புதன், 18 ஆகஸ்ட், 2021

திருத்தில்லைப் பதிகம் - திருஞானசம்பந்தர்

 

திருத்தில்லைப் பதிகம் 

திருஞானசம்பந்தர்

திருஞானசம்பந்தர்  சைவ சமயத்தவர்களால் நாயன்மார்கள் என அழைக்கப்படும் அறுபத்து மூவருள் ஒருவர். தேவார மூவருள் முதலாமவர். இவர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில்சீர்காழி என்னும் ஊரில் பிறந்தார். இவரது தந்தையார் சிவபாத இருதயர், தாயார் பகவதி அம்மையார். இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது, தந்தையாருடன் கோயிலுக்குச் சென்றதாகவும், அங்கே குழந்தையைக் கரையில் அமரவிட்டுக் குளிக்கச் சென்ற தந்தையார், சிறிது நேரம் நீருள் மூழ்கியிருந்த சமயம், தந்தையைக் காணாத குழந்தை அம்மை அப்பா என்று கூவி அழுததாகவும், அப்போது  உமாதேவியார்சிவபெருமானுடன்  இவர் முன் காட்சி கொடுத்து ஞானப்பாலூட்டியதாகவும் சொல்லப்படுகிறது. அதனால் தமிழில் அறிவுசேரர் என்று பொருள்பட திருஞானசம்பந்தர் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். மகன்மை நெறியில் இறைவனை வழிபட்டார். இவர் பாடிய பதினாறாயிரம் பதிகங்களுள் 384 பதிகங்களே கிடைத்துள்ளன. இவர் பாடிய பதிகங்கள் பன்னிரு திருமுறைகளுள் முதல் மூன்று திருமுறைகளாக வைத்துப்போற்றப்படுகிறது.

வேறு பெயர்கள்

ஆளுடைய பிள்ளை, காழி வள்ளல் என்ற வேறு பெயர்களாலும் வழங்கப்படுகிறார். நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன் என்று பாராட்டப்பட்டார். ஆதி சங்கர்ர் தன்து சௌந்தர்ய லகரியில் இவரை திராவிட சிசு என்று குறிப்பிட்டுள்ளார்.

இறை ஒளியில் கலந்தார்

பெற்றோரின் விருப்பத்திற்கிணங்க தனது பதினாறாவது வயதில் திருநல்லூர் நம்பாண்டர் மகள் சொக்கியாரை மணம் முடிக்கச் சம்மதித்தார். திருப்பெருமணநல்லூரில் திருமணத்திற்கு முன் ஒரு பதிகம் பாடி திருமணக்கோலத்துடன் சுற்றம் சூழ இறைஒளியில் கலந்து விட்டார். 

அற்புதங்கள்

மூன்று வயதில் உமையம்மையாரிடம் திருமுலைப்பால் உண்டமை, சிவபெருமானிடத்தே பொற்றாளமும், முத்துப்பல்லக்கும், முத்துச்சின்னமும், முத்துக்குடையும், முத்துப்பந்தரும் பெற்றமை, வேதாரணியத்தில் திருக்கதவு அடைக்கப் பாடியமை, பாண்டியனுக்குக் கூனையும் சுரத்தையும் போக்கியமை, தேவாரத் திருவேட்டை அக்கினியில் இட்டுப் பச்சையாய் எடுத்தமை, வைகையிலே திருவேட்டை விட்டு எதிரேறும்படி செய்தமை,  சிவபெருமானிடத்தே படிக்காசு பெற்றமை, விடத்தினால் இறந்த வணிகனை உயிர்ப்பித்தமை.

திருஞானசம்பந்தர் 220 பதிகளுக்குச் சென்று இறைவனை வழிபட்டதாகக் கூறப்படுகின்றது. அவற்றுள் சிதம்பரத்தில் உள்ள நடராசப் பெருமானைப் பாடிய திருத்தில்லைப் பதிகத்திலிருந்து பதினொரு பாடல்கள் இங்கே பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

பதிகம் - அமைப்பு முறை

± திருஞானசம்பந்தரின் பதிகங்களில் முதல் ஏழு பாடல்கள் தலவரலாற்றின் பெருமையை எடுத்துரைக்கின்றார்.

±      எட்டாவது பாடல் இராவணன்  செயலை விளக்குகிறது.

± ஒன்பதாவது பாடல் அயன், அரி இவர்களுக்கு அரிதான சிவபெருமானின் பெருமையை இயம்புகின்றது.

±   பத்தாவது பாடல் சமண பௌத்த சமயங்கள் துன்பம் தரும் தீங்கினை உடையன என்றும் போலி சமயங்கள் என்ற பாங்கில் அமைத்திருக்கக் காணலாம்.

± பதினோராவது பாடலில் தன் பெயரை ஊரையும் குறிப்பிட்ட பின்னர், இந்தப் பதிகத்தைப் பாடுவோருக்குக் கிடைக்கும் பயன்களை விளக்கி கூறியுள்ளார்.

பாடல் எண்: 01

கற்றாங்கு எரி ஓம்பி கலியை வாராமே

செற்றார் வாழ்தில்லைச் சிற்றம்பலம் மேய

முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே

பற்றா நின்றாரைப் பற்றா பாவமே.

பொருள்:

வேதம் முதலிய நூல்களைக் கற்று, அவற்றின் நெறியிலே நின்று, வேள்விகள் செய்து, இவ்வுலகில் வறுமையை வாராமல் ஒழிக்கும் அன்பர்கள் வாழ்கின்ற தில்லையில் எழுந்தருளியவன் சிவபெருமான். பிறை நிலவைச் சூடியவனாகிய அச்சிவபெருமானின் திருவடிகளைப் பற்றிக் கொண்டு வாழ்பவர்களைப் பாவம் தொடர்வதில்லை.

பாடல் எண்: 02

பறப்பைப் படுத்தெங்கும் பசு வேட்டு எரி ஓம்பும்

சிறப்பர் வாழ்தில்லைச் சிற்றம்பலம் மேய

பிறப்பு இல்பெருமானை பின் தாழ்சடையானை

மறப்பு இலார் கண்டீர் மையல் தீர்வாரே.

பொருள்:

பல இடங்களிலும் வேள்விச் சாலைகளை அமைத்து, ஆன்ம போதத்தைக் கொன்று, அன்பர்கள் வாழும் தில்லையில் உள்ள சிற்றம்பலத்தில் எழுந்தருளியவன் சிவபெருமான். அவன் பிறவி என்பதைப் பெறாதவன். அத்தகு சடை முடி கொண்ட சிவபெருமானை மறவாது வணங்குபவர்கள், ஆணவம், கன்மம், மாயை என்ற மயக்க உணர்வுகளிலிருந்து விடுதலை பெறுவர்.

பாடல் எண்: 03

மை ஆர் ஒண்கண்ணார் மாட நெடுவீதிக்

கையால் பந்து ஓச்சும் கழிசூழ் தில்லையுள்

பொய்யா மறைபாடல் புரிந்தான் உலகு ஏத்தச்

செய்யான் உறைகோயில் சிற்றம்பலம்தானே.

பொருள்:

மை தீட்டப்பட்ட ஒளி பொருந்திய கண்களை உடைய பெண்கள் மாட வீதிகளில் தம் கைகளால் பந்து எறிந்து விளையாடுவர். அப்படிப்பட்ட அழகுடைய உப்பங்கழிகள் சூழ்ந்துள்ள தில்லை, வேதப்பாடங்களை விரும்புகின்ற சிவபெருமான் உறைந்திருக்கின்ற கோவிலைக் கொண்டுள்ளது. அது உலக மக்கள் யாவரும் தொழுகின்ற கோயிலாக விளங்குகின்றது.

பாடல் எண்: 04

நிறைவெண் கொடிமாட நெற்றி நேர்தீண்டப்

பிறை வந்து இறைதாக்கும் பேரம்பலம் தில்லைச்

சிறைவண்டு அறை ஓவாச் சிற்றம்பலம், மேய

இறைவன் கழல்ஏத்தும் இன்பம் இன்பமே.

பொருள்:

மாடவீடுகளில் நிறைந்துள்ள வெண்மையான கொடிகள் வானத்திலுள்ள பிறையின் நெற்றியை நேரே தீண்டுமாறு வந்து தாக்கும் அளவிற்கு உயர்ந்தது தில்லைப்பதி. அப்பதியில் சிறகுகளை உடைய வண்டுகள் எப்போதும் ஒலிக்கும் சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் திருவடிகளைப் பரவுவதே இன்பம் ஆகும்.

பாடல் எண்: 05

செல்வ நெடுமாடம் சென்று சேணோங்கிச்

செல்வ மதி தோய செல்வம் உயர்கின்ற,

செல்வர் வாழ்தில்லைச் சிற்றம்பலம் மேய

செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே.

பொருள்:

வானளாவ உயர்ந்து நிற்கின்ற செல்வ வளம் மிக்க மாட வீடுகள் உடையது தில்லைப்பதி. அம்மாட வீடுகளின் மதில்கள் யாவும் வானத்தில் உள்ள மதியினை உரசிச் செல்கின்றன. அத்தகு அழகு நலன் வாய்ந்த, ஞானச் செல்வர்கள் பலர் வாழ்கின்ற திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் வீடுபேறாகிய செல்வத்தைத் தருகின்றான். அவன் திருவடிகளை வாழ்த்துவதே நமக்குப் பெரும் செல்வமாகும்.

பாடல் எண்: 06

வருமாந் தளிர்மேனி மாது ஓர்பாகம் ஆம்

திருமாந் தில்லையுள் சிற்றம்பலம் மேய

கருமான் உரி-ஆடைக் கறைசேர் கண்டத்து எம்

பெருமான் கழல் அல்லால் பேணாது உள்ளமே.

பொருள்:

மாந்தளிர் போன்று மென்மையாண திருமேனியை உடைய உமையம்மையைத் தன் உடலின் ஒரு பாகமாக வைத்துள்ள இறைவன், திருமகளின் அருளால் நிறைந்து விளங்கும் செல்வச் செழிப்பான தில்லை நகரில் உள்ள சிற்றம்பலத்தில் உறைகின்றான். கரிய நிறம் கொண்ட யானையின் தோலை உரித்து ஆடையாக அணிந்தவனாகவும், நஞ்சினை உண்டு அதைத் தன் கழுத்தில் தேக்கியதால் கறை படிந்த கழுத்தினை உடையவனாகவும் இருக்கும் சிவபெருமானின் திருவடிகளை அன்றி என் உள்ளம் வேறு எதையும் விரும்பாது.

பாடல் எண்: 07

அலையார் புனல்சூடி ஆகத்து ஒருபாகம்

மலையான் மகளோடும் மகிழ்ந்தான் உலகு ஏத்தச்

சிலையால் எயில் எய்தான் சிற்றம்பலம் தன்னைத்

தலையால் வணங்குவார் தலை ஆனார்களே.

பொருள்:

அலைகள் வீசுகின்ற கங்கை நதியைத் தன் முடியில் சூடியவன். உமையம்மையைத் தன் திருமேனியில் ஒரு பாகமாக வைத்தவன். மேருமலையாகிய வில்லால் முப்புரங்களை அழித்தவன். இத்தகு சிறப்பு வாய்ந்த சிற்றம்பலத்துப் பெருமானைத் தலை தாழ்த்தி வணங்குபவர்கள் தலையானவர்கள் ஆவர்.

பாடல் எண்: 08

கூர்வாள் அரக்கன் தன் வலியைக் குறைவித்து

சீராலே மல்கு சிற்றம்பலம் மேய

நீரார் சடையானை நித்தல் ஏத்துவார்

தீரா நோய் எல்லாம் தீர்தல் திண்ணமே.

பொருள்:

கூர்மையான வாளை உடைய அரக்கர் குலத்தைச் சேர்ந்த இராவணின் வலிமையை அழித்தவன். சிறந்த புகழ் எய்திய சிற்றம்பலத்தின்கண் எழுந்தருளியவன். கங்கையினைத் தன் தலைமுடியில் தரித்தவனாகிய சிவபெருமானை நாள்தோறும் வணங்குபவர்க்குத் தீராத நோய்கள் எல்லாம் தீர்ந்து விடும்.

பாடல் எண்: 09

கோள் நாக(அ)ணையானும் குளிர்தாமரையானும்

காணார் கழல் ஏத்த கனல் ஆய் ஓங்கினான்

சேணார் வாழ்தில்லைச் சிற்றம்பலம் ஏத்த

மாணா நோயெல்லாம் வாளா மாயுமே.

பொருள்:

பாம்புப் படுக்கையில் பள்ளி கொள்ளும் திருமாலும், தாமரைமேல் விளங்கும் நான்முகனும், சிவனின் அடிமுடிகளைக் காண முடியாதவர்களாக சிவனின் திருவடிகளைப் பற்றிய வேளையில், தீ வடிவில் ஓங்கி நின்றவன் சிவபெருமான். சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ள அவனைப் போற்றிப் பாடினால் கொடிய நோய்கள் எல்லாம் ஒழிந்து போகும்.

பாடல் எண்: 10

பட்டைத் துவராடைப் படிமம் கொண்டாடும்

முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே

சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம்பலம் மேய

நட்டப் பெருமானை நாளும் தொழுவோமே.

பொருள்:

மரப்பட்டையின் சாயம் ஏற்றிய ஆடையை உடுத்திய புத்தரும், நோன்புகள் பலவற்றை மேற்கொண்டு திரியும் சமணர்களும் உரைக்கின்ற அறியாமையோடு கூடிய உரைகளைக் கேட்காமல், ஒழுக்கத்தால் மேம்பட்டவர்கள் வாழ்கின்ற சிறப்புடைய சிற்றம்பலத்தில் எழுந்தருளிய நடராசப்பெருமானை நாள்தோறும் நாம் தொழுவோம்.

பாடல் எண்: 11

ஞாலத்து உயர்காழி ஞானசம்பந்தன்

சீலத்தார் கொள்கைச் சிற்றம்பலம் மேய

சூலப் படையானைச் சொன்ன தமிழ்மாலை

கோலத்தால் பாட வல்லார் நல்லாரே.

பொருள்:

சீர்காழியில் பிறந்த ஞானசம்பந்தன் ஒழுக்கமுடையவர்களால் புனிதமாகப் போற்றப்படும் தில்லைச் சிற்றம்பலத்தில் சூலப்படையுடைய எழுந்தருளிய சிவபெருமான் மீது பாடிய இத்தமிழ் மாலையாகிய திருப்பதிகத்தைப் பாடவல்லவர் நல்லவர் ஆவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக