திருநீற்றுப்
பதிகம்
திருநாவுக்கரசர் தேவாரம்
திருநாவுக்கரசர்
கி.பி ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில்,
தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவர்.
இவர் 63 நாயன்மார்களில் ஒருவரும் ஆவார்.
திருநாவுக்கரசர் சோழநாட்டின் திருமுனைப்பாடியில் உள்ள
திருவாமூர் எனும்
ஊரில் புகழனார் மற்றும் மாதினியாருக்கு மகனாகப்
பிறந்தவர். இவருடைய இயற்பெயர் மருண்நீக்கியார்.
இளமையில் சைவசமயத்தினை விட்டு சமண சமயத்தவரானார். சமண நூல்களைக் கற்று அம்மதத் தலைவர்களில் ஒருவராகவும் இருந்து தருமசேனர் என்ற பட்டமும்
பெற்றார்.
தருமசேனரின்
தமக்கையார் திலகவதியார். இவர் சிவபக்தராக இருந்தார். அதனால் சமண சமயத்தில்
தன்னுடைய தம்பி இணைந்ததை எண்ணி வருந்தி இறைவனிடம் முறையிட்டார். அதனால்
தருமசேனருக்கு கடுமையான சூலை நோய் (வயிற்று
வலி) ஏற்பட்டது. சமண மடத்தில் செய்யப்பட்ட
சிகிச்சைகள் பலனளிக்காமல் போகவும், திலகவதியாரின்
ஆலோசனைப்படி தருமசேனர் "கூற்றாயினவாறு விலக்ககலீர்" எனத் தொடங்கும்
பாடலைப் பாடினார். இப்பாடலால் நோய் தீர்ந்தது. அதன் பிறகு சைவ சமயத்தவராகி நாவுக்கரசர்
என்று அழைக்கப்பட்டார்.
பல்வேறு சிவாலயங்களுக்குச் சென்று தேவாரப் பதிகங்களைப் பாடினார்.
அத்துடன் சிவாலயங்களை தூய்மை செய்யும் பணியான உழவாரப் பணியை மேற்கொண்டார். அதனால் "உழவாரத்
தொண்டர்" என அழைக்கப்பட்டார். இவர் இறைவனை தொண்டு வழியில், அடிமை
நெறியில் வழிபட்டார். திருநாவுக்கரசர் 49,000 தேவாரப் பதிகங்களை பாடியுள்ளார். இவர்
பாடிய தேவாரப் பாடல்கள் 4, 5, 6 ஆகிய மூன்று திருமுறைகளில் வகுக்கப்பட்டுள்ளன. சமயத் தொண்டு புரிந்த
திருநாவுக்கரசர் 81ஆவது வயதில் திருப்புகலூரில் இறைவனடி கலந்தார்.
வேறு பெயர்கள்
- தருமசேனர் - சமண சமயத்தை தழுவிய போது கொண்ட பெயர்
- நாவுக்கரசர், திருநாவுக்கரசர் - தேவாரப் பாடல்களை பாடியமையால் பெற்ற பெயர்
- அப்பர் - திருஞானசம்பந்தர் அழைத்தமையால் வந்த பெயர்
- உழவாரத் தொண்டர் - சிவாலயங்களை தூய்மை செய்யும் பணியை செய்தமையால்
பெற்ற பட்டப்பெயர்.
அற்புதங்கள்
- சமணர்களாலே 7 நாட்கள் சுண்ணாம்பு அறையில் அடைத்து வைத்திருந்தும் வேகாது உயிர் பிழைத்தார்.
- சமணர்கள் கொடுத்த நஞ்சு கலந்த பாற்சோற்றை உண்டும் சாகாது உயிர் பிழைத்தார்.
- சமணர்கள் விடுத்த கொலை யானை வலம் வந்து வணங்கிச் சென்றது.
- சமணர்கள் கல்லிற் சேர்த்துக்கட்டிக் கடலில் விடவும் அக்கல்லே தோணியாகக் கரையேறியது.
- சிவபெருமானிடத்தே படிக்காசு பெற்றது.
- வேதாரணியத்திலே திருக்கதவு திறக்கப் பாடியது.
- காசிக்கு அப்பால்
உள்ள ஒரு தடாகத்தினுள்ளே மூழ்கி திருவையாற்றிலே ஒரு வாவியின் மேலே தோன்றிக்
கரையேறியது.
திருநாவுக்கரசரைத் திருநீற்றறையில் இட்டபோது
அவர் பாடிய திருநீற்றுப் பதிகத்தின் பாடல்கள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.
பாடல் எண்: 1
மாசில் வீணையும் மாலை
மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே.
விளக்கம்
இறைவனின் திருவடி நிழல்
குற்றமற்ற வீணையின் நாதம் போலவும், மாலையில் ஒளி வீசும் நிலவின் குளிர்ச்சி போலவும்,
நாசிக்கு புத்துணர்ச்சி தரும் தென்றல் காற்றினைப் போலவும், உடலுக்கு மிதமான வெப்பம்
தரும் இளவேனில் காலம் போன்றும், மாட்சியும், வண்டுகள் மொய்க்கும் மலர்கள் கொண்ட குளத்தின்
குளிர்ச்சியும் போன்று இன்பம் பயப்பதாகும்.
பாடல் எண்: 2
நமச்சி வாயவே ஞானமுங்
கல்வியும்
நமச்சி வாயவே நானறி விச்சையும்
நமச்சி வாயவே நாநவின்று ஏத்துமே
நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே.
விளக்கம்
நமச்சிவாய மந்திரமே நான் அறிந்த கல்வியாகும். நமச்சிவாய
மந்திரமே அந்த கல்வியால் நான் பெற்ற ஞானமுமாகும். நமச்சிவாய மந்திரம் தான் நான் அறிந்த
வித்தையாகும். நமச்சிவாய மந்திரத்தை எனது நா இடைவிடாது சொல்லும். இந்த நமச்சிவாய மந்திரம்
தான் வீடுபேற்றை அடையும் வழியாகும்.
பாடல் எண்: 3
ஆளாகார் ஆளானாரை அடைந்து உய்யார்
மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்
தோளாத சுரையோ தொழும்பர்செவி
வாளா மாய்ந்து மண்ணாகிக் கழிவரே.
விளக்கம்
சிவபிரானின் அடியாராக இல்லாதவர்கள், சிவபிரானின் அடியார்களை
அணுகி அவர்களிடமிருந்து உய்யும் வழியினை அறிந்து கொண்டு அந்த வழியில் செல்ல மாட்டார்கள்;
அவர்கள் சிவபிரானுக்கு அடிமையாக இருந்து மெய்ப்பொருளை உணர மாட்டார்கள்: அவர்களது செவிகளால்
சிவபிரானின் நாமத்தை கேட்க மாட்டார்கள். அதனால் அவர்களின் வாழ்க்கை எந்த பயனையும் அடையாமல்
வீணாகக்கழிகின்றது.
பாடல் எண்: 4
நடலை வாழ்வுகொண்டு என்செய்திர்
நாணிலீர்
சுடலை சேர்வது சொற்பிர மாணமே
கடலின் நஞ்சு அமுதுண்டவர் கைவிட்டால்
உடலி னார்கிடந்து ஊர்முனி பண்டமே.
விளக்கம்
நாணம் இல்லாதவர்களே, துன்பம் தரும் இந்த வாழ்க்கையில்
நீங்கள் சாதித்தது என்ன. இறப்பு தவிர்க்க முடியாதது என்பது சான்றோர் வாக்கு. பாற்கடலில்
பொங்கி வந்த விடத்தை உண்டு, உலகினை பாதுகாத்த சிவபிரான் கைவிட்டால், நமது உடல் அனைவரும்
பழிக்கத் தக்க பொருளாக, இழிந்த பொருளாக மாறிவிடும். உயிரற்ற உடல் அனைவராலும் வெறுக்கத்
தக்கது என்பதால், சிவபிரான் அருளால் இனி வரும் பிறவியையும் அதனால் நிகழப்போகும் இறப்பையும்
தடுத்து பேரின்பம் அடைய நாம் முயற்சிசெய்யவேண்டும்.
பாடல் எண்: 5
பூக்கைக் கொண்டு அரன்
பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டு அரன் நாமம் நவில்கிலார்
ஆக்கைக்கே இரை தேடி அலமந்து
காக்கைக்கே இரை யாகிக் கழிவரே.
விளக்கம்
சிவபிரானின் பொன்னார் திருவடிகளை தங்களது கைகளால்
பூக்கள் தூவி வழிபாடு செய்யாதவர்களும், தங்களது நாவினால் சிவபிரானது திருமாமத்தைச்
சொல்லாதவர்களும், தங்களது வாழ்க்கையை தங்களது உடலினை வளர்ப்பதற்காக உணவினைத் தேடி அலைந்து
வீணாகக் கழித்து இறுதியில் தங்களது உடலினை காக்கைக்கும் கழுகினுக்கும் உணவாக அளிப்பதைத்
தவிர பயனான காரியம் ஏதும் செய்வதில்லை.
பாடல் எண்: 6
குறிகளும் அடையாளமும் கோயிலும்
நெறிகளும் அவர் நின்றதோர் நேர்மையும்
அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும்
பொறி இலீர்மனம் என்கொல் புகாததே.
விளக்கம்
சிவபிரானின் திருவுருவங்கள், அவனை அடையாளம் காட்டும்
சின்னங்கள் (நந்தி வாகனம், நந்திக்கொடி, அணியும் திருநீறு, உருத்திராக்கம் ஆகியவை),
அவனை வழிபடுவதற்கு உரிய சைவ நெறி, அவனது நேர்மைக் குணம் ஆகியவற்றை நாம் அறிந்து கொள்ளுமாறு
வேதங்கள் ஆயிரம் முறைகள் கூறியிருந்தாலும், உங்களது மனத்தில் அந்த உண்மைகள் ஏன் புகுவதில்லை.
நீங்கள் அவற்றினை உணரக்கூடிய பொறிகள் ஏதும் இல்லாமல் இருப்பதேன்?
பாடல் எண்: 7
வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச்
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்தவா வினையேன்நெடுங் காலமே.
விளக்கம்
தன்னை வாழ்த்துதற்கு வாயும், தன்னை நினைக்க
அறிவற்ற நெஞ்சும், தன்னை வணங்கத் தலையும் தந்த தலைவனாகிய பெருமானை வண்டுகள் சூழ்ந்த
மலர்களைத் தூவித் துதிக்காமல், வீணாக எனது வாழ்நாளில் பெரும்பகுதியைக் கழித்து விட்டேனே?
பாடல் எண் : 8
எழுது பாவைநல் லார்திறம் விட்டுநான்
தொழுது போற்றிநின் றேனையும் சூழ்ந்துகொண்டு
உழுத சால்வழியே உழுவான்பொருட்டு
இழுதை நெஞ்சம் என்படு கின்றதே.
விளக்கம்
சித்திரப்பாவைகள் போன்ற அழகான பெண்களின் தொடர்பினை
விட்டு விட்டு, இறைவனைத் தொழுது போற்றி நிற்கும் என்னை, எனது இழிந்த மனது மறுபடியும்
மறுபடியும் உலகச் சிற்றின்பங்களில் ஆழ்த்துகின்றதே, நான் என் செய்வேன்?
பாடல் எண்: 9
நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும் பொன்னார்சடைப் புண்ணியன்
பொக்கம் மிக்கவர் பூவும் நீருங்கண்டு
நக்கு நிற்பர் அவர்தம்மை நாணியே.
விளக்கம்
உள்ளம் நெகிழ்ந்து சிவபிரானை வழிபடுவார் மனதினில்
புகுந்து உறையும் பொன் போன்ற சடையினை உடைய சிவபிரான், பொய்ம்மையாளர் செய்யும் வழிபாட்டினை
உணர்ந்து அவர்களின் மடமையை நினைத்து அவர்களை நோக்கி ஏளன நகையுடன் சிரித்து நிற்பான்.
பாடல் எண்: 10
விறகில் தீயினன் பாலிற் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோல்நட்டு உணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே.
விளக்கம்:
சிவபிரான் அரணிக் கட்டையில் தீ போலவும், பாலினில்
நெய் போலவும், சாணை பிடிக்கப்படாத மாணிக்கக் கல்லில் பிரகாசம் போலவும் நமது கண்களுக்கு
புலப்படாமல் நிற்கின்றான். ஆனால் நமக்கும் அவனுக்கும் இடையே இருக்கும் ஆண்டவன் பக்தன்
என்ற உறவாகிய மத்தினை நட்டு உணர்வு என்னும் கயிற்றினால் அந்த மத்தினை இறுக்கமாக கட்டி
கடைந்தால் இறைவன் நமது முன்னே வந்து தோன்றுவான்.
நன்றி:
https://vaaramorupathigam.wordpress.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக