சோழர்கள்
தமிழக வரலாற்றைச் சிறப்பித்த பெருமை சோழர்களுக்கு உண்டு. காவிரிப்பூம்பட்டடினம், பூம்புகார், உறந்தை ஆகிய நகரங்கள் சோழர்களுடைய தலைநகரங்களாக இருந்தன. உறையூர் நகரம், உறந்தை எனவும், கோழியூர் எனவும் வழங்கப்பட்டது.
சோழ மன்னர்கள்
சோழ மன்னர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் விஜயாலயச்சோழன், ஆதித்த சோழன், பராந்தகசோழன், சுந்தரசோழன், ஆதித்த கரிகாலன், இராசராசசோழன், இராசேந்திர சோழன் ஆகியோராவர். தங்கள் அறிவாற்றலாலும், படை பெருக்கத்தாலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களை ஒரு குடையின்கீழ் ஆட்சி செய்தனர். அவர்களின் சிறப்புகளைப் பின்வருமாறு காணலாம்.
விஜயலாயச்
சோழன்
சோழர் பரம்பரையை உருவாக்கிய பெருமை இவரையே சாரும். இவர் முத்தரையர்களை வெற்றி கொண்டு தஞ்சையைக் கைப்பற்றினார். முத்தரையர்களுக்கு உதவி செய்த வரகுண பாண்டியனையும் வென்றான். இவ்வெற்றி அவரின் புகழை உயர்த்தின. சோழர்களின் வலிமையை பெருக்கின.
ஆதித்த சோழன்
விசயாலயனின் மகன் ஆதித்த சோழன். இவர் அரசியல் நுட்பம் தெரிந்தவர். போர் ஆற்றல் மிக்கவர். பாண்டியருக்கும் பல்லவருக்கும் திருப்புறம்பயம் என்னும் இடத்தில் போர் நடைபெற்றது. அப்போரில் ஆதித்த சோழன் பல்லவர்களுடன் இணைந்து போரிட்டு வெற்றி பெற்றார். தன் தந்தை மீட்டுக் கொடுத்த சோழ நாட்டின் ஆட்சியை வலுவாக நிலைநாட்ட முயன்றார். காவிரியின் இருமருங்கிலும் சிவபெருமானுக்காகக் கற்றளிகள் பல எடுத்தார். சோழ நாட்டின் பெரும்பகுதி பல்லவர்களிடம் இருந்ததைக் கண்டு மனம் பொறுக்காமல் பல்லவர்களை எதிர்த்துப் போரிட்டு வெற்றி கண்டார். இவர் இராசகேசரி என்ற விருதை ஏற்றுக் கொண்டார்.
பராந்தகச்
சோழன்
ஆதித்தனை அடுத்து அவன் மகன் முதலாம் பராந்தகன் ஆட்சிக்கு வந்தார். இவருடைய ஆட்சி 48 ஆண்டுகள் நீடித்தது. பராந்தகன் பாண்டியர்களை ஒடுக்கினார். மதுரை கொண்ட கோப்பரகேசரி எனப்பட்டார். கன்னியாகுமரி வரை இவருடைய நாடு விரிவடைந்தது. சைவ மதம் சார்ந்தவராதலால் சிவ ஆலயங்களை எழுப்பினார். வேளாண்மை விரிவடைய நீர்நிலைகளையும், கால்வாய்களையும் உருவாக்கினார்.
கண்டராதித்தன்
முதலாம் பராந்தகனின் வாழ்நாளிலேயே கண்டராதித்தன் சோழ வேந்தன் ஆனார். தமிழகத்து வரலாற்றில் புகழொளி வீசுகின்ற செம்பியன்மாதேவி இவருடைய பட்டத்து அரசியார் ஆவார். செம்பியன் மாதேவி கட்டிய சைவ சமய கோயில்கள் பல. தன் கணவனுடன் இணைந்து சிவத் தொண்டு புரிந்தார். கண்டராதித்தன் பாடிய பாடல்கள் பன்னிரு திருமுறைகளுள் ஒன்பதாம் திருமுறையில் வைக்கப்பட்டுள்ளன. இவருடைய காலத்தில் சோழநாடு சுருங்கிவிட்டது. வடக்கில் இழந்த பகுதிகளை மீட்க முயன்று தோல்வியுற்றார். கண்டராதித்தனுக்குப்பின் அவருடைய தம்பி அரிஞ்சய சோழன் ஆட்சிக்கு வந்து இராட்டிரகூடர்களுடன் போரிட்டு மடிந்தார்.
சுந்தரசோழன்
அரிஞ்சய சோழனின் மகன் சுந்தரசோழன். தன் தந்தைக்கு அடுத்து ஆட்சிப் பொறுப்பேற்றார். ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தன் மகன் ஆதித்த கரிகாலனுக்கு இளவரசு பட்டம் சூட்டினார். தன் மகனின் துணையுடன் பாண்டிய மன்னன் வீர பாண்டியனை வென்றார். தன் மகன் பாண்டியனை எதிர்த்து வெற்றி பெற்றதால் “பாண்டியனின் முடி கொண்ட சோழன்“ என்ற விருது வழங்கி மகிழ்ந்தார். இழந்த வடக்குப் பகுதிகளை மீட்கும் பணியில் வெற்றி கண்டார். சுந்தர சோழனின் அறப்பணிகளையும், வேளாண்மை முன்னேற்றப் பணிகளையும் மக்கள் பாராட்டினர். தன் மகன் ஆதித்தன் எதிர்பாராத சூழ்ச்சியால் கொல்லப்பட்டதை அறிந்து மனம் வருந்தி சிறிது காலம் காஞ்சியில் உள்ள பொன்மாளிகையில் வசித்து அங்கேயே இற்நதார். அதனால் அவர் “பொன்மாளிகை துஞ்சிய தேவன்” என்று அழைக்கப்பட்டார்.
உத்தம சோழன்
சுந்தர சோழருக்குப்பின் கண்டராதித்தருடைய புதல்வன் உத்தமசோழன் ஆட்சிப் பொறுப்பேற்றார். இவருடைய ஆட்சிக் காலத்தில் நாடு அமைதி பெற்றது. ஆட்சித் திறனும் சிறந்த பண்புகளும் உடையவர். ஆனால் பிற்காலத்தில் அரசியல் குழப்பமும், மக்கள் அதிருப்தியும் மிகுந்தது.
முதலாம்
இராசராசசோழன்
உத்தம சோழனுக்குப் பின்பு அவருடைய புதல்வன் அரசுரிமை பெறவில்லை. சுந்தரசோழனின் இரண்டாவது மகன் அருண்மொழி விழாக் கோலத்துடன் அரசுரிமை ஏற்றார். இவர் பல ஆண்டுகள் இளவரசுப் பொறுப்பில் பயிற்சி பெற்றவர். அவருடைய அரசியல் அனுபவமும், பேராற்றலும், நுண்ணறிவும் அவருடைய வெற்றிக்குத் துணை பரிந்தன. சோழர்களின் ஆதிக்கத்தை வடக்கில் நர்மதை வரையிலும், தெற்கில் ஈழம் வரையிலும் பரப்பினார். இராசராசன் என்ற பட்டப்பெயர் ஏற்றுக்கொண்டார். “இராசகேசரி அருண்மொழி” என்றும், “மும்முடிச் சோழன்” என்றும் சில விருதுகளைத் தம் பெயருடன் இணைத்துக் கொண்டார். இவருடைய வருகைக்குப் பின்பு சோழர் வரலாறு ஒரு புதுத்திருப்பத்தைக் கண்டது.
இராசராசரின்
ஆட்சி முறை
மன்னர்களின் பெருமையை விளக்குகின்ற மெய்க்கீர்த்தி இவருடைய காலத்தில்தான் உருவாக்கப்பட்டது. இவர் தரைப்டையையம், கடற்படையையும் பெருக்கினார். சேரர்களின் வலிமையை உடைத்து எறியவும், ஈழத்தின் மீது ஆதிக்கம் செலுத்தவும், மேற்குச் சாளுக்கியர்களை விரட்டியடிக்கவும் அப்படைகள் பெரிதும் உதவின. பாண்டியநாடு, சேரநாடு, ஈழநாடு, சாளுக்கிய நாடு, அரபிக்கடல் தீவு ஆகிய நாடுகளின் மீது போர் தொடுத்து மொபெரும் வெற்றி கண்டார். பரந்த பேரரசை அமைத்த இராசராசன் பேரரசை மண்டலங்களாகவும், மண்டலங்களை வளநாடுகளாகவும், வளநாடுகளை நாடுகளாகவும் பிரித்து ஆட்சி செய்தார்.
சமயப்பணிகள்
இவர் சமயத் திருப்பணிகளில் பெரிதும் ஆர்வம் கொண்டவர் என்பதற்குத் தஞ்சைப் பெருவுடையார் கோயில் சான்றுரைக்கின்றது. வட ஆற்காடு மாவட்டத்தில் மேற்பாடி என்னும் ஊரில் அரிஞ்சயேச்சுவரம் என்னும் கோயிலும், திருமுக்கூடலில் செம்பியன்மாதேவி பெருமண்டபமும் எழுப்பினார். கோயில்களில் சிவனடியார்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் ஆலயங்களில் உள்ள ஓவியங்கள் வழி விளக்கப்பட்டன.
மாபெரும் வெற்றி வீரனாகவும், சிறந்த நிர்வாகியாகவும், அறப்பணியாளனாகவும் சிறந்து விளங்கிய இராசராசன் சிறந்த மன்னர்கள் வரிசையில் வைக்கப்பட்டார். புகழோடு விளங்கிய இராசராசனின் ஆட்சி கி.பி.1014இல் முடிவுக்கு வந்தது.
இராசேந்திரச்
சோழன்
தந்தைக்கு ஏற்ற மகனாக விளங்கிய இராசேந்திரச் சோழன் தனது 25ஆவது வயதில் அரியணை ஏறினார். சேர நாட்டுப் படைபெடுப்பின்போது தந்தையுடன் போரில் ஈடுபட்டார். தளபதியாகப் பணியாற்றி வெற்றி வாகை சூடினார். இராசராசனின் நன்மதிப்புக்கு உரியவரானார். பஞ்சவன் மாராயன் என்னும் விருது பெற்றார்.
இராசேந்திரன் இலங்கை முழுவதையும் வென்று தன் குடைக்கீழ்க் கொண்டு வந்தார். சேரநாடு, சாளுக்கிய நாடு, வடநாடு, கடார நாடு ஆகிய நாடுகளின் மீது போர் தொடுத்து மாபெரும் வெற்றி கண்டார். கடார நாட்டை வெற்றி கொண்டதால் “கடாரம் கொண்டான்“ என்ற விருதுப் பெயர் ஏற்றார். வட நாட்டு வெற்றியின் நினைவாக “கங்கை கொண்ட சோழன்“ என்ற சிறப்புப் பெயர் ஏற்றார். அதனால் கங்கை கொண்ட சோழபுரம் என்ற நகரம் தோன்றியது. அந்த நகரத்தைத் தனது தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்தார். வட இந்திய வெற்றிக்குப்பின் சிவனுக்குக் கோயில் எழுப்ப எண்ணி கங்கை கொண்ட சோழபுரம் என்ற கோயிலைக் கட்டினார். இது தஞ்சைப் பெருவுடையார் கோயிலை ஒத்தது. தான் அடைந்த பல சிறப்புகளால் “முடிகொண்டான்“, “கங்கை கொண்டான்“, “கடாரம் கொண்டான்”, “பண்டித சோழன்“ போன்ற பல சிறப்புப் பெயர்களால் பராட்டப்பட்டார்.
இராசேந்திரச்
சோழனுக்குப்பின்…
இராசேந்திரனுக்குப்பின் இராசாதிராசன் அரியணை ஏறினார். இவர் பாண்டியர்களையம், சேரர்களையும் அடக்கினார். கொப்பம் என்ற இடத்தில் நிகழ்ந்த போரில் கொல்லப்பட்டார்.
இராசாதிராசனுடன் சென்ற அவருடைய தம்பி இரண்டாம் இராசேந்திரன் சாளுக்கியர்களின்மீது பாய்ந்து அவர்களை வென்றார். அதே போர்க்களத்தில் சோழ வேந்தனாக முடிசூட்டிக் காண்டார்.
இரண்டாம் இராசேந்திரனைத் தொடர்ந்து அவன் தம்பி வீர இராசேந்திரன் பதவி ஏற்றார். புத்தமித்திரன் இயற்றிய இலக்கண நூலை இவன் பெயரால் படைத்தான். அதுவே வீர சோழியம்.
வீர இராசேந்திரனுக்குப்பின் அவருடைய மகன் அதிராசேந்திரன் பட்டத்திற்கு வந்தார். பட்டத்திற்கு வந்த சில நாட்களிலேயே பகைவர்களால் கொல்லப்பட்டார்.
அதிராசேந்திரனின் இறப்புக்குப் பின் விசயாலயச்சோழனின் நேர் பரம்பரை ஆட்சி முடிவுக்கு வந்தது.
குலோத்துங்கச்சோழன்
அதிராசேந்திரனுக்குப் பிள்ளைகள் இல்லாததால் சோழ நாட்டில் குழப்பம் ஏற்பட்டது. அக்குழப்பத்தைத் தீர்க்க, வேங்கியில் ஆட்சி செய்து கொண்டிருந்த கீழைச் சாளுக்கிய மன்னன் இரண்டாம் இராசேந்திரன் குலோத்துங்கன் என்ற பெயரில் சோழ வேந்தனாக முடிசூட்டிக் கொண்டார். இவர் இராசராசனின் கொள்ளுப்பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இளமையில் சோழ நாட்டில் வளர்ந்தவர்.
பதவி ஏற்றவுடன் சோழப் பேரரசின் வீழ்ச்சியையும் சிதைவையும் தவிர்த்தார். கீழைச் சாளுக்கிய அரசையும் ஒன்றிணைத்தார். ஈழம், பாண்டிய நாடு, சேரநாடு, கலிங்க நாடு ஆகிய நாடுகளின் மீது போர் தொடுத்து வெற்றி கண்டார்.
வட கலிங்கத்தை ஆண்ட அனந்தவர்மன் குலோத்துங்கனுக்குத் திறை செலுத்த மறுத்தான். வேறு வழியின்றி கலிங்க நாட்டின் மீது போர் தொடுத்தார். கருணாகரத் தொண்டைமான் தலைமையில் பெரியதொரு சோழர்படை கலிங்கம் நோக்கி விரைந்தது. சோழர்களின் கடுமையான தாக்குதலைத் தாங்க முடியாத கலிங்கப்படை புறமுதுகு காட்டியது. கலிங்க மன்னன் ஓடி ஒளிந்து கொண்டான். இந்நிகழ்வை செயங்கொண்டார் என்னும் புலவர் கலிங்கத்துப் பரணி என்ற நூலில் விரிவாகப் பாடியுள்ளார்.
சோழர் நாட்டில் மக்கள் வரியை விரும்பவில்லை என்பதால் வரியைத் தவிர்த்தார். இதனால் “சுங்கம் தவிர்த்த சோழன்” என்ற புகழைப் பெற்றார். இவர் பெரும் சிவபக்தர். பல மொழிகளுக்கும் கலைகளுக்கும் ஆர்வம் காட்டியவர். இராசகேசரி, பரகேசரி, புவனச் சக்கரவர்த்தி, விஷ்ணுவர்த்தன், பராந்தகன், பெருமானடிகள், விக்கிரமச் சோழன், குலசேகர பாண்டியன் குலாந்தகன் உள்ளிட்ட பல விருதுகள் பெற்றார்.
பிற்காலச்
சோழர்களின் வீழ்ச்சி
முதலாம் குலோத்துங்கனுக்குப்பின் அவருடைய புதல்வன் விக்கிரமச் சோழன் முடிசூடினார். இவரை அடுத்து இரண்டாம் குலோத்துங்கன் பதவி ஏற்றார். அதன் பின் இரண்டாம் இராசராசன் பதவிக்கு வந்தார். முத்தமிழ்த் தலைவன் என்று போற்றப்பட்ட இம்மன்னனின் காலத்தில் குறுநில மன்னர்கள் சோழர் அதிகாரத்தைப் புறக்கணித்தனர். அதனால் கலகங்கள் ஏற்பட்டன. இவருக்குப்பின் இரண்டாம் இராசாதிராசன் பதவி ஏற்றார். இவர் காலத்தில் பாண்டிய நாட்டில் அரசுரிமைப் போட்டிகளும் போராட்டங்களும் எழுந்தன. இவருக்குப்பின் மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் இராசராசன், மூன்றாம் இராசேந்திரன் ஆகியோர் பட்டத்திற்கு வந்தபோதிலும் பாண்டியர்களின் வலிமை பெருகியது. சடையவரம் சுந்தர பாண்டியன் சோழர்கள் மீது வெற்றி கண்டு பாண்டியர்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டினார். சோழர்கள் சிதறினர்.
சோழர்களின்
சமூக வாழ்க்கை
படைவலிமை
வலிமையான தரைப்படையும், கப்பற்படையும், யானைப்
படைகளும், குதிரைப்படைகளும் சோழரின் அணிவகுப்பில் சிறப்பிடம் பெற்றன. கைகோளப்படை
தரைப்படையில் சிறப்பிடம் பெற்றது. அனைத்துப் படைகளுக்கும் அரசனே தலைவனாக
இருந்தான்.
கிராமங்களின் நிலை
ஊராட்சி, கிராமசபைகள் ஆகியவை பண்டைய பழக்கவழக்கங்கள்,
அறம், புண்ணியம், பாவம் என்ற சமயச் சார்புள்ள நம்பிக்கைகள் ஆகியவற்றின்
அடிப்படையில் செயல்பட்டு வந்தன.
வலங்கை இடங்கை பூசல்
பிராமணர்கள் வாழ்ந்த இடம் அக்கிரகாரம், அகரம்,
சதுர்வேதி மங்கலம், பிரம்மதேயம் எனும் பெயர்களில் வழங்கப்பட்டன. இவை யாவும்
அவர்களுக்குத் தானங்களாக அளிக்கப்பட்டன. கோயில்களின் நிர்வாகப் பொறுப்புகள்
இவர்களிடம் இருந்தது. பிராமணர்களுக்கு இடையே நடைபெற்ற வலங்கை இடங்கைப் பூசல்,
சோழர்காலம் தொடங்கி ஆங்கிலேயர் காலம் வரை நீடித்து பல்வேறு தீய நிகழ்வுகளுக்கு
இடமளித்தது.
பெண்கள் நிலை
பெண்கள் உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்தது. இராசராசன் காலத்தில் பெண்களும் குழந்தைகளும் சிறுசேமிப்பு செய்யும்
பழக்கம் கொண்டிருந்தனர். இசையிலும் கூத்திலும் வல்லுநர்களாக இருந்த பெண்கள் பலர்
கோயில் திருப்பணிகளில் ஈடுபட்டனர். அவர்களைத் தேவரடியார்கள் என்று அழைத்தனர்.
கோயில்களில் தேவாரம், திருவாசகம் ஓதுவதும், நடனம் ஆடுவதும் அவர்களின் பணியாக இருந்தன.
சாந்திக்கூத்து, ஆரியக்கூத்து, சாக்கைக்கூத்து, தமழக்கூத்து ஆகிய கூத்துகளை
ஆடினர்.
கட்டடக்கலை
நகரங்கள் மிகப் பெரியனவாக, திட்டமிட்டுக்
கட்டப்பட்டவையாக இருந்தன. வானுயர்ந்த கட்டங்கள், வளமனைகள், மாடக்கோயில்கள்,
கற்றளிகள் சோழர் காலத்தில் சிறப்புப் பெற்றிருந்தன. தஞ்சைப் பெருவுடையார்
கோயிலும், கங்கை கொண்ட சோழபுரமும் சோழர்களின் கட்டடக் கலைக்குச் சான்றுரைக்கின்றன.
சமயங்கள்
சைவமும் வைணவமும் தழைத்தோங்கின. எனினும் இவ்விரு
சமயங்களில் சமய வாதமும் நிகழ்ந்தன. சமண புத்த விகாரங்கள் பல நிறுவப்பட்டன.
இலக்கியங்கள்
ஒட்டக்கூத்தர், கம்பர்,
புகழேந்தி, சேக்கிழார் ஆகிய பெரும் புலவர்கள்
சோழர்களுக்குப் பெருமையையும் புகழையும் ஈட்டித் தந்தனர். ஒட்டக்கூத்தர் மூவருலா, தக்கயாகப்பரணி, குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ், அரும்பைத் தொள்ளாயிரம்
ஆகிய நூல்களையும், இராமாயணத்தில் உத்திரகாண்டத்தையும்
பாடியுள்ளார். கம்பர், திருக்கை வழக்கம், ஏர் எழுபது, சிலை எழுபது, சரசுவதி
அந்தாதி, சடகோபர் அந்தாதி, கம்பராமாயணம்
ஆகிய நூல்களை இயற்றினார். கம்பரின் மகன் அம்பிகாபதி, அம்பிகாபதிக்கோவை என்ற நூலைப் பாடியுள்ளார். செயங்கொண்டார் கலிங்கத்துப் பரணி பாடினார். நளவெண்பா, சீவகசிந்தாமணி,
பெருங்கதை போன்ற நூல்கள் தோன்றின. சேக்கிழார் பெரிய புராணம்
பாடினார். பன்னிரு திருமுறைகளும் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்களும் தொகுக்கப்பட்டன. சைவ சித்தாந்த நூல்களும், இலக்கண
உரைகளும் தோன்றின.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக