வியாழன், 15 அக்டோபர், 2020

மரபுக்கவிதை - குடும்பம் ஒரு கதம்பம்

 

குடும்பம் ஒரு கதம்பம்

கண்ணதாசன்

குடும்பம் ஒரு கதம்பம்

பல வண்ணம் பல வண்ணம்

தினமும் மதி மயங்கும்

பல எண்ணம் பல எண்ணம்


தேவன் ஒரு பாதை தேவி ஒரு பாதை

குழந்தை ஒரு பாதை

காலம் செய்யும் பெரும் லீலை


மனையாள் பணி செய்தால்

மணவாளன் வாழலாம்அதிலே

வருமானம் ஆனாலும் அவமானம்


வீடுகள்தோறும் இங்கு

இதுதானே கேள்வி இன்று

விடிந்தால் ஒரு எண்ணம்

எல்லோர்க்கும் தனியுள்ளம்


கணவன் பெரிதென்று

மணந்தார்கள் மங்கையர்கள்

உழைப்பாள் அவளென்று

மணந்தார்கள் நாயகர்கள்


பொருளாதாரத்திலே

பொருள்தானா தாரம் இன்று

இருவர் உழைத்தால்தான்

இந்நாளிலே பசி தீரும்


இரண்டு குதிரையிலே ஒரு

மனிதன் போவதென்ன

இரண்டு நினைவுகளில் சில

மனிதர் வாழ்வதென்ன


காலங்கள்தோறும் அவர்

சிந்தனையில் மாற்றமென்ன

மனிதன் நினைக்கின்றான்

இறைவன் அதை மாற்றுகின்றான்.

 

பாடலின் பொருள் 

குடும்பம் ஒரு கதம்பம் என்ற பாடல் குடும்ப வாழ்க்கையின் தத்துவத்தைக் கோடிட்டுக் காட்டுகின்றது.

குடும்பம் - கதம்பம்

பலவகையான மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையைக் கதம்பம் என்று அழைப்பர். அவ்வாறே பல வகையான மனிதர்கள் ஒரே வீட்டில் ஒன்று சேர்ந்து வாழ்வதால் குடும்பம் என்பதும் கதம்பமாகவே காட்சியளிக்கின்றது.

வெவ்வேறு ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் கொண்ட மனிதர்கள் ஒரு குடும்பமாக வாழ்வதால் பல எண்ணங்களும் விவாதங்களும் தோன்றுவது இயல்பு. அதனால் குழப்பங்கள் பல ஏற்பட்டு அறிவானது மயங்கிப்போய் விடுகின்றது.

காலத்தின் கோலம்

தலைவன் ஒரு பாதையிலும், தலைவி ஒரு பாதையிலும், குழந்தை வேறு பாதையிலும்  பயணிக்கின்ற குடும்பங்களில் நிம்மதி என்பது இருப்பதில்லை. அதனால் காலம் பல வெறுக்கத்தக்க சூழ்நிலைகளை உண்டாக்கி வேடிக்கைப் பார்க்கின்றது.

மனைவியை வேலைக்கு அனுப்பி விட்டுக் கணவன் வீட்டுக்குள் அமர்ந்து உண்டால் வருமானம் வரும். ஆனால் அதனால் அழிவில்லாத அவமானம் உண்டாகும்.

குடும்பத்தில் வாழ்கின்ற எல்லோருக்கும் தனித்தனி எதிர்பார்ப்புகளும், ஆசைகளும் இருப்பதால் ஒவ்வொரு வீட்டிலும் பல விதமான பிரச்சனைகள் முளைத்தெழுகின்றன.

கணவன் – மனைவி எதிர்பார்ப்பு

கணவனே கண் கண்ட தெய்வம் என்றும், தான் மணந்து கொள்ளும் கணவனாலேயே தன் உலகம் சுழலும் என்றும் நம்பிக்கைக் கொண்டு திருமணம் செய்து கொள்கின்றனர் பெண்கள். ஆனால், வீட்டிற்கும் தனக்கும் சேர்த்து உழைப்பாள் என்ற எதிர்பார்ப்போடு பெண்களை மணந்து கொள்கின்றனர்  சில ஆண்கள். பொன்னும், பொருளும், பணமுமே அவர்களுக்கு முக்கியமாகத் தெரிகின்றது

பொருளாதாரச் சிக்கல்கள்

கணவன் மனைவி இருவரும் உழைத்தால்தான் பசி இன்றி வாழ முடியும் என்ற நிகழ்கால உண்மை முகத்தில் அறைகின்றது. அதனால் பணமும் வேண்டும், வாழ்க்கையும் வேண்டும் என்று இரண்டு குதிரைகளில் பயணம் செய்கின்றான் மனிதன். இதன் காரணமாக, நிலையான வாழ்வைப் பெற முடியாமல் பல்வேறு நினைவுகளுக்கு ஆட்பட்டு மாறுபட்ட சிந்தனைகளில் உழன்று துன்பத்தை அடைகின்றான்.

இறைவனின் தீர்ப்பு

மனிதன் நினைப்பதெல்லாம் நடந்து விடுவதில்லை. நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்ற பழமொழி அனைவருக்கும் பொருந்தும். இறுதியில் இறைவன ் எழுதுகின்ற தீர்ப்பின்படியே மனிதனின் வாழ்க்கை அமையும் என்ற தத்துவத்தை இப்பாடல் மூலமாக வெளிப்படுத்துகின்றார் கவிஞர் கண்ணதாசன்.


கண்ணதாசனின் இப்பாடல் வரிகள் இடம்பெற்ற திரைப்படம்.

link : https://www.youtube.com/watch?v=dkFja-bTm6A

3 கருத்துகள்: