சனி, 19 ஆகஸ்ட், 2023

தம் நடை நோக்கார், தமர் வந்தவாறு அறியார் - பழமொழி நானூறு

 

பழமொழி நானூறு

பாடல்

தம் நடை நோக்கார், தமர் வந்தவாறு அறியார்,

செந் நடை சேராச் சிறியார்போல் ஆகாது,

நின் நடையானே நட அத்தா! நின் நடை

நின் இன்று அறிகிற்பார் இல்.
விளக்கம்

சிறுமைக் குணமுடையவர் தம் நடத்தையைப் பற்றி எண்ணாமல், தம் சுற்றத்தாரைப் பற்றி அறியாமல், நன்னடத்தையைக் கடைப்பிடிக்காமல் நடந்து கொள்வர். 

இத்தகைய சிறுமையுடையவர் போல நடந்துகொள்ளாமல் நம் பெருமைக்கு ஏற்ற நடத்தையைப் பின்பற்ற வேண்டும். ஏனெனில் நம்முடைய நடத்தையை நம்மைத் தவிர வேறு யார் அறிந்துகொள்ள முடியும்? 

ஆதலால் உயர்ந்த எண்ணம் கொண்டு ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என இப்பாடல் வலியுறுத்துகின்றது.

 

நிலத்துக்கு அணியென்ப நெல்லும் கரும்பும் - நான்மணிக்கடிகை

 

நான்மணிக்கடிகை

பாடல்

நிலத்துக்கு அணியென்ப நெல்லும் கரும்பும்

குளத்துக்கு அணியென்ப தாமரை பெண்மை

நலத்துக்கு அணியென்ப நாணம் தனக்கு அணியாம்

தான்செல் உலகத்து அறம்

விளக்கம்

  • பசுமையாகக் காணப்படும் நெல்லும், கரும்பும் வயலுக்கு அழகைத் தருகின்றன. 
  • நீர் நிறைந்த குளத்திற்குத் தாமரைக் கொடியின் இலையும் மலரும் அழகைத் தருகின்றன.
  • பெண்மைக்கு அழகு நாணமுடைமை. 
  • அதுபோல பிறருக்குச் செய்கின்ற அறச் செயல்கள்  ஒரு மனிதனுக்கு அழகைத் தருகின்றன.

குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும் - நாலடியார்

 

நாலடியார்

கல்வி

பாடல்

குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்

மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து

நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்

கல்வி அழகே அழகு.

விளக்கம்

நம் தலையில் உள்ள முடிகளைச் சீர்ப்படுத்துவதால் வருகின்ற அழகும், கரையிட்ட (border) ஆடையை அணிவதால் உண்டாகும் அழகும், மஞ்சள் பூசுவதால் உண்டாகின்ற அழகும் உண்மையான அழகல்ல. அவை யாவும் புறத்தே உள்ள அழகை மட்டுமே வெளிப்படுத்துகின்றன. மாறாக, அறநெறியில் நடந்து, நடுவுநிலைமையோடு வாழ்கின்றோம் என்ற பெருமிதத்தைத் தருகின்ற கல்வியே உண்மையான அழகாகும். அது ஒன்றே அகத்தில் அழகைத் தரக் கூடியதாகும்.