அகநானூறு
பாடல் எண் – 1
பாடியவர் - கயமனார்
திணை - பாலை
துறை
மகட்போக்கிய செவிலித்தாய் சுரத்திடைப்பின் சென்று நவ்விப் பிணாக் கண்டு
சொல்லியது.
துறை விளக்கம்
தலைவி தலைவனுடன் உடன்போக்கு சென்றுவிட்டாள். செவிலித்தாய்
அவளைத் தேடிப் பாலை நிலத்தின்வழியே பின்தொடர்ந்து சென்றாள். இடைவழியில், பெண்மான் ஒன்றைக்
கண்டதும், தன் ஆற்றாமையை அதனிடம் கூறி புலம்புகிறாள்.
பாடல்
'முலை
முகம்செய்தன; முள் எயிறு இலங்கின;
தலை முடிசான்ற;
தண் தழை உடையை;
அலமரல்
ஆயமொடு யாங்கணும் படாஅல்;
மூப்புடை
முது பதி தாக்குஅணங்கு உடைய;
காப்பும்
பூண்டிசின்; கடையும் போகலை; 5
பேதை அல்லை
மேதைஅம் குறுமகள்!
பெதும்பைப்
பருவத்து ஒதுங்கினை, புறத்து' என,
ஒண் சுடர்
நல் இல் அருங் கடி நீவி,
தன் சிதைவு
அறிதல் அஞ்சி இன் சிலை
ஏறுடை
இனத்த, நாறு உயிர் நவ்வி! 10
வலை காண்
பிணையின் போகி, ஈங்கு ஓர்
தொலைவு
இல் வெள் வேல் விடலையொடு, என் மகள்
இச் சுரம்
படர்தந்தோளே. ஆயிடை,
அத்தக்
கள்வர் ஆ தொழு அறுத்தென,
பிற்படு
பூசலின் வழிவழி ஓடி, 15
மெய்த்
தலைப்படுதல்செல்லேன்; இத் தலை,
நின்னொடு
வினவல் கேளாய்! பொன்னொடு
புலிப்
பல் கோத்த புலம்பு மணித் தாலி,
ஒலிக்
குழைச் செயலை உடை மாண் அல்குல்,
ஆய் சுளைப்
பலவின் மேய் கலை உதிர்த்த 20
துய்த்
தலை வெண் காழ் பெறூஉம்
கல் கெழு
சிறுகுடிக் கானவன் மகளே.
விளக்கம்
‘முலைகள் நிறைந்த வளர்ச்சியுற்றன.
கூரிய பற்கள் மின்னுகின்றன. தலையில் கூந்தலும் நன்கு வளர்ந்துள்ளது. குளிர்ந்த தழையாடையையும்
உடுத்தியுள்ளாய். விளையாட்டுத் தோழியருடன்
எவ்விடத்தும் செல்லாதிருப்பாய், மிகப் பழமை வாய்ந்த இந்த மூதூர் வருத்தும் தெய்வங்களை
உடையது. எனவே, நீ காவலுக்கு உட்பட்டிருக்கவேண்டும், வீட்டின் வெளி வாசல் வரைக்கும்
போகக்கூடாது. சிறுமி அல்ல நீ, அறிவுள்ள சிறுமகளே!, இளம்பெண் பருவத்தில் வெளியில் சென்றாயே” என்று நான் கூற, நல்ல
இல்லத்தின் அரிய கட்டுக்காவலையும் மீறி, தன் மனமாற்றத்தை வீட்டார் அறிந்துவிடுவர் என்று
அஞ்சி, வலையைக் கண்ட பெண்மானைப் போலத் தப்பி ஓடி, தோல்வியையே அறியாத வேலை உடைய இளங்காளையொடு
என் மகள் இந்த வழியே சென்றுவிட்டாள்; வழிப்பறிக்
கள்வர்கள் பசுக்களைத் தொழுவை உடைத்துக் கொண்டு செல்ல, அவர்களின் பின்னே துரத்திச்செல்வோர்
ஆரவாரிப்பது போல, அங்குமிங்கும் ஓடி, அவளைத் தேடிச் செல்கின்றேன். இவ்விடத்தில் உன்னைக்
கண்டதால் கேட்கின்றேன். பொன் சரட்டில் புலிப்பல் கோத்த ஒற்றைத் தாலியையும், செழித்த
அசோகத் தளிரால் ஆன தழையுடை அணிந்த கீழிடுப்பையும் உடைய சிறுகுடியைச் சேர்ந்த கானவன்
மகளாகிய என் மகளை நீ கண்டாயா?” என்று மானிடம் கேட்கின்றாள் செவிலித்தாய்.
பாடல் – 2
பாடியவர் - பரணர்
திணை - குறிஞ்சி
துறை
1.
தலைமகன் சிறைப் புறத்தானாகத்
தோழிக்குச் சொல்லுவனாய்த் தலைமகள் சொன்னது.
2.
தலைவன் சிறைப்புறத்தானாக
அவன் செவியுறுமாறு தோழி தலைவிக்குக் கூறியதும் ஆம்.
துறை விளக்கம்
தலைவன் தன்னைக் காண வருவதற்குப் பல தடைகள் உண்டு என்பதை அவன் சிறைப்புறமாக
இருக்கும்போது தலைவி தன் தோழியிடம் கூறி அறிவுறுத்துகின்றாள்.
பாடல்
இரும்
பிழி மகாஅர் இவ் அழுங்கல் மூதூர்
விழவு
இன்றுஆயினும் துஞ்சாது ஆகும்;
மல்லல்
ஆவண மறுகு உடன் மடியின்,
வல் உரைக்
கடுஞ் சொல் அன்னை துஞ்சாள்;
பிணி கோள்
அருஞ் சிறை அன்னை துஞ்சின், 5
துஞ்சாக்
கண்ணர் காவலர் கடுகுவர்;
இலங்குவேல்
இளையர் துஞ்சின், வை எயிற்று
வலம் சுரித்
தோகை ஞாளி மகிழும்;
அர வாய்
ஞமலி மகிழாது மடியின்,
பகல் உரு
உறழ நிலவுக் கான்று விசும்பின் 10
அகல்வாய்
மண்டிலம் நின்று விரியும்மே;
திங்கள்
கல் சேர்பு கனை இருள் மடியின்,
இல் எலி
வல்சி வல் வாய்க் கூகை
கழுது
வழங்கு யாமத்து அழிதகக் குழறும்;
வளைக்கண்
சேவல் வாளாது மடியின், 15
மனைச்
செறி கோழி மாண் குரல் இயம்பும்;
எல்லாம்
மடிந்தகாலை, ஒரு நாள்
நில்லா
நெஞ்சத்து அவர் வாரலரே; அதனால்,
அரி பெய்
புட்டில் ஆர்ப்பப் பரி சிறந்து,
ஆதி போகிய
பாய்பரி நன் மா 20
நொச்சி
வேலித் தித்தன் உறந்தைக்
கல் முதிர்
புறங்காட்டு அன்ன
பல் முட்டின்றால்
தோழி! நம் களவே.
“நிறையக் கள்ளினைக் குடிக்கும் சிறுவர்கள் ஆடும் இந்த ஆரவாரமுடைய பழமையான
ஊர் திருவிழாக்காலம் இல்லையென்றாலும் உறங்காமல் இருக்கும்; வளமுடைய கடைத்தெருவும் மற்ற
தெருக்களும் உறங்கி ஒலியடங்கிப் போனாலும் பெருத்த ஒலியுடன் கூடிய கொடிய சொற்களைப் பேசும் அன்னை தூங்கமாட்டாள்;
நாம் வெளியே செல்லாமல் நம்மைக் கட்டிவைத்திருக்கிற சிறையைப் போன்ற அந்த அன்னை தூங்கினாலும்,
துயிலாத கண்களையுடைய காவலர்கள் விரைவாகச் சுற்றிக்கொண்டிருப்பர்; ஒளிர்கின்ற வேலினையுடைய
அந்தக் காவலர் துயின்றாலும், கூர்மையான பற்களையும் வலமாகச் சுருண்டிருக்கும் வாலினையும்
உடைய நாய் குரைக்கும்; ஒலிமிக்க வாயினையுடைய நாய் குரைக்காமல் தூங்கிப்போனாலும் பகற்பொழுதின்
வெளிச்சம் போல ஒளியினை உமிழ்ந்து வானத்தில் அகலம் பொருந்திய மதியம் நின்று ஒளிவீசும்;
அந்த மதியமானது மேற்குமலையினை அடைந்து மிகுந்த இருள் படிந்தால் வீட்டு எலிகளை உணவாகக்
கொண்ட வலிமையான வாயினைக் கொண்ட கூகை பேய்கள் திரியும் நள்ளிரவில் நம் உள்ளம் திடுக்கிட்டு
அஞ்சி அழியும்படி குழறும்; பொந்தில் வாழும் அக் கூகைச் சேவல் ஒலியெழுப்பாமல் உறங்கிப்போனாலும்,
வீட்டில் அடங்கிக்கிடக்கும் கோழிச்சேவல் தனக்கே உரித்தான குரலை எழுப்பிக் கூவும்;
இவை எல்லாம் இல்லாமற்போன பொழுது ஒருநாள் அவரை எண்ணி நிலையில்லாமல் தவிக்கும்
நெஞ்சத்தில் இருக்கும் அவர் வராமற்போய்விடுவார்; அதனால், பரல்கள் இடப்பட்ட சதங்கைகள்
ஒலிக்க நல்ல நடையால் பாய்ந்து செல்லும் ஓட்டத்தினையுடைய நல்ல குதிரைகளையும் மதில் அரணாகிய
காவலையுமுடைய தித்தன் என்னும் சோழமன்னனுடைய உறையூரைச் சூழ்ந்துள்ள கற்கள் நிறைந்த காவற்புறங்காடு
போன்ற பல்வேறு தடைகளைக் கொண்டது நம் களவுக்காதல்” என்று தன் தோழியிடம் கூறுகின்றாள்
தலைவி.
பாடல் எண் – 3
பாடியவர்
- பெருங்கடுங்கோ
திணை
- பாலை
துறை - தலைமகன் பிரிவின் கண் வேறுபட்ட தலைமகள் சொல்லியது
துறை விளக்கம்
பொருள் ஈட்டும் பொருட்டுத் தலைவியைப் பிரிகின்றான் தலைவன். பிரிவினைத்
தாங்காத தலைவி தன் தோழியிடம் தன் துயரை விளக்குகின்றாள்.
பாடல்
அறன்கடைப்
படாஅ வாழ்க்கையும், என்றும்
பிறன்கடைச்
செலாஅச் செல்வமும், இரண்டும்
பொருளின்
ஆகும், புனையிழை!' என்று, நம்
இருள்
ஏர் ஐம்பால் நீவியோரே
நோய் நாம்
உழக்குவம்ஆயினும், தாம் தம் 5
செய் வினை
முடிக்க; தோழி! பல்வயின்
பய நிரை
சேர்ந்த பாழ் நாட்டு ஆங்கண்
நெடு விளிக்
கோவலர் கூவல் தோண்டிய
கொடு வாய்ப்
பத்தல் வார்ந்து உகு சிறு குழி,
நீர் காய்
வருத்தமொடு சேர்விடம் பெறாது 10
பெருங்
களிறு மிதித்த அடியகத்து, இரும் புலி
ஒதுங்குவன
கழிந்த செதும்பல் ஈர் வழி,
செயிர்
தீர் நாவின் வயிரியர் பின்றை
மண் ஆர்
முழவின் கண்ணகத்து அசைத்த
விரல்
ஊன்று வடுவின் தோன்றும் 15
மரல் வாடு
மருங்கின் மலை இறந்தோரே.
பாடல் விளக்கம்
- எக்காலத்தும் தவறான வழியில் செல்லாத வாழ்க்கை
- பிறர் வீட்டு வாசலில் சென்று நின்று வேண்டாத சிறப்பு
அவர் சென்றிருக்கும் இடம் சற்று கொடுமையானது. பாற்பசுக்கள் நிறைந்த பாழ்பட்ட நாட்டின் பலவிடங்களிலும்,
அப்பசுக்கள் நீர் உண்ணும் பொருட்டு நீண்ட சீழ்க்கை ஒலி எழுப்பும் கோவலர், தாம் தோண்டிய
கிணற்றினின்றும் வளைந்த வாயினையுடைய பத்தலால் இறைத்த நீர், ஒழுகிச் சென்று சிறுகுழியில்
நிரம்பியது. கதிரவன் காய்ந்தமையால் அந்நீரும் வற்றிக் குழியும் காய்ந்தது.
நீருண்ண வந்த பெரிய யானை நீ்ர இல்லாது சிறிது ஈரத்துடன்
காணப்பட்ட குழியைக் கண்டு வருத்தமுற்றுத் தன் நீர் வேட்கையைத் தணித்துக்கொள்வதற்கு
வேறுஇடம் காணப்பெறாது அக்குழியினை மிதித்துக் கடந்து சென்றது. பின் அங்கு சென்ற பெரிய புலி, யானையின் அடிச்சுவட்டில்
கால்வைத்து நடந்து சென்றது.
யானையின் அடிச்சுவட்டில் பதிந்த புலியின் கால்சுவடானது கூத்தர்களின் மத்தளத்தில் விரல் பதிந்த வடுப்போலக் காணப்படும்.
அத்தகைய கானகத்தே மரலும் வாடுகின்ற இடங்களையுடைய மலையைக் கடந்து நம் காதலர் சென்றுள்ளார்.அவரது பிரிவால் நாம் நோயுற்று வருந்துவோமாயினும், அவர் தமது பொருளீட்டும் வினையியை முடித்தபின் வருவாராக. தாம் வருந்துவதால் தலைவனின் பொருளீட்டும் முயற்சி தடைபடுமோ
என்று கருதிய தலைவி தாம் நோயுற்றாலும் தலைவன் செய்வினை முடிக்கவேண்டும் என்று வாழ்த்தினாள்.
Nattrinai null kuripu
பதிலளிநீக்கு