சனி, 3 ஏப்ரல், 2021

பத்துப் பாட்டு நூல்கள்

 

பத்துப் பாட்டு

பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியத் தொகை நூல்களுள் ஒன்று. இத்தொகை நூலுள் பத்துப்பாடல்கள் அடங்கியுள்ளன. இவற்றில் பழந்தமிழ் நாட்டின் வாழ்க்கை முறை, பண்பாடு, வரலாற்றுக் குறிப்புகள், அரசர்கள் மற்றும் வள்ளல்களின் இயல்புகள், காதல் வாழ்க்கை, கலைகள், நகரங்கள் பற்றிய தகவல்கள், இயற்கை பற்றிய வருணனைகள் போன்றவை தொடர்பான பல தகவல்களை இவற்றிலிருந்து பெற முடிகின்றது. இவை அனைத்தும் இன்று ஒரே தொகுப்பாகக் குறிப்பிடப்படுகின்ற போதிலும், இவை ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை. வெவ்வேறு ஆசிரியர்களால் பல்வேறு கால கட்டங்களில் இயற்றப்பட்டவை. இத்தொகுப்புக்கு நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார்.

பழம் பாடல்

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை

பெருகு வள மதுரைக் காஞ்சி-மருவினிய

கோல நெடுநல் வாடை கோல்குறிஞ்சிப்பட்டினப்

பாலை கடாத்தொடும் பத்து

என வரும் பழம்பாடல், பத்துப் பாட்டு நூல்கள் எவை என்பதை மிகத் தெளிவாகக் காட்டும்.

பத்துப்பாட்டு நூல்கள்

அ.புறப்பொருள் பற்றிய நூல்கள்:

திருமுருகாற்றுப்படை

பொருநராற்றுப்படை

சிறுபாணாற்றுப்படை

பெரும்பாணாற்றுப்படை

மலைபடுகடாம்

மதுரைக்காஞ்சி

ஆ.அகப்பொருள் பற்றிய நூல்கள்:

குறிஞ்சிப்பாட்டு

பட்டினப்பாலை

முல்லைப்பாட்டு

இ.அகப்பொருள், புறப்பொருள் பற்றிய நூல்கள்:

நெடுநல்வாடை


பத்துப்பாட்டு நூல்களின் சிறப்புகள்

திருமுருகாற்றுப்படை

இந்நூலின் ஆசிரியர் நக்கீரர். 317 அடிகளைக் கொண்டுள்ளது. பாடப்பட்டவர் முருகப் பெருமான்.  ஆற்றுப்படை நூல்கள் பரிசில் பெறச் செல்வோரால் பெயர் பெறும். திருமுருகாற்றுப்படை மட்டும் பரிசில் கொடுப்போரால் (முருகன்) பெயர் பெற்றது. ஏனைய ஆற்றுப்படை நூல்கள் மானிடரைத் தலைவனாகக் கொண்டிருக்க, இந்நூல் முருகனைத் தலைவனாகக் கொண்டுள்ளது. புலவராற்றுப்படை என்றும், முருகு என்றும் வழங்கப்படுகின்றது.  முருகப் பெருமானின் பெருமையைப் பேசுகின்ற இந்நூல் ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய்(திருச்செந்தூர்), திருவேரகம்(சுவாமிமலை), திருவாவினன்குடி(பழனி), திருத்தணி, பழமுதிர்ச்சோலை  உள்ளிட்ட முருகனின் அறுபடை வீடுகள் சிறப்பிக்கப்படுகின்றன. இந்நூல் பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது.

பொருநராற்றுப்படை

இதன் ஆசிரியர் முடத்தாமக் கண்ணியார். 248 அடிகளைக் கொண்டது. கரிகால் பெருவளத்தானிடம் பரிசில் பெற்ற பொருநன் ஒருவன் பரிசில் பெறக் கருதிய மற்றொரு பொருநனை அம்மன்னனிடம் ஆற்றுப்படுத்துகின்றது. இந்நூலில் யாழின் ஒவ்வோர் உறுப்பிற்கும் ஒவ்வோர் உவமை கூறி வருணிக்கப்படுகின்றது.

சிறுபாணாற்றுப்படை

இதன் ஆசிரியர் நல்லூர் நத்தத்தனார்.  269 அடிகளைக் கொண்டது. பாட்டுடைத்தலைவன் நல்லியக்கோடன். இந்நூல் கடை ஏழு வள்ளல்கள் பற்றி கூறுகிறது. அடி அளவால் சிறிய நூல். இந்நூலில் விறலியின் முடி முதல் பாதம் வரை விவரிக்கும் வர்ணனை, மூவேந்தர்களின் தலைகரங்களின் சிறப்பு, கடையெழு வள்ளல்களின் அருஞ்செயல்கள், பாட்டுடைத்தலைவனின் வீரம், கொடை, புகழ், விருந்தோம்பும் பண்பு, யாழ் வர்ணனை ஆகியன சிறப்பிக்கப்படுகின்றன.

பெரும்பாணாற்றுப்படை     

இதன் ஆசிரியர் கடியலூர் உருத்திரங் கண்ணனார். 500 அடிகளைக் கொண்டது. பாட்டுடைத்தலைவன் தொண்டைமான் இளந்திரையன். இந்நூல் யாழின் வருணனை, பாலை நிலத்தில் எயினர் குடியிருப்பு, காஞ்சி மாநகரத்தில் பற்பல சமயத்தாரும் கொண்டாடும் விழாக்கள் பற்றி கூறுகிறது. பாணாறு எனவும் அழைக்கப்படுகின்றது.

மலைபடுகடாம்        

இதன் ஆசிரியர் பெருங்கௌசிகனார். 583 அடிகளைக் கொண்டது. பாட்டுடைத்தலைவன் நன்னன் சேய் நன்னன். ஆற்றுப்படை நூல்களுள் இதுவே பெரியது. நன்னன் நாட்டிற்கு செல்லும் வழி, வழியில் கிட்டும் உணவு, சோலை அழகு, மலைவளம், நாட்டின் சிறப்பு, நன்னனின் முன்னோர் பெருமை போன்றவை கூறப்பட்டுள்ளன. கூத்தராற்றுப்படை எனவும் வழங்கப்படுகின்றது.

குறிஞ்சிப்பாட்டு       

இதன் ஆசிரியர் கபிலர்.  261 அடிகளைக் கொண்டது. ஆரிய அரசன் பிரகதத்தனுக்குத் தமிழ் அகப்பொருள் மரபை அறிவுறுத்த கபிலர் இந்நூலை இயற்றினார் என்பர். அறத்தோடு நிற்றல் துறையில் இயற்றப்பட்டுள்ளது. 99 வகையான மலர்களை இந்நூலில் கபிலர் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைப்பாட்டு       

இந்நூலின் ஆசிரியர் நப்பூதனார். 103 அடிகளைக் கொண்டது. பாட்டுடைத்தலைவன் பாண்டியன் நெடுஞ்செழியன். பத்துப்பாட்டுள் அளவில் சிறிய நூல் இதுவே. முல்லைத் திணைக்குரிய பெரும் பொழுதான கார்காலமும், சிறுபொழுதான மாலைக்காலமும் இந்நூலில் சிறப்பாக கூறப்பட்டுள்ளன. இந்நூல் நெஞ்சாற்றுப்படை என்றும் அழைக்கப்படுகின்றது.

பட்டினப்பாலை       

இதன் ஆசிரியர் கடியலூர் உருத்திரங் கண்ணனார். 301 அடிகளைக் கொண்டது. பாட்டுடைத் தலைவன் சோழன் கரிகாலன்.  பட்டினப்பாலை பாடியமைக்காகக் கடியலூர் உருத்திரங்கண்ணனார்க்குக் கரிகாற் சோழன் பதினாறு நூறாயிரம் பொற்காசுகள் பரிசளித்தான் எனக் கலிங்கத்துப்பரணி கூறுகிறது. இந்நூலுக்கு வஞ்சிநெடும்பாட்டு என்ற பெயர் உண்டு. பட்டினம் என்பது காவிரிப்பூம்பட்டினம் ஆகும். இந்நகரை புகார், பூம்புகார் எனவும் அழைப்பர். இந்நூலில் 163 அடிகள் வஞ்சிப்பாவல் அமைந்துள்ளன.

நெடுநல்வாடை       

இதன் ஆசிரியர் நக்கீரர். 188 அடிகளைக் கொண்டது. பாட்டுடைத்தலைவன் பாண்டியன் நெடுஞ்செழியன். வாடைக்காற்று  தலைவனைப் பிரிந்த தலைவிக்கு நெடு வாடையாகவும், போரில் வெற்றி பெற்றதால் தலைவனுக்கு அவ்வாடைக்காற்று நல்வாடையாகவும் அமைக்கப்பெற்று பாடப்பட்டுள்ளது. கூதிர் காலத்தின் அழகும், அரண்மனை வகுக்கும் திறமும், அரசியின் கட்டில் அழகும், தலைவனின் பாசறை காட்சியும் அழகுற விளக்கம் பெற்றுள்ளன.

மதுரைக்காஞ்சி        

இதன் ஆசிரியர் மாங்குடி மருதனார். 782 அடிகள் கொண்டது. பாட்டுடைத்தலைவன் பாண்டியன் நெடுஞ்செழியன். காஞ்சித்திணையின் நிலையாமை பற்றிப் பேசுகின்றது. மதுரையில் நடைபெற்ற ஆறு விழாக்களான திருபரங்குன்ற விழா, மதுரைக்கோவில் விழா, அந்திவிழா, எழுநாள் விழா, திருவோண விழா, மன்னன் பிறந்த நாள் விழா ஆகியவற்றை விவரிக்கின்றது. பத்துப் பாட்டிலேயே அளவில் மிகப் பெரிய பாடல் இது.

ஞாயிறு, 28 மார்ச், 2021

எட்டுத்தொகை நூல்கள்

 

எட்டுத்தொகை

சங்க இலக்கியங்களுள் ஒன்று எட்டுத்தொகை. இது எட்டு நூல்களின் தொகுப்பு. இதில் அடங்கிய ஒவ்வொரு நூலும் பலரால் பல காலகட்டங்களில் எழுதப்பட்டுப் பின்னர் ஒருசேரத் தொகுக்கப்பட்டது. இவற்றில் பல பாடல்களில் எழுதியவரின் பெயர் காணப்படவில்லை. அகம், புறம் என இந்நூல்களைப் பகுக்கின்றனர். அளவு, பாட்டு, பொருள் ஆகியவற்றால் தொகுக்கப்பட்டமையால் தொகை எனப் பெயர் பெற்றது. இத்தொகையுள் ஏறத்தாழ 2352 பாடல்களை 700 புலவர்கள் பாடியுள்ளனர். இவர்களில் 25 அரசர்களும், 30 பெண்பாற் புலவர்களும் உண்டு. ஆசிரியர் பெயர் தெரியாப் பாடல்கள் 102. எட்டுத்தொகை நூல்களுள் பரிபாடலும், கலித்தொகையும் தவிர்த்து மற்றவை ஆசிரியப்பாவால் அமைந்துள்ளன. 3 அடிகள் சிற்றெல்லையாகவும் 140 அடிகள் பேரெல்லையாகவும் பெற்றுள்ளன. இந்நூல்கள் கடைச் சங்க காலத்தில் இயற்றப்பட்டன என்பர். தொகுக்கப்பட்ட காலம் கி.பி.3 அல்லது 4 ஆம் நூற்றாண்டு என்றும் கருதுவர்.

எட்டுத்தொகை நூல்கள்

1.நற்றிணை

2.குறுந்தொகை

3.ஐங்குறுநூறு

4.பதிற்றுப்பத்து

5.பரிபாடல்

6.கலித்தொகை

7.அகநானூறு

8.புறநானூறு

எட்டுத்தொகை நூல்களைப் பற்றிய வெண்பா பின்வருவது:

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை

இவற்றுள்,
அகப்பொருள் பற்றியவை:

நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு.


புறப்பொருள் பற்றியவை

புறநானூறு, பதிற்றுப்பத்து.


அகமும் புறமும் கலந்து வருவது

பரிபாடல்.


நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும் ‘திணை’ என்னும் பெயரும் சேர்ந்து ‘நற்றிணை’ என்னும் பெயரால் இந்நூல் வழங்கப்படுகிறது. இந்நூல் 9 அடிச் சிற்றெல்லையும் 12 அடி பேரெல்லையும் உடையது. 175 புலவர்களால் பாடப்பெற்றது. இதைத் தொகுத்தவர் யார் என்று தெரியவில்லை. தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி ஆவார். இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர். நற்றிணைப் பாடல்கள் அக்காலச் சமூகத்தை அறிய பெரிதும் துணை புரிகின்றன.


குறுந்தொகை
குறைந்த அடிகளையுடைய பாட்டால் தொகுக்கப்பெற்ற நூல் ஆதலால் குறுந்தொகை எனப்பட்டது. இந்நூல் 400 பாடல்களைக் கொண்டது.  205 புலவர்களால் பாடப்பெற்றது. இந்நூலின் முதல் 380 பாடல்களுக்கு பேராசிரியரும், 20 பாடல்களுக்கு நச்சினார்க்கினியரும் உரை  எழுதியுள்ளார்கள். 4 அடிச் சிற்றெல்லையும் 8 அடிப் பேரெல்லையும் கொண்டது. இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ.  


ஐங்குறுநூறு
ஐந்து திணைகளையும் பற்றித் திணை ஒன்றுக்கு 100 பாடல்களாக 500 பாடல்களைக் கொண்டது இந்நூல். இந்நூலில் அமைந்த பாடல்கள் ஒவ்வொன்றும் 3 அடிக்கு மேல் 6 அடிக்கு உட்பட்டன. இவ்வாறு குறைந்த அடிகளையுடைய பாக்களால் இயன்றமையால் இந்நூல் ஐங்குறுநூறு என்னும் பெயர் பெற்றது. இதனைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார். தொகுப்பித்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்ற சேரவேந்தன். இந்நூலில் ஐந்து திணைகளும் ஐந்து புலவர்களால் பாடப்பட்டுள்ளது.

மருதம்     - ஓரம்போகி

நெய்தல்  - அம்மூவனார்

குறிஞ்சி  - கபிலர்

பாலை     - ஓதலாந்தையார்

முல்லை  - பேயனார்

கலித்தொகை

150 கலிப்பாக்களை கொண்டது. ஒவ்வொரு திணையைப் பற்றியும் ஒரு புலவராக ஐந்து புலவர்களால் பாடப்பட்டது.
        பாலை     -     பெருங்கடுங்கோ          - 35 பாடல்கள்
        குறிஞ்சி  -     கபிலர்                               - 29 பாடல்கள்
        மருதம்    -     மருதனிளநாகனார்      - 35 பாடல்கள்
        முல்லை  -     சோழன் நலுருத்திரன் - 17 பாடல்கள்
        நெய்தல் -     நல்லத்துவனார்              - 33 பாடல்கள்

இந் நூலைத் தொகுத்தவர் நல்லந்துவனார். உரை எழுதியவர் நச்சினார்க்கினியர். பா வகையால் பெயர்பெற்ற இந்நூலில் அமைந்துள்ள பல பாடல்கள் நாடக அமைப்புடன் காணப்படுகின்றன.

 அகநானூறு
அகப்பொருள் பற்றிய நானூறு பாக்களைக் கொண்டது. இந் நூலுக்கு நெடுந்தொகை என்று வேறு பெயரும் உண்டு.  பாடிய புலவர்கள் எண்ணிக்கை 146. இந்நூலைத் தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி. தொகுத்தவர் மதுரை உப்பூரிக்குடி கிழார் மகன் உருத்திரசன்மன். 13 அடி முதல் 31 அடி வரை பாடப்பட்டுள்ளன. இந்நூல் களிற்றியானை நிரை, மணிமிடைப்பவளம், நித்திலக்கோவை என்ற மூன்று பெரும் பகுப்புகளைக் கொண்டுள்ளது.

  • களிற்றியானை நிரை - 1 முதல் 120வரை
  • மணிமிடைப்பவளம்    - 121 முதல் 300 வரை
  • நித்திலக்கோவை         - 301 முதல் 400 வரை

அகநானூற்றின் பாடல்களைத் தொகுத்த உருத்திரசன்மன் ஓர் ஒழுங்குமுறையைப் பின்பற்றியுள்ளார். அவை,

  • 1, 3, 5, 7 என ஒற்றை எண்ணாக வரும் பாடல்கள் பாலைத் திணைக்குரியன.
  • 4, 14, 24 என நான்கு எனும் எண்ணுடன் முடிபவை முல்லைத்திணைக்குரியவை.
  • 6, 16, 36 என ஆறு எனும் எண்ணில் முடிவன மருதத்திணைக்குரியவை.
  • 2, 8 என இரண்டையும் எட்டையும் இறுதியாக முடிவன குறிஞ்சித்திணைக்குரியவை.
  • 10, 20 என முடிபவை நெய்தல் திணைக்குரியவை என்றும் வகுத்துள்ளார்.

பதிற்றுப்பத்து
பத்துப் பத்து அகவற் பாக்களால் அமைந்த பத்துப் பகுதிகளைக் கொண்ட நூல் ஆதலால் 'பதிற்றுப் பத்து' எனப் பெயர் பெற்றது. ஒவ்வொரு பத்தும், தனித்தனியே, ஒவ்வொரு புலவரால், ஒவ்வொரு சேரமன்னரைக் குறித்துப் பாடப் பெற்றதாகும். நூலின் முதற் பத்தும், பத்தாம் பத்தும் கிடைக்கப் பெறவில்லை. நூலை தொகுத்தார், தொகுப்பித்தார் பற்றி அறியப்படவில்லை.

  • 2ஆம் பத்து - இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குமட்டூர் கண்ணனார் பாடியது
  • 3ஆம் பத்து – பல்யானைச் செல்கெழுகுட்டுவனைப் பாலைக்கௌதமனார் பாடியது
  • 4ஆம் பத்து – களங்காய்க் கண்ணிநார் முடிச்சேரலைக் காப்பியாற்றுக் காப்பியனார் பாடியது.
  • 5ஆம் பத்து – கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனைப் பரணர் பாடியது
  • 6ஆம்பத்து – ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைக் காக்கைப்பாடினியார் பாடியது
  • 7ஆம் பத்து – செல்வக்கடுங்குா வாழியாதனைக் கபிலர் பாடியது.
  • 8ஆம் பத்து - தகடூர் எறிந்த பெருஞ்சுரலிரும்பொறையை அரிசில்கிழார் பாடியது
  • 9ஆம் பத்து – இளஞ்சேரல் இரும்பொறையைப் பெருங்குன்றூர்கிழார் பாடியது.

புறநானூறு
புறப்பொருள் பற்றிய நானூறு பாக்களைக் கொண்டது. இந் நூலுக்கு புறம், புறப் பாட்டு, புறம்பு நானூறு என்று வேறு பெயர்களும் உண்டு. இந் நூற்பாடல்களைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை 160. இந் நூலுக்குப் பழைய உரை உள்ளது. அவ்வை துரைசாமிப் பிள்ளை விளக்க உரை வரைந்துள்ளார். 4 அடி முதல் 40 அடி வரை பாடப்பட்டுள்ளது. 15 பாண்டிய மன்னர்களையும், 18 சோழ மன்னர்களையும், 18 சேர மன்னர்களையும் பாடுகின்றது.

பரிபாடல்
பரிபாடல் என்னும் இசைப்பாக்களால் தொகுக்கப்பட்டதால் பரிபாடல் எனப் பெயர் பெற்றது. 70 பாடல்களில் 22 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இதற்கு பரிமேலழகர் உரைஎழுதியுள்ளார். 25 அடி முதல் 40 அடி வரை பாடப்பட்டுள்ளன. இந்நூலில் திருமால், செவ்வேள் பெருமைகளும், வையை ஆற்றின் சிறப்பும் கூறப்பட்டுள்ளன.


 

குறுந்தொகை - ஆம்பல் பூவின் சாம்பல் அன்ன, ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன்,

 

குறுந்தொகை

1

ஆசிரியர் - மாமிலாடன்

திணை – மருதம்

துறை

பிரிவிடை ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி ஆற்றுவல் என்பது படச் சொல்லியது.

துறைவிளக்கம்

“தலைவனின் பிரிவை தலைவி ஆற்ற மாட்டாள்” என்று வருத்தம் கொண்ட தோழிக்குத் தலைவி, “மாலைக்காலமும், தனிமையும் தலைவன் சென்ற நாட்டிலும் இருக்கும். அதனால் விரைவில் அவர் வந்துவிடுவார் என்று நம்புகிறேன்” என்று கூறுகின்றாள்.

கூற்று – தலைவி

பாடல்

ஆம்பல் பூவின் சாம்பல் அன்ன

கூம்பிய சிறகர் மனை உறை குரீஇ

முன்றில் உணங்கல் மாந்தி மன்றத்து

எருவின் நுண் தாது குடைவன ஆடி

இல் இறை பள்ளி தம் பிள்ளையொடு வதியும்  

புன்கண் மாலையும் புலம்பும்

இன்று-கொல் தோழி அவர் சென்ற நாட்டே

விளக்கம்

ஆம்பல் பூவின் இதழ் போன்று கூம்பிய சிறகையுடைய வீட்டில் வாழும் குருவிகள், முற்றத்தில் காயும் தானியங்களை வயிறார உண்கின்றன. தெருவில் உள்ள காய்ந்த சாணத்தின் நுண்ணிய துகளில் குடைந்து விளையாடுகின்றன. வீட்டுக் கூரையில் தன் குஞ்சுகளுடன் தங்கி இனிதாகத் துயில்கின்றன. காலத்தாலும், இடத்தாலும் ஏற்படும் பிரிவுத் துயரம் மனையில் வாழும் குருவிகளுக்கு இல்லாமையை உணர்ந்து தலைவன் தன்னைக் காண விரைவில் வருவான் என்று நம்பிக்கைக் கொள்கின்றாள் தலைவி. அதனால், “புல்லிய மாலைப் பொழுதும், தனிமையும் அவர் சென்ற இடத்திலும் இருக்குமல்லவா தோழி” என்று தன் ஆற்றாமையை வெளிப்படுத்துகின்றாள் தலைவி.



2

ஆசிரியர் - மதுரை கதக்கண்ணன்

திணை – குறிஞ்சி

துறை

இரவுக்குறி நேர்ந்த வாய்ப்பாட்டால் தோழி தலைமட்குச் சொல்லியது.

துறை விளக்கம்

இரவு நேரத்தில் பல துன்பங்களைக் கடந்து தலைவன் தலைவியைக் காண வருவதால், அவன் காதலை ஏற்குமாறு தோழி தலைவிக்குக் கூறுகின்றாள்.

பாடல்

ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன்

சிறு கண் பெரும் களிறு வய புலி தாக்கி

தொன் முரண் சோரும் துன் அரும் சாரல்

நடுநாள் வருதலும் வரூஉம்

வடு நாணலமே தோழி நாமே

விளக்கம்

ஒலிக்கின்ற வெண்ணிறமான அருவியையுடைய உயர்ந்த மலையில் உள்ள பெரிய களிறானது, வலிமையுள்ள புலியைத் தாக்கி, தன் வலிமையை இழக்கும்.  அதனால், யாரும் எளிதில் அடையமுடியாத அந்த மலைச் சரிவில் நள்ளிரவில் உன்னைக் காணத் தலைவன் வருவான். அங்ஙனம் அவன் வருவதால் தோன்றும் குற்றத்திற்கு நாணம் கொண்டு அவன் காதலை மறுத்தல் அழகன்று என்று தலைவியிடம் தோழி கூறுகின்றாள்.


3

ஆசிரியர் – பரணர்

திணை – மருதம்

துறை  

தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தன்னுள்ளே சொல்லுவாளாய்ச் சொல்லியது.

தலைமகற்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லி வாயில் மறுத்ததூஉம் ஆம்.

துறை விளக்கம்

தலைவி தலைவன் பெயரை வள்ளைப்பாட்டில் அமைத்துப் பாடினாள். அதனைக் கேட்ட ஊரினர் அலர் தூற்றினர் என்பதைத் தோழி, தலைவன் சிறைப்புறத்திலிருக்கும்பொழுது புலப்படுத்தி, விரைவில் வரைதல் நலமென்பதை உணர்த்தியது.

பாடல்

பா அடி உரல பகு வாய் வள்ளை

ஏதில்_மாக்கள் நுவறலும் நுவல்ப

அழிவது எவன்-கொல் இ பேதை ஊர்க்கே

பெரும் பூண் பொறையன் பேஎம் முதிர் கொல்லி

கரும் கண் தெய்வம் குட வரை எழுதிய           

நல் இயல் பாவை அன்ன,

மெல் இயல் குறுமகள் பாடினள் குறினே

விளக்கம்

அச்சத்தைத் தருகின்ற கொல்லி மலை சேரனுக்கு உரியது. அம்மலையின் மேற்குப்புறத்தில் உருவாக்கப்பட்ட பெண் தெய்வமான கொல்லிப் பாவையைப் போன்று மெல்லிய இயல்புடையவள் தலைவி. அவள் பரந்த அடிப்பகுதியை உடைய உரலில், உலக்கையை ஓச்சி வள்ளைப் பாட்டைப் பாடினாள். அப்பாடலைக் கேட்டவர்கள் தலைவி உன் மீது அன்பு கொண்டிருக்கிறாள் என்பதை அறிந்து, அலர் தூற்றத் தொடங்கினர். அதனால் தலைவியை மணந்து கொள்ள விரைவில் வர வேண்டும் என்று தலைவன் சிறைப்புறமாக இருக்கும்போது அவனுக்கு உணர்த்துகின்றாள் தோழி.