சனி, 20 ஜூலை, 2024

பண்டைத் தமிழரின் அணிகலன்கள்

 பண்டைத் தமிழரின் அணிகலன்கள்

பண்டைத் தமிழகத்தில் மக்கள் பல்வேறு அணிகலன்களால் தம்மை அழகுபடுத்திக் கொண்டனர். ஆண்களும் பெண்களுக்கு இணையாக அணிகலன்கள் அணிந்திருந்தமையை இலக்கியச் செய்திகள் கூறுகின்றன. தங்க அணிகளும், வெள்ளி அணிகளும், சங்கு அணிகளும் புழக்கத்தில் இருந்தன.

மகளிர் அணிகலன்களின் வகைகள்

    கால்விரல் மோதிரம், பரியகம், நூபுரம், அரியகம், பாடகம், சதங்கை, குறங்குசெறி, முத்துவடம், முப்பத்திரண்டு வடத்தாலான முத்துமேகலை, மாணிக்கமும் முத்தும் இழைத்த தோள்வளையல்கள், மாணிக்கமும் வயிரமும் அழுத்திய சூடகம், செம்பொன்வளை, நவமணி வளை, சங்கவளை, பவழவளை, வாளை மீனைப் போன்று இயற்றப்பட்ட மாணிக்க மோதிரம் ஆகிய அணிகலன்களைப் பெண்கள் அணிந்திருந்தனர் என்பதை சிலப்பதிகாரம் காட்டுகின்றது.

    இவை தவிர, மோசை என்னும் மரகதக் கடைசெறி, கழுத்திலணியும் வீரச் சங்கிலி, நேர்ச்சங்கிலி, பொன்ஞாண், அரிநெல்லிக்காய் மணிமாலை, இந்திர நீலத்திடையே வயிரம் இழைத்த குதம்பை என்னும் காதணி, வலம்புரிச் சங்கு, பூரப்பாளை, தென்பல்லி, வடபல்லி ஆகிய அணிகலைன்களையும் பெண்கள் அணிவதுள்ளனர். பெண்மக்கள் தம் காதுகளைத்தொங்கத் தொங்க வளர்க்கும்போது அணிந்து கொள்ளும் காதணிக்குக் குதம்பை என்றும், வளர்ந்த காதில் அணியும் காதணிக்குக் கடிப்பிணை என்றும் பெயர். நெல்லைத் தின்ன வந்த கோழிகளின்மேல் பெண்கள் தம் குழைகளைக் கழற்றி எறிவார்களாம். அக்காலத்தில் குழைகள் அவ்வளவு மலிந்திருந்தன என்பதைப் பட்டினப்பாலை 20 – 25 கூறுகின்றது.

    கைவளைகளில் சிலவகை முத்தால் இழைக்கப்பட்டன. பெண்கள் கால்விரல்களில் மோதிரம் அணியும் பழக்கம் இருந்துள்ளது.

    பெண்கள் அணிந்த சிலம்புகளுள் முத்தையும் மாணிக்கத்தையும் பரல்களாக இடுவது வழக்கம்.

பெண்கள் இடையில் அணிந்த பட்டிகை ஐந்து வகைப்படும். அவை, மேகலை, காஞ்சி, கலாபம், பருமம், விரிசிகை என்பனவாகும்.

பெண்களின் தலைக்கோலம்

தலைக்கோலம் செய்துகொள்ளுவதில் பழந்தமிழ்ப் பெண்கள் அளவு கடந்த விருப்பதைக் காட்டி வந்தனர். அக்காலத்தில் ஒப்பனைக் கலை வியப்பூட்டும் அளவுக்கு ஓங்கி வளர்ந்திருந்தது. கறுத்து, நீண்டு நெளிந்த கூந்தலையே மிகவும் விரும்பி வளர்த்தனர் என்பதைப் புறநானூறு 147ஆம் பாடல் குறிப்பிடுகின்றது. கொண்டை, குழல், பனிச்சை, சுருள், முடி என ஐந்து வகையாகத் தலைக்கோலம் செய்து கொண்டனர். கூந்தலில் பலவகையான மலர்களைச் சூட்டிக் கொள்வர். பெண்கள் ஒப்பனைக்கு நூறுவகைப் பூக்கள் பயன்பட்டன என்பதைக் குறிஞ்சிப்பாட்டு கூறுகின்றது. மகரவாய், வகிர் என்ற தலையணிகளையும், மாணிக்கமாலையுடன் வெண்ணூலில் கோத்த மலர்களையும் பெண்மக்கள் அணிந்திருந்தனர்.

    மகளிர் தம் கூந்தலுக்கு அகிற்புகை ஊட்டியுள்ளனர். கூந்தலைக் கைவிரல்களால் கோதி உலர்த்தி, அதை இரு தொகுதியாக வகிர்ந்து பின்னவிட்டுக் கொண்டனர். கண்ணாடியைத் துடைத்துப் பெண்கள் அதில் தம் ஒப்பனையைக் கண்ணுற்று மகிழ்ந்தனர். இக்காலத்தைப் போன்றே பழங்காலத்திலும் தமிழ்ப்பெண்கள் தம் கூந்தலுக்குக் களிமண் தேய்த்து முழுகும் வழக்கம் இருந்து வந்தது.

    பெண்கள் கண்ணுக்கு மைதீட்டிக் கொண்டனர். மைதீட்டும் குச்சிக்குக் கோல் என்று பெயர். எப்போதும் மைதீட்டப் பெற்றிருந்தனவாதலின் பெண்கள் கண்ணை “உண்கன்“ என்று கூறுவதுண்டு.

ஆண்களின் அணிகலன்கள்

ஆண்மக்கள் மதாணி, முத்துமாலை, வெள்ளிக்கம்பியில் கோத்த பொற்றாமரை மலர்கள், கைவளையல்கள் ஆகிய அணிகலன்களை அணிந்திருந்தனர்.  ஆடவர் தலைமுடி வளர்த்திருந்தனர். அதைச் சுருட்டிப் பின்புறம் முடித்திருந்தனர். நெற்றிக்குமேல் குடுமி சிறிது களையப்பட்டிருக்கும். தலையில் பூச்சூடிக் கொள்வது வழக்கம். தலையில் சூடும் பூமாலைக்குக் கண்ணி என்று பெயர். குண்டலம் ஆண்களின் முக்கிய அணியாக இருந்துள்ளது.

குழந்தை அணிகலன்கள்

குழந்தைகளின் நெற்றியில் சுட்டியும், பிறையும், மூவடம் கோர்த்த பொன் சங்கிலியும் பூட்டியுள்ளனர். கழுத்தில் ஐம்படைத் தாலியும், புலிப்பல் தாலியும் அணி செய்தன. குழந்தைகளின் விரல்களில் சுறாமீனைப் போன்றும் இடபத்தைப் போன்றும் இலச்சினைகள் பொருத்தப்பட்ட மோதிரங்கள் பூட்டினர். மணிகள் உள்ளிட்ட சதங்ககைள், பொன் இரட்டைச் சரிகள் கால்களிலும், மணியும் பவழமும் கோத்த அரைஞாண் இடையிலும் அணிவிக்கப்பட்டிருந்தன. சதங்கைகளின் பூட்டு வாய்கள் தேரையின் வாய்போல் அமைக்கப்பட்டன என்று கலித்தொகைப் பாடல்கள் 84,85,86 தெரிவிக்கின்றன.

 --------------------------------------------------------------------------------------------------


குறிப்பு

இந்தத் தலைப்பில் உள்ள கருத்துகள் யாவும்

தமிழர் நாகரிகமும் பண்பாடும் – முனைவர் அ.தட்சிணாமூர்த்தி, 

தமிழக வரலாறும் பண்பாடும் – வே.தி.செல்லம்,

தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் – கே.கே.பிள்ளை

ஆகிய மூன்று நூல்களில் இருந்து சுருக்கமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இவை மாணவர்கள் எளிமையாகப் புரிந்து கொள்ளவும், தேர்வுக்குப் படிக்கவும் உருவாக்கப்பட்டவை. முழுக்க முழுக்க மாணவர்களின் நலன் கருதியே இத்தளம் செயல்படுகின்றது.

ஆகவே, மாணவர்கள் தவிர்த்து இத்தளத்தைக் காண்பவர்கள் படிக்கவும், புரிந்து கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர, இத்தளத்தில் உள்ள செய்திகளை அப்படியே எடுத்து நூலாக்கம் செய்வதோ, கைடு நூலாக்கம் செய்வதோ, வலையொளியில் பதிவு செய்வதோ கூடாது என்று தாழ்மையுடன் வேண்டுகின்றேன். புரிதலுக்கு நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக