇ! கேளாய்! தெருவில் நாம் ஆடும்

மணற் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய

கோதை பரிந்து, வரி பந்து கொண்டு ஓடி,

நோ தக்க செய்யும் சிறு, பட்டி, மேல் ஓர் நாள்,

அன்னையும் யானும் இருந்தேமா, 'இல்லிரே!    5

உண்ணு நீர் வேட்டேன்' என வந்தாற்கு, அன்னை,

'அடர் பொற் சிரகத்தால் வாக்கி, சுடரிழாய்!

உண்ணு நீர் ஊட்டி வா' என்றாள்: என, யானும்

தன்னை அறியாது சென்றேன்; மற்று என்னை

வளை முன்கை பற்றி நலிய, தெருமந்திட்டு,      10

'அன்னாய்! இவனொருவன் செய்தது காண்' என்றேனா,

அன்னை அலறிப் படர்தர, தன்னை யான்,

'உண்ணு நீர் விக்கினான்' என்றேனா, அன்னையும்

தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக்

கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி, நகைக் கூட்டம்       15

செய்தான், அக் கள்வன் மகன்.   

பாடல் விளக்கம்

ஒளிமிக்க வளையல் அணிந்த தோழியே! நான் சொல்வதைக் கேள். தெருவில் நாம் மணலால் செய்த சிறுவீட்டைத் தன்காலால் கலைத்தும், நாம் கூந்தலில் சூடிய மலர்மாலையை அறுத்தும், வரியை உடைய நாம் விளையாடிக் கொண்டிருந்த பந்தைப் பறித்துக் கொண்டு ஓடியும் நாம் வருந்தத் தக்க செயல்களைச் செய்யும் சிறியவனாகக் கட்டுக்கடங்காமல் திரிந்தான். முன்பு ஒருநாள் தாயும் (அம்மாவும்) நானும் வீட்டில் இருந்தபோது வந்தான். வீட்டின் வாசலில் நின்று, “வீட்டில் இருப்பவர்களே! உண்ணும் நீரை உண்ண விரும்பினேன்” என்று குரல் கொடுத்தான். அவ்வாறு வந்து கேட்டவனுக்கு என் தாய், என்னிடம், “ஒளி வீசும் அணிகலன்களை அணிந்தவளே. தங்கத்தாலான குவளையில் கொண்டு போய் நீர் கொடுத்து வா” என்றாள். அவ்வாறு தாய் சொன்னதால் வந்தவன் சிறு பட்டியாய் இருக்கும் தன்மை அறியாமல் தண்ணீர் கொண்டு போனேன். நான் சென்றதும் வளையல் அணிந்த முன் கையைப் பிடித்து இழுத்தான். (சிறுபட்டி எனில் பட்டியில் அகப்படாத மாடு போன்றவன் எனப் பொருள்) அதனால் நான் வருந்தி அம்மா என அலறி இவன் செய்த செய்த செயலைப் பார்த்தாயா? என்றேன். அம்மா அலறிக்கொண்டு ஓடி வந்தாள். நான் அவன் செய்த குறும்புச் செயலை மறைத்து, இவன் நீர் குடிக்கும் போது விக்கல் எடுத்து வருந்தினான், அதனால் கத்தினேன்என்றேன். நான் மறைத்துக் கூறியதை ஏற்று அம்மாவும் அவன் முதுகைப் பலமுறை தடவிக் கொடுத்தாள். முதுகின் பக்கம் நின்று நெஞ்சைத் தடவிக் கொடுத்தாள் தாய் என நச்சினார்க்கினியார் கூறுவார். அப்போது அக்கள்வன் மகன் (அந்தத் திருடன்) தன் கடைக்கண்ணால் என்னைக் கொல்வது போல் திருட்டுப்பார்வை பார்த்தான். தன் புன்முறுவலால் என்னை மயக்கி என்னுள்ளத்தில் புகுந்தான்” என்று தன் தோழியிடம் தலைவி கூறுகின்றாள்.

 

நன்றி

https://nadappu.com/thamizharivom-kalithokai-4-pulavar-aru-mey-meyyandavar/

http://sangacholai.in/8.8.html#101