சமூக மறுமலர்ச்சி
ஒரு சமுதாயம் நீண்ட காலம் பல காரணங்களால் பொலிவு இழந்து நிற்கும் போது, தலைவர்கள் பலரின் முயற்சியால் அச்சமூகம் சீர்ப்படுத்தப்பட்டு உயர்வதை சமூக மறுமலர்ச்சி எனலாம்.
பண்டைத் தமிழ்ச் சமூகத்தில், நால்வகை வருணப் பாகுபாடோ, சாதியப்பாகுபாடோ இல்லாமல் தொழில் பாகுபாடு மட்டுமே இருந்தது. கல்வி அனைவருக்குமானது. அரசன் முதல் ஆண்டி வரை அனைவரும் கல்வி கற்றனர். பெண்களும் ஆண்களுக்கு நிகராகப் பல உரிமைகளைப் பெற்றிருந்தனர். ஆண்களுக்கு நிகரான பெண் புலவர்களைத் தமிழ்ச்சமூகம் கொண்டிருந்தது. அரசனுக்குச் சமமாக அரசியும் அரியணையில் அமரும் உரிமைப் பெற்றிருந்தாள். குடும்பத்தை ஆட்சி செய்யும் பொறுப்பு பெண்களிடமே இருந்தது. சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்ற விழுமியம் நடைமுறையில் இருந்தது.
இத்தகைய தமிழ்ச் சமூக விழுமியங்கள் யாவும், பல்லவர்களின் ஆட்சிக் காலத்தில் எற்பட்ட பிறப்பின் அடிப்படையில் உண்டான ஏற்றத்தாழ்வுகள், மக்களிடையே மிகுந்த மூடநம்பிக்கைகள், தமிழர் மீது நடந்த பண்பாட்டுப் படையெடுப்புகள், அயலார் பண்பாட்டையும், மாற்றார் மொழியையம் உயர்வாகக் கருதம் மனப்போக்கு ஆகியவற்றால் வீழ்ச்சி அடைந்தது.
மறுமலர்ச்சிக்கான வித்துகள்
ஆங்கியேர் வருகை, ஐரோப்பியர் மூலம் தமிழகத்திற்கு வந்த சமூக, சமயச் சீர்த்திருத்தங்கள், ஆங்கிலம் கற்ற திராவிட இனத்தவரின் வலிமை ஆகியவை சமூக மறுமலர்ச்சிக்கு வித்திட்டன. சித்தர்கள், வள்ளலார், பாரதியார், பாரதிதாசன் போன்றோரின் பாடல்கள், தந்தை பெரியார், அயோத்திசாதசப் பண்டிதர், திரு.விக ஆகியோரின் எழுத்து பிரச்சாரம் ஆகியவை சமூகத்தில் சீர்த்திருத்தத்தை உண்டாக்கின.
அண்ணா, கலைஞர், நெடுஞ்செழியன் போன்றோர், தங்கள் எழுத்து பேச்சு, நாடகம், திரைப்படம் எனப் பல கருவிகளையும் கைக்கொண்டு சமூகச் சீர்த்திருத்தத்தில் முனைப்புக் காட்டினர். அறிஞர் அண்ணாவின் தொண்டரான எம்.ஜி.ஆர் அவர்கள் திரைப்படத்துறையில் ஆதிக்கம் செலுத்தி சீர்த்திருத்தக் கருத்துகளை மக்களிடையே பரப்பினார். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார், ஜீவா போன்றோர் பொதுவுடைமைக் கொள்கைளை வலியுறுத்தினர். 19, 20ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் தோன்றிய சமூக சீர்த்திருத்த இயக்கங்கள், பகுத்தறிவு இயக்கங்கள், சுயமரியாதை இயக்கங்கள் போன்றவை சமூக மறுமலர்ச்சியைப் பல வகையிலும் தூண்டின. இக்காலத்தில் இதழ்கள், வானொலி, ஒலி பெருக்கி, ஒலி ஒளி நாடாக்கள், திரைப்படம் போன்ற அறிவியல் கருவிகள் பெருகின. இதனால் மக்களிடையே சமூக மறுலர்ச்சி தோன்றத் தொடங்கியது.
சமூக மறுமலர்ச்சியின் வடிவங்கள்
இல்லறம்
பருவம் அடைந்த ஆணும் பெண்ணும் காதலால் இணைவதே இல்லறத்தில் இன்பம் பயக்கும் என்பது தமிழர் கண்ட நெறி.
குழந்தைத் திருமண எதிர்ப்பு
உயர் சாதியினர் குழந்தைத் திருமணம் சாத்திரப்படி அமைந்ததால் மதிப்புடையதாகவும்,
பெருமைக்குரியதாகவும் எண்ணினர். அதனால் 3 வயது பெண் குழந்தைக்கும் 12 வயது ஆண் குழந்தைக்கும்
திருமணம் நடைபெற்றது. அதனைத் தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தவர்களும், கம்யூனிச இயக்கத்தவர்களும்
கடுமையாக எதிர்த்தனர். பெரியார், திரு.வி.க, அறிஞர் அண்ணா போன்றோர் அவர்களுள் சிலராவர்.
இறுதியில் சட்டங்கள் மூலம் குழந்தைத் திருமணம் ஒழிக்கப்பட்டது.
குடும்பநலத்திட்ட
ஆதரவு
நாட்டின் பல்வேறு வளர்ச்சிகளுக்கு மக்கள் தொகைப் பெருக்கம் சிக்கலாக இருந்தமையால்,
குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை அரசு கொண்டு வந்தது. “நாம் இருவர் நமக்கு இருவர்“,
“ஒரு குடும்பம் ஒரு குழந்தை“ போன்ற விளம்பரத் தொடர்கள் செல்வாக்குப் பெற்றன. குடும்பக்
கட்டுப்பாடு திட்டத்தால் பெண்களின் உடல்நலம் காக்கப்பட்டு, குடும்பப் பொருளாதாரம் மேன்மையடைந்தது.
கல்வி வளர்ச்சி ஏற்பட்டது. தமிழ்நாட்டில் பகுத்தறிவுவாதிகளின் பிரச்சாரத்தால் இத்திட்டம்
பெரும் வெற்றி கண்டது.
குலக்கல்வித்
திட்டத்திற்கு எதிர்ப்பு
சாதி என்பது தொழிலோடு தொடர்பு உடையதாக இருந்தது. இந்தச் சாதியினர் இந்தத் தொழிலைத்
தான் செய்ய வேண்டும் என்ற விதி இருந்தது. தென்னிந்திய நல உரிமைக் கட்சி (நீதிக்கட்சி)
1920இல் ஆட்சிக்கு வந்ததும் இட ஓதுக்கீடு, பொதுக் கல்வி முறை, அனைவருக்கும் அரசு வேலை
போன்றவற்றை நடைமுறைப்படுத்தியது. இதனால் சாதிக்கும் தொழில் வர்க்கத்துக்குமான தொடர்பு
அறுபடத் தொடங்கியது. பலர் இதை எதிர்த்தனர்.
1953இல் இராஜாஜி அவர்கள், மதராஸ் மகாணத்தின் அனைத்துத் தொடக்கப் பள்ளிக்கூடங்களுக்கும்
புதிய கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன்படி ஒரு குழந்தை பாதி நாள் பள்ளியில்
கல்வி கற்க வேண்டும். பின் பாதி நாளில் தந்தையின் பாரம்பரிய தொழிலைக் கற்க வேண்டும்.
இதனால் கோயிலில் பணி செய்வோரின் குழந்தை கோயிலிலும், விவசாயக் கூலிகளின் குழந்தை வயலிலும்,
வெட்டியானின் மகன் சுடுகாட்டிலும் தொழில் கற்கச் செல்ல வேண்டி வந்தது. திராவிடக் கழகமும்,
திராவிட முன்னேற்றக் கழகமும் இதனைக் குலக்கல்வித் திட்டம் என்று கூறி எதிர்த்தன.
மணக்கொடை
எதிர்ப்பு (வரதட்சணை)
மணமகனுக்குக் கொடுக்கப்படும் செல்வம் மணக்கொடை ஆகும். செல்வந்தரான பெற்றோர்கள்
பணம் கொடுத்து மணமகனைத் தேடினர். உயர்சாதியினரிடம் இருந்த இந்த வழக்கம் மெல்ல மெல்ல
மற்றவரிடும் பரவியது. வரதட்சணை கட்டாயமானது. இதனால் சமூகத்தில் பல பெண்களுக்குத் திருமணம்
கேள்விக்குறியானது. இதனால் சீர்த்திருத்தவாதிகள் மணக்கொடையை வன்மையாக எதிர்த்தனர்.
வரதட்சணை தடுப்புச் சட்டம் 1961இல் கொண்டு வரப்பட்டது.
கலப்புத்
திருமணம், சாதி திருமணத்திற்கு ஆதரவு
சாதிய அடிப்படையில் திருமணங்கள் நடைபெற்றன. வேற்று சாதியில் திருமணம் செய்வதைப்
பெரும்பாலோனோர் ஏற்கவில்லை. இதனால் காதலர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. சீர்த்திருத்தவாதிகள்
கலப்புத் திருமணத்திற்கும், சாதி மறுப்புத் திரமணத்திற்கும் ஆதரவு தெரிவித்து தீவிர
பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இத்திருமணங்கள் சாதி ஒழிப்புக்குத் துணை நிற்பதாக அவர்கள்
கருதினர். இதனால் அரசு சட்டம் இயற்றி, இவ்வகைத் திருமணங்களுக்குச் சட்ட ஏற்பு அளித்தது.
சீர்த்திருத்தத்
திருமணம் (சுயமரியாதைத் திருமணம்)
தமிழ்நாட்டில் திராவிடச் சிந்தனைகள் மேலோங்கியபோது சடங்கு சம்பிராதயங்களுக்கு எதிர்ப்புகள்
கிளம்பின. சடங்குகள் இல்லாமல் ஐயர் இல்லாமல் தம் குடும்பத்தார் நண்பர்கள் முன்னிலையில்
மாலை மாற்றிக் கொண்டு இல்லறத்தில் ஈடுபட்டனர். இத் திருமணங்களுக்குச் சட்ட ஏற்பு கிடைக்கவில்லை.
1967இல் தி.மு.க. கட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் இத்திருமணத்திற்குச் சட்ட ஏற்பை அளித்தது.
இச்சட்டம் தமிழகத்திற்கு மட்டுமே என்றானது.
பெண்களுக்குச்
சொத்துரிமை
நீண்ட காலமாகப் பெற்றோரின் சொத்தில் பெண்களுக்கு எந்த உரிமையும் இல்லாமல் இருந்தது.
பெண்ணுக்கு அசையா சொத்தில் (வீடு, நிலம்) உரிமை இல்லை. அசையும் சொத்துகளில் (நகை, ஆடு,
மாடு, பொருள்) திருமணமாகிச் செல்லும்போது கொடுப்பதைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற நிலையே
இருந்தது. 1929இல் செங்கல்பட்டில் நடந்த சுயமரியாதை இயக்க மாநாட்டில் தந்தை பெரியார்
அவர்கள் பரம்பரைச் சொத்தில் பெண்களுக்குச் சம பங்கு வேண்டும் என்ற முயற்சியில் தீர்மானம்
கொண்டு வந்தார். இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 1950 இல் பெண்களுக்குச் சொத்துரிமை
வேண்டும் என்று அம்பேத்கர் கொண்டு வந்த முயற்சி நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.
1954இல் இந்து வாரிசுரிமைச் சட்டம் கணவன் இறந்தால் அவரின் மனைவிக்கு மகன்களுடன் பங்கு
உண்டு. எனினும் பரம்பரைச் சொத்தில் மனைவிக்குப் பங்கு இல்லை என்றது. 1989 மார்ச் மாதம்
25ஆம்நாள் தி.மு.க. ஆட்சியின்போது பரம்பரைச் சொத்தில் பெண்களுக்குச் சம பங்கு உண்டு
என்று சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.
2005இல்தான் நடுவண் அரசு பெண்களுக்குச் சொத்துரிமை உண்டு என்று சட்டம் இயற்றியது.
தேவதாசி
முறை ஒழிப்பு
கோவிலின் திருப்பணிகளுக்காகவும், சேவைக்காகவும் சிறுவயதில் பெண்கள் நேர்ந்து விடப்பட்டனர்.
இவ்வாறு நேர்ந்து விடும் முறைக்கு தேவதாசி முறை என்று பெயர். இவர்கள் இறைவனுக்கு அடிமை
என்ற பொருளில் தேவதாசிகள் எனப்பட்டனர். நாயக்கர் காலத்தில் நூற்றுக் கணக்கில் தேவதாசிகள்
இருந்தனர். பிற்காலத்தில் பெரிய மனிதர்கள் என்ற போர்வையில் இருந்த சிலரால் இவர்களுக்கு
உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல துன்பங்கள் ஏற்பட்டன. இதனை நன்கு அறிந்த சீர்த்திருத்தவாதிகள்
வன்மையாக எதிர்த்தனர். வழக்கம்போல் பழமைவாதிகள் ஆதரித்தனர்.
1930இல் முத்துலெட்சுமி ரெட்டி என்பவர் பெரியாரின் துணையால் சட்டமன்றத்தில் இது
குறித்த சட்ட முன் வரைவைக் கொண்டு வந்தார். ஆனால் நிறைவேற்ற முடியவில்லை. பின் பெரியார்,
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் ஆகியோரின் தீவிர பிரச்சாரத்தால் தேவதாசி முறைக்கு பலரிடமிருந்து
எதிர்ப்புக் கிளம்பியது. இதனால் 1942இல் மதராஸ் தேவதாசி ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
இச்சட்டம் தேவதாசிகளுக்குத் திருமண உரிமையைத் தந்தது. பெண்களைக் கோயில்களுக்கு நேர்ந்து
விடுவதைக் குற்றம் ஆக்கியது.
பெண்கள்
நலத்திட்டங்கள்
தீண்டாமை ஒழிப்பு, கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் பெண்களுக்கு எனத் தனி இட ஒதுக்கீடு,
ஊராட்சி மன்றங்களின் பெண்களுக்கு முப்பது சதவீதம் இட ஒதுக்கீடு, பெண்களுக்குப் பொருளாதாரச்
சுதந்திரம், சாதியின் பெயரால் இழிவுப்படுத்தக்கூடாது போன்ற பலவும் சமூகத்தை மறுமலர்ச்சி
அடையச் செய்தனர்.
இவ்வாறு தமிழ்நாட்டில் சீர்த்திருத்த இயக்கங்களாலும், சீர்த்திருத்தத் தலைவர்களும்
சமூக மறுமலர்ச்சி ஏற்பட்டு தமிழ்ச் சமூகம் தலைநிமிர்ந்து நிற்கிறது.