பாண்டிய மன்னர்கள் புலவர்களைக் கூட்டி வைத்துத் தமிழாய்ந்து, செய்யுட்கள்
இயற்றிய அவையைச் சங்கம் என்று கூறினர். மதுரையில் சங்கம் போன்ற அமைப்பு ஒன்று இருந்ததைத்
தமிழ் இலக்கியங்கள் பல்வேறு பெயர்களில் சுட்டுகின்றன. பத்துப்பாட்டில் ஒன்றான சிறுபாணாற்றுப்படை,
தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின்
மகிழ்நனை மறுகின் மதுரை (66-67)
என்று கூறுகிறது. மதுரைக் காஞ்சி எனும் இலக்கியம்,
தொல்லாணை நல்லாசிரியர்
புணர்கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின்
நிலந்தரு திருவின் நெடியோன் (761-763)
என்று கூறுவதைக் காணும்போது நிலந்தரு திருவின் நெடியோன் என்ற பாண்டியன்
அவையில் புலவர்கள் ஒருங்கிணைந்து செய்யுள் இயற்றினர் எனப் புலனாகிறது.
காப்பிய இலக்கியமாகிய சிலப்பதிகாரம் “தென்தமிழ் நன்நாட்டுத் தீதுதீர் மதுரை” என்றும், மணிமேகலை “தென்தமிழ் மதுரைச் செழுங்கலைப் பாவாய்” என்றும் கூறுகிறது. கி.பி. 600 வாக்கில் வாழ்ந்த திருநாவுக்கரசர் சிவபெருமானைச் சங்கத்தோடு இணைத்து போற்றிப் பாடுகிறார். தருமி என்னும் ஏழைப் புலவனுக்குக் ‘கொங்குதேர் வாழ்க்கை’ என்ற குறுந்தொகைப் பாடலை எழுதிக் கொடுத்தார் என்பதை,
நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி
நற்கனகக்கிழி தருமிக்கு அருளினோன்காண் (6.76.3)
என்று கூறுகின்றார்.
மாபாரதம் தமிழ்ப்படுத்தும்
மதுராபுரிச் சங்கம் வைத்தும்
என்று கூறுவதால் மகாபாரதத்தைத் தமிழில் மொழிபெயர்த்த பணியும் சங்கத்தில்
நடந்ததை நாம் அறிகிறோம்.
பிளினி, தாலமி போன்ற மேலைநாட்டு அறிஞர்களும் சங்கம் பற்றி உரைக்கின்றனர்.
இலங்கை வரலாற்று நூல்களான மகாவம்சம், இராஜாவளி, இராஜரத்னாகிரி போன்ற நூல்களும் சங்கம்
இருந்தமைக்குச் சான்று பகர்கின்றன. அத்தகு சிறப்பு வாய்ந்த சங்கங்களின் வரலாற்றைப்
பின்வருமாறு காணலாம்
முதற் சங்கம்
கடல் கொண்ட தென்மதுரையில் பாண்டிய மன்னர்களால் நிறுவப் பெற்ற சங்கம்
முதற்சங்கமாகும். இச்சங்கத்தை நிறுவிய மன்னன் காய்சின வழுதி என்பவனாவான். காய்சின வழுதி
முதலாகக் கடுங்கோன் என்ற பாண்டிய மன்னன் ஈறாக 89அரசர்கள் 4440 ஆண்டுகள் இச்சங்கத்தை
நடத்தியதாக இறையனார்களவியல் உரை கூறுகிறது.
இச்சங்கத்தில் அகத்தியர், திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள், குன்றெறிந்த
முருகவேள், முரஞ்சியூர் முடிநாகராயர், நிதியின் கிழவன் போன்ற புலவர்கள் இருந்து தமிழ்
ஆராய்ந்தனர். 4449 புலவர்கள் தமிழ் ஆராய்ந்து செய்யுள் பாடினர். அவர்களால் பரிபாடல்,
முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை போன்ற நூல்கள் பாடப்பட்டன.
இடைச்சங்கம்
தென்மதுரையைக் கடல் கொண்ட பிறகு கபாடபுரத்தில் தொடங்கப் பெற்ற இடைச்சங்கம்
3700 ஆண்டுக் காலம் நடைபெற்றது. வெண்தேர்ச் செழியன் என்ற பாண்டிய மன்னனால் தொடங்கப்
பெற்ற இச்சங்கம் முடத்திருமாறன் முடிய 59 மன்னர்களால் நடத்தப் பெற்றது. இச்சங்கத்தில்
அகத்தியர், தொல்காப்பியர், இருந்தையூர் கருங்கோழியார் வெள்ளூர்க் காப்பியனார் போன்ற3700
புலவர்கள் பாடினர். இவர்களால் பாடப்பெற்றவை கலி, குருகு, வெண்டாளி, வியாழ மாலை அகவல்
போன்ற நூல்களாகும்.
கடைச் சங்கம்
கபாடபுரமும் கடலால் அழிந்த பிறகு தற்போது உள்ள மதுரையில் கடைச் சங்கம்
எனப்படுகின்ற மூன்றாம் சங்கம் தொடங்கப் பெற்றது. இரண்டாம் சங்கத்தை நடத்தி, கபாடபுரம்
அழியும் போது அங்கிருந்து பிழைத்து வந்த முடத்திருமாறனால் இது, தொடங்கப் பெற்றது. இச்சங்கம்
முடத்திருமாறன் முதலாக உக்கிரப்பெருவழுதி ஈறாக 49 அரசர்களால் நடத்தப் பெற்றது.
1850 ஆண்டுகள் இச்சங்கம் நடைபெற்றது. இச்சங்கத்தில் சிறுமேதாவியார், சேந்தம்பூதனார்,
அறிவுடையரனார், பெருங்குன்றூர்க்கிழார், இளந்திருமாறன், மதுரை ஆசிரியர் நல்லந்துவனார்,
மருதன் இளநாகனார், நக்கீரனார் என 449 புலவர்கள் பாடினர். இதில் எழுதப்பட்ட நூல்கள்
அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை,
பரிபாடல் போன்றவை ஆகும்.
முச்சங்கங்கள் பற்றிய மேற்கண்ட செய்திகளை இறையனார் களவியல் உரை என்ற
நூல்தான் கூறுகின்றது. இந்நூல் கூறும் செய்திகள் முழுமையான நம்பிக்கைக்குரியனவா என்பது
ஆராய்ச்சிக்குரியதாகும். இருப்பினும் சங்கம் என்ற ஓர் அமைப்பு, பாண்டியர்களால் நடத்தப்
பெற்றமை குறித்துச் சங்க இலக்கியங்களிலும், பிற்கால இலக்கியங்களிலும் நிறையச் சான்றுகள்
கிடைக்கின்றன. முச்சங்கங்களும் இருந்த கால அளவு, பாடிய புலவர்களின் எண்ணிக்கை, சங்கம்
நடத்திய அரசர்கள் பற்றி இறையனார் களவியல் உரை கூறும் செய்திகள் முழுமையும் உண்மையாக
இருக்க வாய்ப்பு இல்லை. கி.மு.500 முதல் கி.பி.200 முடிய உள்ள காலமே சங்கம் நடைபெற்ற
காலமாக இருக்க முடியும் என்பது ஆய்வாளர்களின் கூற்றாகும்.
நன்றி
https://mcasthamil.blogspot.com/2016/03/blog-post_46.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக