மொழிப் போராட்டங்கள்
ஓர் இனத்து மக்கள் தம் வாழ்வின் அனைத்து நிகழ்வுகளிலும் தம் தாய்மொழியே இடம்பெற வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு ஆதிக்கம் செலுத்தும் மொழியை எதிர்த்துப் போராடும் போராட்டமே மொழிப் போராட்டம் எனப்படுகின்றது. தமிழ் மொழியின் மீது ஆதிக்கம் செலுத்தும் வடமொழி, இந்தி ஆகிய மொழிகளை எதிர்த்துத் தமிழ்நாட்டில் போராட்டம் நடைபெற்றது.
தமிழ்மொழிக் காப்பிற்கான முன்னெடுப்புகள்
தொல்காப்பியர் காலத்திலேயே வடமொழி தமிழில் கலந்து விட்டதைத் தொல்காப்பிய நூற்பா தெரிவிக்கின்றது. வடவர்கள் தமிழ்நாட்டின் மீது படையெடுத்து வந்து போர் புரிந்தமையைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. வடவரின் படையெடுப்புக்கு ஆட்படாத பாண்டிய நாட்டில் மதுரையில் சங்கம் வைத்துத் தமிழ் வளர்க்கப்பட்டது. அதை முச்சங்களில் தமிழைக் காக்க எடுக்கப்பட்ட முன்னெடுப்பு எனலாம்.
குறிஞ்சிப் பாட்டின் குறிப்பில் ஆரிய அரசனுக்குத் தமிழ் அறுவுறுத்துவதற்குக் கபிலர் பாடியது என்று கூறியுள்ளமையும் தமிழ்ப் பண்பாட்டை நிலை நிறுத்தும் முன்னெடுப்பு ஆகும்.
கம்பர் தம் கம்பராயமாணத்தில் தசரதன் – தயரதன், அகஸ்தியர் – அகத்தியர், தூஷணன் – தூடணன், கௌசல்யா – கோசலை எனத் தமிழ்ப்படுத்தி இயற்றியிருப்பதும் தமிழ்மொழி காக்கும் செயலே ஆகும்.
கி.பி.12 – 15ஆம் நூற்றாண்டில் வடமொழிக் கலப்பு அதிகமானதால், உரையாசிரியர்கள் பழந்தமிழ் இலக்கண இலக்கியங்களுக்கு உரை எழுதித் தமிழைக் காத்தனர்.
இவை யாவும் மொழிப் போராட்டங்கள் அல்ல எனினும், இவை பிற்காலத்தில் மொழிப்போராட்டம் தோன்ற அடித்தளம் இட்டன எனலாம். மொழிப் போராட்டத்திற்கான முன் நிகழ்வுகள்
கி.பி.18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுவாமிநாத தேசிகர் தமிழ்மொழி குறித்து இழிவுபடுத்தியது, தமிழ்ப் புலவர்களிடையே கோபத்தை மூட்டியது.
1856இல் கால்டுவெல் என்ற அறிஞர் திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலில் தமிழ்மொழி வடமொழியிலிருந்து தோன்றியது அன்று. அது தனித்து இயங்கும் ஆற்றல் பெற்றது என்று ஆராய்ந்து நிலைநாட்டினார். இது தமிழ் அறிஞர்களைத் தலைநிமிரச் செய்தது. பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை தமிழ்த்தாய்க்கு இறைவணக்கம் பாடினார்.
1920ஆம் ஆண்டு கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் தமிழைச் செம்மொழியாக்க வேண்டும் என்று தமிழவேள் உமா மகேஸ்வரன் தீர்மானம் கொண்டு வந்தார்.
மறைமலை அடிகள், தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தார். பரிதிமாற் கலைஞர் உள்ளிட்ட பலரும் தமிழுக்காக உழைத்தனர்.
மொழிப்போராட்டங்கள்
மறைமலை அடிகள், பரிதிமாற் கலைஞர், திரு.வி.க போன்ற அறிஞர் பெருமக்களின் அரிய முயற்சியால் வடமொழியின் ஆதிக்கம் குறையத் தொடங்கியது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியில் வட இந்தியர்களின் செல்வாக்கும் இந்தி ஆதிக்கமும் அதிகமானது. மொழிப் போராட்டம் இந்தி எதிர்ப்புப் போராட்டமாக மாறியது. மொழிப் போராட்டத்தை, இந்திய விடுதலைக்கு முந்தைய மொழிப் போராட்டம் என்றும், இந்திய விடுதலைக்குப் பிந்தைய மொழிப் போராட்டம் என்றும் இரு வகையாகப் பிரிக்கலாம்.
இந்திய விடுதலைக்கு முந்தைய மொழிப் போராட்டம்
இந்திய விடுதலைக்கு முந்தைய மொழிப் போராட்டம் 1938ஆம் ஆண்டு அன்றைய முதல்வராக இருந்த இராஜாஜி என்பவர் கொண்டு வந்த இந்திமொழி கட்டாயச் சட்டத்தால் ஏற்பட்டது. இதை எதிர்த்து தலைவர்களும் மக்களும் போராடினர். தனித்தமிழ் இயக்கத்தைச் சேர்ந்த அறிஞர்களும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். அறிஞர்களும் தலைவர்களும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறையில் உயிர் நீத்த தாளமுத்து, நடராசன்
கைது செய்யப்பட்ட பலர் சிறைச்சாலையில் பல கொடுமைகளுக்கு ஆளாகினர். அவர்களுள் தாளமுத்து, நடராசன் என்ற இருவரின் உடல் நலம் மிகவும் மோசமானது. மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தால் விடுதலை செய்கிறோம் என்ற காவல்துறையின் கோரிக்கையை இருவரும் ஏற்கவில்லை. இதனால் நடராசன் சிறையிலேயே உயிர் விட்டார். அடுத்து சில மாதங்களில் தாளமுத்துவும் சிறையிலேயே உயிர் துறந்தார். தேவநேயப் பாவாணர் “கட்டாய இந்திக் கல்விக் கண்டனம்” என்ற நூலை எழுதினார். மக்கள் போராட்ட முயற்சியால் 1940இல் இச்சட்டத்தைத் திரும்பப் பெற்றது இராஜாஜி அரசு.
விளைவுகள்
தமிழ் உணர்ச்சி மக்களிடம் பரவியது.
தமிழ்மொழி உயர்ந்த நிலைக்கு உயர்ந்தது.
பெரியாரின் சீர்த்திருத்தக் கருத்துகளுக்கு மக்கள் ஆதரவு அளித்தனர்.
இந்திய விடுதலைக்குப் பிந்தைய மொழிப் ரோட்டங்கள்
1948இல் ஆந்திரம், கேரளா, கர்நாடகா பகுதிகளில் இந்தி கட்டாயம் என்றும், தமிழகப் பகுதிக்கு மட்டும் இந்தி விருப்பப் பாடம் என்றும் சட்டம் கொண்டு வந்தது காங்கிரஸ் அரசு. இதற்கும் எதிர்ப்புகள் கிளம்பியதால் தமிழ்நாட்டில் மட்டும் விலக்கிக் கொள்ளப்பட்டது.
1963இல் கொண்டு வரப்பட்ட ஆட்சி மொழிச் சட்டத்தில், 1965 ஆண்டு முதல் இந்தியுடன் ஆங்கிலமும் ஆட்சிமொழியாகத் தொடரலாம் என்று கூறப்பட்டது. தொடரலாம் என்பதற்குப் பதில் தொடரும் என்று கூறியதால் எதிர்ப்புக் கிளம்பியது.
இதன் விளைவாக 1965இல் மிகப்பெரிய மொழிப் போராட்டம் உருவானது.
மறைமுகக் காரணங்கள்
தமிழ் மக்களின் வாழ்வியலில் இருந்து தமிழை மெல்ல மெல்ல ஒதுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றன.
கோயில்களில் இறைவன் இறைவி பெயர்கள் வடமொழியில் மாற்றப்பட்டன.
இறைவன் முன் ஓதப்படும் மந்திரங்கள் சமஸ்கிருதத்தில் மாறின.
மக்கள் கூடி வாழும் ஊர்ப்பெயர்கள் சமஸ்கிருதமானது.
வணிகக் கடைகளின் பெயர்கள் ஆங்கிலத்தில் இடம்பெற்றன.
திருமணச் சடங்குகளில், இசைமேடைகளில் ஆடல் கலைகளில், பயிற்று மொழியில், சட்ட மொழியில் சமஸ்கிருதம், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகள் முன்னிறுத்தப்பட்டன.
இவை யாவும் தமிழ் ஆர்வலர்களின் உள்ளத்தில் துன்பத்தை ஏற்படுத்தின.
உண்மைக் காரணம்
1963ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஆட்சிமொழிச் சட்டத்தில் தொடரலாம், தொடரும் என்ற சொற்கள் காரணமாக எழுந்த விவாதம் நாடாளுமன்றத்தில் பெரியதாக வெடித்தது. நேரு மறைந்த பின்னர், லால்பகதூர் சாஸ்திரி மும்மொழித் திட்டத்தைக் கொண்டு வந்தார். தமிழ்நாட்டில் பக்தவச்சலம் முதல்வராக இருந்தபோது மும்மொழிச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
போராட்ட நிகழ்வுகள்
இந்திய இரசியலமைப்பு தந்த காலக்கெடு ஜனவரி 26, 1965 ஆகும். இக்காலம் நெருங்க நெருங்க போராட்ட உணர்வு மிகுதியானது. தமிழ்நாட்டில் தி.மு.க தலைமை ஏற்றுப் போராட்டத்தை நடத்தியது.
தமிழ்நாடு முழுவதும் வன்முறைகளும், தீ வைப்பும் இந்தியைத் தார் கொண்டு அழித்தலும், ஊர்வலங்களும் தொடர்ந்தன.
காவல்துறை எச்சரிக்கை, தடியடி, கண்ணீர்ப் புகைகுண்டு வீசுதல், துப்பாக்கிச் சூடு எனப் பல துயரங்கள் நிகழ்ந்தன.
1965ஆம் குடியரசு தினத்தைக் கருப்பு தினமாகக் கொண்டாட தி.மு.க அழைப்பு விடுத்தது.
இப்போராட்டத்தில் கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்றனர்.
அண்ணாதுரை, கலைஞர் கருணாநிதி, மதியழகன், நெடுஞ்செழியன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
காளிமுத்து, நா.காமராசன், விருதுநகர் சீனிவாசன் போன்ற மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சின்னசாமி, சிவலிங்கம், அரங்கநாதன் போன்றோர் தீக்குளித்தனர்.
கீரனூர் முத்து உள்ளிட்டோர் இறந்தனர்.
சிவகங்கை ராஜேந்திரன் போன்றோர் காவலரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாகினர்.
இதனால் வேதனைப்பட்ட அண்ணாதுரை போராட்டத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்தார். ஆனால் மாணவர்கள் தொடர்ந்து முன்னெடுத்தனர்.
போராட்டத்தை அடக்க முடியாமல் அரசு தவித்தது. இறுதியாக இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தியும், ஆங்கிலமும் சமமாகத் தொடரும் என்று நடுவண் அரசு அறிவித்தது. போராட்டம் ஓய்ந்தது.
விளைவுகள்
சாதியாலும் மதத்தாலும் பிளவுபட்ட தமிழர்கள் தமிழால் இணைந்தனர்.
இந்தி எதிர்ப்பு மெல்ல மெல்ல காங்கிரஸ் எதிர்ப்பாக மாறியது.
தி.மு.க. மக்களிடம் பெரும் செல்வாக்கைப் பெற்றது.
தாய்மொழியின் தேவையைத் தென்னிந்திய மாநிலங்கள் நன்கு உணர்ந்தன.
பிற போராட்டங்கள்
1986இல் ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது இந்திக்கு முதன்மை கொடுக்கும் நவோதயா பள்ளிகளை மாநிலங்களில் நிறுவிட முயன்றார். அப்போது தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு ஏற்பட்டது. தலைவர் கருணாநிதி உள்ளிட்ட இரண்டாயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
2014இல் நரேந்திரமோடி பிரதமராக இருந்தபோது அரசு அதிகாரிகள் இந்திக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றார். அதுவும் மொழிப்போராட்டத்திற்கு வழிவகுத்தது.
இன்று முதல்வராக இருக்கின்ற திரு மு.க.ஸ்டாலின் மீண்டும் ஒரு மொழிப் போராட்டத்திற்கு வழிவகுக்காதீர் என்று அறிக்கை விடுகின்றார். இதுவும் மொழிப்போராட்டமாக வெடித்துவிடும் என்னும் எச்சரிக்கையே ஆகும்.
இன்று அறிவியல் முன்னேற்றத்தால் மொழிபெயர்ப்புக் கருவிகள் வந்துவிட்ட பிறகு அவரவர்கள் தத்தம் தாய் மொழியிலேயே பேசலாம். நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவையில் தம் தாய்மொழியிலேயே பேசுகின்றர். அவர்களுடைய பேச்சுகள் உடனடியாக மொழிபெயர்க்கப்படுகின்றன. எனவே, இன்றைய காலத்தில் இந்தித் திணிப்பு தேவையற்றது.