சனி, 24 ஏப்ரல், 2021

வல்லினம் மிகும், மிகா இடங்கள்

 

வல்லினம் மிகும் இடங்கள்

1.அ, இ என்னும் சுட்டெழுத்துகளின் பின்னும், எ என்னும் வினா எழுத்தின் பின்னும் வரும் வல்லினங்களாகிய க, ச, த, ப மிகும்.

                          அ + பையன் - அப்பையன்

இ + பெண் - இப் பெண்

எ + திசை - எத்திசை

2.அந்த, இந்த, எந்த, அங்கு, இங்கு, எங்கு, அப்படி, இப்படி, எப்படி? என்ற சுட்டு, வினாச் சொற்களின் பின் வரும் வல்லினம் மிகும்.

                          அந்த + பெட்டி - அந்தப்பெட்டி

இந்த + பழம் - இந்தப் பழம்

                          எந்த + கோயில் - எந்தக் கோயில்

அங்கு + கண்டேன் - அங்குக் கண்டேன்

எங்கு + போனார்    - எங்குப் போனார்

அப்படி + கேள் - அப்படிக் கேள்

எப்படி + போனார் - எப்படிப் போனார்?

3. இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்.

                          நூலை + படி - நூலைப் படி

பூவை + சூடு - பூவைச் சூடு

4.நான்காம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்.

                          தோழனுக்கு + கொடு - தோழனுக்குக் கொடு

ஊருக்கு + செல் - ஊருக்குச் செல்

 

5.இரண்டு, மூன்று, நான்கு, ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வல்லினம் மிகும்.

                           தண்ணீர் + பானை - தண்ணீர்ப் பானை

 மரம் + பெட்டி - மரப் பெட்டி

 சட்டை + துணி - சட்டைத் துணி

                           விழி + புனல் - விழிப்புனல்.

6.பண்புத்தொகையில் வல்லினம் மிகும்.

                          பச்சை + கிளி - பச்சைக் கிளி

வெள்ளை + குதிரை - வெள்ளைக் குதிரை

7.இருபெயரொட்டுப் பண்புத் தொகையில் வல்லினம் மிகும்.

                          தாமரை + பூ - தாமரைப் பூ

சாரை + பாம்பு - சாரைப் பாம்பு

8.உவமைத் தொகையில் வல்லினம் மிகும்.

                          மலர் + கண் - மலர்க் கண்

தாமரை + கை - தாமரைக் கை

9.ஓர் எழுத்துச் சொற்கள் சிலவற்றில் வல்லினம் மிகும்.

                          தை + பாவை - தைப் பாவை

பூ + தொட்டி - பூத் தொட்டி

                          தீ + சுடர் - தீச் சுடர்

10.ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகும்.

வளையா + செங்கோல் - வளையாச் செங்கோல்

அழியா + புகழ் - அழியாப் புகழ்.

 

11.வன்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும்.

பத்து + பாட்டு - பத்துப் பாட்டு

எட்டு + தொகை - எட்டுத் தொகை.

12.முற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும்.

                          திரு + குறள் - திருக்குறள்

பொது + சொத்து - பொதுச் சொத்து.

13.உயிரீற்றுச் சொற்களின் பின் வல்லினம் மிகும்.

                          மழை + காலம் - மழைக் காலம்

பனி + துளி - பனித் துளி

14.சால, தவ முதலான உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகும்.

சால + பேசினான் - சாலப் பேசினான்.

தவ + பெரிது - தவப் பெரிது

15.ட, ற ஒற்று இரட்டிக்கும் உயிர், நெடில் தொடர்க் குற்றியலுகரங்களின் பின் வல்லினம் மிகும்.

                          ஆடு + பட்டி - ஆட்டுப் பட்டி

நாடு + பற்று - நாட்டுப் பற்று

 

 வல்லினம் மிகா இடங்கள்

 1.உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது

                          தாய் + தந்தை - தாய் தந்தை

இரவு + பகல் - இரவு பகல்

2.வினைத்தொகையில் வல்லினம் மிகாது

                          பாய் + புலி - பாய் புலி

சுடு + சோறு - சுடு சோறு.

3.இரட்டைக்கிளவி, அடுக்குத் தொடர்களில் வல்லினம் மிகாது

சல + சல - சலசல

பாம்பு + பாம்பு - பாம்பு பாம்பு!

கல + கல - கலகல

பார் + பார் - பார் பார்!

4.விளித்தொடரில் வல்லினம் மிகாது.

கண்ணா + பார் - கண்ணா பார்!

நண்பா + கேள் - நண்பா கேள்!

5.வியங்கோள் வினைமுற்றுக்குப் பின் வல்லினம் மிகாது

வீழ்க + தண்புனல் - வீழ்க தண்புனல்

வாழ்க + பல்லாண்டு - வாழ்க பல்லாண்டு

6.இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது

                          கதை + சொன்னார் - கதை சென்னார்

தமிழ் + கற்றேன் - தமிழ் கற்றேன்.

7.அத்தனை, இத்தனை, எத்தனை என்னும் சொற்களுக்குப் பின் வல்லினம் மிகாது.

 

அத்தனை + பழங்கள் - அத்தனை பழங்கள்

இத்தனை + கடைகள் - இத்தனை கடைகள்

எத்தனை + பெண்டிர் - எத்தனை பெண்டிர்

8.எட்டு, பத்து ஆகிய இரண்டு எண்ணுப் பெயர்கள் தவிர பிற எண்ணுப் பெயர்கள் பின் வல்லினம் மிகாது.

                          ஐந்து + படங்கள் - ஐந்து படங்கள்

இரண்டு + பேர் - இரண்டு பேர்

மூன்று + பள்ளி - மூன்று பள்ளி

9.எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது.

வண்டு + பறந்தது - வண்டு பறந்தது

மலர் + பூத்தது - மலர் பூத்தது.

10.அவை, இவை - என்னும் சுட்டுச் சொற்களின் பின் வல்லினம் மிகாது.

அவை + பறந்தன - அவை பறந்தன

இவை + சென்றன - இவை சென்றன

11.அது, இது என்னும் சுட்டுகளின் பின்னும் எது, எவை என்னும் வினாச் சொற்களின் பின்னும் வல்லினம் மிகாது.

                          அது + போனது - அது போனது

இது + சென்றது - இது சென்றது

எது + கேட்டது - எது கேட்டது?

எவை + பார்த்தன - எவை பார்த்தன?

12.ஆ, ஏ, ஓ, என்னும் வினா எழுத்துகளின் பின் வல்லினம் மிகாது.

                          அவளா + சொன்னாள் - அவளா சொன்னாள்?

அவனோ + போனான் - அவனோ போனாள்?

அவனே + கேட்டான் - அவனே கேட்டான்?

13.மூன்றாம் வேற்றுமை உருபுகளின் பின் (ஒடு, ஓடு) வல்லினம் மிகாது.

                          பூ வொடு + சேர்ந்த - பூ வொடு சேர்ந்த

கபிலரோடு + பரணர் - கபிலரோடு பரணர்

14.ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் தவிரப் பிற பெயரெச்சங்களின் பின் வல்லினம் மிகாது.

படித்த + பெண் - படித்த பெண்

நடித்த + கலைஞர் - நடித்த கலைஞர்

‘15.படிஎன்னும் சொல்லுக்குப் பின் வல்லினம் மிகாது.

சொன்னபடி + செய்தார் - சொன்னபடி செய்தார்

பாடியபடி + தொடர்ந்தார் - பாடியபடி தொடர்ந்தார்


 நன்றி

www.srmist.edu.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக