இணையத் தமிழ்ப்பயன்பாடு
அறிவியலின் வளர்ச்சியால் இன்றைய உலகத்தை கைக்குள் அடக்கிவிட முடிகின்றது. அறிவியலின் அதி நவீன கண்டுபிடிப்பான கணினியே அதற்கு முக்கிய காரணம்.
இணையம்
பல கணினி வலையமைப்புகளின் கூட்டிணைப்பே இணையம் ஆகும். உலகம் முழுவதும் பரந்துள்ள இடைத்தொடர்பு வலையமைப்புகளே இணையம் உருவாக முன்னோடியாக இருந்தன. இன்று மனித வாழ்வில் தகவல் தொடர்பு கூறுகளில்
இணையம் முதன்மையாகத் திகழ்கிறது. மின்னஞ்சல் அனுப்பவதற்கு மட்டுமே
பயன்படுத்தப்பட்ட இணையம், இன்று தரவுதளம் (Database Site), இணையவலைதளம் (Web
Page), இணைய
இதழ் (Internet Journal), இணைய வணிகம் (e-business), இணைய விளையாட்டு, இணைய நூலகம் (Internet Library), இணையவழிக் கல்வி, வலைப்பூக்கள் (Blogs), சமூக வலைத்தளங்கள் (Orkut,
Facebook, Twitter) என பலப் பரிமாணங்கள் கண்டு மனித வளர்ச்சியில் தவிர்க்க
முடியாத அங்கமாகிவிட்டது.
இணையத்தின் பயன்கள்
மின்னஞ்சல், இணைய உரையாடல், காணொளி பார்த்தல், விளையாட்டு, கல்வி என நமக்குத் தேவையான அனைத்தையும் இருந்த இடத்தில் இருந்தே பெற்றுக் கொள்ள இணையம் பயன்படுகின்றது. இணையத்தில் கிடைக்கின்ற தகவல்களின் மூலம் அறிவைப் பெருக்கிக் கொள்ள முடிகின்றது.
கணினியில் தமிழ்
கணினி என்றாலே ஆங்கிலத்தில் இயங்கக்கூடியது
என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். கணினியின்
செயற்பாட்டு மென்பொருள்கள் பெரும்பாலும் ஆங்கில மொழியினைக் கொண்டு
வடிவமைக்கப்படுவதால், கணினியின் செயல்பாடுகள், மற்றும் இணையச் செயல்பாடுகள் ஆங்கில மொழியைச் சார்ந்து
அமைந்துள்ளன. ஒரு கணிப்பொறி பூஜ்யம், ஒன்று (0,1) எண்கள் அடங்கிய இரும (Binary) எண் குறியீடுகளைக் கொண்டுதான் செயல்படுகிறது. அதற்கு
ஆங்கிலமோ, தமிழோ அல்லது வேறெந்த மொழியும் தெரியாது.
ஒரு மொழியை நாம் கணினியில் பயன்படுத்த
வேண்டுமானால், அந்த மொழியின் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு
எண்ணை நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு நிர்ணயிக்கும் முறையை நாம் குறியீட்டு முறை
என்று அழைக்கிறோம். கணினி கணித அடிப்படையில் செயல்படக்கூடிய ஒரு கருவியாகும்.
அவ்வகையில், தமிழ்மொழி கணிதப் பண்புடைய மொழியாக இருப்பதால் கணினியில் தமிழைப் பயன்படுத்துவது சுலபம்.
கணினியில் தமிழை உருவாக்க உலகம் முழுவதிலும்
பரவியுள்ள கணினித் தமிழ் வல்லுனர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இவ்வாறு
பல்வேறு இடங்களில் நடைபெற்ற முயற்சியின் விளைவாய் பல்வேறு தமிழ் எழுத்துருக்களும், அவற்றை இயக்க பல்வேறு விசைப்பலகை முறைகளும் உருவாக்கம்
பெற்றன. இவற்றினை நெறிப்படுத்த பல கருத்தரங்குங்கள், மாநாடுகள் நடத்தி கணினியில் தமிழை வளர்த்தனர்.
இச்சூழ்நிலையில், பலரும் பல விசைப்பலகையைப் பயன்படுத்துவது பெரும் குறையாய்
மாறிப்போனது. இக்குறையைப் போக்க கணினியில் உலக அளவில் ஒரே விசைப்பலகை முறையைப்
பயன்படுத்த 1999-ஆம் ஆண்டு பிப்ரவரி எட்டாம் தேதி சென்னையில்
நடைபெற்ற இரண்டாம் தமிழ் இணைய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவ்விசைப்
பலகை முறையைத் தமிழகத்திலுள்ள அனைத்து மென்பொருள் தயாரிப்பாளர்களின் ஆலோசனையின்படி
தமிழக அரசு வடிவமைத்துத் தந்தது.
இச்சமயத்தில் மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனம் வின்டோஸில் (Windows) தமிழைப் பயன்படுத்த துவங்கிய பின்பே பல்வேறு தமிழ்
மென்பொருள் நிறுவனங்களும், ஆராய்ச்சியாளர்களும் பெரும் எண்ணிக்கையில்
தமிழ் எழுத்து வடிவங்களை கணிப்பொறியில் அளிக்கத் துவங்கினார்கள். கூகுள் (Google) நிறுவனம் அறிமுகப்படுத்திய டிரான்ஸ்லிட்டரேஷன் (Transliteration) முறை தமிழ்ப் பயன்பாட்டை மக்களிடையே கொண்டு சேர்த்தது.
இணையத்தில் தமிழின் தோற்றம்
தமிழ் நாட்டிலிருந்து பல்லாண்டுகளுக்கு
முன்பு வெளி நாடுகளுக்குச்
சென்ற தமிழர்களின் வழித்தோன்றல்கள் இணையத்தின் வளர்ச்சியால்,
தங்களை ஒன்றிணைத்துக் கொள்ள தமிழை இணையத்தில் தோற்றம் பெறச் செய்யும்
முயற்சியில் ஈடுபட்டனர். தங்கள் பாரம்பரியத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும், தமிழ்மொழி, இலக்கியம், வரலாறு, பண்பாடு, கலை ஆகியவற்றைத் தொடர்ந்து கற்றுத் தெளியவும் தமிழ்
இணையதளங்களை உருவாக்க விரும்பினர். உலகின் பல பகுதிகளில் வாழ்ந்துவரும்
கணிப்பொறியில் வல்லமைபெற்ற தமிழர்கள், தமிழைக் கணிப்பொறி மற்றும் இணையப் பயன்பாட்டில்
கொண்டு செல்ல முயன்றனர். அம்முயற்சியின் விளைவே இன்று இணையப் பயன்பாட்டில் தமிழ்
தலைசிறந்து வளர்கிறது.
இணையத்தில் தமிழின் வளர்ச்சி நிலை
ஒரு நாட்டின் மொழியை ஏற்றுக்கொள்ளாத
கணிப்பொறி அந்நாட்டில் இயங்க முடியாது. கணிப்பொறியை ஏற்றுக்கொள்ளாத ஒரு மொழி வாழ
முடியாது என்பது வரலாற்று உண்மையாகிவிட்டது. கணினியில் தமிழ்மொழியின்
பயன்பாட்டிற்கு காரணம் நம் மொழியின் சிறப்பே ஆகும். ஏனெனில் தமிழ்மொழியில்
எழுத்தமைப்பு, ஒலியமைப்பு, சொல்லமைப்பு, தொடரமைப்பு ஆகிய எல்லாவற்றிலும் ஒரு
கட்டுக்கோப்பு இருக்கிறது. இத்தனை சிறப்பினை பெற்றிருப்பதால் கணினியில் தமிழ்
மிகக் குறுகிய காலத்தில் நுழைந்தது. தமிழகத்தை விட்டுத் தொழில் காரணமாக அயல்
நாடுகளுக்குச் சென்ற தமிழர்கள், தமிழைப் பேசவும், கேட்கவும் வழி இல்லாமல் இருந்த நிலையில் இணையம் மூலம்
சந்தித்துக்கொள்ள தமிழில் மின்னஞ்சல்களையும், இணைய இதழ்களையும், இணையத் தளங்களையும் பயன்படுத்தினர்.
இதுபோன்ற ஆரம்பகட்ட முயற்சிகளே இன்று
இணையத்தமிழ் என்ற துறையை வளர்த்தெடுத்தன. தமிழ் எழுத்துருக் குறியாக்க முயற்சிகள் 1980-இன் தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்டன. உலகம் முழுவதிலும்
பல்வேறு தமிழறிஞர்கள் 1984 முதல் 1995 வரை அவரவர்க்கென தனிகுறியீட்டு முறையை அமைத்து
எழுத்துருக்கள், விசைப்பலகைகள் அமைத்து தமிழைக் கணினியிலும், இணையத்திலும் ஏற்றம் பெறச் செய்தனர். இணையத்தில் முதல்
நிலையாகத் தாங்கள் கண்டுபிடித்த தமிழ் எழுத்துருக்கள் மூலமாக தமிழில் மின்னஞ்சல்
அனுப்பினர். பின்னர் இணைய இதழ்களும், இணையத் தளங்களும் இணையத்தில் உருவாகின.
இணையம் தொடர்பான மாநாடுகள் – கருத்தரங்குகள்
தமிழில் இணையத்தளங்கள் செம்மையுற அமைவதற்கு
பல கருத்தரங்குகளும், மாநாடுகளும் நடத்தப்பட்டன. இவை அரசாலும், சில தனியார் அமைப்புகளாலும் நடத்தப்பட்டன.
முதல் தமிழ்க் கணினி கருத்தரங்கு
‘தமிழும் கணிப்பொறியும்’ என்ற தலைப்பில் முதன் முதலில் கணினித்தமிழ்
கருத்தரங்கு 1994-ஆம் ஆண்டு டிசம்பர் 5, 6 தேதிகளில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில்
கணிப்பொறித்துறைப் பேராசிரியர் வெ. கிருஷ்ணமூர்த்தியின் அவர்களின் முன்
முயற்சியால் நடத்தப்பட்டது. தமிழ் எழுத்துருக்கள், சொற் செயலிகள், கணினி கலைச் சொற்கள், மற்றும் விசைப்பலகையைத் தரப்படுத்துதல் ஆகியவற்றை
நோக்கமாகக் கொண்டு இக்கருத்தரங்கு நடத்தப்பட்டன. இணையத்தமிழ் வரலாற்றில்
இக்கருத்தரங்கம் ஒரு திருப்பமாக அமைந்தது.
முதல் உலகத் தமிழ் இணைய மாநாடு
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த
கருத்தரங்கை அடுத்து மூன்று ஆண்டுகள் கழித்து சிங்கப்பூரில் ‘தமிழ் இணையம் 97’ என்னும் பொருளில் முதல் தமிழ் இணைய மாநாடு 1997-ஆம் ஆண்டு மே 17, 18 தேதிகளில் நடைபெற்றது. சிங்கப்பூர் நாங்யாங்
பல்கலைக்கழகப் பேராசிரியர் நா. கோவிந்தசாமியின் முன் முயற்சியால் இம்மாநாடு
நடத்தப்பட்டது. இம்மாநாட்டில் தமிழகம், மலேசியா, இலங்கை, சிங்கப்பூர், ஐரோப்பா, அமெரிக்கா போன்ற பல நாடுகளிலிருந்து தமிழ்
மென்பொருள் வல்லுநர்களும், கணினித்தமிழ் அறிஞர்களும் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில்
இணையத்தளங்களில் தமிழ்ப் பொருண்மைகளை மிகைப்படுத்துதல், விசைப்பலகையைத் தரப்படுத்துதல், தமிழ் எழுத்துருக் குறியீட்டைத் தரப்படுத்துதல், அடுத்த இணைய மாநாடு நடத்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டு
முடிவு செய்தனர்.
இரண்டாவது உலகத் தமிழ் இணைய மாநாடு
இரண்டாவது உலகத் தமிழ் இணைய மாநாடு தமிழக
முதல்வர் கலைஞர் அவர்கள் தலைமையில், நடுவணரசின் அமைச்சராக இருந்த முரசொலி மாறனை
வரவேற்புக் குழுத் தலைவராகக் கொண்டு 1999-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7, 8 தேதிகளில் ‘தமிழ் இணையம் 99’ (Tamil Net 99) என்னும் தலைப்பில் நடத்தப்பட்டது.
இம்மாநாட்டில் விசைப்பலகைத் தரப்பாடு
தொடர்பாகவும், எழுத்துரு தொடர்பாகவும் வழங்கப்பட்ட
கருத்தாய்வுகளைத் தொகுத்து ஒருங்கிணைப்பு செய்ய இரு குழுக்கள் அமைக்கப்பட்டன. இம்மாநாட்டின் மூலமாக ஒரே தமிழ் எழுத்துமுறையாக ‘டாம்’ (TAM) வகையும், ஆங்கில தமிழ் கலப்பு எழுத்துரு முறையாக
‘டாப்’ (TAB) வகையும் அறிமுகப்படுத்தப்பட்டன. தமிழ்
மென்பொருள் ஆராய்ச்சி மானியக்குழு ஒன்று அமைப்பதற்காக தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களுக்காக
இணையம் வாயிலாக உலகத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (Tamil Virtual University) ஒன்றை நிறுவுவதற்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டது, இன்று இப்பல்கலைக்கழகம் ‘tamilvu.org’ என்ற பெயரில் பல்வேறு வளர்ச்சி பெற்று இயங்கிவருகிறது. இம்மாநாடு
தமிழ் இணைய வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்தது.
மூன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு – 2000
மூன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு சிங்கப்பூரில்
நடைபெற்றது. சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் அருண் மகிழ்நன்
ஒருங்கிணைப்பில் இம்மாநாடு 2000-ஆம் ஆண்டு ஜீலை மாதம் 22, 23, 24-ஆகிய நாட்களில் ‘தமிழ் இணையம் 2000’ எனும் தலைப்பில் நடைபெற்றது. இம்மாநாட்டில் ‘உத்தமம்’ –
உலகத்தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் என்று தமிழிலும் INFIT – International Forum for Information Technology in Tamil என்று ஆங்கிலத்திலும் குழுவொன்று
உருவாக்கப்பட்டது.
உத்தமம் குழு உருவான பின்னர் பல்வேறு ஆய்வுப்
பணிக்குழுக்கள் உருவாக்கப்பட்டன. அவை, தமிழ் கலைச்சொல் தொகுப்பு, யூனிகோடு தமிழ் ஆய்வு, இணையத்தள தமிழ் முகவரி வடிவமைத்தல், தமிழ் வரிவடிவக் குறியீட்டுத் தரப்பாடு, ஆங்கில வரிவடிவத் தமிழ்த் தரப்பாடு, தமிழ் எழுத்துரு படித்தறிதல் (Tamil OCR), லினக்ஸில் தமிழ் (Tamil
in Linux), தமிழ் அனைத்து எழுத்துரு 16-பிட்டு தரம் போன்ற ஆய்வுகளை நடத்தி
வருகின்றன. இக்குழுவில் உலகம் முழுவதிலும் வாழும் பல்வேறு தமிழ் கணினி வல்லுநர்கள்
ஒன்றிணைந்தனர். இக்குழு மூலமே இனிவரும் காலங்களில் உலக இணையத் தமிழ் மாநாடுகள்
நடத்தப்படும் என்று முடிவெடுக்கப்பட்டன.
இணையத் தமிழ் மாநாடுகளின் விவரங்கள்
தமிழ் இணைய வரலாற்றில் புரட்சி உருவாக பல்வேறு
இணையத் தமிழ் மாநாடுகள் உதவின. அம்மாநாடுகளில் தமிழ்த்தகவல்
தொழில்நுட்பக் கண்காட்சி உள்ளிட்ட பல பணித்திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டதுடன், தமிழ் யூனிகோடு சிக்கல்கள் தொடர்பாக யூனிகோடு குழும
உறுப்பினர்களோடு கலந்தாய்வு, உலக அளவில் நடத்தப்பட்ட இணையதள வடிவமைப்புப்
போட்டி, இணையவழிக்
கல்வி, மொழிப் பகுப்பாய்வு, தமிழ்த்தரவுகள், மின்னகராதிகள், இணையவழி தமிழ்
கற்றல்-கற்பித்தல், கணினிவழி மொழியியல் ஆய்வுகள், சொற்திருத்திகள், பேச்சு மற்றும் சொற்பகுப்பு ஆய்வுகள், எழுத்து உணரி செயற்பாடுகள், கையடக்க கருவிகளில் தமிழ், தமிழ் ஒருங்குறி ஆகிய தலைப்புகளில் ஆய்வுகள் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இணையவழிக் கருவூலங்கள்
தமிழ் மொழியில் உள்ள இலக்கியம், இலக்கணம், அகராதிகள் முதலானவற்றைப் பற்றிய தகவல்களைப் பெறவும், பதிவிறக்கம் செய்யவும் பின்வரும் இணையதளங்கள் உதவுகின்றன. அவை,
- தமிழ் விக்கிப்பீடியா
- தமிழ்மரபு அறக்கட்டளை
- எண்ணிம நூலகம்
- மின்னகராதி
- வலைப்பூக்கள்
- செய்தியோடைத் திரட்டி ஆகியனவாகும்.
https://education.vikaspedia.in/viewcontent/education/baabafba9bc1bb3bcdbb3-ba4bc6bbeb9fbb0bcdbaabc1b95bb3bcd/b87ba3bc8bafba4bcd-ba4baebbfbb4bcd-