செவ்வாய், 19 ஆகஸ்ட், 2025

TANSCHE- பாண்டியர் வரலாறு

 

பாண்டியர் வரலாறு

மதுரை பாண்டியர்களின் தலைநகரமாக விளங்கியது. சோழர்கள் வீழ்ந்த பின்னர் சடையவர்மன் குலசேகரன், முதலாம் மாறவர்ம சுந்தர பாண்டியன், இரண்டாம் மாறவர்ம சுந்தர பாண்டியன் முதலியோர் பாண்டியர்களின் வலிமையைப் பெருக்கி நாட்டை அமைத்தனர். அவர்களின் வரலாற்றைப் பின்வருமாறு காணலாம்.

பாண்டியர் பரம்பரை

நெடுஞ்சடையன் பராக்கிரமன் மதுரையை ஆட்சி செய்தான். அவனுக்குப்பின் அவன் மகன் வரகுணப்பாண்டியனும், அவனுக்குப்பின் சீமாற சீவல்லபன் ஆட்சிக்கு வந்து பல்லவ, சோழ, சேர, கங்க மன்னர்களை வெற்றி கொண்டான். சீமாற சீவல்லபனின் மகன் இரண்டாம் வரகுணன் ஆட்சி பொறுப்பேற்றான். இவன் கொங்கர்களை வென்று கோயில்களுக்கும் அந்தணருக்கும், சமணப்பள்ளிகளுக்கும் கொடைகள் வழங்கினான் எனச் சின்னமனூர்ச் செப்பேடுகள் கூறுகின்றன. திருப்புறம்பயம் போரில் சோழர்களிடமும் பல்லவர்களிடமும் தோற்றான்.

இரண்டாம் வரகுணனுக்கு ஆண் பிள்ளை இல்லாததால் அவருடைய தம்பி சடையவர்மன் பராந்தக பாண்டியன் ஆட்சிப் பொறுப்பேற்றார். தன் தந்தை பராந்தக பாண்டியனுக்குப்பின் மூன்றாம் இராசசிம்மன் ஆட்சிக்கு வந்தார். பகைவர் பலரை வெற்றி கொண்டார். இராசசிம்மனின் மகன் வீரபாண்டியர். பாண்டிய நாட்டுக்கு ஏற்றம் புரிந்தவர்களுள் ஒருவர். இவருக்குப் பின் பல பாண்டியர்கள் அரசாண்டு வந்துள்ளனர். ஆனாலும் இவர்கள் சோழர்களால் அடக்கி ஆளப்பட்டிருந்தனர்.

முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன்

இவர் மூன்றாம் குலோத்துங்கச் சோழனுடன் போரிட்டுத் தோற்றார். சில ஆண்டுகளுக்குப் பின்னர் குலோத்துங்கச் சோழன் பாண்டி நாட்டு அரசுரிமையை மீண்டும் குலசேகரனுக்குத் தந்து விட்டார்.

முதலாம் மாறவர்ம சுந்தரபாண்டியன்

சடையவர்ம குலசேகரனின் தம்பி இவர். மூன்றாம் இராசராசனை வென்று பழையாறையைக் கைப்பற்றிக் கொண்டார்.

இரண்டாம் மாறவர்ம சுந்தர பாண்டியன்

சுந்தரபாண்டியனை அடுத்து இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் பாண்டிய நாட்டை ஆண்டார். அவன் மூன்றாம் இராசேந்திரனிடம் தோல்வியுற்றார். இவருக்குப்பின் முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் அரியணை ஏறினார்.

சடையவர்மன் சுந்தர பாண்டியன்

இவர் மாபெரும் வீரர். இவருடைய ஆட்சியில் பாண்டியநாட்டு ஆதிக்கம் சோழ நாட்டைக் கடந்து கேரளம், ஆந்திரம், கொங்கு நாடு ஆகிய நாடுகளில் பரந்தது. தான் அரியணை ஏறிய ஆறாண்டுகளுக்குள் சேரர், போசளர், சோழர், காடவர், சிங்களவர் ஆகியோரைத் தன் கட்டுப்பாட்டில் பணிய வைத்தார்.

மாறவர்மன் குலசேகர பாண்டியன்

முதலாம் சடையவர்ம சுந்தரபாண்டியனை அடுத்து மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சிக்கு வந்தார். 

உள்நாட்டுக் குழப்பங்களும் பாண்டியரின் வீழ்ச்சியும்

குலசேகரனுக்கு சுந்தர பாண்டியன், வீர பாண்டியன் என்ற இரு மகன்கள் இருந்தனர். இவர்களுக்குள் அரசுரிமை போராட்டம் எழுந்தது. அச்சமயம் டில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் படைத்தலைவன் மாலிக்காபூர் ஒரு பெரும் படையுடன் வந்து நாட்டைக் கைப்பற்றினான். மதுரை போர்க்களமாக மாறியது. வீர பாண்டியனின் படைகளை வென்று மதுரையைச் சூறையாடினான்.

சுந்தர பாண்டியனின் சித்தப்பா விக்கிரம பாண்டியன் பெரும்படை ஒன்றைத் திரட்டி மாலிக்காபூர் மேல் படையெடுத்தான். அவரின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் மாலிக்காபூர் புறமுதுகிட்டு ஓடினான். மீண்டும் சுந்தர பாண்டியனும் வீர பாண்டியனும் பாண்டிய நாட்டை ஆண்டனர். எனினும் இவர்களுக்குள் பூசல் குறையவில்லை. இதனால் கேரள நாட்டு அரசன் இரவி வர்ம குலசேகரன் படையெடுத்து வந்து வெற்றி கண்டு தன்னைத்தானே பேரரரசனாக பட்டம் சூட்டிக் கொண்டான்.

பாண்டியர் ஐவரின் வீழ்ச்சி

பாண்டிய நாட்டை ஆண்டு வந்த வீர பாண்டியன், சுந்தர பாண்டியன், விக்கிரம பாண்டியன், குலசேகர பாண்டியன், பராக்கிரம பாண்டியன் ஆகியோர் காகதிய மன்னன் பிரதாபருத்திரனிடம் போரிட்டு படுதோல்வி அடைந்தனர். நாட்டில் ஏற்பட்ட அரசுரிமைக் குழப்பங்களும், கிளர்ச்சிகளும் மீண்டும் தலை தூக்கத் தொடங்கின. இந்த உள்நாட்டுப் பூசலில் இருந்து மீண்டு வருவதற்குள் முகமது பின் துக்ளக் ஆட்சியின் கீழ் மதுரை சேர்க்கப்பட்டது. பாண்டியர்களின் ஆட்சி அழிவுற்றது.

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக