குறுந்தொகை
1
ஆசிரியர்
- மாமிலாடன்
திணை – மருதம்
துறை
பிரிவிடை
ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி ஆற்றுவல் என்பது படச் சொல்லியது.
துறைவிளக்கம்
“தலைவனின் பிரிவை தலைவி ஆற்ற மாட்டாள்” என்று வருத்தம் கொண்ட தோழிக்குத்
தலைவி, “மாலைக்காலமும், தனிமையும் தலைவன் சென்ற நாட்டிலும் இருக்கும். அதனால் விரைவில்
அவர் வந்துவிடுவார் என்று நம்புகிறேன்” என்று கூறுகின்றாள்.
கூற்று – தலைவி
பாடல்
ஆம்பல்
பூவின் சாம்பல் அன்ன
கூம்பிய
சிறகர் மனை உறை குரீஇ
முன்றில்
உணங்கல் மாந்தி மன்றத்து
எருவின்
நுண் தாது குடைவன ஆடி
இல் இறை
பள்ளி தம் பிள்ளையொடு வதியும்
புன்கண்
மாலையும் புலம்பும்
இன்று-கொல்
தோழி அவர் சென்ற நாட்டே
விளக்கம்
ஆம்பல் பூவின் இதழ் போன்று கூம்பிய சிறகையுடைய வீட்டில் வாழும் குருவிகள்,
முற்றத்தில் காயும் தானியங்களை வயிறார உண்கின்றன. தெருவில் உள்ள காய்ந்த சாணத்தின்
நுண்ணிய துகளில் குடைந்து விளையாடுகின்றன. வீட்டுக் கூரையில் தன் குஞ்சுகளுடன் தங்கி
இனிதாகத் துயில்கின்றன. காலத்தாலும், இடத்தாலும் ஏற்படும் பிரிவுத் துயரம் மனையில்
வாழும் குருவிகளுக்கு இல்லாமையை உணர்ந்து தலைவன் தன்னைக் காண விரைவில் வருவான் என்று
நம்பிக்கைக் கொள்கின்றாள் தலைவி. அதனால், “புல்லிய மாலைப் பொழுதும், தனிமையும் அவர்
சென்ற இடத்திலும் இருக்குமல்லவா தோழி” என்று தன் ஆற்றாமையை வெளிப்படுத்துகின்றாள்
தலைவி.
2
ஆசிரியர்
- மதுரை கதக்கண்ணன்
திணை – குறிஞ்சி
துறை
இரவுக்குறி
நேர்ந்த வாய்ப்பாட்டால் தோழி தலைமட்குச் சொல்லியது.
துறை விளக்கம்
இரவு நேரத்தில்
பல துன்பங்களைக் கடந்து தலைவன் தலைவியைக் காண வருவதால், அவன் காதலை ஏற்குமாறு தோழி
தலைவிக்குக் கூறுகின்றாள்.
பாடல்
ஒலி வெள்
அருவி ஓங்கு மலை நாடன்
சிறு கண்
பெரும் களிறு வய புலி தாக்கி
தொன் முரண்
சோரும் துன் அரும் சாரல்
நடுநாள்
வருதலும் வரூஉம்
வடு நாணலமே
தோழி நாமே
விளக்கம்
ஒலிக்கின்ற வெண்ணிறமான அருவியையுடைய உயர்ந்த மலையில் உள்ள பெரிய களிறானது, வலிமையுள்ள புலியைத் தாக்கி, தன் வலிமையை இழக்கும்.
அதனால், யாரும் எளிதில் அடையமுடியாத அந்த மலைச்
சரிவில் நள்ளிரவில் உன்னைக் காணத் தலைவன் வருவான். அங்ஙனம் அவன் வருவதால் தோன்றும் குற்றத்திற்கு
நாணம் கொண்டு அவன் காதலை மறுத்தல் அழகன்று என்று தலைவியிடம் தோழி கூறுகின்றாள்.
3
ஆசிரியர் –
பரணர்
திணை – மருதம்
துறை
தலைமகன்
சிறைப்புறத்தானாகத் தோழி தன்னுள்ளே சொல்லுவாளாய்ச் சொல்லியது.
தலைமகற்குப்
பாங்காயினார் கேட்பச் சொல்லி வாயில் மறுத்ததூஉம் ஆம்.
துறை விளக்கம்
தலைவி தலைவன் பெயரை வள்ளைப்பாட்டில் அமைத்துப் பாடினாள். அதனைக் கேட்ட
ஊரினர் அலர் தூற்றினர் என்பதைத் தோழி, தலைவன் சிறைப்புறத்திலிருக்கும்பொழுது புலப்படுத்தி,
விரைவில் வரைதல் நலமென்பதை உணர்த்தியது.
பாடல்
பா அடி
உரல பகு வாய் வள்ளை
ஏதில்_மாக்கள்
நுவறலும் நுவல்ப
அழிவது
எவன்-கொல் இ பேதை ஊர்க்கே
பெரும்
பூண் பொறையன் பேஎம் முதிர் கொல்லி
கரும்
கண் தெய்வம் குட வரை எழுதிய
நல் இயல்
பாவை அன்ன,
மெல் இயல்
குறுமகள் பாடினள் குறினே
விளக்கம்
அச்சத்தைத் தருகின்ற கொல்லி மலை சேரனுக்கு உரியது. அம்மலையின் மேற்குப்புறத்தில்
உருவாக்கப்பட்ட பெண் தெய்வமான கொல்லிப் பாவையைப் போன்று மெல்லிய இயல்புடையவள் தலைவி.
அவள் பரந்த அடிப்பகுதியை உடைய உரலில், உலக்கையை ஓச்சி வள்ளைப் பாட்டைப் பாடினாள்.
அப்பாடலைக் கேட்டவர்கள் தலைவி உன் மீது அன்பு கொண்டிருக்கிறாள் என்பதை அறிந்து, அலர்
தூற்றத் தொடங்கினர். அதனால் தலைவியை மணந்து கொள்ள விரைவில் வர வேண்டும் என்று தலைவன்
சிறைப்புறமாக இருக்கும்போது அவனுக்கு உணர்த்துகின்றாள் தோழி.