புதன், 11 அக்டோபர், 2023

சமயக் காப்பியங்கள்

சமயக் காப்பியங்கள்

1. கம்பராமாயணம்

கம்பராமாயணத்தைத் தமிழில் இயற்றிய பெரும் புலவர்  கம்பர். அவரது கவிச்சிறப்பு தமிழிலக்கிய வரலாற்றில் தலை சிறந்ததாகப் போற்றப்படுகிறது. வடமொழியில் வால்மீகி முனிவர் இயற்றிய இராமாயணத்தைத் தமிழில் இராமகாதையாகப் படைத்தார் கம்பர். இக்காப்பியம் கம்பநாடகம், கம்ப சித்திரம் என்ற வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன. இந்நூலில், பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம்  ஆகிய ஆறு காண்டங்களும், 113 படலங்களும், 10,500க்கும் மேற்பட்ட பாடல்களும் இடம்பெற்றுள்ளன.

கம்பர்

கம்பர் சோழநாட்டில் திருவழுந்தூரில் பிறந்தவர். தந்தையார் பெயர் ஆதித்தன். காளியின் அருளால் கவி பாடும் ஆற்றல் பெற்றவர். இவரது காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டு எனவும் கி.பி.12ஆம் நூற்றாண்டு எனவும் கூறப்படுகின்றது. இவரை ஆதரித்தவர் திருவெண்ணெய் நல்லூரில் வாழ்ந்த சடையப்ப வள்ளல் ஆவார். தம்மை ஆதரித்த வள்ளலைக் கம்பர் தம் காப்பியத்தில் பத்து இடங்களில் பாடியுள்ளார். இராமகாதையைத் தவிர ஏர் ஏழுபது, திருக்கை வழக்கம், சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.

2.பெரியபுராணம்

பெரிய புராணம் என்னும் நூல் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் என்பவரால் இயற்றப்பட்டது. சைவ சமயத்தின் பெருநூலாக இந்நூல் கருதப்படுகிறது. சுந்தரமூர்த்தி நாயனார் எழுதிய திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொடர் திருவந்தாதி ஆகியவற்றை மூல நூல்களாகக் கொண்டும், சேக்கிழார் பல ஊர்களுக்குச் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் ஆக்கப்பட்டது. இதைத் திருத்தொண்டர் புராணம் என்றும் கூறுவர். இந்நூல் 2 காண்டங்களையம் 13 சருக்கங்களையும், 4253 விருத்தப்பாக்களையும் கொண்டுள்ளது. 63 நாயன்மார்களின் வரலாற்றையும், 9 தொகையடியார்களின் வரலாற்றையும் கூறுகின்றது. பன்னிரு திருமுறைகளுள் பன்னிரண்டாவது திருமுறையாக வைத்துப் போற்றப்படுகிறது.

சேக்கிழார்

இந்நூலை இயற்றியவர் சேக்கிழார். இவர் தொண்டை மண்டலத்தில் புலியூர்க் கோட்டத்துக் குன்றத்தூரில் வேளாளர் மரபில், சேக்கிழார் குடியில் தோன்றிவர். இயற்பெயர் அருண்மொழித் தேவர். சோழநாட்டை ஆண்ட குலோத்துங்கச் சோழன், சேக்கிழாருக்கு உத்தம சோழப் பல்லவன் என்ற பட்டம் கொடுத்துத் தன் அமைச்சராக்கிக் கொண்டான். இவ்வேந்தனது வேண்டுகோளுக்கிணங்கி பெரியபுராணத்தை இயற்றினார் சேக்கிழார். இவரது காலம் கி.பி. 12ஆம் நூற்றாண்டின் முற்பகுதி.

3.சீறாப்புராணம்

முகமது நபியின் வரலாற்றைப் பாடும் இசுலாமியக் காப்பியமாகும். இக்காப்பியத்தை இயற்றியவர் உமறுப்புலவர். நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினைக் கம்பர் போன்று பாடவேண்டும் என்ற விருப்பம் கொண்டு, தமிழ் இலக்கண இலக்கிய மரபுகளை மீறாமல் காப்பியமாகப் படைத்தவர். சீறா என்பது சீரத் என்னும் அரபுச் சொல்லின் திரிபாகும். இது வரலாறு என்னும் பொருளை உடையது. இந்நூலில் விலாதத்துக் காண்டம், ஹிஜரத்துக் காண்டம், நுபுவத்துக் காண்டம் என்ற மூன்று காண்டங்கள் அமைந்துள்ளன. 5027 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

உமறுப்புலவர்

இந்நூலின் ஆசிரியரான உமறுப்புலவரின் இயற்பெயர் செய்யது காதர் மரைக்காயர். வள்ளல் சீதக்காதி என்பவரால் ஆதரிக்கப்பட்டவர். உமறுப் புலவரின் ஆசான் கடிகை முத்துப் புலவர் ஆவார்

4.இயேசு காவியம்

இக்காப்பியம் இயேசு கிறிஸ்துவின் வரலாற்றைக் கவிதை வடிவில் கூறுகின்றது. இந்நூலை இயற்றியவர் கவிஞர் கண்ணதாசன். திருச்சி கலைக்காவிரி என்ற அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க இக்காவியத்தைப் படைத்தார் என்பர். குற்றாலத்திலும், திருச்சியிலும் பல நாட்கள் அவர் தங்கியிருந்து, கிறித்துவ இறையியல் அறிஞர்கள் பலர் உடனிருந்து துணை செய்ய இக்காவியத்தை இயற்றினார். 1982ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் நாள் வெளியிடப்பட்டபோது, அன்றைய தமிழக முதல்வர் திரு எம்.ஜி.இராமச்சந்திரன் இந்நூலின் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். இந்நூல் ஐந்து பாகங்களைக் கொண்டுள்ளது.

கண்ணதாசன்

கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. இவர் காரைக்குடியில் உள்ள சிறுகூடல் பட்டி என்ற ஊரில் பிறந்தவர். இவரது பெற்றோர் சாத்தப்பன் செட்டியார், விசாலாட்சி ஆச்சி. ஒரு பத்திரிக்கை ஆசிரியர் பணிக்கு சென்றபோது அவர் வைத்துக் கொண்ட புனைப் பெயர் கண்ணதாசன். இவர் புகழ் பெற்ற திரைப்படப் பாடலாசிரியர். சிறந்த கவிஞர். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர்.  சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் "அரசவைக் கவிஞராக" இருந்தவர். 

  ஆட்டனத்தி ஆதிமந்தி, இயேசு காவியம் முதலான காப்பியங்களையும், ஈழத்துராணி, ஒரு நதியின் கதை, கண்ணதாசன் கதைகள், பேனா நாட்டியம், மனசுக்குத் தூக்கமில்லை முதலான சிறுகதைகளையும், அரங்கமும் அந்தரங்கமும், கடல் கொண்ட தென்னாடு, சேரமான் காதலி முதலான உரைநடை நூல்களையும் இயற்றியவர். இவருடைய அர்த்தமுள்ள இந்து மதம் என்ற இந்து சமய நூல் மிகவும் புகழ்ப் பெற்றது.

 5.இராவண காவியம்

இராவணகாவியத்தை இயற்றியவர் புலவர் குழந்தை. இக்காப்பியம் தமிழ்க் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம், பழிபுரி காண்டம், போர்க் காண்டம் - என ஐந்து காண்டங்களையும், 57 படலங்களையும், 3100 பாடல்களையும் கொண்டுள்ளது. இராவணனைக் காவியத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டுள்ளது.

புலவர் குழந்தை

இந்நூலின் ஆசிரியர் 1906 ஆம் ஆண்டில் முத்துசாமிக் கவுண்டருக்கும், சின்னம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இயற்கையாகவே இளமையிலேயே கவி பாடும் ஆற்றல் உடையவராகத் திகழ்ந்தார். ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் 39 ஆண்டுகள் பணியாற்றினார். தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். விதவை மணம், கலப்பு மணம், சீர்த்திருத்த மணம் ஆகியவற்றை முன்னிறுத்தி நடத்தினார். வேளாண் வேதம் என்னும் மாத இதழை நடத்தினார். 

 

 

 

 

 


சனி, 7 அக்டோபர், 2023

தீக்குச்சி

 

 தீக்குச்சி

கவிஞர் அப்துல் ரகுமான்

 

தீக்குச்சி   

விளக்கை ஏற்றியது. 

எல்லோரும்

விளக்கை வணங்கினார்கள்.

பித்தன் 

கீழே எறியப்பட்ட 

தீக்குச்சியை  வணங்கினான்.

ஏன் தீக்குச்சியை

வணங்குகிறாய்?”

என்று கேட்டேன்.  

ஏற்றப்பட்டதை விட

ஏற்றி வைத்தது

உயர்ந்ததல்லவா என்றான்.

அவன் மேலும் சொன்னான்

தீக்குச்சிதான் பிரசவிக்கிறது

விளக்கோ வெறும் காகிதம்!

தீக்குச்சி பிச்சை போடுகிறது

விளக்கோ வெறும் பிச்சைப் பாத்திரம்

தீக்குச்சி

ஒரே வார்த்தையில் பேசிவிடுகின்றது

விளக்கோ வளவளக்கிறது!

விளக்கம்

தீக்குச்சி விளக்கை ஏற்றியது. அனைவரும் தீபத்தை வணங்கினர். பித்தன் மட்டும் தீபத்தை ஏற்றுவதற்கு மூலகாரணமாகிய தீக்குச்சியை வணங்கினான். தீபத்தை வணங்குவதை விட்டு தீக்குச்சியை ஏன் வணங்கினாய் என்று கேட்டதற்கு, “ஏற்றப்பட்டதை விட ஏற்றியது உயர்வானது” என்று பித்தன் பதில் கூறுகின்றான். மேலும், “தீக்குச்சி நெருப்பை உருவாக்குகின்றது. இன்னும் சொல்லப்போனால் நெருப்பைப் பிச்சையிடுகின்றது. விளக்கு நெருப்பைப் பெறுகின்ற பிச்சைப் பாத்திரமாகின்றது. தீக்குச்சி சில நிமிடங்கள் வாழ்ந்து தன் ஒளி என்னும் மொழியால் பேசி அளவாகப் பேசுகின்றது. விளக்கோ தன் அறியாமையால், அரைகுறை அறிவால் பேசிக்கொண்டே நேரத்தை வீணடிக்கின்றது” என்று கூறுகின்றான்.

    இக்கவிதை பிறர் வாழ்வதற்காகத் தன்னைத் தானே தியாகம் செய்து கொள்பவர்களின் சிறப்பை எடுத்துரைப்பதாக அமைகின்றது. 

கட்டை விரல் - அண்ணாதுரை

 

கட்டை விரல் - அண்ணாதுரை

(சுருக்கம்)

ஏகலைவன்:

ஏகலைவன் வேடர் குலத்தைச் சேர்ந்தவன். தாழ்ந்த குலத்தைச் சார்ந்தவன் என்றாலும் நல்ல பண்புகள் பல பெற்றவன். துரோணாச்சாரியாரை நேரில் காணாவிட்டாலும் தன் மனதில் குருவாக நினைத்துக் கொண்டவன். அவன் வில் வித்தையில் வல்லவன்.

அர்ஜுனனின் கோபம்:

இதைக் கேட்ட அர்ஜுனன் தன் குருவான துரோணாச்சாரியாரிடம் ‘தாங்கள் எனக்கு மட்டுமே வில் வித்தையைக் கற்றுக் கொடுத்தீர்கள் என்று நம்பி மோசம் போனேன்’ என்று கோபம் கொண்டான். குரு சீடன் உறவே இதனால் முறிந்துபோய் விடுமோ என்று அஞ்சிய குரு அவன் கட்டளையை ஏற்று ஏகலைவனை வீழ்த்த எண்ணினார்.

குரு - ஏகலைவன் சந்திப்பு:

ஏகலைவனைச் சந்தித்த அவர் அவனது குரு பக்தியைக் கண்டு வியந்தார். அவனைச் சோதிக்க விரும்பி ‘ஏகலைவா நீ என்னை குரு என்று அழைக்கிறாய். ஆனால் நான் உனக்கு சிட்சை கொடுத்ததில்லை. நீயும் எனக்குக் குரு காணிக்கை தரவில்லை’ என்று கூறினார். உடனே ஏகலைவன் ‘குருவே தாங்கள் கேட்கும் காணிக்கை எதுவாயினும் நான் தருவேன்’ என்று பணிவுடன் கூறினான். அதைக் கேட்டு சிரித்த குரு ‘உன் வாய் வார்த்தையில் நான் மயங்க மாட்டேன். நீ தர முடியாத காணிக்கையை நான் கேட்பேன். பின்பு அதை தரமுடியாது நீ வருத்தம் கொள்ள நேரிடும்’ என்று எச்சரித்தார். அது கேட்ட ஏகலைவன் ‘இல்லை குருவே தாங்கள் கேட்கும் எந்தக் காணிக்கையையும் நான் தருவேன்’ என்று உறுதி கூறினான்.

கட்டை விரல் காணிக்கை:

 ‘அப்படியானால் குரு காணிக்கையாக உன் கட்டைவிரலை அறுத்துக் கொடு’ என்று கேட்டார். அது கேட்ட ஏகலைவன் ‘சுவாமி இன்னும் அரை மணி நேரத்தில் வந்து விடுகின்றேன்’ என்று கூறிச் சென்று நீர் எடுத்து வந்து தன் குருவின் பாதங்களைக் கழுவி ‘இதோ என் காணிக்கை’ என்று தன் வலது கட்டைவிரலை அறுத்து அவர் பாதங்களில் வைத்தான். அவன் செயலைக் கண்டு திகைத்த குரு மயங்கி விழுந்தார்.

கதையின் நீதி:

  • ஒரு குற்றமும் செய்யாமலேயே தன் வலதுகைக் கட்டைவிரலை இழந்து தன் குரு பக்தியின் மேன்மையை உலகறியச் செய்தான் ஏகலைவன்.
  • ஆனால் நேர்மையான குருவாக இருந்து அனைத்து மாணவர்களையும் சரிசமமாகப் பார்க்காது ஏகலைவனுக்குத் தெரிந்தே துரோகம் செய்தார் துரோணாச்சாரியார்.
  • தன் பொறாமை எண்ணத்தால் தான் மட்டுமே புகழ் பெற வேண்டும் என்று எண்ணி குருவிடம் ஏகலைவனை வீழ்த்துமாறு கட்டளையிட்டதால் ஏகலைவனை விடத் தாழ்ந்து போனான் அர்ஜுனன்.

ஆசிரியர் கருத்து:

இந்தக் கதையை நாளைய சமுதாயத்தினர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்தக் கதை பின்னாளில் வெவ்வேறு மாற்றங்களைப் பெறலாம்.

  • அர்ஜுனன் பொறாமை குணம் கொள்ளாமல் ஏகலவனைக் கண்டு பெருமை கொள்ளலாம்.
  • கண்ணால் காணாத தன் குருவிற்காக தன் கட்டைவிரலை இழக்கத் தயாரான ஏகலவனைக் கண்டு அவன் கூட்டத்தார் சினம் கொள்கின்றனர். ‘ஏகலைவா நாம் காட்டில் வாழ்வதால் இயல்பாகவே நாம் வில் வித்தையில் வல்லவர்கள். அதை உணராது நீ உன் கட்டைவிரலை இழந்து நம் வேடர் குலத்திற்கு அவமானத்தைச் சேர்க்காதே என அறிவுரை கூறியபோதும், அதை ஏற்காது தன் கட்டைவிரலை இழந்து வந்த ஏகலைவன் மீது கோபம் கொண்டு அவனை வெறுத்து ஒதுக்கலாம்.
  • ஆசிரியர் என்பவர் மாணவர்களின் வாழ்விற்கு வழிகாட்டுபவர் என்ற நிலையிலிருந்து இறங்கி, தன் மாணவனுக்குத் தெரிந்தே துரோகம் செய்த துரோணாச்சாரியரை மக்கள் இழிந்து பேசலாம்.
  • ஆகவே காலம்காலமாக நாம் கூறிக்கொண்டிருக்கும் புராணக் கதைகளை அந்தந்த காலத்திற்குத் தகுந்தாற்போல் சற்று மாற்றியமைத்து நீதி புகட்ட வேண்டியது நம் தலையாய கடமை என்கின்றார் அறிஞர் அண்ணா.