சைவ சமயக் குரவர்கள்
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் சைவ சமயக் குரவர்கள் என்று
அழைக்கப்படுகின்றனர். அவர்களின் சிறப்பைப் பின்வருமாறு காணலாம்.
திருஞானசம்பந்தர்
இவர் பாடிய பதிகங்கள் 16,000 என்பர். ஆனால் 384 பதிகங்களே நமக்குக் கிடைத்துள்ளன. அவை யாவும் தேவாரம் என்ற பெயரில் பன்னிரு திருமுறைகளுள் முதல்
மூன்று திருமுறைகளாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இவை
திருக்கடைக்காப்பு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.
கி.பி. ஏழாம் நூற்றாண்டில், சீர்காழி என்னும் ஊரில்
பிறந்தார். இவரது தந்தையார் சிவபாதவிருதயர், தாயார் பகவதி
அம்மையார். இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது, தந்தையாருடன்
கோயிலுக்குச் சென்றார். அங்கே குழந்தையைக் கரையில் அமரவிட்டுக் குளிக்கச் சென்ற தந்தையார், சிறிது நேரம்
நீருள் மூழ்கியிருந்த சமயம், தந்தையைக் காணாத குழந்தை அம்மை அப்பா என்று கூவி அழ, அப்போது
உமாதேவியார் சிவபெருமானுடன் இவர் முன் காட்சி கொடுத்து ஞானப்பாலூட்டினார். இறை தரிசனம் பெற்ற
ஞானசம்பந்தர் “தோடுடைய செவியன்” எனத் தொடங்கும் பாடலைப் பாடினார். இவர் காழி
வள்ளல், ஆளுடைய பிள்ளை என்றும் வழங்கப்படுகிறார். 16 ஆண்டுகளே
மட்டுமே வாழ்ந்தவர். தம் பெற்றோரின் விருப்பத்திற்கிணங்கள திருநல்லூர் நம்பாண்டார் மகள்
சொக்கியாரை மணம் முடிக்கச் சம்மதித்தார். திருப்பெருமணநல்லூரில் திருமணத்திற்கு முன் ஒரு பதிகம் பாடி
திருமணக் கோலத்துடன் சுற்றம் சூழ இறை ஒளியில் கலந்து விட்டார்.
சிறப்புப்
பட்டங்கள்
பண்ணோடு கூடிய பாடல்களைப் பாடியமையால் “நாளும்
இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்” என்று
பாராட்டப்பட்டார்.
ஆதிசங்கரர் தனது சௌந்தர்யலகரியில் “திராவிடசிசு” என்று
குறிப்பிடுகிறார்.
அற்புதங்கள்
- மூன்றாம் வயதினிலே உமையம்மையாரிடம் திருமுலைப்பால் உண்டார்
- சிவனிடம் பொற்றாளமும், முத்துப்பல்லக்கும், முத்துச் சின்னமும், முத்துக்குடையும், முத்துப்பந்தரும் பெற்றார்.
- வேதாரணியத்தில் திருக்கதவு அடைக்கப்பாடினார்.
- பாண்டியனுக்குக் கூனையும் சுரத்தையும் போக்கினார்.
- தேவாரத் திருவேட்டை அக்கினியில் இட்டுப் பச்சையாய் எடுத்தார்.
- வைகையிலே திருவேட்டை விட்டு எதிரேறும்படி செய்தார்.
- சிவபெருமானிடத்தே படிக்காசு பெற்றார்.
- விடத்தினால் இறந்த வணிகனை உயிர்ப்பித்தார்.
பின்பற்றிய நெறி
· திருஞானசம்பந்தர்
சத்புத்ர மார்க்கத்தால் இறைவனை வழிபட்டார். அது மகன்மை நெறி
என்றும், கிரியை நெறி என்றும் கூறப்படுகிறது.
திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர் பாடிய பதிகங்கள் 4900 என்பர்.
ஆனால் இன்று 313 பதிகங்களே கிடைத்துள்ளன. அவை யாவும் பன்னிரு திருமுறைகளுள் தேவாரம் என்ற பெயரில் 4, 5, 6 ஆம் திருமுறைகளாகச் சேர்க்கப்பட்டுள்ளன. தொண்டின்
மூலம் இறைவனை அடையலாம் என்ற கருத்தை இவர் பாடல்கள் சுட்டிக் காட்டுகின்றன.
இவர் திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூரில் பிறந்தவர். தந்தை புகழனார், தாயார் மாதினியார். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் மருள்நீகியார்.
இளமையிலேயே பெற்றோரை இழந்து தமக்கை திலகவதியாரால் வளர்க்கப்பட்டார். தொடக்கத்தில் சமண
மதம் சார்ந்து தருமசேனர் என்ற பட்டம் பெற்றார். தம் சகோதரன் வழி
தவறிச் செல்வதைக் கண்ட திலகவதியார் சிவபெருமானிடம் மனமுருகி வேண்ட, இறைவன்
நாவுக்கரசருக்குச் சூலை நோய் தந்தார். நோயால் துன்பமடைந்த நாவுக்கரசர் எவ்வித சிகிச்சையும் பலனளிக்காமல்
போகவே தம் தமக்கை திலகவதியாரிடம் வந்து சேர்ந்தார். திலகவதியார்
திருவதிகை அழைத்துச் சென்று திருநீறு அணிவித்தார். பின் வீரட்டானேசுவரம்
கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்கிப் பதிகம் பாட நோய் தீர்ந்து நலம் பெற்றார். சைவ மதமே சிறந்தது
என்றெண்ணி சமணம் தவிர்த்து சைவத்திற்கு மாறினார்.
அதைக் கண்ட சமணர்கள் வெகுண்டு, பல்லவ மன்னன்
மகேந்திரவர்மனிடம் நாவுக்கரசர் மீது புகார் கூறினர். மன்னனும் பலவாறு
அவருக்குத் துன்பங்களைக் கொடுக்க, சிவனின் திருவருளால் நாவுக்கரசர் உயிர் பிழைத்தார். பின்பு பல்லவ
மன்னனையும் சைவனாக்கினார்.
80 ஆண்டுகள் உயிர்
வாழ்ந்தார். இவரது காலம் கி.பி ஆறாம் நூற்றாண்டின் இறுதி அல்லது ஏழாம் நூற்றாண்டின் தொடக்கம் என்பர்.
வேறு பெயர்கள்
வாகீசர், தாண்டக வேந்தர், அப்பர்
அற்புதங்கள்
- திருமறைக்காட்டில் திருக்கதவு திறக்கப் பாடினார்.
- சிவனிடம் படிக்காசு பெற்றார்.
- பாம்பின் விடத்தினால் உயிர்நீத்த அப்பூதி அடிகளின் மகன் மூத்தத் திருநாவுக்கரசரை உயிர்ப்பித்தார்.
- மகேந்திர பல்லவனைச் சைவனாக்கினார்.
உழவாரப்படை
கொண்டு கோயில்கள்தோறும் உழவாரப் பணி செய்து இறைவக்குத் தொண்டு செய்தார்.
பின்பற்றிய நெறி
இவர்
இறைவனுக்கு முன் தன்னைச் தாசனாகப் (அடிமை) பாவித்துக் கொண்டார். எனவே இவருடைய நெறியைத் தாச மார்க்கம் என்று அழைப்பர். இது சரியை என்றும்
கூறப்படும்.
சுந்தரர்
சுந்தரர் பாடிய பதிகங்கள் 38000 என்பர். இன்று நமக்குக்
கிடைப்பவை 100 பதிகங்கள். அவை பன்னிரு திருமுறைகளுள் ஏழாம் திருமுறையாகச்
சேர்க்கப்பட்டுள்ளது. அவை திருப்பாட்டு என்று வழங்கப்படுகிறது.
இவர்
திருமுனைப்பாடி நாட்டில் திருநாவலூரில் பிறந்தவர். தந்தை சடையனார், தாயார்
இசைஞானியார். இவரது இயற்பெயர் நம்பி ஆரூரர். இவரது இளமை
எழிலில் மயங்கிய அரசன் நரசிங்க முனையரையன் இவரைத் தன் பிள்ளையாக எடுத்து
வளர்த்தான்.
கயிலையில்
சிவபெருமானின் அணுக்கத் தொண்டராக இருந்த ஆலால சுந்தரரே இந்த நம்பிஆரூரர் ஆவார். கயிலையில்
உமையம்மையின் தோழிகளான கமலினி, அனிந்ததை என்ற பெண்களைக் கண்டு மனம் மயங்கியதால் பூவுலகில் பிறந்து
அவர்களை மணந்து இல்லறம் நடத்திப் பின் கயிலை வந்தடையுமாறு இறைவனால் பூவுலகிற்கு
அனுப்பப்பட்டார். அப்போது பிற மாதரை மணக்க நேரின் தன்னை வந்து தடுத்தாட்கொள்ள
வேண்டும் என்று ஆலால சுந்தரர் சிவனிடம் வேண்டிக் கொண்டார். அதன்படி பூவுலகில்
பிறந்த நம்பி ஆரூரருக்குச் சடங்கவிச் சிவாசாரியர் மகளைத் திருமணம் செய்ய ஏற்பாடு
செய்யப்பட்டது. அவ்வமயம் இறைவன் முதியவர் வேடத்தில் வந்து சுந்தரரைத் தன் அடிமை
என்று வாதிட்டு, திருமணத்தை நிறுத்தித் தடுத்தாட் கொண்டார். திருவெண்ணெய் நல்லூரில்
இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட சுந்தரர் இறைவனின் ஆணைப்படி பித்தா பிறைசூடி என்ற பாடலைப்
பாடினார்.
இறைவனால்
தடுத்தாட்கொள்ளப்பட்டுப் பல தலங்கள் சென்று இறைவனைப் பாடிப் பதிகம் இயற்றி வந்தார். திருவாரூரில் பரவை
நாச்சியாரையும், திருவொற்றியூரில் சங்கலி நாச்சியாரையும் மணந்து வாழ்ந்து தனது
பதினெட்டாம் வயதில் இறைவனோடு ஒன்றறக் கலந்தார். இவரது
காலம் கி.பி 7 அல்லது 8 ஆம் நூற்றாண்டு என்று
கூறப்படுகிறது.
வேறு பெயர்கள்
தம்பிரான்
தோழர், வன் தொண்டர், திருநாவலூரார் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்.
அற்புதங்கள்
- 12,000 பொன்னை மணிமுத்தாறில் போட்டு கமலாலயத்தில் எடுத்தார்.
- அவிநாசியில் முதலையுண்ட பிள்ளையை உயிர்த்தெழச் செய்தார்.
- தம் காதலுக்காக இறைவனையே தூது விடுத்தார்.
இவர் இறைவனைத் தன்
தோழனாகப் பாவித்தார். ஆகவே அந்நெறி சகமார்க்கம் என்றும், யோக நெறி என்றும்
கூறப்படுகிறது.
சிறப்பு
நம்பியாண்டார்
நம்பி அவர்களின் திருத்தொண்டர் திருவந்தாதிக்கும், சேக்கிழாரின் திருத்தொண்டர்
புராணத்திற்கும் மூலமாகத் திகழ்வது இவர் எழுதிய திருத்தொண்டர் தொகையே ஆகும்.
மாணிக்கவாசகர்
பாண்டிய நாட்டில்
திருவாதவூரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் தெரியவில்லை. ஊர்ப்பெயரால்
திருவாதவூரார் என்று அழைக்கப்படுகிறார். கி.பி.9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். அறிவாற்றலில் சிறந்து விளங்கிய இவர்
அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராகப் பணி புரிந்தார். அப்போது மன்னனால்
தென்னவன் பிரமராயன் என்ற பட்டமளித்துப் பாராட்டப்பட்டார்.
மன்னனுக்காகக்
குதிரை வாங்க வேண்டி நிறையப் பொன்னுடன் கீழைக்கரைக்குச் சென்றபோது வழியில்
திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் இறைவன் ஞானாசிரியனாக வெளிப்பட்டு
உபதேசம் செய்யும் வாய்ப்பினைப் பெற்றார். அதனால் தன் வேலையை மறந்தார். கொண்டு வந்த
பொன்னையெல்லாம் இறை பணியில் செலவிட்டார். இதனையறிந்த மன்னன் இவரைச் சிறையிலிடுமாறு அறிவித்தான். அப்போது இறைவன்
தன் அடியவனைக் காப்பாற்ற நரியைப் பரியாக்கியும், வைகையில்
வெள்ளப் பெருக்கினை உண்டாக்கியும், பிட்டுக்கு
மண் சுமந்தும், பிரம்படிபட்டும் மாணிக்கவாசகரை ஆட்கொண்டார். இதனால் மாணிக்கவாசகரின் பெருமையை
உணர்ந்த மன்னன் மாணிக்கவாசகரைச் சிறையிலிருந்து விடுவித்து இறைவனிடம் தஞ்சம்
அடைந்தான். அன்று முதல் மாணிக்கவாசகர் முழு மூச்சுடன் சிவத்தொண்டில் தன்னை
ஈடுபடுத்திக் கொண்டார்.
பாடிய பாடல்கள்
இவர் பாடிய பாடல்களின் தொகுப்பு திருவாசகம் என்னும் பெயர்
பெற்றது. இதன் கருத்துகள் கற்போரின் ஊனை உருக்கியதால் “திருவாசகத்திற்கு
உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்” என்னும் பழமொழி வழங்கப்படுவதாயிற்று. ஆண்டாள் கண்ணனைக்
கணவனாக எண்ணிப பாடியதுபோல் மாணிக்கவாசகர் சிவபெருமானைத் தலைவனாகக்
கொண்டு திருவெம்பாவை பாடியுள்ளார்.
திருவெம்பாவையில்
மனம் பறிகொடுத்த இறைவன் பாவை பாடிய வாயால் கோவை பாடுக என்று வேண்டியதற்கிணங்க 400
பாக்களைக் கொண்ட திருக்கோவையார் பாடினார். இவரது திருவாசகமும், திருக்கோவையாரும் பன்னிரு திருமுறைகளுள் எட்டாம் திருமுறையாகச்
சேர்க்கப்பட்டுள்ளன.
பின்பற்றிய நெறி
இவர் இறைவனைத் தன்
ஞான ஆசிரியனாக எண்ணி வழிபட்டார். ஆகவே இவர் பின்பற்றிய நெறி சன்மார்க்கம் என்று கூறப்படுகிறது. இது ஞானநெறி
என்றும் வழங்கப்படும்.
சிறப்பு
சிவபெருமானே மனித
வடிவில் வந்து திருவாசகம் முழுவதையும் எழுதியதாகக் கூறப்படுகின்றது.