செவ்வாய், 13 அக்டோபர், 2020

மரபுக்கவிதை - தமிழன் இதயம்

  

மிழன் இதயம்

கவிஞர் நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை


தமிழன் என்றோர் இனமுண்டுதனியே அவற்கொரு குணமுண்டு;

அமிழ்தம் அவனுடைய வழியாகும் அன்பே அவனுடை மொழியாகும்.


அறிவின் கடலைக் கடைந்தவனாம்அமிர்தத் திருக்குறள் அடைந்தவனாம்;

பொறியின் ஆசையைக் குறைத்திடவே பொருந்திய நூல்கள் உரைத்திடுவான்.


கவிதைச் சுவைகளை வடித்தெடுத்தான் கம்பன் பாட்டெனப் பெயர்கொடுத்தான் ;

புவியில் இன்பம் பகர்ந்தவெலாம் புண்ணிய முறையில் நுகர்ந்திடுவான்.


'
பத்தினி சாபம் பலித்துவிடும்பாரில் இம்மொழி ஒலித்திடவே

சித்திரச் சிலப்பதி காரமதைச் செய்தவன் துறவுடை ஓரரசன்.


சிந்தா மணி,மணி மேகலையும்பத்துப் பாட்டெனும் சேகரமும்,

நந்தா விளக்கெனத் தமிழ்நாட்டின் நாகரி கத்தினை மிகக்காட்டும்.


தேவா ரம்திரு வாசகமும் திகழும் சேக்கி ழார்புகழும்

ஓவாப் பெருங்கதை ஆழ்வார்கள் உரைகளும் தமிழன் வாழ்வாகும்.


தாயும் ஆனவர் சொன்னவெலாம் தமிழன் ஞானம் இன்னதெனும்;

பாயும் துறவுகொள் பட்டினத்தார் பாடலும் தமிழன் பெட்பெனலாம்.


நேரெதும் நில்லா ஊக்கமுடன் நிமிர்ந்திட அச்சம் போக்கிவிடும்

பாரதி என்னும் பெரும்புலவன் பாடலும் தமிழன் தரும்புகழாம்.


கலைகள் யாவினும் வல்லவனாம், கற்றவர் எவர்க்கும் நல்லவனாம்

நிலைகொள் பற்பல அடையாளம் நின்றன இன்னும் உடையோனாம்.


சிற்பம் சித்திரம் சங்கீதம் சிறந்தவர் அவனினும் எங்கேசொல்?

வெற்பின் கருங்கல் களிமண்போல் வேலைத் திறத்தால் ஒளிபண்ணும்.


உழவும் தொழிலும் இசைபாடும்உண்மை ; சரித்திரம் அசைபோடும் ;

இழவில் அழுதிடும் பெண்கூட இசையோ டழுவது கண்கூடு. 


யாழும் குழலும் நாதசுரம் யாவுள் தண்ணுமை பேதமெலாம்

வாழும் கருவிகள் வகைபலவும் வகுத்தது தமிழெனல் மிகையலவாம்.


'
கொல்லா விரதம் பொய்யாமை கூடிய அறமே மெய்யாகும் ;

எல்லாப் புகழும் இவைநல்கும் ;' என்றே தமிழன் புவிசொல்லும்.


மானம் பெரிதென உயிர்விடுவான் மற்றவர்க் காகத் துயர்படுவான் ;

தானம் வாங்கிடக் கூசிடுவான் 'தருவது மேல்' எனப் பேசிடுவான்.


ஜாதிகள் தொழிலால் உண்டெனினும் சமரசம் நாட்டினில் கண்டவனாம் ;

நீதியும் உரிமையும் அன்னியர்க்கும் நிறைகுறை யாமல் செய்தவனாம். 


உத்தமன் காந்தியின் அருமைகளை உணர்ந்தவன் தமிழன் ; பெருமையுடன்

சத்தியப் போரில் கடனறிந்தான் சாந்தம் தவறா துடனிருந்தான்.

 

பாடல் விளக்கம்

நாமக்கல் கவிஞர் தமிழன் இதயம் என்ற கவிதையில் தமிழர்களின் தனித்தன்மை குறித்தும், அவர்தம் மாண்பு குறித்தும், தமிழிலக்கியங்களின் சிறப்பு குறித்தும் விளக்குகின்றார்.

தமிழனின் தனித்தன்மை

தரணியில் தன்னிகர் இல்லாத இனமாகத் தமிழினம் விளங்குகின்றது. தமிழர்கள் யாவரும் பிறருடன் ஒப்பிட முடியாத தனித்தன்மை கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். வாழ்க்கைக்கு இனிமை பயக்கும் அறச்செயல்களைச் செய்வதே தமிழனின் வழி என்றும், அன்பும் இரக்கம் கொண்ட சொற்களே அவனின் மொழி என்றும் சிறப்பிக்கின்றார்.

தமிழனின் இலக்கியங்கள்

அறிவாகிய கடலைக் கடைந்து திருக்குறள் என்ற அமிர்தத்தை அடைந்தவன். ஐம்புலன்களால் உண்டாகும் நிலையற்ற ஆசைகளை விட்டொழித்து பேரின்ப பெருவாழ்வைத் தரும் அறநூல்களை உலகுக்கு அளித்தவன்.

எதுகை, மோனை சந்தநயம், சொல்லின்பம், பொருளின்பம், தனித்தமிழ்ச் சொற்றொடர்கள் எனக் கவிதைக்குரிய அனைத்துப் பண்புகளையும் ஒருங்கமைத்து கம்பராமாயணத்தைப் படைத்துள்ளார் கம்பர். இந்த உலகில் இன்பம் தரும் வழிமுறைகளை இலக்கியங்களாகப் படைத்தளித்த பெருமைக்குரியவன் தமிழன்.

துறவு வாழ்வை விரும்பி ஏற்ற இளங்கோவடிகள், “பத்தினி சாபம் நிச்சயம் பலிக்கும்” என்ற வாய்மொழியினை இந்த உலகுக்கு உணர்த்திடவே சிலப்பதிகாரம் என்ற மாபெரும் காப்பியத்தை இயற்றித் தந்தார்.

சீவகசிந்தாமணி, மணிமேகலை, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் ஆகியன யாவும் தமிழ்நாட்டின் நாகரிகத்தினை எடுத்துக் காட்டும் ஆவணங்கள் ஆகும்.

தேவாரம், திருவாசகம், சேக்கிழாரின் பெரியபுராணம், பன்னிரு ஆழ்வார்களின் உரைகள் தமிழர் வாழ்க்கையினைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

தமிழனின் ஞானத்தை, அவன் அறிவின் திறமையைத் தாயுமானவரின் பாடல்களால் அறியலாம்.   பட்டினத்தார் உள்ளிட்ட சித்தர்களின் பாடல்கள் தமிழர்களின் தனிப் பெருஞ் சொத்தாக மிளிர்கின்றன.

அச்சத்தை விடுத்து எதிர்த்து வரும் சோதனைகளை ஊக்கமுடன் எதிர்கொண்டு வாழ, பாரதியின் பாடல்கள் துணை புரிகின்றன. இவையாவும் தமிழரின் புகழைப் பறைசாற்றுகின்றன என வியந்து போற்றுகின்றார் நாமக்கல் கவிஞர்.

தமிழனின் திறமைகள்

          அறுபத்து நான்கு கலைகளிலும் வல்லவனாகத் திகழ்ந்தவன் தமிழன். கல்வி கற்கும் யாவருக்கும் நல்லவனாக விளங்கியவன்.  அவனுடைய சிறப்புகளை எடுத்தோதுகின்ற அடையாளச் சின்னங்கள் இன்றும் காலங்கள் பல கடந்து நிலை பெற்று நிற்கின்றன.

   சிற்பங்கள் வடிப்பதிலும், சித்திரங்கள் தீட்டுவதிலும், சங்கீதம் இசைப்பதிலும் அவனுக்கு நிகர் வேறு யாருமில்லை. கருங்கல்லும், களிமண்ணும்கூட அவனுடைய திறமையால் ஒளிவீசும்.

          யாழ், குழல், நாதஸ்வரம் உள்ளிட்ட எண்ணற்ற இசைக்கருவிகளைக் கண்டறிந்து, அவற்றை வகைப்படுத்தி, அவை தரும் பண்களை வகுத்து  இசை என்றொரு மாபெரும் கலையை உலகிற்கு அளித்தவன் தமிழன் என்றால் அது மிகையில்லை.

தமிழனின் மாண்புகள்

          கொல்லாமை, கள்ளாமை, பொய்யாமை முதலியவற்றைக் கடைபிடித்து வாழும் வாழ்க்கையே அறம் நிரம்பிய வாழ்க்கையாகும். அவ்வாழ்க்கையே அழிவில்லாத புகழைத் தரும் என்று வாழ்ந்து காட்டியவன் தமிழன். இதை இந்த உலகம் நன்கு அறியும

    ஒழுக்கம் நிரம்பிய மானத்துடன் வாழ வேண்டும் என்பதே தமிழனின் கொள்கை. அந்த ஒழுக்கத்திற்கும் மானத்திற்கும் ஏதேனும் தீங்கு நேர்ந்தால் தன் உயிரை விட்டுத் துணிந்து விடுவான்.

         பிறரிடம் தானம் பெற்று வாழ்வதை விரும்பாதவன். தன்னிடம் பொருள் இ்லையென்றாலும் அடுத்தவருக்கு உதவி செய்வதே அறம் என்பதை உணர்ந்தவன்.

   ஜாதிகளை முன்னிலைப்படுத்தித் தொழில்கள் பல செய்பவனாக இருப்பினும், வேற்றுமை பாராது ஒற்றுமை கண்டவன். நீதியும் உரிமையும் அனைவருக்கும் பொது என்பதை அந்நியருக்கும் எடுத்துக் காட்டியவன்.

      எல்லாவற்றுக்கும் மேலாக காந்தியின் அருமையை உணர்ந்து அவர் காட்டிய வழியில் நடந்து, சத்தியப் போரில் பங்கெடுத்து, அமைதியை விரும்பி வெற்றி கண்டவன் என மிகப் பெருமையுடன் தமிழர்தம் சிறப்புகளை வெளிப்படுத்துகின்றார் கவிஞர்.

 

 

 

6 கருத்துகள்: