கலித்தொகை
முதல் பாடல்
பாடியவர்
- பெருங்கடுங்கோ
திணை - பாலை
துறை
தலைவன் செலவுக் குறிப்பு அறிந்து, “நீர் செல்லும் கடுஞ்சுரத்துத் துன்பத்திற்குத்
துணையாக எம்மையும் உடன் கொண்டு சென்மின்” எனத் தலைவி கூறியது.
துறை விளக்கம்
தலைவன் பொருள் ஈட்டுவதற்காகத் தலைவியை விட்டுப் பிரிய எண்ணுகின்றான்.
அதை அறிந்த தலைவி, நீ செல்லும் பாலை நிலம் கடுமையானது என்றாலும் என்னையும் உன்னுடன்
அழைத்துச் செல்ல வேண்டும் என்று வற்புறுத்துகின்றாள்.
பாடல்
மரையா
மரல் கவர, மாரி வறப்ப-
வரை ஓங்கு
அருஞ் சுரத்து ஆர் இடைச் செல்வோர்,
சுரை அம்பு,
மூழ்கச் சுருங்கிப், புரையோர் தம்,
உள் நீர்
வறப்பப் புலர் வாடு நாவிற்குத்-
தண்ணீர்
பெறாஅத் தடுமாற்று அருந் துயரம்
கண்ணீர்
நனைக்கும் கடுமைய, காடு என்றால்,
என், நீர்
அறியாதீர் போல இவை கூறல்?
நின் நீர
அல்ல, நெடுந் தகாய்! எம்மையும்,
அன்பு
அறச் சூழாதே, ஆற்றிடை நும்மொடு
துன்பம்
துணையாக நாடின், அது அல்லது
இன்பமும்
உண்டோ , எமக்கு?
பாடல் விளக்கம்
ஆறலைக் கள்வர் |
பாலை நிலக்கொடுமை
தலைவன் பொருள் ஈட்டும் பொருட்டுத் தலைவியைப் பிரிய முயல்கின்றான். அதைக்
கேட்ட தலைவி, தலைவனைப் பிரிய மறுக்கின்றாள். அவளுக்குப் பாலை நிலத்தின் கொடுமையை எடுத்துரைக்கின்றான்
தலைவன். அதற்குத் தலைவி, “பாலை நிலத்து ஆரலைக் கள்வர்கள் பொருளீட்டி வருவோரை வழிமறித்து
பொருளை வழிப்பறி செய்வர். பொருளை அளிக்க மறுப்பவர் மீது அம்புமழை பொழிவர். யாருடைய
அம்பு எய்தபின், குருதி மிகுந்த வேகத்துடன் பீறிட்டு அடிக்கின்றது என்று பார்த்து கும்மாளமிடுவர்.
மிகுதியான குருதி வெளியேறியதால் வறட்சி ஏற்பட்டு, நீர் கேட்டுக் கீழே விழும் அவர்களைப்
பார்த்துக் கள்வர்கள் மகிழ்வர். அத்துன்பத்தால் வருகின்ற தங்கள் கண்ணீரை நாவால் நக்கி,
சிறிது நேரம் உயிர் வாழும் நிலையில் இருப்பர். இப்படிப்பட்ட கொடுமையுடையது பாலைநிலத்தின் காட்டு
வழி என்று கூறுகின்றாய். அத்தகைய பாலை நிலத்தில், உம்முடன் துன்பகாலத்தில் துணையாக
நான் கூட இருப்பதை விரும்பினால், அதைத் தவிர இன்பமான செய்தி வேறு இல்லை எனக்கு. ஆகவே
என்னையும் உம்முடன் அழைத்துச் செல்ல வேண்டும்” என்று வற்புறுத்துகின்றாள் தலைவி.
இரண்டாம் பாடல்
பாடியவர்
- கபிலர்
திணை - குறிஞ்சி
துறை
நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும் செய்வினை மறைப்பினும் செலவினும்
பயில்வினும் புணர்ச்சி எதிர்ப்பாடு உள்ளுறுத்து வரூஉம் உணர்ச்சி ஏழினும் உணர்ந்த பின்றை”
தன்னை அவள் மறையாமை காரணமாக மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது பல்வேறு கவர்பொருள்
நாட்டத்தான் தலைமகட்குத் தோழி கூறியது.
துறை விளக்கம்
வாசனை, உருவ அழகு, நடத்தை, உணவு, செய்கின்ற செயல், போகின்ற இடம், நடந்து
கொள்ளும் முறை, ஏதோ ஒரு உணர்வால் ஆளப்பட்டுள்ள தன்மை ஆகியவற்றின் மூலம் தலைவி காதல்
வயப்பட்டுள்ளாள் என்பதை அறிந்த தோழி, பல நிலைகளில் அவளுடைய காதலை அவளே வெளிப்படுத்தும்படியாக
முயற்சி செய்கின்றாள். அதன் ஒரு வழியாகத் தான் காதல் வயப்பட்ட நிகழ்வைக் கூறி அவள்
மனதில் உள்ளவற்றை அறிய முயல்கின்றாள்.
பாடல்
கய மலர்
உண்கண்ணாய்! காணாய் ஒருவன்
வய மான்
அடித் தேர்வான் போல, தொடை மாண்ட
கண்ணியன்
வில்லன், வரும்; என்னை நோக்குபு,
முன்னத்தின்
காட்டுதல் அல்லது, தான் உற்ற
நோய் உரைக்கல்லான்
பெயரும்மன், பல் நாளும்;
பாயல்
பெறேஎன், படர் கூர்ந்து, அவன்வயின்
சேயேன்மன்
யானும் துயர் உழப்பேன்; ஆயிடைக்
கண் நின்று
கூறுதல் ஆற்றான், அவனாயின்;
பெண் அன்று,
உரைத்தல், நமக்காயின்; 'இன்னதூஉம்
காணான்
கழிதலும் உண்டு' என்று, ஒரு நாள், என்
தோள் நெகிழ்பு
உற்ற துயரால் துணிதந்து, ஓர்
நாண் இன்மை
செய்தேன் நறுநுதால்! ஏனல்
இனக் கிளி
யாம் கடிந்து ஓம்பும் புனத்து அயல்,
ஊசல் ஊர்ந்து
ஆட, ஒரு ஞான்று வந்தானை,
'ஐய! சிறிது
என்னை ஊக்கி' எனக் கூற,
'தையால்!
நன்று! என்று அவன் ஊக்க, கை நெகிழ்பு
பொய்யாக
வீழ்ந்தேன், அவன் மார்பின்; வாயாச் செத்து,
ஒய்யென
ஆங்கே எடுத்தனன் கொண்டான்; மேல்
மெய் அறியாதேன்
போல் கிடந்தேன்மன்; ஆயிடை
மெய் அறிந்து
ஏற்று எழுவேனாயின், மற்று ஒய்யென,
'ஒண்குழாய்!
செல்க' எனக் கூறி விடும் பண்பின்
அங்கண்
உடையன் அவன்
பாடல் விளக்கம்
குளத்திலுள்ள நீல மலரைப் போன்ற மைதீட்டிய கண்களையுடையவளே! இதைக் கேள்!
ஓர் இளைஞன் புலியின் காலடித் தடங்களை ஆராய்வான் போல, நன்றாக இறுக்கிக் கட்டிய தலைமாலையினை
அணிந்து, ஒரு வில்லுடன் வருவான், என்னை நோக்கி முகக்குறிப்பால் ஏதோ கேட்பதை அன்றி,
தான் கொண்டுள்ள காதலை என்னிடம் சொல்லாமல் சென்றுவிடுவான், இவ்வாறு பலநாளும் நடந்தது,
அவனை எண்ணி உறக்கம் கொள்ளாமல் இருந்தேன். அதனால் துன்பமடைந்து, அவனோடு எவ்விதத் தொடர்பும்
இல்லாத நானும் துயரத்தில் உழன்றேன். என் முகத்தைப் பார்த்து ஒரு மொழியும் கூறுவதற்கு
துணியவில்லை அவன். பெண்ணாகப் பிறந்துவிட்ட நாம், தானாக அவனிடம் போய் பேசுவது பெண்மைக்கு
இழுக்கு. இதனால் எனது காதலை அறியாமல் போய் விடுவானோ என்று எண்ணி, ஒரு நாள், என் தோள்கள்
மெலிந்து நான் உற்ற வருத்தத்தால், துணிவுடன், நாணம் இல்லாத செயல் ஒன்றை நான் செய்தேன்.
நறுமண நெற்றியையுடைய என் தோழியே!
கிளிகளை விரட்டி நாம் காக்கும் தினைப் புனத்திற்கு அருகில் உள்ள ஊஞ்சலில் நான்
ஆடிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அங்கு வந்த
அவனை நோக்கி, “ஐயா! என் ஊஞ்சலைக் கொஞ்சம் ஆட்டி விடு” என்று
நான் கூற, “பெண்ணே! நல்லது!” என்று அவன் ஊஞ்சலை ஆட்ட, கை நழுவியது போல் நான் நடித்து
அவன் மார்பில் பொய்யாக விழுந்தேன். அது உண்மை
என்று எண்ணி, அவன் என்னை வாரி எடுத்து அணைத்துக் கொண்டான். அங்கு நான் அறியாதவள் போல் கிடந்தேன். நான் என்னுடைய மயக்கம் தீர்த்தாற்போல் எழுவேன் ஆயின்,
விரைந்து ‘ஒளியுடைய அணிகலன்களை அணிந்தவளே!
எழுந்து செல்” என்று கூறும் பண்புடையவன் அவன்” என்று
தோழி தலைவியிடம் கூறினாள்.
பாடியவர்
- கபிலர்
திணை - குறிஞ்சி
துறை
“புகாஅக்காலைப் புக்கு எதிர்ப்பட்டுழி பகாவிருந்தின் பகுதிக்கண்” தலைவி
தோழிக்குக் கூறியது.
துறை விளக்கம்
தலைவன் தலைவியைக் காண வேண்டும் என ஆசையுற்றான். அதனால் தான் புகுதற்குத்
தகுதியில்லாத பகற்பொழுதில் தலைவன், உணவு நேரத்தில் தலைவியின் வீட்டுக்குள் புகுதல்.
அவ்வாறு புகுந்தவனைத் தலைவி காட்டிக்கொடுக்காமல் தாயின்முன் சமாளித்து ஏற்றுக்கொள்ளல்.
புகாஅக்காலை : உணவு உண்ணும் நேரம். பகல் சாப்பிடும் நேரம் பார்த்து
ஒரு வீட்டிற்குள் புகுதல்.
பகாஅ விருந்து - ஆனால் தலைவன் விலக்கப்படாத விருந்தாக தலைவி (காதலி)
ஏற்றுக் கொள்கிறாள்.
பாடல்
சுடர்த்தொடீஇ!
கேளாய்! தெருவில் நாம் ஆடும்
மணற் சிற்றில்
காலின் சிதையா, அடைச்சிய
கோதை பரிந்து,
வரி பந்து கொண்டு ஓடி,
நோ தக்க
செய்யும் சிறு, பட்டி, மேல் ஓர் நாள்,
அன்னையும்
யானும் இருந்தேமா, 'இல்லிரே! 5
உண்ணு
நீர் வேட்டேன்' என வந்தாற்கு, அன்னை,
'அடர்
பொற் சிரகத்தால் வாக்கி, சுடரிழாய்!
உண்ணு
நீர் ஊட்டி வா' என்றாள்: என, யானும்
தன்னை
அறியாது சென்றேன்; மற்று என்னை
வளை முன்கை
பற்றி நலிய, தெருமந்திட்டு, 10
'அன்னாய்!
இவனொருவன் செய்தது காண்' என்றேனா,
அன்னை
அலறிப் படர்தர, தன்னை யான்,
'உண்ணு
நீர் விக்கினான்' என்றேனா, அன்னையும்
தன்னைப்
புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக்
கடைக்கண்ணால்
கொல்வான் போல் நோக்கி, நகைக் கூட்டம் 15
செய்தான்,
அக் கள்வன் மகன்.
பாடல் விளக்கம்
ஒளிமிக்க வளையல் அணிந்த தோழியே! நான் சொல்வதைக் கேள். தெருவில் நாம்
மணலால் செய்த சிறுவீட்டைத் தன்காலால் கலைத்தும், நாம் கூந்தலில் சூடிய மலர்மாலையை அறுத்தும்,
வரியை உடைய நாம் விளையாடிக் கொண்டிருந்த பந்தைப் பறித்துக் கொண்டு ஓடியும் நாம் வருந்தத்
தக்க செயல்களைச் செய்யும் சிறியவனாகக் கட்டுக்கடங்காமல் திரிந்தான். முன்பு ஒருநாள் தாயும்
(அம்மாவும்) நானும் வீட்டில் இருந்தபோது வந்தான். வீட்டின் வாசலில் நின்று, “வீட்டில்
இருப்பவர்களே! உண்ணும் நீரை உண்ண விரும்பினேன்” என்று குரல் கொடுத்தான். அவ்வாறு வந்து
கேட்டவனுக்கு என் தாய், என்னிடம், “ஒளி வீசும் அணிகலன்களை அணிந்தவளே. தங்கத்தாலான குவளையில்
கொண்டு போய் நீர் கொடுத்து வா” என்றாள். அவ்வாறு தாய் சொன்னதால் வந்தவன் சிறு பட்டியாய்
இருக்கும் தன்மை அறியாமல் தண்ணீர் கொண்டு போனேன். நான் சென்றதும் வளையல் அணிந்த முன்
கையைப் பிடித்து இழுத்தான். (சிறுபட்டி எனில் பட்டியில் அகப்படாத மாடு போன்றவன் எனப்
பொருள்) அதனால் நான் வருந்தி அம்மா என அலறி இவன் செய்த செய்த செயலைப் பார்த்தாயா? என்றேன்.
அம்மா அலறிக்கொண்டு ஓடி வந்தாள். நான் அவன் செய்த குறும்புச் செயலை மறைத்து, இவன் நீர்
குடிக்கும் போது விக்கல் எடுத்து வருந்தினான், அதனால் கத்தினேன்”
என்றேன். நான் மறைத்துக் கூறியதை ஏற்று அம்மாவும் அவன் முதுகைப் பலமுறை தடவிக்
கொடுத்தாள். முதுகின் பக்கம் நின்று நெஞ்சைத் தடவிக் கொடுத்தாள் தாய் என நச்சினார்க்கினியார்
கூறுவார். அப்போது அக்கள்வன் மகன் (அந்தத் திருடன்) தன் கடைக்கண்ணால் என்னைக் கொல்வது
போல் திருட்டுப்பார்வை பார்த்தான். தன் புன்முறுவலால் என்னை மயக்கி என்னுள்ளத்தில்
புகுந்தான்” என்று தன் தோழியிடம் தலைவி கூறுகின்றாள்.
நன்றி
https://nadappu.com/thamizharivom-kalithokai-4-pulavar-aru-mey-meyyandavar/
http://sangacholai.in/8.8.html#101
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக