சுந்தரர்
சுந்தரமூர்த்தி நாயனார் சமயக்குரவர் நால்வரில் மூன்றாமவர். அறுபத்துமூன்று நாயன்மாரில் ஒருவர். திருமுனைப்பாடி
நாட்டிலுள்ள திருநாவலூர் எனும் ஊரில் சடையனார் - இசைஞானியார் தம்பதியினருக்கு
மகனாகப் பிறந்தார். இவர் ஆதி சைவர் எனும் குலத்தினைச் சேர்ந்தவர். இவரது
இயற்பெயர் நம்பியாரூரன். இவருடைய அழகினைக் கண்டு சிவபெருமானே சுந்தரர் என்று அழைத்தமையால், அப்பெயரிலேயே
அறியப்படுகிறார். சுந்தரர் சிறுவயதில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திருமுனைப்பாடி
அரசர் நரசிங்கமுனையரையர் கண்டார். சிறுவன் சுந்தரனைத் தத்தெடுத்து, தம்
அரண்மனைக்கு அழைத்துச் சென்று இளவரசனைப் போல அனைத்துக் கலைகளையும் கற்றுத் தந்தார்.
இறைவன் தடுத்தாட் கொள்ளல்
மணப்பருவம் அடைந்தபோது
சுந்தரருக்குப் புத்தூரில் உள்ள சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைத் திருமணம் செய்ய
ஏற்பாடு செய்யப்பட்டது. மணநாளன்று முதியவர் வடிவில் அங்கு வந்த இறைவன், சுந்தரருடைய
பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஓர் ஓலையைக் காட்டிச்
சுந்தரரும், அவர் வழித்தோன்றல்களும் தனக்கு அடிமை என்றார்.
அதனால் திருமணம் தடைப்பட, சுந்தரரை அழைத்துக்கொண்டு கோயிலுள் நுழைந்த
முதியவர் திடீரென மறைந்தார். இறைவனே வந்து தன்னைத் தடுத்தாட் கொண்டதை உணர்ந்த
சுந்தரர், "பித்தா பிறை சூடி" என்ற தமது முதல் தேவாரப் பதிகத்தைப் பாடித்
துதித்தார். பாடல்களின் மூலமாக இறைவனை தம்முடைய நண்பராக்கிக் கொண்டார். சிவத்தலங்கள் தோறும்
சென்று தேவாரப் பதிகங்கள் பாடி
இறைவனைப் பணிந்தார். இறைவன்பால் இவர் கொண்டிருந்த பக்தி "சக மார்க்கம்"
என்று சொல்லப்படுகின்ற தோழமை வழியைச் சார்ந்தது. இவருடைய காலம் கி.பி.எட்டாம்
நூற்றாண்டு.
திருமணங்கள்
திருவாரூரில் பதியிலார்
குலத்தைச் சார்ந்த பரவையார் என்ற பெண்ணையும், திருவொற்றியூரில், வேளாளர்
குலத்தைச் சார்ந்த 'சங்கிலியார்' என்ற
பெண்ணையும் சிவனருள் துணை கொண்டு திருமணம் செய்து கொண்டார்.
பாடிய பாடல்கள்
இவர்
சிவபெருமான் மீது பாடிய பாடல்கள் 38000 என்று
கூறுகின்றனர். அவற்றில் கிடைத்த பதிகங்கள் 101. இவர்
பாடிய தேவாரங்கள் 7 ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன.
இவர்
இயற்றிய திருத்தொண்டத் தொகை என்னும்
நூலில் 60 சிவனடியார்கள் பற்றியும், 9 தொகை
அடியார்கள் பற்றியும் குறிப்புகள் உள்ளன. இந்நூலின் துணை கொண்டே சேக்கிழார் பெரியபுராணம் எனும்
நூலை இயற்றினார். அதில் சுந்தர மூர்த்தி நாயனாரையும், அவரது
பெற்றோரான சடையனார், இசை ஞானியார் ஆகிய மூவரையும் இணைத்து சிவதொண்டர்களின் எண்ணிக்கையை 63 எனக்
கையாண்டார்.
முக்தி
சுந்தரர் தனது 18
ஆவது வயதில் சிவனடி சேர
அடைந்திட பதிகம் பாடினார். சிவபெருமான் வெள்ளை யானையைச் சுந்தரருக்கு அனுப்ப, அதில்
ஏறி கைலாயம் சென்றார். அங்கிருந்த சிவனும் பார்வதியும் அவரை வரவேற்று
முக்தியளித்தனர்.
அற்புதங்கள்
1.
செங்கற்களைப்
பொன்னாகப் பெற்றுக் கொண்டது
2. சிவபெருமான் கொடுத்த பொன்னை விருத்தாச்சலத்தில் உள்ள
ஆற்றிலே போட்டு திருவாரூர்க் குளத்தில் எடுத்தது.
3. காவிரியாறு பிரிந்து
வழிவிடச் செய்தது.
4. அவிநாசியில் முதலை
விழுங்கிய குழந்தையை அம்முதலையின்
வாயின்று மூன்றாண்டு வளர்ச்சியுடன் அழைத்துக் கொடுத்தது.
5.
வெள்ளை யானையில் ஏறி
திருக்கைலாசத்திற்கு எழுந்தருளியது.
திருவெண்ணெய்நல்லூரில் இறைவன் தடுத்தாட்கொண்டபோது அவர் பாடிய
பித்தா பிறை சூடி என்று தொடங்கும் பாடல்களே இங்குப் பாடமாகும்.
பித்தா! பிறைசூடீ! பெருமானே! அருளாளா!
எத்தால் மறவாதே
நினைக்கின்றேன்? மனத்து உன்னை
வைத்தாய்; பெண்ணைத்
தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
அத்தா! உனக்கு ஆள் ஆய்
இனி அல்லேன் எனல் ஆமே? .
விளக்கம்
பித்தனே, பிறையைச் சூடியவனே, பெருமை உடையவனே, பெண்ணையாற்றின்
தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரில், "அருட்டுறை" என்னும் திருக்கோயிலின்கண்
எழுந்தருளியிருக்கும் தலைவனே, எனது நெஞ்சத்துள் உன்னை அகலாது வைத்தருளினாய், அதனால்,
உன்னை மறவாமல் நினைந்து, முன்பே உனக்கு அடியவனாகி, இப்பொழுது, "உனக்கு அடியவன்
அல்லேன்" என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ.
பாடல் - 2
நாயேன் பல நாளும் நினைப்பு இன்றி, மனத்து
உன்னை,
பேய் ஆய்த் திரிந்து
எய்த்தேன்; பெறல் ஆகா அருள் பெற்றேன்;
வேய் ஆர் பெண்ணைத்
தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
ஆயா! உனக்கு ஆள் ஆய்
இனி அல்லேன் எனல் ஆமே? .
விளக்கம்
மூங்கில்கள் நிறைந்து வரும் பெண்ணையாற்றின்
தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரில் அருட்டுறை என்னும் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும்
தலைவனே, நாய் போலும் கீழ்மையுடையேனாகிய நான் உன்னை பலவற்றினும் மனத்தால் நினைத்தல்
இன்றிப் பேய்போல அலைந்து இளைத்தேன், ஆயினும், இப்போது, பெறுதற்கு அரிய உனது திருவருளை
நான் பெற்றேன். இப்பேற்றை எனக்கு அளிக்க வந்த உனக்கு, முன்பே நான் அடியவனாகி, இப்பொழுது,
"அடியவன் அல்லேன்" என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ.
பாடல் - 3
மன்னே! மறவாதே நினைக்கின்றேன், மனத்து
உன்னை;
பொன்னே, மணிதானே, வயிர(ம்)மே, பொருது
உந்தி
மின் ஆர் பெண்ணைத் தென்பால்
வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
அன்னே! உனக்கு ஆள் ஆய்
இனி அல்லேன் எனல் ஆமே? .
விளக்கம்
தலைவனே,
கரையை மோதி, பொன்னும் மணியும், வயிரமும் ஆகிய இவற்றைத் தள்ளிக்கொண்டு வருகின்ற பெண்ணையாற்றின்
தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரில் அருட்டுறைத் திருக்கோயிலின்கண்
எழுந்தருளியுள்ள தாய் போன்றவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, "அடியவன்
அல்லேன்" என்று எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ! இனிமேல், உன்னை என் மனத்தில்
ஒருபோதும் மறவாமலே நினைப்பேன்.
பாடல் - 4
முடியேன்; இனிப் பிறவேன்;
பெறின் மூவேன்; பெற்றம்
ஊர்தீ!
கொடியேன் பல பொய்யே
உரைப்பேனைக் குறிக்கொள், நீ!
செடி ஆர் பெண்ணைத்
தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
அடிகேள்! உனக்கு ஆள்
ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .
விளக்கம்
இடபத்தை ஊர்பவனே, ஒளி நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரில் அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும்
தலைவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, "அடியவன் அல்லேன்" என
எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ! அப்பொருந்தாமையை அகற்றி என்னை நீ தெளிவித்தருளினமையால்,
இனி நான் இறக்கவும், மீளப் பிறக்கவும், இவ்வுலகில் வாழப் பெறின் மூப்படைந்து வருந்தவும்
ஆற்றேனாகின்றேன். பொய்ம்மைகள் பலவற்றையே பேசுவேனாகிய என்னை நீ வெறுக்காது ஏற்றருள்.
பாடல் - 5
பாதம் பணிவார்கள் பெறும் பண்டம்(ம்) அது பணியாய்!
ஆதன் பொருள் ஆனேன்; அறிவு
இல்லேன்; அருளாளா!
தாது ஆர் பெண்ணைத்
தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
ஆதி! உனக்கு ஆள் ஆய்
இனி அல்லேன் எனல் ஆமே?.
விளக்கம்
அருளாளனே, பூக்களின் மகரந்தம் நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள
திருவெண்ணெய் நல்லூரில் அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியுள்ள முதல்வனே, உனக்கு
நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, "அடியவன் அல்லேன்" என எதிர் வழக்குப்
பேசியது பொருந்துமோ! அப்பொருந்தாச் செய்கையைச் செய்தமையால் அறிவில்லாதவன் ஆயினேன்; அதனால், "ஆதன்" என்னும் சொல்லுக்குப் பொருளாயினேன்;
ஆயினும், என்னை இகழாது உன் திருவடியை வணங்கி வாழ்கின்ற அறிஞர்கள் பெறும் பேற்றை எனக்கு
அளித்தருள்க.
பாடல் - 6
தண் ஆர் மதிசூடீ! தழல் போலும் திருமேனீ!
எண்ணார் புரம் மூன்றும்
எரியுண்ண(ந்) நகை செய்தாய்!
மண் ஆர் பெண்ணைத்
தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
அண்ணா! உனக்கு ஆள் ஆய்
இனி அல்லேன் எனல் ஆமே? .
விளக்கம்
குளிர்ச்சி நிறைந்த திங்களைச் சூடியவனே, நெருப்புப் போலும் திருமேனியை
உடையவனே, உன்னை மதியாதவரது அரண்கள் மூன்றையும் தீயால் எரித்தவனே, பாவத்தைக் கழுவுகின்ற
பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய் நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண்
எழுந்தருளியிருக்கும் தலைவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, "அடியவன்
அல்லேன்" என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ.
பாடல் - 7
ஊன் ஆய், உயிர் ஆனாய்; உடல் ஆனாய்; உலகு ஆனாய்;
வான் ஆய், நிலன்
ஆனாய்; கடல் ஆனாய்; மலை ஆனாய்;
தேன் ஆர் பெண்ணைத்
தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
ஆனாய்! உனக்கு ஆள் ஆய்
இனி அல்லேன் எனல் ஆமே? .
விளக்கம்
பூக்களின் தேன் நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்
நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் நீங்காது எழுந்தருளியிருப்பவனே,
நீ உடலிடத்து நின்ற உயிர்கள் ஆகியும், உயிர்கள் நிற்கின்ற
உடல்களாகியும், வானாகியும், நிலமாகியும், கடலாகியும், மலையாகியும் நிற்கின்றாய்;
உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, "அடியவன் அல்லேன்" என எதிர் வழக்குப்
பேசியது பொருந்துமோ.
பாடல் - 8
ஏற்றார் புரம் மூன்றும் எரியுண்ணச் சிலை தொட்டாய்!
தேற்றாதன சொல்லித்
திரிவேனோ? செக்கர் வான் நீர்
ஏற்றாய்! பெண்ணைத்
தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
ஆற்றாய்! உனக்கு ஆள்
ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .
விளக்கம்
பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய் நல்லூரின் கண்ணதாகிய
அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் நன்னெறியானவனே, நீ உனக்குப் பகையாய்
எதிர்ந்தவர்களது அரண்கள் மூன்றையும் தீ உண்ணும்படி, போர் செய்து அழித்தாய். சிவந்த
சடையில் ஆகாய கங்கையைத் தாங்கினாய். அப்பெருமைகளை, அறியாமை காரணமாகத் தோன்றும் சொற்களைச்
சொல்லி நான் வீணே உழல்வேனோ! அங்ஙனம் உழலும் நெறியானே, முன்பு உனக்கு அடியவனான நான்
இப்பொழுது, "அடியவன் அல்லேன்" என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ.
பாடல் – 9
மழுவாள் வலன் ஏந்தீ! மறை ஓதீ! மங்கை பங்கா!
தொழுவார் அவர் துயர்
ஆயின தீர்த்தல் உன தொழிலே;
செழு வார் பெண்ணைத்
தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
அழகா! உனக்கு ஆள் ஆய்
இனி அல்லேன் எனல் ஆமே? .
விளக்கம்
மழுப்படையை வலப்பக்கத்தில் ஏந்தியவனே, வேதத்தை ஓதுபவனே, உமையை ஒரு பாகத்தில்
உடையவனே, செழுமை வாய்ந்து இடையறாது ஒழுகுகின்ற பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்
நல்லூரில் உள்ள அருட்டுறைத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் அழகனே, உன்னை வணங்குபவர்களின் துன்பங்களை நீக்குதல் உன் தொழில் என்பதனால்,
என்னை வலிந்து ஆட்கொள்ள வந்தாய். அதனை அறியாது, முன்பே உனக்கு அடியவனாகியதனை மறுத்து,
இப்பொழுது, "அடியவன் அல்லேன்" என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ.
பாடல் - 10
கார் ஊர் புனல்
எய்தி, கரை கல்லித் திரைக் கையால்
பார் ஊர் புகழ் எய்தி, திகழ்
பல் மா மணி உந்தி,
சீர் ஊர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
ஆரூரன் எம்பெருமாற்கு ஆள் அல்லேன் எனல் ஆமே? .
விளக்கம்
மேகத்தினின்று நீர் திரண்டு பொருந்தி, அலைகளாகிய
கைகளால் கரையைக் குத்தி, நிலம் முழுதும் பரவிய புகழைப்பெற்று, ஒளி விளங்குகின்ற பல
சிறந்த மணிகளைத் தள்ளி வந்து, அழகு மிகுகின்ற பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்
நல்லூரில் உள்ள அருட்டுறைத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்கு,
ஆரூரன் "அடியவன் அல்லேன்" என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ.
http://aathirainayagan.blogspot.com/2015/05/blog-post_71.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக