வியாழன், 15 அக்டோபர், 2020

மரபுக்கவிதை - வருங்காலம் உண்டு

 

வருங்காலம் உண்டு

பட்டுக்கோட்டை அ.கல்யாண சுந்தரம்


செய்யும் தொழிலே தெய்வம் அந்தத்

திறமைதான் நமது செல்வம்

கையும் காலுந்தான் உதவி- கொண்ட

கடமைதான் நமக்குப் பதவி

 

பயிரை வளர்த்தால் பலனாகும் அது

உயிரைக் காக்கும் உணவாகும்

வெயிலே நமக்குத் துணையாகும்

இந்த வேர்வைகள் எல்லாம் விதையாகும்.

 

தினம் வேலையுண்டு குல மானமுண்டு

வருங்காலமுண்டு அதை நம்பிடுவோம்

சாமிக்குத் தெரியும் பூமிக்குத் தெரியும்

ஏழைகள் நிலைமை .

 

அந்தச் சாமி மறந்தாலும் பூமி தந்திடும்

தகுந்த பலனை இதைப்

பாடிப்பாடி விளையாடி ஆடிப்பல

கோடிக்கோடி முறை கும்பிடுவோம்.

 

காயும் ஒரு நாள் கனியாகும்-நம்

கனவும் ஒருநாள் நனவாகும்

காயும் கனியும் விலையாகும் நம்

கனவும் நினைவும் நிலையாகும் உடல்

வாடினாலும் பசி மீறினாலும்  - வழி

மாறிடாமலே வாழ்ந்திடுவோம்.

 

பாடல் விளக்கம்

கவிஞர் பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் அவர்கள் உழைப்பின்  பயனையும், விவசாயத்தின் மேன்மையையும் இக்கவிதையில் கோடிட்டுக் காட்டுகின்றார்.

உழைப்பே வெற்றி தரும்

நாம் செய்கின்ற தொழிலைத் தெய்வமாக எண்ணிப் போற்ற வேண்டும். அத்தொழிலில் திறமையுடன் நாம் செயல்படும்போது செல்வம் பெருகும். அடுத்தவர் உதவியை எதிர்பாராது நிற்காமல் இறைவன் நமக்களித்த இரு கைகளையும் இரு கால்களையும் கொண்டு உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறலாம்.

கடமையே பதவி

செய்கின்ற தொழிலில் கடமை தவறாமல் செயல்பட வேண்டியது அவசியம். அந்தக் கடமையை நாம் கொண்ட பதவியாக எண்ணினால் வாழ்வில் உயரத்தை அடையலாம்.

வெயிலே துணை வியர்வையே விதை

விவசாயம் செய்கின்ற ஒருவனுக்குப் பயிர் வளர்ப்பது நல்ல பலனைத் தருகின்றது. அதுவே உயிரைக் காக்கின்ற உணவாக அமைகின்றது. உழைப்பவர்களுக்கு வெயிலே துணையாகவும், சிந்துகின்ற வியர்வைத்துளிகளே விதையாகவும் அமைகின்றன. வியர்வை சிந்தி உழைத்தால் மேன்மை பெறலாம் என்ற தத்துவம் இதன் மூலம் விளக்கம் பெறுகிறது.

இயற்கையின் கொடை

ஏழைகளின் துன்பத்தை இறைவன் அறிவார். விதைத்தால் பலன் தருகின்ற பூமிக்கும் அவர்களின் துயரம் புரியும். இறைவனே விளைச்சல் தர மறந்தாலும் பூமி மறப்பதில்லை. அதன் இயல்பில் இருந்து மாற்றம் கொள்வதேயில்லை. இந்த உண்மையைப் பாடி  ஆடி  பூமியை வணங்குவோம்.

கனவுகள் நனவாகும்

முழு முயற்சியுடன் உழைத்தால் காய்கள் ஒரு நாள் கனிகளாகும். அதுபோல நம் எதிர்காலக் கனவுகள் ஒரு நாள் நிஜமாகும். நாம் விதைத்த காய்களும் கனிகளும் விலையாகி செல்வத்தைக் கொடுக்கும். அதனால் நம் கனவுகளும் நனவுகளும் எப்போதும் நிலையானதாகிவிடும். எனவே, உழைப்பதால் உடல் சோர்வுற்றாலும், நம் தேவைகள் என்ற பசி அதிகரித்தாலும், நன்மை தரும் வழியில் இருந்து மாறாமல் வாழ்ந்திட வேண்டும். உழைப்பின் பெருமையை அறிந்து வியர்வை பெருக உழைப்போம். வருங்காலம் நமக்கு நிறைவான வளத்தைத் தரும் என்ற நம்பிக்கையை இப்பாடல் மூலம் வெளிப்படுத்துகின்றார் கவிஞர்.


கவிதை இடம்பெற்ற திரைப்படத்தின் இணைப்பு 

https://www.youtube.com/watch?v=OT_94-mcgUw

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக