மராட்டியர்
விசயநகர ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பின் மராட்டியர் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தனர். தக்காணத்தில் விசயநகரம் வீழ்ச்சி அடைந்ததை அடுத்து இசுலாமியர் அதன் சுற்றுப் பகுதிகளைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சாசி
பீசப்பூர் சுல்தானின் தளபதியான சாசி (சிவாசியின் தந்தை) கர்நாடகம், தஞ்சை, செஞ்சி, தேவனாம்பட்டினம், பறங்கிப்பேட்டை முதலியவற்றைக் கைப்பற்றினான். கைப்பற்றிய இடங்களுக்கு ஆளுநராக அவனே அமர்த்தப்பட்டான். சுல்தான்களின் ஆதிக்கத்தை உதறித் தள்ளினான். மராட்டிய மொழியை ஆட்சி மொழியாக்கினான். சாசியின் மூத்த புதல்வன் சிவாசி இசுலாமிய அரசுகளுக்கு எதிராக மராட்டியத்தில் மராட்டிய அரசை நிறுவினார். சாசியின் இரண்டாம் மனைவி துர்காபாயையும், அவள் வழி வந்த வெங்காசியையும் புறக்கணித்தார். 1664இல் குதிரை விபத்தில் உயிர் இழந்தார்.
சிவாசி
மராட்டியர் ஆட்சியை விரிவுபடுத்த பிற பகுதிகளின் மேல் படையெடுத்தான் சிவாசி. ஸ்ரீசைலம், திருப்பதி வழியே காஞ்சி, செஞ்சி, வேலூர் முதலிய இடங்களைக் கைப்பற்றினான். பறங்கிப்பேட்டை, திருவதிகை, தேவனாம்பட்டினம், புவனகிரி ஆகியவற்றைக் கைப்பற்றிக் கொள்ளிட ஆற்றின் திருமாலப்பாடியில் முகாமிட்டான்.
வெங்காசி
சாசிக்குப் பிறகு வெங்காசி கர்நாடகப் பகுதியின் ஆளுநராகப் பொறுப்பு ஏற்றான். பீசப்பூர் சுல்தான் மறைந்த பின்னர் வெங்காசி தஞ்சை மீது படையெடுத்து செங்கமலதாசை அகற்றிவிட்டு தஞ்சையில் மராட்டியர் ஆட்சியைத் துவக்கினான். சிவாசியுடன் ஏற்பட்ட பேச்சு வார்த்தையில் வெங்காசி தஞ்சையைத் தர மறுக்க அவனை கைது செய்ய முயன்றார். வெங்காசி தப்பி ஓடினான்.
பின்னர்
சிவாசி செஞ்சியைத் தலைமை இடமாகக் கொண்டு தென்பகுதிகளை நிர்வகிக்கும் பொறுப்பை சாந்தாசியிடம் கொடுத்துவிட்டு வடக்கிற்குத் திரும்பினார். வெங்காசி சாந்தாசியுடன் உடன்படிக்கை மேற்கொண்டு தஞ்சையை மீண்டும் ஆண்டான். இவனுடைய ஆட்சிக் காலத்தில் பெரும் வெள்ளமும், கடல் அரிப்பும் மக்களை வாட்டியது. அதிக வரி வசூலால் மக்கள் அவதிப்பட்டனர். வெங்காசியின் மறைவுக்குப்பின் அவனது மகன் சாசி ஆட்சிக்கு வந்தான்.
சாசி
இவனது ஆட்சிக்காலத்தில் அரசியல் நிலை சிக்கல் நிறைந்து காணப்பட்டது. மதுரையின் சில பகுதிகளை சேதுபதி மற்றும் மைசூர் உடையாருடன் இணைந்து கைப்பற்றினான். முகலாயத் தளபதி தஞ்சையைக் கைப்பற்ற வர, சாசி பெருந்தொகை கொடுத்துத் தப்பினான். சேதுபதிக்கு உதவி செய்து புதுக்கோட்டையைப் பெற்றான்.
திருக்காட்டுப்
பள்ளியையும், அறந்தாங்கியையும் கைப்பற்றினான். மருத்துவமனைகள், சிவில் நீதிமன்றங்களை ஏற்படுத்தினான்.
சரபோஜி
சாசிக்கு வாரிசு இல்லாததால் அவனது தம்பி சரபோசி ஆட்சிக்கு வந்தான். முதலாம் சரபோசி, சிவகங்கையின் தோற்றத்துக்கும், இராமநாதபுரம் ஐந்தாகப் பிரிவதற்கும் காரணமாக இருந்தார். புலவர்களைப் போற்றுவதிலும், கோயிற்பணி செய்வதிலும் ஈடுபட்டார்.
துக்காசி
முதலாம் சரபோசிக்கு வாரிசு இல்லாததால் அவன் தம்பி துக்காசி ஆட்சிக்கு வந்தான். கர்நாடக நவாபின் முன்னேற்றத்தால் தஞ்சை அவருக்குத் திறை செலுத்தியது. இராமநாதபுரத்திலும் புதுக்கோட்டையிலும் இருந்த அரசியல் நிலைகளைப் பயன்படுத்தித் தொல்லைகளைக் கொடுத்தான். இவனுக்குப் பின் தஞ்சை சிலகாலம் முடங்கியது. பிரதாபசிங் ஆட்சிக்கு வந்தபோது நிலைமை சீரானது.
பிரதாப சிங்
அரசியல் நுட்பமும் மக்களின் ஆதரவும் பெற்று தஞ்சையை ஆட்சி புரிந்தான். கர்நாடக நவாப் தஞ்சையைக் கைப்பற்றிப் பிரதாப சிங்குக்கு ஓய்வூதியம் கொடுத்து ஓய்வு பெறச் செய்தான். இதை அறிந்த மராட்டிய மன்னன் சாகு, தன் படையினை அனுப்பி கர்நாடகத்தில் நவாப் ஆட்சியைத் தடுமாறச் செய்தான். பிரதாப சிங் மீண்டும் தஞ்சை அரசன் ஆனான். ஆங்கிலேயர்களுடன் நட்பு கொண்டு தன் நாட்டைக் காப்பாற்றிக் கொண்டான்.
துல்சாசி
இவன் ஆட்சிக் காலத்தில் ஐதர்அலி படையெடுப்பு நடைபெற்றதால், அவர்களுக்கு நான்கு இலட்ச ரூபாயும், நான்கு யானைகளையும் கொடுத்து நாட்டைக் காப்பாற்றிக் கொண்டான். ஆங்கிலேயரின் துணையுடன் தஞ்சையைக் கைப்பற்றினான். அதற்காக, ஆங்கில அரசுக்கு 277 கிராமங்களைப் பரிசாக அளித்தான். இவனது ஆட்சிக் காலத்தில் மக்கள் பஞ்சம் மற்றும் பட்டினியுடன் வாழ்ந்தனர்.
அமர்சிங்
துல்சாசிக்குப பிறகு அவனது மகன் இரண்டாம் சரபோசி சிறுவனாக இருந்தமையால் அமர்சிங் ஆளுநராகப் பதவிக்கு வந்தான். இதனால் ஆங்கில அரசு வரியை மேலும் உயர்த்தியது. மக்கள் வரிச்சுமையால் ஊரைக் காலி செய்துவிட்டுச் சென்றனர். ஆங்கில அரசு வரியைக் குறைத்தது. பிறகு தானே ஆள விரும்பி தஞ்சை அரசன் ஆனான்.
இரண்டாம் சரபோசி
தஞ்சையின் அரசனாக இரண்டாம் சரபோசி ஆட்சிப் பொறுப்பு ஏற்றான். தஞ்சைக் கோட்டையையும் வல்லத்தையும் தான் வைத்துக் கொண்டு தஞ்சை நாட்டின் ஆட்சியை ஆங்கில அரசிடம் ஒப்படைத்தான். தஞ்சை சென்னையுடன் இணைக்கப்பட்டது. இவர்களின் குடும்பத்திற்கு ஓய்வு ஊதியம் வழங்கியது ஆங்கில அரசு.
மராட்டியர் ஆட்சி முறை
வருவாய் அதிகாரிகள் திவான் என்ற பெயரில் அழைக்கப்பட்டனர். பவன பண்டிதர் வாயிலாக விவசாயிகளிடம் இருந்து வரிவசூல் முறையும் நீர்பாசனம் பெறும் வசதியும் இருந்தது. தாபிர் பண்டிதர் உருவாக்கிய அமணி துறை வரித்திட்டம் இவர்கள் ஆட்சியில் அதிகாரிகள், விவசாயிகளைச் சூறையாட வழிவகை செய்தது.
கலை இலக்கியப் பணிகள்
சரபோசி மன்னன், சரசுவதி மகாலினை உருவாக்கி 2200க்கும் மேற்பட்ட சுவடிகள், மருத்துவம், காப்பியம், இலக்கியம், இசை, கட்டடக்கலை, வானியல் தொடர்பான சுவடிகளைத் திரட்டி அடுக்கினார். 1805இல் ஒரு அச்சுக் கூடத்தைச் சரபோசி நிறுவினார். தேவநாகரி எழுத்துகளில் அச்சிடும் தொழில் அதில் நடைபெற்றது.
சாசி மன்னன் காலத்தில் 46 புலவர்கள் வாழ்ந்தனர். இராமபத்திர தீட்சிதர், பாஸ்கர தீட்சிதர் என்ற பெரும் புலவர்கள் வாழ்ந்து வந்தனர். அலூரி குப்பண்ணா என்ற தெலுங்குப் புலவரைத் துல்சாசி ஆந்திர காளிதாசர் என்று அழைத்தார். தமிழ்ப்புலவர்கள் தல புராணங்களும், பக்திப் பாடல்களுக்கு உரைநூல்களும் படைத்தனர். தாயுமானவர், வைத்தியநாத தேசிகர், சுவாமிநாத தேசிகர், சீர்காழி அருணாசலக் கவிராயர் முதலியோர் தஞ்சையில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள் ஆவர்.