சங்க கால ஆட்சி முறை
சங்க காலத்தில்
முடியாட்சி நடைபெற்றது. மன்னன் இறைவனுக்கு ஒப்பாகவும், அரண்மனை கோயிலுக்கு ஒப்பாகவும்
மதிக்கப்பட்டது. மன்னனின் பிறந்தநாளும், முடிசூட்டு விழாவும் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டன.
மணிமுடி, கொடி, வெண்கொற்றக்குடை இவை மூன்றும் அரசின் சிறப்புச் சின்னங்களாகும். மன்னனின்
பிறந்தநாளில் வகள் தள்ளுபடி செய்யப்பட்டன. கைதிகள் விடுதலை பெற்றனர்.
வாரிசு
மன்னர்கள்
மரபுகளைப் போற்றினர். மன்னனின் மகனுக்கு அரசுரிமை கொடுக்கப்பட்டது. இளம் வயதுடையவர்களாக
இருப்பினும் அவர்களும் அரசுரிமை பெற்றனர் என்பதற்கு கரிகாலனும், பாண்டியன் நெடுஞ்செழியனும்
சான்றாவர். வாரிசு இல்லாதபோது நெருங்கி உறவினர் பதவி ஏற்றனர். தேர்தல் முறையும், பெண்கள்
அரியணையில் ஏறும் வழக்கமும் இல்லை. மன்னர்களை எதிர்த்து மக்கள் போராடுவதில்லை.
அரசவை
அரசவை நிர்வாகத்
தலைமையகமாக விளங்கியது. அது இருக்கை, ஓலக்கம், வேந்தவை என்ற பெயர்களில் அறியப்பட்டது.
அரசவையில் மன்னர் குடும்பத்தினரும், உயர் அதிகாரிகளும்,
அறிஞர் புலவர் பெருமக்களும், தூதுவர்களும் பங்கேற்றனர். அவையில் பங்குற்கும் பெருமக்கள்
மன்னனுக்கு ஆலோசனை கூறுவதுடன் கட்டளைகளை எதிர்நோக்கி இருப்பர். ஆலோசனை கூற அவர்கள்
தயங்கியதில்லை. அரசவை சட்டமியற்றும் அரங்கமாக இருக்க வில்லை. வழக்காறுகளும் மரபுகளும்
சட்டமாக விளங்கின. மன்னன் சட்டத்தின் காவலனாக விளங்கினான்.
அமைச்சர்கள்
அமைச்சர்கள்
ஆலோசகர்கள் என்றும் காவிதிமாக்கள் என்றும் அறியப்பட்டனர். திறன் உடையவர்களும், பேராற்றல்
உடையவர்களும், நூலறிவு உடையவர்களும், அறவழி நடப்பவர்களுமே அமைச்சர்களாக இருந்தனர்.
தூதுவர்கள்
இளவரசர்களும்,
அந்தணர்களும், புலவர்களும் மன்னனின் தூதுவர்களாகச் செயல்பட்டனர். அண்டை நாடுகளுக்கும்,
அயல் நாடுகளுக்கும் தூதுவர்கள் சென்றனர். மன்னனின் அயல்நாட்டுக் கொள்கையின் முடிவை
எடுத்துரைக்கவும், அயல்நாட்டுடன் நட்புறவை ஏற்படுத்தவும் தூதர்கள் பயன்பட்டனர்.
ஆலோசனைக் குழுக்கள்
மன்னர்களுக்கு
ஆலோசனை வழங்குவதற்கென்று குழுக்கள் இருந்தன. அவை எண்பேராயம், ஐம்பெருங்குழு என்று அழைக்கப்பட்டன.
இக்குழுக்கள் அடங்கிய அமைப்புக்கு “பதினெண் சுற்றம்“ என்று பெயர். கல்வியாளர்களும்,
தூய உள்ளம் கொண்டவர்களும், ஒழுக்கத்தில் சிறந்தவர்களும், உண்மையே பேசுபவர்களுமே இக்குழுவின்
உறுப்பினராகும் தகுதி பெற்றனர்.
எண்பேராயம்
- கரணத்தியலவர் – அரசின் பெருங்கணக்கர்
- கருமவிதிகள் - பொருட் பாதுகாப்பு அதிகாரி
- கனகச் சுற்றம் - பொருட் பாதுகாப்பு அதிகாரி
- கடைக்காப்பாளர் - நாடு காவலர்
- நகரமாந்தர் - நகரத்தின் காவலர்
- படைத்தலைவர் - சேனைப்படைகளின் தலைவர்
- யானை வீரர் - யானைப் படை வீர்
- இவுளி மறவோர் - குதிரைப்படைத் தலைவர்
ஐம்பெருங்குழு
- அமைச்சர்
- புரோகிதர்
- படைத்தலைவர்
- தூதுவர்
- சாரணர்
நாட்டுப் பிரிவுகள்
நாடு முழுவதும் மண்டலம்
என்று அழைக்கப்பட்டது. மண்டலங்கள் பரப்பால் பெரிதாகவும் சிறிதாகவும் இருந்தன. அவை நாடுகளாகப்
பிரிக்கப்பட்டன. நாடுகளைக் கோட்டங்களாகப் பிரித்தனர். கோட்டம் என்பது ஓர் உட்பிரிவாகப்
பிரிக்கப்பட்டது. நாட்டின் சிறிய பிரிவுகள் பேரூர்கள், சிற்றூர்களாயின. கடற்கரையை அடுத்த
கிராமங்கள் பட்டினங்கள் எனப்பட்டன.
ஊர் நிர்வாகம்
உழவர் குடியிருப்பு
ஊர் எனப்பட்டது. ஊர்களில் மன்றம், பொதியில் அம்பலம், மாசனம் போன்ற நிறுவனங்கள் நிர்வாகத்தை
நடத்தின.
- மாசனம் – குடிமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி. இவர் மக்களின் குறைகளை மன்னனிடம் கூறுவார்.
- பொதியில், மன்றம், அம்பலம் – இவை யாவும் நீதி வழங்கும் இடங்கள் ஆகும். ஊர்களில் அமைதி நிலவ செயல்பட்டன. ஊர்களில் ஏற்படும் வழக்குகளுக்குத் தீர்வு கண்டன.
வரிகள்
- நிலவரி முக்கியமானதாகக் கருதப்பட்டது.
- விளைச்சலில் ஆறில் ஒரு பங்கை வரியாகச் செலுத்தினர்.
- சிற்றரசர்கள் முறைப்படி முடி மன்னர்களுக்கு திறை செலுத்தினர்.
- தோற்கடிக்கப்பட்ட எதிரிகளும் திறை செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டது.
- நாட்டில் இறையிலி நிலங்கள் இருந்தன.
- சில சூழல்களில் வரிகள் தள்ளுபடி செய்யப்பட்டன.
- வசூலிக்கப்பட்ட வரிகள் பொதுப்பணிக்கும், அறப்பணிக்கும், ஆலயப்பணிக்கும் பயன்படுத்தப்பட்டன.
- சாலைகள் அமைக்கவும், குளங்கள், ஏரிகளைப் பராமரிக்கவும் வரிப்பணம் செலவிடப்பட்டது.
நீதித்துறை
நகரங்களில்
அவைகளும், ஊர்களில் மன்றங்களும் நீதி நிர்வாகப் பணிகளைச் செய்தன. அரசவை உயர்நீதி மன்றமாகவோ,
முறையீட்டு மன்றமாகவோ செயல்பட்டது. நீதி வழங்குவதற்கென்று அமைந்த இடம் அறக்களம் எனப்பட்டது.
நீதித்துறை உரிமை இயல், குற்ற இயல் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தது. எளிதான
வழக்கு விசாரணை முறை பின்பற்றப்பட்டது. குற்றவியல் வழக்குகளே மிகுதியாக இருந்தன. நீதி
வழங்கத் தெய்வங்கள் உதவும் என்ற நம்பிக்கையில் நீர், நெருப்பு முதலியவற்றின் துணை கொண்டு
குற்றம் புரிந்தவர்களைக் கண்டுபிடிக்கும் வழக்கம் இருந்தது. குற்றம் தவிர்க்கும் நோக்குடன்
கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டன. திருட்டுக் குற்றத்திற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
உடல் உறுப்புகளை வெட்டுதல் சாதாரணமான தண்டனைகளாகும். குற்றம் புரிந்தோரை சித்திசவதைப்
படுத்துதல், சிறையில் அடைத்தல், தண்டம் விதித்தல் ஆகிய தண்டனைகளும் சாதாரணமான தண்டனைகளாகக்
கருதப்பட்டன. வரி கட்டாததும் தண்டனைக்குரியதாகும்.
------------------------------------------------------------------------------------------------
குறிப்பு
இந்தத் தலைப்பில் உள்ள
கருத்துகள் யாவும்
தமிழர் நாகரிகமும் பண்பாடும்
– முனைவர் அ.தட்சிணாமூர்த்தி,
தமிழக வரலாறும் பண்பாடும்
– வே.தி.செல்லம்,
தமிழக வரலாறு மக்களும்
பண்பாடும் – கே.கே.பிள்ளை
ஆகிய மூன்று நூல்களில்
இருந்து சுருக்கமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இவை மாணவர்கள் எளிமையாகப் புரிந்து கொள்ளவும்,
தேர்வுக்குப் படிக்கவும் உருவாக்கப்பட்டவை. முழுக்க முழுக்க மாணவர்களின் நலன் கருதியே
இத்தளம் செயல்படுகின்றது.
ஆகவே, மாணவர்கள் தவிர்த்து
இத்தளத்தைக் காண்பவர்கள் படிக்கவும், புரிந்து கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர,
இத்தளத்தில் உள்ள செய்திகளை அப்படியே எடுத்து நூலாக்கம் செய்வதோ, கைடு நூலாக்கம் செய்வதோ,
வலையொளியில் பதிவு செய்வதோ கூடாது என்று தாழ்மையுடன் வேண்டுகின்றேன். புரிதலுக்கு நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக