பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
“நாலடி நான்மணி நாநாற்பது ஐந்திணை
முப்பால் கடுங்கோவை பழமொழி - மாமூலம்
இன்னிலைய காஞ்சியுடன் ஏலாதி என்பனவே
கைந்நிலைய வாங் கீழ்க்கணக்கு”
என வரும் பாடல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை வரிசைப்படுத்துகின்றது.
இவற்றுள் அறநூல்கள் 11, அகநூல்கள் 6, புறநூல் 1.
அறநூல்கள்
நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம்,
ஆசாரக்கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், ஏலாதி, திருக்குறள், முதுமொழிக்காஞ்சி
அகநூல்கள்
ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது,
திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, கார் நாற்பது, கைந்நிலை
புறநூல்
களவழி நாற்பது
நூல்களின் சிறப்புகள்
நாலடியார்
1.திருக்குறளுக்கு அடுத்தப்படியாகப் போற்றப்படும் நீதி நூல்.
2.ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற பழமொழி
இதன் சிறப்பை விளக்குகின்றது.
3.சமண முனிவர்களால் பாடப்பட்டது. இதனைத் தொகுத்தவர் பதுமனார்.
4.கடவுள் வாழ்த்து நீங்கலாக 40 அதிகாரங்களும், 12 இயல்களும், 400 வெண்பாக்களும்
உள்ளன.
5.வேளாண் வேதம், நாலடி நானூறு, குட்டித்திருக்குறள் என்றும் அழைக்கப்படுகின்றது.
6.திருக்குறள் போலவே அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பிரிவுகளை உடையது.
அறத்துப்பால் - 13 அதிகாரங்கள்
பொருட்பால் - 24 அதிகாரங்கள்
காமத்துப்பால் - 3 அதிகாரங்கள்
7.G.U.போப் இந்நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
8.கல்வியின் சிறப்பு குறித்த நாலடியார் பாடல் ஒன்று பின்வருமாறு.
குஞ்சியழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும்
அழகல்ல – நெஞ்சத்து
நல்லம்யாம்
என்னும் நடுவுநிலைமையால்
கல்வி அழகே
அழகு
நான்மணிக்கடிகை
1.இந்நூலின் ஆசிரியர் விளம்பி நாகனார்.
2.கடிகை என்பதற்குத் துண்டு என பொருள். நான்கு மணித்துண்டுகள் இணைந்த
மாலை போல் ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துகள் இடம்பெற்றுள்ளதால் இப்பெயரைப் பெற்றது.
3.கடவுள் வாழ்த்து உட்பட 104 வெண்பாக்கள் உள்ளன.
4.இந்நூலின் 7 மற்றும்100 வது பாடலை ஜி.யூ.போப் மொழிபெயர்த்துள்ளார்.
5.எக்குடியிலும் நன்மக்கள் பிறப்பர் என்ற கருத்தை,
கள்ளி வயிற்றில் அகில் பிறக்கும் மான் வயிற்றில்
ஒள்ளரிதாரம்
பிறக்கும் பெருங்கடலுள்
பல்விலைய முத்தம்
பிறக்கும் அறிவார்யார்
நல்லாள் பிறக்கும்
குடி
என்ற பாடலால் விளக்குகின்றார் விளம்பி நாகனார்.
இன்னா நாற்பது
1.இந்நூலின் ஆசிரியர் கபிலர்.
2.கடவுள் வாழ்த்து உட்பட 41 வெண்பாக்களைக் கொண்டது.
3.ஒவ்வொரு பாடலும் இவை இவை இன்னாதவை என வற்புறுத்துவதால் இன்னா நாற்பது
எனப் பெயர் பெற்றது.
4.ஒவ்வொரு பாடலின் முடிவிலும் இன்னா என்று முடிவதாலும் இப்பெயர் பெற்றது
எனலாம்.
5.கள்ளுண்ணாமை, புலால் உண்ணாமை ஆகியவை வலியுறுத்தப்படுகின்றன.
5.இந்நூலில் மொத்தம் 164 இன்னாத பொருட்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
அவற்றுள் சில….
ஆற்றல் இல்லாதான் பிடித்த படை இன்னா
தீமையுடையார்
அயலிருத்தல் இன்னா
உண்ணாது வைக்கும்
பெரும் பொருள் வைப்பு இன்னா
கடுமொழியாளர்
தொடர்பு இன்னா
திருவுடையாரைச்
செறல் இன்னா
இனியவை நாற்பது
1.இதன் ஆசிரியர் பூதஞ்சேந்தனார்.
2.கடவுள் வாழ்த்து உட்பட 41 வெண்பாக்கள் இடம்பெற்றுள்ளன.
3.ஒவ்வொரு பாடலும் இவை இவை இனியவை என்று கூறப்படும் காரணத்தால் இது இனியவை
நாற்பது என்ற பெயர் பெற்றது.
மானமிழந்தபின் வாழாமை முன் இனிதே
வருவாயறிந்து
வழங்கல் இனிதே
குழவி தளிர்நடை
காண்டலினிதே
கற்றார் முன்
கல்வி உரைத்தல் மிக இனிதே
என்பன போன்ற இனியவைகளை இந்நூலில் காணலாம்
திரிகடுகம்
1.திப்பிலி, சுக்கு, மிளகு எனும் மூன்றினால் ஆன பொருளுக்குத் திரிகடுகம்
என்று பெயர். இவை உடல்நோயைப் போக்க வல்லது.
2.அதேபோன்று இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் வரும் மூன்று அறக்கருத்துகள்
மக்களின் மனமயக்கத்தைப் போக்குகின்றன.
3.இது 100 வெண்பாக்களைக் கொண்டது.
4.இதன் ஆசிரியர் நல்லாதனார்.
5.ஒரு பெண் தன் கணவனுக்கு நண்புடையவாய், தாயாய், மனைவியாய் விளங்குவாள்
என்ற பொருளில்,
நல்விருந்து ஓம்பலின் நட்டாளாம் வைகலும்
இல்புறஞ் செய்தலின்
ஈன்றதாய் தொல்குடியின்
மக்கள் பெறலின்
மனைக்கிழத்தி இம்மூன்றும்
கற்புடையாள்
பூண்ட கடன்
என்ற பாடல் தெரிவிக்கின்றது.
ஆசாரக்கோவை
1.ஆசாரம் - ஒழுக்கம். நாள்தோறும் செய்யவேண்டிய கடமைகள் பற்றிக்
கூறுகிறது.
2.இதன் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார்.
3.100 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
4.வடமொழி மரபை ஒத்துள்ளது.
5.நீராடுதல், உண்ணும் முறை, துயிலும் முறை ஆகியவற்றை விரிவாகப் பேசுகின்றது.
நகையொடு
கொட்டாவி காறிப்பு தும்மல்
இவையும்
பெரியார் முன் செய்யாரே செய்யின்
அசையாது
நிற்கும் பழி
என்ற பாடல் பெரியார் முன் செய்யக்கூடாத செயல்களை வரிசைப்படுத்திக் காட்டுகின்றது.
நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு
இன்னாத எவ்வுயிர்க்கும்
செய்யாமை கல்வியோடு
ஒப்புரவாற்ற
அறிதல் அறிவுடைமை
நல்லினத்தாரோடு
நட்டல் இவை எட்டும்
சொல்லிய ஆசார
வித்து
என்ற பாடல் ஒழுக்கத்திற்கு எவை முதன்மை என்பதை எடுத்துக் காட்டுகின்றது.
பழமொழி
1.இதன் ஆசிரியர் முன்றுரை அரையனார்.
2.நீதிக்கருத்தை விளக்கிக்காட்டும் வகையில் அமைந்த நூல்.
3.திருக்குறள், நாலடியாரோடு ஒருங்கே வைத்து எண்ணத்தக்க பெருமை உடைய நூல்.
4.தொல்காப்பியர் இதனை முதுசொல் எனக் குறிப்பிடுகிறார்.
5. இதன் வேறுபெயர்கள் - பழமொழி நானூறு, உலக வசனம், முதுமொழி
6. இது 400 பாடல்களை உடையது.
7. பழந்தமிழ் மக்களின் பழக்கவழக்கங்கள் பல அறியப்படுகின்றன.
உரைமுடிவு
காணான் இளமையோன் என்ற
நரைமுது
மக்கள் உவப்ப நரை முடித்து
சொல்லால்
முறை செய்தான் சோழன் குலவிச்சை
கல்லாமல் பாகம் படும்
என்ற பாடலின் சொற்சுருக்கமும், பொருள் ஆழமுடையதாக இருக்கின்றன.
சிறுபஞ்சமூலம்
1. இதன் ஆசிரியர்
காரியாசான்.
2. இந்நூல்
கடவுள் வாழ்த்துடன் 97வெண்பாக்களைக் கொண்டது.
3. சிறுவழுதுணை, நெருஞ்சி, சிறுமல்லி, பெருமல்லி, கண்டங்கத்திரி ஆகிய ஐந்து
வேர்கள் உடலுக்கு வலிமைக்கொடுப்பதைப்போல இந்நூலில் அமைந்த ஐந்து கருத்துகள் மக்களின்
மனதிற்கு வலிமை கொடுக்கின்றன.
படைதனக்கு யானை வனப்பு ஆகும்; பெண்ணின்
இடை தனக்கு நுண்மை வனப்பு ஆம்; நடைதனக்குக்
கோடா மொழி வனப்பு; கோற்கு அதுவே; சேவகற்கு
வாடாத வன்கண் வனப்பு.
சேனைக்கு யானைப்படையும், பெண்கள் இடைக்குச் சிறுமையும், ஒழுக்கத்துக்கு
அரசன் செங்கோலுக்கும் நடுவு நிலை பிறழாத சொல்லும், படை வீரர்க்கு அஞ்சாமையும் அழகாகும்
என்பது இப்பாடலின் பொருள்.
ஏலாதி
1. இந்நூலின் ஆசிரியர் கணிமேதாவியார்.
2.ஏலம், இலவங்கம், நாககேசரம், சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய 6 மருந்துப்பொருட்களால்
ஆன கலவையை ஏலாதி என்பர். அவை உடல் நோய்க்கு மருந்தாகும்.
3.அதுபோல இந்நூல் நான்கு அடியில் ஆறு அறக்கருத்துகளைக் கூறுகிறது. இக்கருத்துக்கள்
வாழ்க்கைக்கு வளம் சேர்க்கின்றன.
4.இந்நூல் சிறப்பாயிரம் (முன்னுரை), தற்சிறப்பாயிரம் (முடிவுரை) உட்பட
81 வெண்பாக்களை உடையது.
கொலைபுரியான் கொல்லான் புலான் மயங்கான்
அலை புரியான்
வஞ்சியான் யாதும் – நிலை திரியான்
மண்ணவர்க்கு
மன்றி மதுவலி பூங்கோதாய்
விண்ணவர்க்கு
மேலாய் விடும்
என்பன போன்ற அறக் கருத்துக்களை இந்நூலில் காணலாம்.
முதுமொழிக்காஞ்சி
1.இந்நூலின்
ஆசிரியர் மதுரைக் கூடலூர் கிழார்.
2.பத்து
அதிகாரங்களையும், 100 செய்யுட்களையும் கொண்டது.
3.உலக நிலையாமையை
எடுத்துக் காட்டிச் சான்றோர் தம் அறிவுடைமையால் கூறும் அனுபவ உரைகளே முதுமொழிக் காஞ்சியாகும்.
4.இளமைப்பருவத்தில்
கல்லாமை குற்றம், ஓதலின் சிறந்தன்று ஒழுக்கமுடைமை என்பன போன்ற நற்செய்திகள் இந்நூலில்
எடுத்துரைக்கப்படுகின்றன.
ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம்
ஓதலிற் சிறந்தன்று ஒழுக்கமுடைமை
மேதையின் சிறந்தன்று கற்றது மறவாமை
நசையிற் பெரியதோர் நல்குரவில்லை
வண்மையிற் சிறந்தன்று வாய்மையுடைமை
என்பன
போன்ற முதுமொழிகளை இந்நூலில் கற்கலாம்.
திருக்குறள்
1.இதன் ஆசிரியர்
திருவள்ளுவர்.
2.133 அதிகாரங்களையும்,
1330 குறட்பாக்களையும் கொண்டது.
3.அறத்துப்பால்,
பொருட்பால், காமத்துப்பால் எனும் முப்பரும் பகுப்புகள் கொண்டது.
அறத்துப்பால் - 38 அதிகாரங்கள்
பொருட்பால் - 70 அதிகாரங்கள்
காமத்துப்பால்
– 25 அதிகாரங்கள்
4.இந்நூலின்
பெருமைகளைத் திருவள்ளுவமாலை என்ற நூல் எடுத்துரைக்கின்றது.
5.உலகப்
பொதுமறை, பொய்யா மொழி, வாயுறை வாழ்த்து, தமிழ்மறை எனப் பல பெயர்களால் வழங்கப்படுகின்றது.
6. உலக மொழிகள்
பலவற்றில் மொழிபெயர்க்கப்பட்ட சிறப்புக்குரியது.
கார்நாற்பது
1.இதன் ஆசிரியர்
கண்ணங்கூத்தனார்.
2.கார்காலத்தைச்
சிறப்பிக்கும் நாற்பது வெண்பாக்களைக் கொண்டமையால் இந்நூல் கார்நாற்பது எனப் பெயர் பெற்றது.
3.முல்லை
நிலத்தின் அழகும், அதன் முதல், கரு, உரிப் பொருட்களும் அழகுற விளக்கப்படுகின்றன.
ஐந்திணை ஐம்பது
1.ஆசிரியர்
பொறையனார்.
2.அகத்திணைகளான
முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் எனும் ஐந்திற்கும் திணைக்குப் பத்துப் பாடலாக
50 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
3. இந்நூல்
சிறந்த செய்யுள் நடையையும் செறிந்த பொருளையும் கொண்டதாகும்.
4. “ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார் செந்தமிழ் சேராதார்” என்று இந்நூலின் சிறப்பை உணர்ந்த பாயிரப்பாடல் கூறுகிறது.
சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென்று எண்ணிப்
பிணைமான் இனிதுண்ண வேண்டிக் கலைமாத்தன்
கள்ளத்தின் ஊச்சும் சுரம் என்ப காதலர்
உள்ளம் படர்ந்த நெறி
என்ற பாடல்
காதலுணர்வை அழகுறப் படம் பிடித்துக் காட்டுகின்றது.
ஐந்திணை எழுபது
1.ஆசிரியர்
மூவாதியார்.
2.ஒவ்வாரு
திணைக்கும் 14 பாடல்கள் வீதம் ஐந்து திணைக்குமாக 70 வெண்பாக்கள் அமைந்துள்ளன.
3.குறிஞ்சி,
முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்ற முறையில் திணைகள் வைக்கப்பட்டுள்ளன.
4.இது அகப்பொருள்
துறைகளை விளக்க எழுந்த சிறந்த நூலாகும்.
திணைமொழி ஐம்பது
1.ஆசிரியர் கண்ணந் சேந்தனார்.
2.அகத்திணை ஐந்திற்கும் திணைக்குப் பத்துப் பாடல் வீதம் 50 வெண்பாக்கள் அமைந்த
நூலாதலால் திணைமொழி ஐம்பது எனப் பெயர் பெற்றது.
3.இதில் அமைந்துள்ள உவமைகள், அறிந்து இன்புறத்தக்கவை.
4.குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற வரிசையில் திணைகள அமைக்கப்பட்டுள்ளன.
திணைமாலை நூற்றைம்பது
1.ஆசிரியர் கணிமேதாவியார்.
2.ஒவ்வொரு திணைக்கும் 30 பாடல்கள் வீதம் 150 பாடல்கள் அமைந்துள்ளன.
3.அகத்திணைக் கருத்துக்கள் அமைந்த இப்பாடல்களில் வடசொற்களும்
சில கலந்து வரும்.
4.கீழ்க்கணக்கிலுள்ள அகப்பொருள் நூல்களில் இதுவே பெரிய
நூல் ஆகும்.
5.குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம் என்ற முறையில்
திணைகள் வைக்கப்பட்டுள்ளன.
கைந்நிலை (ஐந்திணை அறுபது)
1.ஆசிரியர் புல்லங்காடனார்.
2.ஐந்திணைப் பிரிவுகளைப் பின்னணியாகக் கொண்டு பாடல்கள் பாடப்பட்டுள்ளன. இதன் காரணமாக
இதற்கு ஐந்திணை அறுபது என்ற பெயரும் உண்டு.
3.அறுபது பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
4. இதிலும் வடசொற்கள் பல கலந்துள்ளன.
களவழி நாற்பது
1.ஆசிரியர் பொய்கையார்
2.போர்களத்து நிகழ்ச்சிகளைப் பாடும் 40 வெண்பாக்களைக் கொண்டது.
3.கீழ்க்கணக்கு நூல்களுள் புறம் பற்றிக் கூறும் நூல் இது ஒன்றே ஆகும்.
4.யானைப்போரைப் பற்றி மிகுதியாகப் பேசுகின்றது.
மிகவும் எளிமை யாக உரை அமைந்துள்ளது நன்றி வாழ்த்துகள்...
பதிலளிநீக்கு..
மிக்க நன்றி
நீக்கு