சனி, 3 ஏப்ரல், 2021

பத்துப் பாட்டு நூல்கள்

 

பத்துப் பாட்டு

பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியத் தொகை நூல்களுள் ஒன்று. இத்தொகை நூலுள் பத்துப்பாடல்கள் அடங்கியுள்ளன. இவற்றில் பழந்தமிழ் நாட்டின் வாழ்க்கை முறை, பண்பாடு, வரலாற்றுக் குறிப்புகள், அரசர்கள் மற்றும் வள்ளல்களின் இயல்புகள், காதல் வாழ்க்கை, கலைகள், நகரங்கள் பற்றிய தகவல்கள், இயற்கை பற்றிய வருணனைகள் போன்றவை தொடர்பான பல தகவல்களை இவற்றிலிருந்து பெற முடிகின்றது. இவை அனைத்தும் இன்று ஒரே தொகுப்பாகக் குறிப்பிடப்படுகின்ற போதிலும், இவை ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை. வெவ்வேறு ஆசிரியர்களால் பல்வேறு கால கட்டங்களில் இயற்றப்பட்டவை. இத்தொகுப்புக்கு நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார்.

பழம் பாடல்

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை

பெருகு வள மதுரைக் காஞ்சி-மருவினிய

கோல நெடுநல் வாடை கோல்குறிஞ்சிப்பட்டினப்

பாலை கடாத்தொடும் பத்து

என வரும் பழம்பாடல், பத்துப் பாட்டு நூல்கள் எவை என்பதை மிகத் தெளிவாகக் காட்டும்.

பத்துப்பாட்டு நூல்கள்

அ.புறப்பொருள் பற்றிய நூல்கள்:

திருமுருகாற்றுப்படை

பொருநராற்றுப்படை

சிறுபாணாற்றுப்படை

பெரும்பாணாற்றுப்படை

மலைபடுகடாம்

மதுரைக்காஞ்சி

ஆ.அகப்பொருள் பற்றிய நூல்கள்:

குறிஞ்சிப்பாட்டு

பட்டினப்பாலை

முல்லைப்பாட்டு

இ.அகப்பொருள், புறப்பொருள் பற்றிய நூல்கள்:

நெடுநல்வாடை


பத்துப்பாட்டு நூல்களின் சிறப்புகள்

திருமுருகாற்றுப்படை

இந்நூலின் ஆசிரியர் நக்கீரர். 317 அடிகளைக் கொண்டுள்ளது. பாடப்பட்டவர் முருகப் பெருமான்.  ஆற்றுப்படை நூல்கள் பரிசில் பெறச் செல்வோரால் பெயர் பெறும். திருமுருகாற்றுப்படை மட்டும் பரிசில் கொடுப்போரால் (முருகன்) பெயர் பெற்றது. ஏனைய ஆற்றுப்படை நூல்கள் மானிடரைத் தலைவனாகக் கொண்டிருக்க, இந்நூல் முருகனைத் தலைவனாகக் கொண்டுள்ளது. புலவராற்றுப்படை என்றும், முருகு என்றும் வழங்கப்படுகின்றது.  முருகப் பெருமானின் பெருமையைப் பேசுகின்ற இந்நூல் ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய்(திருச்செந்தூர்), திருவேரகம்(சுவாமிமலை), திருவாவினன்குடி(பழனி), திருத்தணி, பழமுதிர்ச்சோலை  உள்ளிட்ட முருகனின் அறுபடை வீடுகள் சிறப்பிக்கப்படுகின்றன. இந்நூல் பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது.

பொருநராற்றுப்படை

இதன் ஆசிரியர் முடத்தாமக் கண்ணியார். 248 அடிகளைக் கொண்டது. கரிகால் பெருவளத்தானிடம் பரிசில் பெற்ற பொருநன் ஒருவன் பரிசில் பெறக் கருதிய மற்றொரு பொருநனை அம்மன்னனிடம் ஆற்றுப்படுத்துகின்றது. இந்நூலில் யாழின் ஒவ்வோர் உறுப்பிற்கும் ஒவ்வோர் உவமை கூறி வருணிக்கப்படுகின்றது.

சிறுபாணாற்றுப்படை

இதன் ஆசிரியர் நல்லூர் நத்தத்தனார்.  269 அடிகளைக் கொண்டது. பாட்டுடைத்தலைவன் நல்லியக்கோடன். இந்நூல் கடை ஏழு வள்ளல்கள் பற்றி கூறுகிறது. அடி அளவால் சிறிய நூல். இந்நூலில் விறலியின் முடி முதல் பாதம் வரை விவரிக்கும் வர்ணனை, மூவேந்தர்களின் தலைகரங்களின் சிறப்பு, கடையெழு வள்ளல்களின் அருஞ்செயல்கள், பாட்டுடைத்தலைவனின் வீரம், கொடை, புகழ், விருந்தோம்பும் பண்பு, யாழ் வர்ணனை ஆகியன சிறப்பிக்கப்படுகின்றன.

பெரும்பாணாற்றுப்படை     

இதன் ஆசிரியர் கடியலூர் உருத்திரங் கண்ணனார். 500 அடிகளைக் கொண்டது. பாட்டுடைத்தலைவன் தொண்டைமான் இளந்திரையன். இந்நூல் யாழின் வருணனை, பாலை நிலத்தில் எயினர் குடியிருப்பு, காஞ்சி மாநகரத்தில் பற்பல சமயத்தாரும் கொண்டாடும் விழாக்கள் பற்றி கூறுகிறது. பாணாறு எனவும் அழைக்கப்படுகின்றது.

மலைபடுகடாம்        

இதன் ஆசிரியர் பெருங்கௌசிகனார். 583 அடிகளைக் கொண்டது. பாட்டுடைத்தலைவன் நன்னன் சேய் நன்னன். ஆற்றுப்படை நூல்களுள் இதுவே பெரியது. நன்னன் நாட்டிற்கு செல்லும் வழி, வழியில் கிட்டும் உணவு, சோலை அழகு, மலைவளம், நாட்டின் சிறப்பு, நன்னனின் முன்னோர் பெருமை போன்றவை கூறப்பட்டுள்ளன. கூத்தராற்றுப்படை எனவும் வழங்கப்படுகின்றது.

குறிஞ்சிப்பாட்டு       

இதன் ஆசிரியர் கபிலர்.  261 அடிகளைக் கொண்டது. ஆரிய அரசன் பிரகதத்தனுக்குத் தமிழ் அகப்பொருள் மரபை அறிவுறுத்த கபிலர் இந்நூலை இயற்றினார் என்பர். அறத்தோடு நிற்றல் துறையில் இயற்றப்பட்டுள்ளது. 99 வகையான மலர்களை இந்நூலில் கபிலர் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைப்பாட்டு       

இந்நூலின் ஆசிரியர் நப்பூதனார். 103 அடிகளைக் கொண்டது. பாட்டுடைத்தலைவன் பாண்டியன் நெடுஞ்செழியன். பத்துப்பாட்டுள் அளவில் சிறிய நூல் இதுவே. முல்லைத் திணைக்குரிய பெரும் பொழுதான கார்காலமும், சிறுபொழுதான மாலைக்காலமும் இந்நூலில் சிறப்பாக கூறப்பட்டுள்ளன. இந்நூல் நெஞ்சாற்றுப்படை என்றும் அழைக்கப்படுகின்றது.

பட்டினப்பாலை       

இதன் ஆசிரியர் கடியலூர் உருத்திரங் கண்ணனார். 301 அடிகளைக் கொண்டது. பாட்டுடைத் தலைவன் சோழன் கரிகாலன்.  பட்டினப்பாலை பாடியமைக்காகக் கடியலூர் உருத்திரங்கண்ணனார்க்குக் கரிகாற் சோழன் பதினாறு நூறாயிரம் பொற்காசுகள் பரிசளித்தான் எனக் கலிங்கத்துப்பரணி கூறுகிறது. இந்நூலுக்கு வஞ்சிநெடும்பாட்டு என்ற பெயர் உண்டு. பட்டினம் என்பது காவிரிப்பூம்பட்டினம் ஆகும். இந்நகரை புகார், பூம்புகார் எனவும் அழைப்பர். இந்நூலில் 163 அடிகள் வஞ்சிப்பாவல் அமைந்துள்ளன.

நெடுநல்வாடை       

இதன் ஆசிரியர் நக்கீரர். 188 அடிகளைக் கொண்டது. பாட்டுடைத்தலைவன் பாண்டியன் நெடுஞ்செழியன். வாடைக்காற்று  தலைவனைப் பிரிந்த தலைவிக்கு நெடு வாடையாகவும், போரில் வெற்றி பெற்றதால் தலைவனுக்கு அவ்வாடைக்காற்று நல்வாடையாகவும் அமைக்கப்பெற்று பாடப்பட்டுள்ளது. கூதிர் காலத்தின் அழகும், அரண்மனை வகுக்கும் திறமும், அரசியின் கட்டில் அழகும், தலைவனின் பாசறை காட்சியும் அழகுற விளக்கம் பெற்றுள்ளன.

மதுரைக்காஞ்சி        

இதன் ஆசிரியர் மாங்குடி மருதனார். 782 அடிகள் கொண்டது. பாட்டுடைத்தலைவன் பாண்டியன் நெடுஞ்செழியன். காஞ்சித்திணையின் நிலையாமை பற்றிப் பேசுகின்றது. மதுரையில் நடைபெற்ற ஆறு விழாக்களான திருபரங்குன்ற விழா, மதுரைக்கோவில் விழா, அந்திவிழா, எழுநாள் விழா, திருவோண விழா, மன்னன் பிறந்த நாள் விழா ஆகியவற்றை விவரிக்கின்றது. பத்துப் பாட்டிலேயே அளவில் மிகப் பெரிய பாடல் இது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக