பண்டைத்தமிழரின் உணவு
பண்டைத் தமிழர்கள் சுவைமிக்க உணவுப் பொருள்களைச் சமைப்பதில் தேர்ந்திருந்தனர்.
அவரவர் வாழ்ந்த நிலத்திற்கேற்ப உணவு வகைகள் வேறுபட்டன. காய்கறிகளோடு இறைச்சி உணவும்
விரும்பி உண்ணப்பட்டது. பலவகையான மது வகைகளையும் விரும்பி அருந்தினர். மன்னர்கள் இரவலர்க்கு
அளித்த விருந்துகளில் பெரிதும் புலால் உணவே பரிமாறப்பட்டது.
அரிசி உணவு
இராசா அன்னம் என்ற உயர்ரக நெல்லை அரிசியாக்கி உண்டனர். அரிசியைப் புழுக்கிக்
காய வைத்து இரும்பு உலக்கையினால் குத்தி அரிசியாக்கினர். பண்டைத் தமிழர்கள் அரிசிச்
சோற்றை சிறப்பு உணவாகக் கொண்டனர். புழுங்கலரிசி பெரிதும் பயன்படுத்தப்பட்டது. அரிசியை
உரலிலிட்டு அதை வெளுக்கத் தீட்டியே உலையில் சமைத்தனர் (புறம்.399). வரகு, சாமை முதலிய
சிறுதானிய அரிசி வகைகளும் பயன்பாட்டில் இருந்துள்ளன. சோற்றுக்கான அரிசி முல்லைப்பூப்போல
வெண்மையாகவும், மென்மையாகவும் இருந்தது. ஓர் அரிசியிலேனும் இடைவரிகளோ, முரிவோ காணப்படாதவாறு,
சோறு ஒன்றோடொன்று இழையாமல் பதமாக வெந்த நிலையில் சமைத்து உண்டனர். பழஞ்சோறு மக்களால்
விரும்பி உண்ணப்பட்டது. சோற்றோடு காய்கறி வகைகள் சேர்க்கப்பட்டன. வேடர்கள் புளிச்சோறை
விரும்பி உண்டமையைப் பொருநராற்றுப்படை (107) கூறுகின்றது. கடுகு தாளித்து காய்கறிகளைச்
சமைத்தனர். மிளகு, உப்பு, புளி உணவில் சேர்க்கப்பட்டது. நெய்சோற்றை நண்டுக் கறியோடு
உண்டனர் என்பதைச் சிறுபாணாற்றுப்படை (193-195) கூறுகின்றது. நெய்சோற்றோடு காய்கறி வகைகளையும் உண்டனர்.
கஞ்சி
அரிசி, கொள்ளுப்பருப்பு, பயற்றம் பருப்பு ஆகியவற்றைப் பாலில் கூட்டிக்
கஞ்சி காய்ச்சிக் குடித்தனர். புளிக்க வைத்த மாவைக் கரைத்து புளிங்கூழ் ஆக்கிக் குடித்தனர்.
சமையல் நுணுக்கங்கள்
தயிர்க்குழம்பு வைத்த தலைவியைக் குறுந்தொகை காட்டுகின்றது (குறுந்.167)
மாங்கனிச் சாறும், களாப்பழமும், துடரியும், நாவற்பழமும் புளிப்புக்காகப் பயன்படுத்தப்பட்டன.
வரால் மீன் குழம்புக்கு மாங்காய் புளியாகப் பயன்படுத்தப்பட்டன என்பதைப் புறநானூறு (புறம்.399)
கூறுகின்றது. மாதுளங்காயை மிளகுப்பொடியும் கறிவேப்பிலையும் இட்டு பசுவெண்ணெயில் பொரித்து
உண்டனர். பெண்கள் விருந்தினர்க்கு மாவடு ஊறுகாயோடு உணவு பரிமாறினர். பலாப்பழம், இளநீர்,
வாழைப்பழம், நுங்கு, வள்ளிக்கிழங்கு, சுட்ட பனங்கிழங்கு ஆகியனவும் தமிழ்களின் உணவாகும்.
புளியங்காய், நெல்லிக்காய் ஆகியவற்றை ஊறவைத்த காடியைப் பெரிதும் விரும்பினர்.
பாலைத் தோய்த்து வெண்ணெய் திரட்டும் வழக்கம் இருந்தது. வெண்ணையைப் பதமாகக் காய்ச்சி
நெய் எடுத்துச் சோற்றில் வார்த்து உண்பர்.
ஐந்திணை உணவுகள்
·
குறிஞ்சி நில மக்களின் உணவில் தேன் மிக முக்கிய இடம் பெற்றது. தேனீக்களால் தேன்
கிழிந்து கற்குவியல்களில் வழிந்தததைக் குறவர் இன மக்களின் பிள்ளைகள் உண்டனர் என்பதை
அகம் 168ஆவது பாடல் காட்டுகின்றது. மேலும், கிழங்கு வகை உணவுகளை வேகவைத்து உண்டனர்.
வேட்டையாடி உணவு உண்ணும் வழக்கம் இருந்தது.
·
முல்லை நில மக்களின் உணவில்
பால் சிறப்பிடம் பெற்றது. தயிர், நெய், வெண்ணெய் ஆகியவற்றில் உணவுப் பொருட்களைச் சேர்த்து
உண்டனர் என்பதைப் “பாலுடை அடிசில் தொழீஇய” என்ற வரி (அகம்.152) காட்டுகின்றது.
·
மருத நிலத்தில் உழவர்கள்
வரகுச் சோற்றை அவரையோடு உண்டனர். வெண்ணெற் சோற்றை கோழி இறைச்சியின் வற்றலோடு உண்டனர்.
அவலை இடித்து உண்டதை, பெரும்பாணாற்றுப்படை (பெ.ஆ.படை:223-226) காட்டுகின்றது. பலாப்பழம்,
இளநீர், வாழைப்பழம், நுங்கு ஆகிய பழ வகைகள் மருதநில மக்களின் வாழ்வில் முக்கியத்துவம்
வாய்ந்த உணவுகளாகும்.
·
நெய்தல் நில மக்கள் கொழியலரசியைக்
கூழாக ஆக்கி, உலர வைத்து, மீனோடு சேர்த்து உண்பர். (பெரும்.275-282) எயினர்கள் களர்
நிலத்தில் வளரும் ஈச்சம்பழம் போன்ற மேட்டு நிலத்தில் விளைந்த நெல்லால் சமைத்த சோற்றினை
நாய் வேட்டையாடிக் கொண்டு வந்த உடும்புக் கறியோடு உண்டனர். (பெரும்.130-132)
·
பாலை நில மக்களின் உணவில்
பொரித்த உணவுகள் சிறப்பிடம் பெறுகின்றன. புல்லரிசியைச் சேர்த்து நில உரலில் குற்றிச்
சமைத்த உணவை உப்புக் கண்டத்துடன் சேர்த்து உண்டனர். விருந்தினர்களுக்குத் தேக்கு இலையில்
விருந்து படைத்தனர் என்பதைப் பெரும்பாணாற்றுப்படை விளக்குகின்றது.
இறைச்சி உணவு
பண்டைத் தமிழகத்தில் ஊன் உண்ணும் வழக்கம் பரவியிருந்தது. வெள்ளாடு,
செம்மறியாடு, மான், முயல், ஆமை, மீன் வகைகள், நண்டு, ஈயல், கோழி, காட்டுக்கோழி, காடை,
உடும்பு முதலியவற்றின் இறைச்சியைத் தனியாகவோ, பாலும் அரிசியும் கூட்டியோ சமைத்தனர். இறைச்சியை நெய்யில் பொரித்த வழக்கம் காணப்படுகின்றது.
புளித்த மோரில் ஈயலை ஊறப்போட்டுப் புளிங்கறி சமைப்பதுண்டு. நெல்லை இடித்து ஆண்பன்றிக்குத்
தீனியாகக் கொடுத்து அதைக் கொழுக்க வைப்பர். அதைப் பெண்பன்றியுடன் சேரவிடாமல் தனியாகக்
குழிகளில் விட்டு வளர்த்துப் பிறகு அதைக் கொன்று அதன் ஊனைச் சமைத்துத் தின்றனர். பழந்தமிழர்
ஊனை உப்புக்கண்டம் போட்டுப் பயன்படுத்தி உள்ளனர். ஊன் துண்டங்களை இரும்புக் கம்பிகளில்
கோர்த்து நெருப்பில் வாட்டி உண்டனர்.(பொருநர்.105)
கள்ளுணவு
மன்னர், பாணர், புலவர், கூத்தர், பொருநர், விறலியர் அனைவருமே கள்ளுண்டு
மகிழ்ந்தமையை ஆற்றுப்படை நூல்கள் காட்டுகின்றன. இயற்கையாகக் கிடைத்த பனங்கள், தென்னங்கள்,
ஈச்சங்கள் ஆகியவற்றையும், அரிசி, புளித்த சோற்றுக்காடி முதலியவற்றைக் காய்ச்சி இறக்கிய
மதுவையும், யவனர்கள் கப்பலில் கொண்டு வந்த தேறலையும் அவர்கள் விருப்பத்துடன் குடித்தனர்.
மதுவகைகளைக் கண்ணாடிக் குப்பிகளிலும், மூங்கிற் குழாய்களிலும் நிரப்பி நெடுநாள் மண்ணில்
புதைத்தனர். அத்தகைய மது வகைகளின் வெறி மிகவும் கடுமையாக இருக்கும். கள்ளுண்டவர்கள்
புளிச் சுவைக்காக, களாப்பழம், துடரிப்பழம், நாவற்பழம் முதலிய பழங்களைப் பறித்து உண்டனர்.
பண்டைத்தமிழர்களின்
உணவுகளையும், அவற்றை எவ்வாறு சமைத்து உண்டனர் என்பதையும் பத்துப்பாட்டின் ஆற்றுப்படை
நூல்கள் மிகத் தெளிவாக விளக்குகின்றன.
குறிப்பு
இந்தத் தலைப்பில் உள்ள
கருத்துகள் யாவும்
தமிழர் நாகரிகமும் பண்பாடும்
– முனைவர் அ.தட்சிணாமூர்த்தி,
தமிழக வரலாறும் பண்பாடும்
– வே.தி.செல்லம்,
தமிழக வரலாறு மக்களும்
பண்பாடும் – கே.கே.பிள்ளை
ஆகிய மூன்று நூல்களில்
இருந்து சுருக்கமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இவை மாணவர்கள் எளிமையாகப் புரிந்து கொள்ளவும்,
தேர்வுக்குப் படிக்கவும் உருவாக்கப்பட்டவை. முழுக்க முழுக்க மாணவர்களின் நலன் கருதியே
இத்தளம் செயல்படுகின்றது.
ஆகவே, மாணவர்கள் தவிர்த்து
இத்தளத்தைக் காண்பவர்கள் படிக்கவும், புரிந்து கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர,
இத்தளத்தில் உள்ள செய்திகளை அப்படியே எடுத்து நூலாக்கம் செய்வதோ, கைடு நூலாக்கம் செய்வதோ,
வலையொளியில் பதிவு செய்வதோ கூடாது என்று தாழ்மையுடன் வேண்டுகின்றேன். புரிதலுக்கு நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக