பதிற்றுப்பத்து
1
திணை – தும்பை
தங்கள் வலிமையையே பொருளாகக் கொண்டு இரு பெரும் அரசர்களும் தும்பைப்பூவைச்
சூடிப் போர் புரிவர். இதனை விளக்குவது தும்பைத்திணையாகும்.
துறை - ஒள்
வாள் அமலை
வெற்றி பெற்ற மன்னன், குளத்தில் மீன்கள் பிறழ்வது போலக் கூர்மையான வாள்களைச்
சுழற்றிக்கொண்டு வீரர்களோடு கூடி ஆடுவது.
வண்ணம் - ஒழுகு
வண்ணம்
வண்ணம்
என்பது பாட்டின் ஓசை நயம். ஒழுகு வண்ணம் என்பது ஆற்றின் நீர் ஓட்டம் போன்ற ஓசை என்பதாகும்.
அது ஆற்றுநீர்ப் பொருள்கோள் எனவும் அழைக்கப்படும்.
தூக்கு - செந்தூக்கு
தூக்கு என்பது இன்ன செய்யுள் வகை என்று குறிப்பிடுவது. செந்தூக்கு என்பது
ஆசிரியப்பாவைக் குறிக்கின்றது.
பெயர் - வேந்து
மெய்ம்மறந்த வாழ்ச்சி
பகை வேந்தர்கள் தங்களுடன் போர் செய்ய வந்த மன்னனைக் கண்டு அஞ்சி தங்கள்
மெய்யை மறந்து செயல்படுவதை விளக்குவது வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சியாகும்.
பாடியவர் - காக்கைப் பாடினியார் நச்செள்ளையார்
இவர் ஒரு பெண்பாற் புலவர். இவரது இயற்பெயர் நச்செள்ளையார். “காக்கை விருந்து வரக் கரையும்” என்று சிறப்பித்துப் பாடியமையால் (குறுந்தொகை 210) இவர் காக்கைப் பாடினியார் என்னும் பாராட்டினைப்பெற்றுள்ளார்.
ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்
தெருவிலும் போர்க்களத்திலும் ஆடும் கோட்பாடு கொண்டவன் ஆடுகோட்பாட்டுச்
சேரலாதன்.
பாடல்
விழவு வீற்றிருந்த வியலுள் ஆங்கண்,
கோடியர் முழவின் முன்னர், ஆடல்
வல்லான் அல்லன்; வாழ்க அவன், கண்ணி!
வலம் படு முரசம் துவைப்ப, வாள் உயர்த்து,
இலங்கும் பூணன், பொலங் கொடி உழிஞையன்,
மடம் பெருமையின் உடன்று மேல் வந்த
வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி
வீந்து உகு போர்க்களத்து ஆடும் கோவே.
விளக்கம்
தெருவில் கோடியர் என்னும் யாழிசைக் கலைஞர்களோடு சேர்ந்து ஆடுபவன் மட்டும்
அல்லன், சேரலாதன். போர்க்களத்தில் வெற்றி முரசம் முழங்க ஆடுபவன். வெற்றி வாளை உயர்த்திக்கொண்டு
ஆடுபவன். கோட்டைகளைத் தாக்கி வென்ற மகிழ்வில்
உழிஞைப் பூவையும், மின்னும் போர்-அணிகலன்களையும் சூடிக்கொண்டு ஆடுபவன். பகை வேந்தர்கள் இறந்து விழுகின்ற போர்க்களத்தில்
ஆடுகின்ற அரசன் ஆதலால், இவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆயினான். அவன் தலையில் அணிந்திருக்கும்
பனம்பூ மாலை வாழ்க.
2
துறை
- விறலி ஆற்றுப்படை
வள்ளலிடம்
பரிசு பெற்றுவந்த ஒருவன் விறலியை அந்த வள்ளலிடம் செல்வதற்கு வழி கூறி ஆற்றுப்படுத்துவது
விறலியாற்றுப்படை ஆகும். விறலி என்பவள் மன்னன் புகழ் பாடுபவள். யாழிசை மீட்டுவதில்
வல்லவள். தம்முடன் இசைக்கருவிகளைக் கொண்டு செல்பவள்.
வண்ணம்
- ஒழுகு வண்ணம்
வண்ணம்
என்பது பாட்டின் ஓசை நயம். ஒழுகு வண்ணம் என்பது ஆற்றின் நீர் ஓட்டம் போன்ற ஓசை என்பதாகும்.
அது ஆற்றுநீர்ப் பொருள்கோள் எனவும் அழைக்கப்படும்.
தூக்கு
– செந்தூக்கு
தூக்கு என்பது இன்ன செய்யுள் வகை என்று குறிப்பிடுவது. செந்தூக்கு என்பது
ஆசிரியப்பாவைக் குறிக்கின்றது.
பெயர்
- சில் வளை விறலி
ஆடல், பாடல் கலைகளுக்குரிய இளம் பருவத்தைச் சேர்ந்த
விறலி என்ற பொருள்பட, இப்பாட்டிற்குச் சில்வளை விறலி என்ற பெயர் வழங்குவதாயிற்று.
பாடியவர்
- காக்கைப் பாடினியார் நச்செள்ளையார்
இவர் ஒரு பெண்பாற் புலவர். இவரது இயற்பெயர் நச்செள்ளையார். “காக்கை விருந்து வரக் கரையும்” என்று சிறப்பித்துப் பாடியமையால் (குறுந்தொகை 210) இவர் காக்கைப் பாடினியார் என்னும் பாராட்டினைப்பெற்றுள்ளார்.
பாடல்
ஓடாப் பூட்கை மறவர் மிடல் தப,
இரும் பனம் புடையலொடு வான் கழல் சிவப்ப,
குருதி பனிற்றும் புலவுக் களத்தோனே,
துணங்கை ஆடிய வலம் படு கோமான்:
மெல்லிய வகுந்தில் சீறடி ஒதுங்கிச்
செல்லாமோதில்- சில் வளை விறலி!-
பாணர் கையது பணி தொடை நரம்பின்
விரல் கவர் பேரியாழ் பாலை பண்ணி,
குரல் புணர் இன் இசைத் தழிஞ்சி பாடி;
இளந் துணைப் புதல்வர் நல் வளம் பயந்த,
வளம் கெழு குடைச்சூல், அடங்கிய கொள்கை,
ஆன்ற அறிவின் தோன்றிய நல் இசை,
ஒள் நுதல் மகளிர் துனித்த கண்ணினும்,
இரவலர் புன்கண் அஞ்சும்
புரவு எதிர்கொள்வனைக் கண்டனம் வரற்கே?
விளக்கம்
- சேரலாதன் போர்க்களத்தில் இருக்கிறான். காயம் பட்டோர் குருதி நடுங்க வைக்கும் போர்க்களம் அது. தலையில் பனம்பூ மாலை அணிந்திருக்கிறான். காலில் உயர்ந்த வீரக்கழல் அணிந்திருக்கிறான். புறமுதுகிடாத கோட்பாட்டினை உடைய பகைவீரர்களின் வலிமையைத் தகர்த்துப் போரிட்டுக் கொண்டிருக்கிறான்.
- நம்முடன் சேர்ந்து துணங்கை ஆடிய கோமகன் அவன். மென்மையான தளிர் போன்ற சிறிய காலடிகளை மெல்ல மெல்ல வைத்து போர்க்களத்தில் அவனைக் காணச் செல்லலாமா, விறலி! நம் கையிலுள்ள வளையல்கள் சில ஒலிக்கும்படிச் செல்லலாமா, விறலி!
- பாணர் கையிலுள்ள பேரியாழில் நம் வறுமை தோன்றப் பாலைப்பண் பாடிக்கொண்டு செல்லலாமா, விறலி! தோற்றவர் மேல் வாள் வீசாத இவனது தழிஞ்சிப் போரைப் பாராட்டிப் பாடிக்கொண்டு செல்லலாமா, விறலி!
- சேரலாதனுக்கு இரண்டு ஆண்பிள்ளைகள் (இளந்துணைப் புதல்வர்). அவன் மனைவி மீண்டும் கருவுற்றிருக்கிறாள்.
அவள் அடக்கமே உருவானவள். பரந்த அறிவால் புகழ் பெற்றவள். அவள் ஊடல் கொள்ளும் பார்வையைப்
பொருட்படுத்தாமல், தன்னை நாடி வந்தவரின் துன்பத்தைப் போக்குவதிலேயே கண்ணும் கருத்துமாய்
இருப்பவன். அவனைக் கண்டு வருவதற்குச் செல்லலாமா, விறலி!
என்றவாறு மன்னன் புகழ் பாடி விறலியை ஆற்றுப்படுத்துகின்றமையாக இப்பாடல் அமைகின்றது.
Indhumathi Devaraj
பதிலளிநீக்குB.com general
B sec nice explanation
Good
பதிலளிநீக்கு