வியாழன், 7 ஆகஸ்ட், 2025

TANSCHE -சேரர் வரலாறு

 

சேரர் வரலாறு

மூவேந்தர்களுள் முதலாவதாக வைத்து எண்ணப்படுபவர்கள் சேரர்களாவர். சேரர்களுக்குத் தமிழ் நிலப்பரப்பில் வரலாற்றுப் பின்னணி சிறிது ஒளிமங்கியே காணப்படுகின்றது. வேற்று நாட்டவர் படையெடுப்பால் தங்கள் தலைநகர் சூறையாடப்பட்டபோதும், கோட்டை கொத்தளங்கள் இடிக்கப்பட்டபோதும், நாட்டின் வளமான மற்ற இடங்களில் மீண்டும் தங்கள் அரசினை நிறுவினர். தங்கள் தலைநகரான வஞ்சியையும், கரூரையும் இழந்த பிறகு, திருவிதாங்கூரை உள்ளடக்கிய வேணாட்டைத் தங்களின் தலைநகராகக் கொண்டு நெடுங்காலம் சிற்றரசாகவே இருந்து வந்துள்ளனர்.

வரலாறு

தமிழகத்தில் சோழர்களும், பாண்டியர்களும் எழுச்சி பெற்ற அளவிற்கு சேரர்கள் எழுச்சி பெறவில்லை. சங்க இலக்கியத்தில் புறநானூற்றில் பல சேர அரசர்கள் குறித்த குறிப்புகள் காணப்படுகின்றன. பதிற்றுப்பத்து என்னும் நூலில், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானைக் குட்டுவன், களங்காய் கண்ணிநார்முடிச் சேரல், கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், செல்வக் கடுங்கோ வாழியாதன், பெருங்சேரல் இரும்பொறை, இளஞ்சேரல் இரும்பொறை ஆகிய மன்னர்களின் சிறப்புகள் பாடப்பட்டுள்ளன. சோழர், பாண்டியர்களுக்கு இணையான புகழை இவர்கள் பெற்றிருந்தனர். எனினும், பல படையெடுப்புளால் தோல்வியுற்ற சேரர்கள் சிற்றரசாக இருந்து, பல்லவ, சோழ, பாண்டியப் பேரரசுகளுக்குக்கீழ் நட்பு பாராட்டியும், திறை செலுத்தியும், சிலரிடம் போரிட்டும் இறுதி காலம் வரையில் சிற்றரசர்களாகவே இருந்து வந்துள்ளனர்.

ஆட்சிப்பகுதி

இன்றைய கேரளமே அன்றைய சேரர்களின் ஆட்சிப்பகுதி ஆகும். தொண்டி துறைமுகமும், வஞ்சி நகரமும் சேரர்களின் முக்கிய நகரப் பகுதிகளாகும். சேர நாடானது குட்டநாடு, குட நாடு, கற்காநாடு, வேணாடு, பூழிநாடு ஆகிய நாடுகளை உள்ளடக்கியதாக இருந்தது. களப்பிரர்களின் ஆட்சிக்குப் பிறகு, வடமொழிக்கலப்பு, பாலி பிராகிருத மொழி ஊடுருவல், ஆரியப் பழக்க வழக்கங்கள் கலந்தமை ஆகியவற்றால் அதீத தாக்கமுற்று நாடும் மொழியும் பெற்ற மாற்றங்களிலிருந்து இன்று வரை மீளவில்லை.

கொங்கு நாடும் சேர நாடும்

பல்லவர்கள், பாண்டியர்கள், கங்கர்கள் ஆகியோர் கொங்கு நாட்டின் மீது படையெடுத்தபடி இருந்தனர். சங்க காலத்திற்குப் பிந்தைய சேரர்கள் பற்றிய செய்திகள் விரிவாகக் கிடைக்கவில்லை. ஆறாம் நூற்றாண்டிலேயே சேர நாட்டில் கிறித்துவ சமயம் கால் ஊன்றத் தொடங்கியது என்பதைக் கிறித்துவ நிலப்பரப்புகள்என்னும் நூல் தெளிவுபடுத்துகின்றது.

பாண்டியர்கள் கி.பி.எட்டாம் நூற்றாண்டின் முடிவு வரை சேரநாட்டு ஆய் அண்டிரன் ஆண்டு வந்த பகுதிகளின்மேல் பலமுறை படையெடுத்தனர். பாண்டிய மன்னன் அரிகேசரி, அவன் மகன் கோச்சடையன் ரணதீரன் இருவரும் ஆய் அண்டிரன் மன்னனைப் போர் செய்து வென்றனர். மாறன் சடையன் வேணாட்டு மன்னனைப் போரில் வென்றது மட்டுமின்றி அவனைக் கொன்று, அவனுடைய யானைகளையும், குதிரைகளையும் கவர்ந்து சென்றான். அதற்குப் பின் சுசீந்திரம், கன்னியாகுமரி ஆகிய பகுதிகள் பாண்டியர்களின் வசமானது.

பக்தி இலக்கிய காலச் சேரர்கள்

சேர அரசர்களான சேரமான் பெருமாள் நாயனார், குலசேகர ஆழ்வார் இருவரும் சமய அடியார்களாக இருந்து வந்துள்ளனர். சேரமான் பெருமாள் நாயனார் சுந்தரரிடம் நட்பு கொண்டிருந்து அவருடன் கயிலை அடைந்தார் என்றும், குலசேகர ஆழ்வார் வைணவ அடியாராக இருந்து சமயத் தொண்டு புரிந்தார் என்றும் புராணங்கள் கூறுகின்றன. இவர்களைத் தொடர்ந்து மார்த்தாண்டவர்மன் என்னும் வேணாட்டடிகள் சிவ பக்தராக இருந்து திருவிசைப்பா ஒன்று பாடியதாகக் குறிப்புகள் உள்ளன. இரவிவர்மன் என்ற மன்னன் கொடுத்த போர் நெருக்கடிக்குப் பயந்து தன் ஆட்சிப் பகுதியை பன்னிரண்டு பகுதியாகப் பிரித்து விட்டு மெக்காவிற்குச் சென்றதாகக் கூறப்படுகின்றது. அவ்வாறு பிரிக்கப்பட்ட பகுதியில், வேணாட்டிகளுக்கு வேணாடும் ஒட்டநாடும் கிடைத்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக